புதன், ஏப்ரல் 19, 2023

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

 

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

மு.சிவகுருநாதன்


 

           இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் ஒன்று காலமாகிப் போனவர்கள் என்பதே. என்னதான் எழுத்தாளர்கள் எனும் சிறப்பு உயர்திணையாக இருப்பினும் இவர்களும் மனிதர்கள்தானே! தனிமனிதக் குறைபாடுகளுடன் கூடவே அவர்களது வாழ்வையும் எழுத்துகள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் சித்திரத்தையும் இக்கட்டுரைகள் நமக்கு அளிக்கின்றன. அவர்களது பலமும் பலவீனங்களும் சுட்டப்பட்டு, அவர்களுடைய இருத்தல் நினைவூட்டப்படுகிறது.

       ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒரு கவித்துவத் தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

சி.சு.செல்லப்பாவறுமையை விலைக்கு வாங்கியவர்

கா.நா.சு. – வாசிக்கக் கற்றுக் கொடுத்த கலைஞன்

மௌனிஓயாமல் பேசியமௌனி

தேனுகாகலைகளில் கரைந்தவர்

     சிறந்த எழுத்துக்கு Expiry தேதி இல்லை”,  என்று என்னுரையில் சொல்லும் நா.விச்வநாதன், “நான் இளமையில் இவர்களிடம் கற்றவன். கற்றது இன்று சிறந்த வாசகனாக என்னைக் காட்டுகிறது”, என்றும்இவர்களை ஆராதிக்க வேண்டியதில்லை; நினைவு கூர்தல் முக்கியமானது. இது நன்றி சார்ந்ததுகூடஎன்பதையும் வலியுறுத்துகிறார்


 

     இந்த ஆளுமைகளின் எழுத்துப்பணிகள், பிறபணிகள், குடும்ப வாழ்க்கை, குணநலன்கள், அவர்களின் தனிப்பட்ட துயரங்கள், எண்ணவோட்டங்கள், அவர்களைப் பற்றிய பிறரது கருத்துகள் என அவர் நினைவில் நிற்பவற்றை எடுத்துக்காட்டுகிறார். இதன்மூலம் அவரது வாசகப்பரப்பை உணர முடிகிறது.  மேலும் இவை எழுத்தாளனின் படைப்புகளை மட்டும் வாசித்த வாசகனுக்கு அறியாத அவர்களது வாழ்க்கையின் மறுபக்கத்தை திறந்து விடுகின்றன.  படைப்பு மற்றும் படைப்பாளியின் அரசியல் ஒருசேர வெளிப்படக் காண்கிறோம். புதுமைப்பித்தன், ப.சிங்காரம், கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், ஆர்.சண்முகசுந்தரம் பற்றிய அவதானிப்புகளும் நூலில் உண்டு.

    சி.சு.செல்லப்பா அப்பாவி. எழுத்தே தவம் என ஏற்றவர். இது மாசு மருவற்ற தன்மை. தன்னைப் பற்றிய அறியாத்தனம். ஆனாலும் அது பவித்ரமானது. ஒரு பெரும் சாதனையாக எதையும் அறியாத ஒரு சின்னக் குழந்தையை போன்று இருக்க வேண்டியது”, (பக்.11), “தனக்கு (கரிச்சான் குஞ்சு) எதுவுமே தெரியாது என்று அறிந்திருப்பதே மாசில்லாத தன்மை. இதுவே ஞானம், இதுவே ஞானவெளி, பரிபூர்ண சுதந்திர வெளி, இடையூறு இல்லாத ஆழ்ந்த வெளி”, (பக்.17) என்று தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

     கீதாபிரஸ் வெளியிட்ட பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்த ஸ்வாமிநாத ஆத்ரேய, தனக்குக் கிடைத்த பெரும் ராயல்டி தொகையை சங்கர மடத்திற்கு அளித்தபோதிலும் அவர் முதுமையில் தனியாய் நின்றபோது சங்கர மடம் கண்டுகொள்ளவில்லை என்பதையும் பதிவு செய்கிறார். கீதா பிரசின் இந்துத்துவ அரசியல் பரப்புரைக்கு விடியல் பதிப்பகம் வெளியிட்ட அக்ஷய முகுலின்இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்என்ற நூலைப் பார்க்கலாம். தமது வாழ்வின் இறுதிக் காலத்தில் மிகவும் துயரநிலைக்கு ஆளான ந.பிச்சமூர்த்தி, மௌனி, எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களையும் வாசகர்களை அறியச் செய்துள்ளார்.  

    ஆர்.சூடாமணி தனது சொத்துகள் 21 கோடியை எழுத்து சாராத சமூக நிறுவனங்களுக்கு அளிப்பது, மிகவும் கேவலமாகப் பேசப்பட்ட சதிர்க் கச்சேரி பிராமணர்களால் கைப்பற்றப்பட்ட பிற பரதநாட்டியமாக பொலிவு பெற்றதை வரவெற்கும் தேனுகா, கு..ரா.விற்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்பட்டபோது அவர் கதைகளை சகோதரி கு..சேது அம்மாள் தனது பெயரில் வெளியிட்டது  போன்ற எழுத்தாளர்களின் வாழ்வனுபவங்களை இந்நூலில் காணமுடிகிறது. தேனுகாவில் கலை மற்றும் இசையறிவை சிறப்பாக அறிமுகம் செய்கிறார்.

     கரிச்சான்குஞ்சு மொழிபெயர்த்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூலை What is Living and What is Relevant என்று தவறாகக் குறிப்பிடுகிறார். அந்நூலின் பெயர் What is Living and What is Dead in Indian Philosophy என்பதாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு முன்னதாக கரிச்சான் குஞ்சுவின் கண் அறுவைச் சிகிச்சை தோழர்கள் பொ.வேல்சாமி, .மார்க்ஸ், வே.மு.பொதியவெற்பன் போன்றோர் உதவிகள், நட்புணர்வு போன்றவற்றை ஏன் மறைக்க வேண்டும்? வெங்கட் சுவாமிநாதனின் கேலி, கிண்டல்களை விட இவை முதன்மை இல்லையா? இடதுசாரிகளிடம் அவர் கொண்ட நெருக்கம், புரட்சிப் பண்பாட்டு இயக்கப் போராட்டங்களில் பங்கேற்பு, ஈழ எழுத்தாளர் கே.டேனியலுக்கு இறுதி அஞ்சலி போன்றவைகளுக்கு மத்தியில் அவரை வெறும் வைதீகப் பிராமணர் என்பது கேலிக்குரிய ஒன்று. ஒருவர் மீதான எதிர் விமர்சனத்திற்கு வெங்கட்சுவாமிநாதனை பல இடங்களில் துணைக்கழைக்க வேண்டிய தேவையே இல்லை என்பதை நூலைப் படிக்கையில் உணரமுடியும்.

      ஆர், சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கிருத்திகா என மூன்று பெண்கள் மட்டுமே இந்த ஆளுமைகளில் உள்ளனர். பிறரை அம்மாமிக் கதைகளையும்  மடிசஞ்சிக் கதைகளையும் கூடைகூடையாக எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்று நிராகரித்து விடுகிறார். இப்பட்டியலில் ராஜம் கிருஷ்ணனையும் இணைக்காமல் இருந்திருக்கலாம் போலும்!

       குரல்வளை அவருடையது. ஓசை பிறருடையதாக இருந்தது”, என்று சுந்தர ராமசாமி குறித்த விமர்சனங்களை வெகு நளினமாக வைக்கும்போது ராஜம் கிருஷ்ணன் மீதான விமர்சனங்கள் ஈட்டிபோல் பாய்கின்றன.  குடும்ப ஓய்வூதியம், எழுத்தாள நண்பர்களின் தாராள உதவிகளோடு சௌகர்யமாகவே வாழ்ந்தார்”, “ராஜன் கிருஷ்ணனின் அறச் சீற்றம் அவரை நிம்மதியாகவும் சாந்தமாக இருக்க விடவில்லை”,  பெண்கள் மீதான அதீதப் பரிவும் ஆண்கள் மீதான எல்லையற்ற வெறுப்பும்”, “ராஜன் கிருஷ்ணன் ஆண்கள் சார்ந்த எந்த விவகாரங்களை சந்தேகத்தோடுதான் பார்த்தார்”, என்றெல்லாம் கடும் குற்றஞ்சாட்டுகளை அடுக்குபவர் பிறர் மீது அவ்வாறான கோபம் கொல்வதில்லை என்பதையும் இந்நூலில் காணமுடியும்.  எனவேதான் இவரைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்ல வேண்டியுள்ளது.                                                                                                                                                                                                                                                           

நூல் விவரங்கள்:

புனைவு வெளி    (தொகுதி 1 & 2)

நா.விச்வநாதன்

தொகுதி – 1: முதல் பதிப்பு:  டிசம்பர் 2021

பக்கங்கள்: 136  விலை: ரூ.180

தொகுதி – 2: முதல் பதிப்பு:  டிசம்பர் 2022

பக்கங்கள்: 128  விலை: ரூ.150

வெளியீடு:

பேசும் புதிய சக்தி,

29 H, ANR, காம்ப்ளக்ஸ்,

 தெற்கு வீதி,

திருவாரூர் – 610001.

அலைபேசி: 9489773671

மின்னஞ்சல்: pudiyasakthitvr@gmail.com

நன்றி: பேசும் புதிய சக்தி – மாத இதழ் ஏப்ரல் 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக