திங்கள், பிப்ரவரி 21, 2011

கனிமொழி வரலாற்று அறிஞராகவும் மாறிய கதை

கனிமொழி வரலாற்று அறிஞராகவும் மாறிய கதை.

-மு.சிவகுருநாதன் 

     
         தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியில் கட்டப்பட்ட கூத்து களரி சேத்தி-1  கட்டடங்களை 18 ,பிப்ரவரி 2011 இல் கனிமொழி திறந்து வைத்திருக்கிறார்.நல்லது.பாராட்டுவோம்! (தினமணி-திருச்சி பிப்.20,2011)
     
        நான் இங்கு அரசியல் பேசவில்லை என்று சொல்லி வரலாற்று அறிஞராக தன்னை மாற்றிக்கொண்டு கனிமொழி நிகழ்த்திய திரிபுவாத உளறல் சொல்லாடல்களே நம்மை பேசவைக்கின்றன.

        கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மு.கருணாநிதி களப்பிரர் காலத்தில் தமிழ் முடங்கிப்போனதாகச் சொல்லி தனது வைதீக ஆதரவை மீண்டுமொரு முறை  வெளிப்படுத்திக்கொண்டார். அதன் வழியில் கனிமொழியும் தனது வைதீக ஆதரவு நிலைப்பாட்டிற்கு இந்தப் பேச்சுக்கள் மூலம் வலுசெர்த்திருகிறார் .
         
          இந்தியாவில் தமிழகம், கேரளத்தைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் படையெடுப்பாளர்களின் கைகளுக்கு போனதால் பல மாற்றங்களை சந்தித்துள்ளனவாம். படையெடுப்பு நடைப்பெற்று  புதிய ஆட்சி முறை ஏற்படும்  போது அந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் அனைத்தும் மாறிவிடுகிறதாம் .
         
         இவர் எந்தப் படையெடுப்பைச்  சொல்கிறார்? தமிழகம், கேரளாவை மட்டும் விட்டுவிடுவதால்  முகலாயர் படைஎடுப்பைத்தான் சொல்கிறார் என்று அவதானிக்கலாம். இப்படையெடுப்பால்  என்ன கெட்டுவிட்டது? இந்தியாவில் இந்துக் கலாச்சாரம் அழிந்து முற்றிலும் இஸ்லாம் மயமாகிவிட்டதா? படையெடுப்பு என்று சொல்கிறபோது ஆரியப் படையெடுப்பு  தொடங்கி அய்ரோப்பியர் படையெடுப்பு வரை  சொல்லத்தான் வேண்டும்.எல்லாவற்றையும் சொன்னால்  தமிழ்நாடு மட்டும் எப்படி தப்பிக்கும்?

          தமிழகத்தில் மட்டும்தான் நிரந்தர ஆட்சி மாற்றம் இல்லாத ஒரு சூழல் இருந்துள்ளதாம். கிட்டத்தட்ட 2000 ஆண்டு கால  வாழ்க்கைமுறை, மதிப்பீடுகள், கலைவடிவங்கள், அதன் சாரங்களைத்  தொடர்ந்து பின்பற்றி வாழக்கூடிய  வாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுந்தான் கிடைத்துள்ளதாம். ஏன் மலையாளிகளுக்கு கிடைக்கவில்லை? அங்கு இடதுசாரிகள் ஆட்சியதிகாரத்தில் இருந்து கூட காரணமாக இருக்கலாம்.

        தமிழகத்தில் 2000 ஆண்டு வரலாறு என்ன? நிரந்தர ஆட்சி மாற்றமே இல்லையா? கிபி 250 -கிபி 600  வரை தமிழகத்தில் என்ன நடந்தது? மு.கருணாநிதி குடும்பத்தின் முன்னோர்களான  சேர,சோழ, பாண்டியர்கள்  2000  ஆண்டு காலத்தில் தொடர்ந்து கோலோச்சி  கலாச்சார, பண்பாட்டு மரபுகளை கடத்தி வந்தார்களோ?

        திராவிட இயக்க ஆட்சி இருக்கக் கூடிய ஒரு காலகட்டத்திலும் இல்லாத ஒரு காலகட்டத்திலும் நமது கலை வடிவங்கள், நம்பிக்கைகள் மாறக்கூடியவையாக இருந்துள்ளனவாம்.  எனவே நமது அடையாளங்கள்  என்பவை ஆட்சியையும் சார்ந்ததாகத்தான் பல நேரங்களில் அமையக் கூடிய அபாயம் உள்ளதாக  கனிமொழி எச்சரிக்கிறார்.

       40  ஆண்டுகளுக்கு மேலான திராவிட இயக்க ஆட்சியில் என்ன கலாச்சார புரட்சி நடத்தப்பட்டுள்ளது? ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் தவிர வேறு எந்த வகையான மதிப்பீடுகள் இவர்களால் உயர்த்தப்பட்டுள்ளன. வருணாஸ்ரமத்தை   மறுத்து கல்வி அளித்தது கூட திராவிட இயக்க ஆட்சியின் சாதனைகளில் இல்லை.

       கூத்து போன்ற தொல் தமிழ் கலைவடிவங்களை வருங்கால  தலைமுறைக்குக் கொண்டு சொல்வதற்கும் திமுக  ஆட்சி தொடர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும்   படையெடுப்பு,ஆட்சி மாற்றம் கலாச்சாரம் -பண்பாடு அழிவு என்றெல்லாம் உளற வேண்டிய அவசியம் என்ன?

       ரவிக்குமார் ஆசிரியராக இருக்கும்  மணற்கேணி- 02 (செப்டெம்பர் -அக்டோபர் 2010) இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்துடன் ஒத்திசைந்து முடிக்கிறேன்.


       “நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் ‘அத்தாரிட்டி’ களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கின்றோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.  இது தனிமனிதர்கள் அடையும் லாபநஷ்டங்கள்  தொடர்பான பிரச்சனையல்ல. வரலாற்றுப் பிரக்ஞை  குறித்த சிக்கல். இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்”.  

                   மணற்கேணி-02 (செப்டெம்பர் -அக்டோபர் 2010)

சனி, பிப்ரவரி 19, 2011

ஊழலுக்காக பொய் பேசும் பிரதமர் மன்மோகன் சிங்

ஊழலுக்காக பொய் பேசும்  பிரதமர் மன்மோகன் சிங்

- மு. சிவகுருநாதன்




          சில ஆண்டுகளாக இந்தியாவெங்கும் பேசப்பட்டு வரும் இமாலய ஊழல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வாய் திறப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.  அதை சரிசெய்வதாக நினைத்துக்கொண்டு தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கான நேர்காணல் ஒன்று ஏற்பாடு செய்து நேரலை மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.  முன்கூட்டியே எழுதி வாங்கப்பட்ட வினாக்கள், அதற்கு  முன் தயாரிப்பான பதில்கள் என்ற நாடகத்தில் பர்கா தத், வீர் சங்வி போன்றோருக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

             பிரதமர் மன்மோகன் சிங் மிகப் பெரிய அறிவாளி, வெளிநாட்டில் படித்த மேதை ( உள்நாட்டில் படித்தால் அவன் பேதை.) சிறந்த பொருளாதார வல்லுநர், இந்திய ரிசர்வ் வங்கி, உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர், நிதியமைச்சராக இருந்ததன் மூலம் உலகமயத்தைக் கொண்டு வந்து இந்தியாவில் புரட்சி செய்தவர்,சராசரி அரசியல்வாதியாக மாறாத உத்தமர்,திருவாளர் பரிசுத்தம்   என்றெல்லாம் ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனைகள் இங்கு நிறைய உண்டு.    தனக்கு எதுவும் தெரியாது என்று குழந்தை போல்  ஒப்பிக்கும் ‘அப்பாவித்தனம்’ என்ற அசிங்கத்தையும் இதனோடு அவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
             2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிதி அமைச்சகம், தொலைத் தொடர்பு அமைச்சகம்,  தொலைத் தொடர்பு ஆணையம், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) ஆகியன ஒப்புதல் அளித்துவிட்டதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கைவிரிக்கிறார்.  அமைச்சரவையின் தலைவர், கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றுக்கு என்ன பதில்?  ஆ. ராசா தவிர பிறர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை தொடங்கப்படவில்லை.  இதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் கூட  ‘அப்பாவித்தனத்திற்கு’ ஊடகங்களோடு  சேர்ந்து நாமும் வாழ்த்துப்பா பாடலாம். 

             தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின்(CAG)  இழப்பு கணக்கீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.   இழப்பு ஏற்பட்டதை 
CAG  மட்டுமல்ல   CBI -யும்  ஒத்துக் கொண்டாயிற்று.  தன்னைப் போன்ற ஒரு பெரிய பொருளாதார வல்லுநரை வைத்து உண்மை இழப்பைக் கணக்கிட்டுத்தான் பார்க்கலாமே!  இதற்கும் அடுத்த பிரதமரின் உளறல்தான் பாசிசத்தின் உச்சம்.  இதற்கு கபில்சிபல் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

            உணவு மானியமாக ரூ. 80 ஆயிரம் கோடியும் உர மானியமாக ரூ. 60 ஆயிரம் கோடியும் எரிவாயு, மண்ணெண்ணெய் மானியமாக பல்லாயிரம் கோடியும் ஒதுக்கப்படுகிறது.  அதைப் போலத்தான் இதுவும் என்கிறார்.  எனவே இதை எப்படி இழப்பு என்று சொல்ல முடியும்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்.இஸ்ரோ தேவாஸ் மல்டி மீடியாவுக்கு தாரை வார்த்த 2 லட்சம் கோடியும் மானியந்தானோ!  டாடா, அம்பானி போன்ற பிச்சைக்காரர்களுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளதை கேட்டு நாமெல்லாம் மகிழ்ச்சி  அடையவேண்டியதுதான்!   இதைக் கேட்ட செய்தியாளர்கள் துணைக் கேள்வி ஒன்றை கேட்டிருக்க வேண்டுந்தானே! முன்னதாகவே ஒத்திகை பார்க்கப்பட்ட இந்நாடக அரங்கேற்றத்தில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை என்பது யாருக்கு விளங்கப் போகிறது?.
  
           இஸ்ரோ நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்துடன் 2005-இல் முறைகேடாக செய்து கொண்ட எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பொய் சொல்கிறார்.  2 ஜி அலைக்கற்றை ஊழலில் பிரதமரின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் இதில் தனது துறையின் பொறுப்பையும் நிர்மூலமாக்குகிறார்.  தனக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுப்பவர் உண்மையில் யாருக்கு  தொடர்பு என்பதைக் கண்டறிய ஏன்  நேர்மையான விசாரணை ஏன் மேற்கொள்ளவில்லை?  6 ஆண்டு காலமாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? என்ற கேள்விகளையும் எதிர் கொண்டிருக்க வேண்டும்.  70 நிமிடப் பேட்டியில் இதற்கு நேரமில்லை போலும்.  இஸ்ரோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் மட்டும் இழப்பு,ஊழல் இல்லை என்றாகிவிடுமா?. சாமானிய  குற்றவாளிகளுக்கு மட்டும் நார்கோ அனாலிசிஸ்,பிரெயின் மேப்பிங் என்றெல்லாம் உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்துவதுபோல் இவர்களுக்கும் நடத்தப்போவது எந்நாளோ? 

            நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC)விசாரணைக்கு நான் தயார் என்றும், அதற்கு நான் தடையாக இல்லை என்றும் கூறும் பிரதமர் அதற்கு யார் தடையாக இருந்தார்கள் என்பதை சொல்வதற்கு ஏன் இவ்வளவு நாட்களானது என்பது பற்றியும் வாய் திறப்பதில்லை.

            கூட்டணி ஆட்சியில் அதிகாரம் என் கையில் இல்லை;  கூட்டணி தர்மத்தில் நாம் நினைத்ததையெல்லாம் சாதிக்க முடியாது; விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்று பாடம் நடத்தும் பிரதமர் இந்தியாவை முழுவதுமாக அந்நிய மற்றும் உள்நாட்டு முதலாளிகளிடம் விற்க முனைவதையும் கூட்டணி தர்மம் என்றும் விட்டுக் கொடுத்தல் என்றும் சொல்ல விரும்புகிறாரா?

             ப. சிதம்பரம் உள்துறை அமைச்சரான பிறகு காஷ்மீர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மேம்பட்டிருக்கிறது என்று சொல்லும் பிரதமர் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி ஏற்பட உல்பா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதைக் குறிப்பிடுகிறார்.   ஆனால் ஏன் மாவோயிஸ்டுகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்பதைத் தெளிவுப்படுத்தவில்லை. 

             வளைகுடா நாடுகளில் உள்ள 50 லட்சம் இந்தியர்கள் பற்றி கவலைக் கொள்வதாகவும் எகிப்தில் நடந்தது போன்ற கிளர்ச்சி இந்தியாவில் சாத்தியமில்லை என்பதிலும் பிரதமர் தெளிவாக இருக்கிறார்.  எவ்வளவு ஊழல் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.  வாக்குக்குப் பணம் என்பதன் மூலம் ஊழலில் குடிமக்களும் பங்கு பெறுவதை உணராதவரா அவர்?

                         செய்தியாளர்கள், ஊடகங்கள் ஊழலை வெளிக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்று சொல்லி நன்றி தெரிவிக்கும் பிரதமர் இவைகளை பெரிதுபடுத்தி எழுதி உலக அரங்கில் இந்தியாவின் புகழைக் கெடுத்து விடாதீர்கள் என்று செய்தியாளர்களைச் செல்லமாக தட்டிக் கொடுக்கிறார்.

             நான் பதவி விலகமாட்டேன், எனது பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.   அணுசக்தி இழப்பீடு மசோதா போன்று அமெரிக்காவிடம் ஒத்துக் கொண்ட பணிகளும் அலைக்கற்றை போன்ற நவீன இயற்கை வளங்களும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் மாவோயிஸ்ட்களின் தண்டகாரண்யப் பகுதியில் இன்னும் மீந்திருக்கும் கனிம வளங்களையும்  தனியாருக்கு தாரை வார்த்தல் போன்ற பல்வேறு பணிகள்  இன்னும் முடிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதைத்தான் அவர் இவ்வாறு சொல்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.
    

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் - இரு மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் - இரு மாத இதழ்

- மு. சிவகுருநாதன்

 


          இலக்கிய இதழ்களில் நேர்காணல்களுக்கு  எப்போதும் முக்கியத்துவம் உண்டு.   பவுத்த அய்யனார் நேர்காணலுக்கென்றே தனி இதழ் தொடங்கி கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் நேர்காணலுடன் ஜனவரி 2010-ல் முதல் இதழை வெளியிட்டார்.  இரண்டாவது இதழ் வண்ணநிலவனுக்காகவும், மூன்றாவது இதழ் நாசருக்காவும் வெளிவந்துள்ளது.


            “எந்த ஒரு விஷ­யத்திற்கும் சட்டம், அரசியல், சமூகம் ஆகிய முப்பரிமாணங்கள் உண்டு.   இந்த முப்பரிமாணங்களையும் சிக்கு சிடுக்கு இல்லாமல், தெளிவாக, ஸ்படிகம் போல் தன் எழுத்தில் வடிக்க முடிந்தவர் அவர்.  அறிவுஜீவி என்று யார் யாரையோ சொல்கிறோம்.   இவர் ஒரு முதல் தரமான அறிவு ஜீவி”, என்று ‘துக்ளக்’ சோவைக் குறிப்பிடும் எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல் இரண்டாவது இதழில் வெளியானது.


            “வண்ணநிலவன் எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன.  இடைப்பட்ட காலத்தில் பலவிதமான தத்துவப் பார்கைள் அறிமுகமாகி இலக்கியத்துடன் உறவாடி மறைந்து விட்டன.  அனைத்தையும் கடந்து, இன்றளவும் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை நம் மனம் நெருக்கமாகவே உணர்வதாக” இவரது சிறுகதைகள் பற்றி பாவண்ணன் எழுதிய கட்டுரை சொல்கிறது.  வல்லிக்கண்ணன் பற்றிய வண்ணநிலவன் கட்டுரை ஒன்று உள்ளது.


            விக்கிரமாதித்யன், சோ, பவா. செல்லதுரை, சா. கந்தசாமி, நர்மதா ராமலிங்கம், வண்ணதாசன், கலாப்பிரியா, ருத்ரய்யா போன்றோர் வண்ணநிலவன் பற்றிய தமது மதிப்பீடுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

            மூன்றாவது இதழில் நடிகர் ம. நாசரின் நேர்காணல் 36 பக்கங்கள் வரை நீள்கிறது.  நாசர் தமது நேர்காணலில்,

            “எனக்குக் கிடைத்த வாய்ப்பு எல்லா இஸ்லாமியர்களுக்கும் கிடைப்பதில்லை.  ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு சமூகத்தின் மீதும் அரசியல் குறியீடு இருப்பது ஆபத்தானது”

            “தமிழ் சினிமாவில் தீவிரவாதிகள் என்றால் அது முஸ்லீம்கள்தான் என்று ஸ்திரப்படுத்தி விட்டார்கள்”

             “எல்லா ஊடகங்களும் எல்லா மக்கள் மீதும் அக்கறை கொண்டிருந்தால் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  நான் முஸ்லீம் என்பதால், முஸ்லீம்கள் ஒடுக்கப்பட்டால்தான் கோபம் வரும், பரிதாபம் வரும் என்பது கிடையாது.  ஒடுக்குமுறை யாருக்கு, எங்கு நடந்தாலும் எனக்குக் கோபம் வரும்.  பொதுவாக இன்று அரசியலாக்கப்பட்ட மத உணர்வு ஆபத்தானதாக உள்ளது”

            “என்னுடைய இனம் பாதிக்கப்படும் போது மட்டுமே குரல் கொடுத்தேன் என்றால் அது சரி கிடையாது.  அது உத்தப்புரத்தில் நடந்தாலும் உஸ்மான்புரத்தில் நடந்தாலும் சரி, நம்மால் குரல் கொடுக்க முடியாவிட்டாலும் அது பற்றிய பிரக்ஞையாவது இருக்க வேண்டும்.  அது பற்றிய தெளிவு வேண்டும்.  சாதாரணக் குடிமக்கள் இதைப் பற்றிய அரசியலே தெரியாமல் உள்ளார்கள்”

            என்று பல்வேறு  கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.


            வெங்கடேஷ் சக்கரவர்த்தி, டிராட்ஸ்கி மருது, மோசசு மைக்கேல் பாரடே, பாலச்சந்தர், அனீஸ், ஞாநி, சிம்புத்தேவன், யூகி சேது, ருத்ரன் போன்றோர் நாசர் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


            “ஆவாரம்பூவிற்குப் பின் நாசருடைய பாத்திரத்தை நோக்கிய அணுகுமுறை மாறியிருப்பதை அவதாரம், தேவதை, குருதிப்புனல் போன்ற திரைப்படங்களின் வழி உணர முடியும்.  அதற்கு மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது நாசருடைய இடைவிடாத தேடல்”, என்று சண்முகராஜா தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.


            “பொருளாதார மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக தான் வணிகமயமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன் மீதே ஒரு வித கசப்புணர்ச்சியோடும் சுய விமர்சனத்தோடும் இயங்கி வருகின்ற அரிதாரமற்ற அரிதான கலைஞனாக” கருணாபிரசாத் நாசரை இனம் காண்கிறார்.  கவனிக்க வேண்டிய ஆளுமைகளை அறிமுகம் செய்வதால் படிக்க வேண்டிய இதழாக நேர்காணல் இருக்கிறது. 

            இதழ் - 2        பக். 40           விலை ரூ. 15

            இதழ் - 3        பக். 68           விலை ரூ. 25
 
வெளியீடு:

                        மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்,
                        3/363, பஜனை கோவில்தெரு,
                        கேளம்பாக்கம், சென்னை - 603 103
                        செல்: 9688086641.

                   e-mail: ayyapillai@gmail.com

சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் - கலை இலக்கிய மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் - கலை இலக்கிய மாத இதழ்

- மு. சிவகுருநாதன்





          முன்பு புதுப்புனல் வெளியீடாக எம். ஜி. சுரேஷ்-இன் ஆசிரியப் பொறுப்பில் ‘பன்முகம்’ இதழ் வெளியாகி நின்று போனது.  ஜனவரி 2010 முதல் ஆர். ரவிச்சந்திரனை ஆசிரியராகவும் லதா ராமகிருஷ்ணனை இணை ஆசிரியராகவும் கொண்டு ‘புதுப்புனல்’ மாத இதழ் இதுவரை 10 இதழ்களை வெளியிட்டுள்ளது.


            இதழ் வெகு சாதாரணமாக வெளிவருவது பெருங்குறையாகப்படுகிறது.  ‘பன்முகம்’ இலக்கியக் கோட்பாட்டிதழ் போன்று நடத்த விரும்புவதாக ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது.  அதற்கேற்ற படைப்புகள் கிடைக்கப் பெறாதது இதழை செழுமையாக்க முடியாததன் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


            தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, அம்ருதா போன்ற இடைநிலை இதழ்களின் பெருக்கம் சிறு பத்திரிக்கை சார்ந்து எழுதும் படைப்பாளிகளை ஈர்த்து விட்ட காரணத்தால் உண்மையான சிறுபத்திரிக்கைகளுக்கு இன்று எழுத ஆளில்லாமல் போய்விட்டது.   குறித்த காலத்தில் வராமற் போகும் இதழ்கள் தகுந்த கவனிப்பைப் பெறாமலிருக்கின்றன.   இனி வரப்போகும் இதழ்கள் சிறப்பாக அமையுமென எதிர்பார்க்கலாம்.


            பிப்ரவரி 2011 இதழில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் ‘நாட்டுப்புறம்’ என்ற சொல் ‘நாட்டுப்புரம்’ என பிழையாகச் சுட்டப்பட்டிருப்பது குறித்த மு. பிரகாஷ்-ன் கட்டுரை இடம் பெற்றுள்ளது சிறப்பு.  நான் பல முறை எழுதியபடி பாடநூற்கள், பாடத்திட்டம், கற்றல் - கற்பிக்கும் முறைகளை யாரும் விமர்சனத்திற்குட்படுத்துவதில்லை என்பது பெருங்குறையாக இருந்து வருகிறது.  அந்த வகையில் இக்கட்டுரை சங்க இலக்கியச் சான்றுகளுடன் ‘நாட்டுப்புறம்’ என்ற சொல்லே சரியயென நிறுவுகிறது.


            ‘வரலாற்றுப் பன்மையும் தேசிய ஒழுக்கமும்’ என்ற கட்டுரையில் மு. ரமேஷ் களப்பிறர் என்று சொல்லி மீண்டும் குழப்பத்திலாழ்த்துகிறார்.  (இல்லை, அச்சுப்பிழையா என்பதும் தெரியவில்லை).  மயிலை. சீனி. வேங்கடசாமி, பொ. வேல்சாமி உள்ளிட்ட யாரும் களப்பிறர் என்று சொல்லவில்லை.  களப்பிரர் என்றுதான் கையாள்கின்றனர்.   களப்பிரர்களும் பல்லவர்களும் முன் வைத்த சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்கும் மனோபாவத்தை வைதீகம் வழங்கவில்லை என்கிறார்.   அவைதீக மரபுகளையும் ஆட்சிகளையும் அழித்தொழித்ததுதானே வைதீகத்தின் முதன்மைப் பணி.


           இந்தியாவில் பிரெயில் எழுத்து முறையில் வளர்ச்சி பற்றி மில்டன் சந்தானகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  தற்போது ‘க்ரியா’ பிரெயில் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.


            சு. வேணுகோபால், திராணி, உ. மணி ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  யதார்த்த பாணி சிறுகதைகள் வெகுவாக சலிப்பை உண்டு பண்ணுகின்றன.  க. அம்சப்பிரியா, க்ருஷாங்கினி மற்றும் பலரது கவிதைகளும் நூல் மதிப்புரைகளும் இடம் பெற்றுள்ளன.


            ‘ராஜ விளையாட்டு’ என்ற ஸ்டீஃபான் ஜஸ்வேய்க்கின் ஜெர்மானியக் குறுநாவல் லதா இராமகிருஷ்ணனின் மொழி பெயர்ப்பில்  தொடராக வருகிறது.   நாவலை மொத்தமாகப் படிப்பதுதான் நன்றாக இருக்கும்.  படிக்க வேண்டிய ஒரு சிற்றிதழ்.  இனிவரும் இதழ்கள் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

தனி இதழ் ரூ. 15.  ஆண்டு சந்தா ரூ. 180.

தொடர்புக்கு:

புதுப்புனல்,
117,திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை(முதல் மாடி),
(ரத்னா கேப் எதிரில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005,

செல்: 96623 76282
            98844 27997
e-mail : pudhupunal@gmail.com

சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு - சுற்றுச்சூழல் மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு - சுற்றுச்சூழல் மாத இதழ்

- மு. சிவகுருநாதன்







          பூவுலகின் நண்பர்களால் கு. சிவராமன் ஆசிரியராக ‘பூவுலகு’ என்ற சுற்றுச்சூழல் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.  டிசம்பர் 2010 இதழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிறப்பிதழாக வந்துள்ளது.


            ‘வேதாந்தா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை  தூத்துக்குடியில் ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்டு மு. கருணாநிதியால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் பி.மி. தமிழ்மாந்தனின் கட்டுரை அவ்வாலையில் ஏற்பட்ட விபத்துக்களைப் பட்டியலிடுவதுடன் தமிழக அரசியல் கட்சிகள் எப்படி ஆலை நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறிப் போயின என்பதை அம்பலப்படுத்துகிறது.


            ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல் செய்ய உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றால் மக்கள் விரோதத் தீர்ப்பை எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருப்பதாக வழக்குரைஞர் சுந்தர்ராஜன் குறிப்பிடுகிறார்.



            ஸ்டெர்லைட் செம்பு உருக்காலை மூலம் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுதல் பற்றியும் தொழிற்சாலையின் விதி மீறல், முறைகேடுகள் பற்றியும் பேசும் வெ. கஜேந்திரனின் கட்டுரை வளர்ச்சிக் கோட்பாட்டுக்கும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள வலியுறுத்துகிறது.


            ப. நற்றமிழனால் தமிழாக்கப்பட்டுள்ள நித்தியானந்த ஜெயராமனின் கட்டுரை அரசும் நீதித் துறையும் சூழலியல் குற்றவாளியான ஸ்டெர்லைட் ஆலைக்கு எவ்வாறு சாதகமாக நடந்து கொள்கின்றன என்பதை விவரிக்கிறது.


            நாட்டிலுள்ள பாக்சைட் வளத்தில் 55% இருப்பதாகக் கருதப்படும் ஒரிசா மாநிலத்தில் பாக்சைட் சுரங்கம் தோண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது.  ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் மட்டும் இதற்கு காரணமல்ல.  பலரின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவு என்பதை ஒரு கட்டுரை விளக்குகிறது.  பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவப் படைகளைக் கொண்டு பழங்குடி மக்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நிகழ்த்தி வரும் மத்திய அரசு  ஒரு புறமிருக்க,மறுபுறம் சீருடையணியாத மாநில  காவல்துறையினர் நியமகிரி மலைச்சரிவிலுள்ள பழங்குடியினத் தலைவர் லடோ மாஜி சிகாகாவை  கடத்திச் சென்று சித்ரவதை செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.   வன உரிமைகளுக்காக போராடுவோரை எளிதில் மாவோயிஸ்ட்கள் என்ற முத்திரைக் குத்துவதையும் இக்கட்டுரை புலப்படுத்துகிறது.


            சங்க கால இலக்கியத்தில் தாமரை என்ற மருதமலை முருகனின் கட்டுரை தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத தொழில்நுட்பத்தைக் கொண்டு நேநோ தொழில்நுட்ப ஆய்வுகள், தண்ணீர் - அழுக்கு ஒட்டாத ஆடைகள், நீர் ஒட்டாத சுவர் வண்ணப் பூச்சுகளுக்கு அடிப்படையாகப் பயன்படுவதையும் மருத்துவ தாவரப் பன்மயம்  (Medicinal Plant Diversity)  போன்று இன்றைய அறிவியல் கோட்பாடுகளுக்கு சங்க இலக்கியம் முன் மாதிரியாக இருப்பதை விவரிக்கிறது.


            பசுமைப் புரட்சியின் கதையைத் தொடராக வைகை குமாரசாமி எழுதி வருகிறார்.  நாம் வயல்களில் தெளித்த  DTT  என்ற நஞ்சு ஆறு, கடல், மீன்கள் என சங்கிலித் தொடராக எஸ்கிமோக்கள் வரை சென்ற கதையையும் அதன் மூலம் விதவிதமான நோய்கள் உண்டானதையும் இத்தொடர் விளக்குகிறது.

            
             பன்னாட்டு உரம் மற்றும் பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு முகவர்களாகச் செயல்படும் ‘பசுமை விகடன்’ போன்ற போலி சுற்றுச் சூழல் இதழ்கள் மத்தியில் பூவுலகின் பணி இன்றியமையாததாகும்.

(டிசம்பர் இதழில் 21 லிருந்து   30 வரை  பக்கங்கள் மாறியுள்ளபடியால் சில கட்டுரைகளை முழுமையாகப் படிக்க முடியவில்லை)



தனி இதழ் ரூ. 20

தொடர்பு முகவரி:

பூவுலகின் நண்பர்கள்,
A-2 அலங்கார் பிளாசா,
425 - கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600 010,

பேசி: 044 - 26601562,
இணையம் :   www. poovulagu.org
மின்னஞ்சல்: info@poovulagu.org

புதன், பிப்ரவரி 16, 2011

தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்

தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்.                - மு. சிவகுருநாதன்






(மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வி மற்றும் செயல்வழிக் கல்வி  பற்றிய நான்கு  குறுநூற்கள் குறித்த  விமர்சனப் பதிவு.)








           தமிழில் குழந்தை இலக்கியத்தைப் போல கல்வி சார்ந்த நூல்களுக்கும் எப்போதும் பற்றாக்குறைதான்.  அதுவும் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள், பாடநூற்கள், பயிற்று முறைகள் போன்றவை குறித்தான ஆய்வுகள் விமர்சனங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

            ‘சமச்சீர் கல்வி’ என்ற பெயரில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு புதிய பாடநூற்கள் வெளிவந்து ஓராண்டு ஆகப் போகிறது.  2, 3,4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடநூற்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.  இப்பாடநூற்களின் தரம் குறித்து யாரும் அதிகம் வாய் திறப்பதில்லை.   இப்போது நடைமுறையில் இருக்கும தமிழ்ப் பாடநூற்கள் பற்றிய தனது ஆதங்கத்தை எழுத்தாளர் பிரபஞ்சன் காலச்சுவடு ஜுன் 2010 இதழில் வெளிப்படுத்தியிருந்தார்.

             பாடநூற்களைப் போலவே கல்வியில் கற்பித்தல் - கற்றல் முறைகளும் மிகவும் முக்கியமானவை.  அவைகளைப் பற்றியும் நேர்மையான ஆய்வுகள் நடப்பதில்லை.   கல்வியைப் பற்றி சிந்திக்காத சமூகம் எப்படி வளர்ச்சியை எட்டுமெனத் தெரியவில்லை.



01.செயல்வழிக் கற்றலை சரியான முறையில் அமல்படுத்துதல்.

02.ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஐ அமல் செய்தல்.

03.தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்குதல்.

04.சமச்சீர் கல்வியை விரைவில் அமல் செய்தல்.

05.தமிழ் வழிக் கல்வியை அனைத்து நிலைகளிலும் அமல் செய்தல்.

06மேல்நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளிலும் பொதுத் தேர்வு நடத்துதல்
    மற்றும் +2 வகுப்புக்களை இளநிலைக் கல்லூரியாக மாற்றுதல்.

07.மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியிலும் மற்றும் அனைத்துப்
     பட்டப் படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அளித்தல்.

08.காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழித்து கல்வித் தரத்தை உயர்த்துதல்.

09.மேல்நிலை வகுப்புகளில் இட ஒதுக்கீட்டு ஆணையை சரியாக அமல்   செய்தல்.

10.விதிகளுக்குப் புறம்பாக பணம் பறிக்கும் பள்ளி நிர்வாகிகள் மீதும் தனிப்  பயிற்சிஎடுக்கும் ஆசிரியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்தல்.

11.ஆதி திராவிடர் / பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைத்தல்.

12.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.

13.அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் தமிழிலும் வினாத்தாள் வழங்குதல்.

14.சிறப்புக் கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுதல்.

15.மத்திய - மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%ஐ கல்விக்கு ஒதுக்கீடு செய்தல்.


                         தமிழக பள்ளிக் கல்வி எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகளை தகுந்த முறையில் அடையாளம் காட்டியிருக்கும் வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  செயல்வழிக் கற்றல் - எதிர்பார்ப்புகளும் சில உண்மைகளும், குழந்தைகள் கொண்டாடும் செயல்வழிக் கல்வி, நல்ல காலம் பிறந்து விடும் ஆகிய மூன்று குறுநூற்களும் செயல் வழிக் கற்றலின் (ABL - Actitivity Based Learning)  பெருமையைப் பேசுவதாக உள்ளன.   செயல்வழிக் கற்றலில் நல்ல அம்சங்கள் உள்ளதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.  ஆனால் பாவ்லோ ப்ரெய்ரேவின்  மாற்றுக் கல்வி அளவிற்கு இதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. 

                         ஒன்று  முதல் நான்கு வகுப்புக்களுக்கு ABL முறையும் ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறையும் ஆறு முதல் எட்டு வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையும் (ALM-Active Learning Methodology) ஒன்பதாம் வகுப்பிற்கு மட்டும் ALM+ -ம் கற்பித்தல் முறைகளாக இன்று அரசால் அமல் செய்யப்பட்டு வருகின்றன. 6 - 9 தமிழ் பாடத்திற்கு  போன்ற எவ்வித முறையும் நடைமுறையில் இல்லை.  10, 11, 12 ஆகிய வகுப்புக்களுக்கு எப்போதும் போல தேர்வுக்கு தயார் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.   அரசு பொதுத் தேர்வு, மதிப்பெண்கள் என்று வருகிற போது மட்டும் ஆகச் சிறந்ததாக சொல்லும் முறைகளை ஏன் கடைபிடிப்பதில்லை என்று கேட்டால் யாரிடமும் விளக்கம் கிடைக்காது.
  
                        சென்னை மாநகராட்சியில் திருவான்மியூர் குப்பம் தொடக்கப் பள்ளி போன்ற ஒரு சில இடங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ABL முறை வெற்றி பெற்று விட்டதாகச் சொல்ல முடியாது.   இந்தத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், நிர்வாக குளறுபடிகள், அதிகார மோதல்கள் பற்றியெல்லாம் இந்த நூற்கள் பேசாதது பெருங்குறையாகும்.

            அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்திற்கென ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வள மையம் (BRC) செயல்படுகிறது.   தனியே ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளார்.  1 முதல் 8 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மையம், மாவட்ட கல்வி மற்று பயிற்சி நிறுவனம் (DIET)ஆகியன பல்வேறு பயிற்சிகளை நடத்துகின்றன. இது ஓராண்டுக்கு 30 நாட்களுக்கு மேலாக நடைபெறுகிறது.   இந்தப் பயிற்சிகள் அனைத்தும் நேரத்தையும் நாட்களையும் போக்குவதற்காக அமைந்தவை.  எந்த விதத் திட்டமிடலும் முறையான பயிற்சியும் நடைமுறைப் பயனுடைமையும் இல்லாததாகவே இவைகள் அமைகின்றன.   நிதியாண்டின் இறுதி வந்து விட்டால் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் முடிந்த வரையில் அனைத்துப் பயிற்சிகளையும் நடத்தி நிதியைக் காலி செய்யும் முறையைத் தான் அதிகாரிகள் பின்பற்றுகிறார்கள்.

            விடுமுறை நாட்களில் பயிற்சியளிப்பது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு சனி, ஞாயிறும் பயிற்சி என்றால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை யாரும் கண்டு கொள்வதில்லை.  அரசு ஊழியர்களைப் போல வேலை நாட்களை அதிகப்படுத்தினால் அரசு ஊழியர்களுக்கு ஈடாக ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டி வரும்.  ஒவ்வொரு மாதத்திலும் 5 நாட்கள் ஏதோ ஒரு பயிற்சி என்று சொல்லி வீணாகப் பொழுதைக் கழிக்கும் நடைமுறைதான் தற்போது வழக்கத்தில் உள்ளது.

            தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, அனைவருக்கும் தொடக்கக் கல்வி ஆகிய மூன்று துறைகளிலும் மேலிருந்த கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரப் போட்டி, பணம் சம்பாதிப்பதில் போட்டி போன்றவற்றால் ஆசிரியர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  ஒரே நேரத்தில் இரு அமைப்புகள் பயிற்சியை நடத்தும்.   வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டும்.  இயக்குநர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி பல நேரங்களில் வெளிப்படையாகவே அரங்கேறுகிறது. 

            பயிற்சிதான் 30 நாட்கள் என்றால் இவர்கள் கேட்கும் புள்ளி விவரங்களைத் தயார் செய்வதே பல வேலை நாட்களை விழுங்கி விடுவதாக இருக்கிறது.   எதற்காக திரும்பத் திரும்ப இத்தகைய புள்ளி விவரங்களைக் கேட்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.  ஒரு பக்கம் வட்டார வள மையம், மறுபுறம் உதவித் தொடக்கக் கல்வி / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள்.  இவர்கள் கேட்கும் புள்ளி விவரங்களைத் தயார் செய்யவும் அவற்றை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் பல வேலை நாட்கள் போய் விடுகிறது.  தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இந்த தபால்காரர் வேலையைத்தான் பார்த்து வருகிறார்கள்.

             2, 3 ஆசிரியர்கள் இருக்கும் தொடக்கப் பள்ளிகளின் நிலை என்னவாக இருக்கும்? 5 ஆசிரியர்கள் இருக்கும் தொடக்கப் பள்ளிகள், 8 ஆசிரியர்கள் இருக்கும் நடுநிலைப் பள்ளிகள் ஆகிவற்றில் கூட எப்போதும் பயிற்சிகள், புள்ளி விவரங்கள் போன்றவற்றிற்காக பலர் வெளியே சென்று விடும்போது பள்ளிகளில் ஒரு சிலர்தான் கற்றல் - கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும்.

            எனவே அரசு இந்தத் திட்டங்களின் மூலமும் கற்பித்தல் முறைகளின் வாயிலாகவும் பல் வகுப்பு கற்பித்தலை நிரந்தரமாக்கி விடுகிறது.  ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 20 என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு 1 : 40 என்ற நிலையில் ஒன்று முதல் 4 வகுப்பு வரை ஒன்றாக வைத்து பல் வகுப்பு கற்பித்தலை பாடத்திட்டமாக வைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

            1 முதல் 4 வகுப்புக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டம், பல் வகுப்பு கற்பித்தல் போன்றவையெல்லாம் கூட இருந்து விட்டு போகட்டும்.  மாணவர்களின் எண்ணிக்கை 40ஐயும் தாண்டுகிற போது இது போன்ற எந்த அதி நவீன முறைகளினால் என்ன பலன் உண்டாகும் என்பதை கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

            SSA திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களை பள்ளியை நோக்கி ஈர்க்கிறது என்று ‘தினமணி’ ஒரு முறை எழுதியது.  இந்த பள்ளிக் கட்டிடங்கள் அனைத்தும் மிக மோசமான நிலையில் கட்டப்படுகின்றன.  சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காத நிலையில் மிக மோசமாக உள்ளன.  கட்டிடங்கள் மட்டும் இருந்து என்ன பயன்?  அவற்றின் தரத்தை யார் பரிசோதிப்பது?

            மாற்றுத் திறனாளிகள், நரிக்குறவர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளை தனியார் தொண்டு நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்திருக்கிறது.  விழுப்புரம் கோலியனூர் நரிக்குறவர் காலனியில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி எவ்வித வசதியும் இன்றி சுமார் 50 மாணவர்களுடன் செயல்படுகிறது.  +2 முடித்த இரு பெண்கள்தான் இங்கு ஆசிரியைகளாக பணி செய்கின்றனர்.  10 மாணவர்களுக்குக் கூட SSA தொடக்கப் பள்ளியைத் திறந்து நடத்தும் அரசு இந்த மாதிரியான விளிம்பு நிலைக் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு நடத்த ஏன் விரும்பவில்லை?

            பழைய பாடத்திட்டங்கள் மிகவும் மோசம் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் தற்போது சமச்சீர் கல்வி என்ற பெயரில் வெளிவந்துள்ள பாடநூற்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.   அது சரியல்ல.  முதல் வகுப்பு பாடநூற்களில் உள்ள தன்மை 6-ம் வகுப்பில் இல்லை.   கல்வியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பங்கேற்பை அரசு நாடாததுதான் இக்குறைபாடுகளுக்குக் காரணமாகும்.
              
           6 முதல் 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி (ALM) தமிழ் தவிர்த்த இதர பாடங்களுக்கு மட்டுந்தான் என்று சொல்லப்படுகிறது.   ALM+ -ம் அப்படித்தான்.  தமிழப்பாடத்திற்கு இம்முறை தேவையில்லையா அல்லது ஒத்து வராதா என்பது விளங்கவில்லை.  அரசுப் பொதுத் தேர்வு நடைபெறும் வகுப்புக்களுக்கு எந்த முறையும் வேண்டாம், தேர்ச்சி விழுக்காட்டை அதிகரித்தால் போதுமென கல்வித் துறையும் அரசும் கல்வி அதிகாரிகளும் விரும்புகிறார்கள்.   மத்திய அரசு 10 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனச் சொன்னால் மட்டும் உடனே எதிர்க்கிறார்கள்.   கல்வி பற்றிய என்ன கொள்கை வைத்திருக்கிறார்கள் என்பது விளங்கவேயில்லை.

            தமிழகப் பள்ளிக்கல்வி
த்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு கல்வியில் ஏதோ புரட்சி நடந்து விட்டதாக ஊடகங்களும் வெகுசிலரும் ஒரு மாயையைப் பரப்பி வருகிறார்கள்.  கல்வித்துறை மிகவும் ஊழல் மலிந்ததாக உள்ளது என்பதே உண்மை.   கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களுக்கு வெளிப்படையான பொது மாறுதல் அளிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான நிர்வாக மாறுதல்கள் தொடர்ந்து   வழங்கப்பட்டு வருகின்றன.  ஆசிரியர்களுக்கு ஏன், எதற்கு நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட வேண்டும்? நிர்வாக மாறுதல் வழங்கக் காரணம் என்ன? கடந்த கல்வியாண்டுகளில் எவ்வளவு பேருக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது? என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் யாரேனும் கேட்டால் ஒரு வேளை தகவல்கள் கிடைக்கக் கூடும்.  அப்போது உண்மைகள் வெளிவர வாய்ப்பு உண்டு.

            செயல் வழிக் கல்வித் திட்டங்கள், கற்பிக்கும் முறைகள், மாணவர் மையமாக விளையாட்டு முறையில் அமைய வேண்டிய கல்வி போன்றவற்றில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.  மாறாக அதிகார வர்க்கம் இத்திட்ட அமலாக்கத்தினால் செய்யும் முறைகேடுகள், அத்துமீறல்கள், ஊழல்கள் போன்றவையும் கல்வியாளர்களால் கண்டிக்கப்பட வேண்டும்.

            காலச்சுவடு (அக்டோபர் 2008) இதழில் கல்வியாளர் வசந்திதேவி குறைகளாகச் சுட்டிக்காட்டிய சில அம்சங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதைக் காட்டமாக விமர்சிப்பதால் மட்டுமே செயல்வழிக் கற்றல் நடைமுறையில் உள்ள குறைபாடுகள் இல்லாமற் போய்விடாது.  ஒரு குழுவாக சேர்ந்து தயாரிக்கப்படும் அறிக்கையும் அக்குழுவில் உள்ள ஒரு தனிநபர் அப்பிரச்சினை பற்றி தனியே எழுதும் ஒரு கட்டுரையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வகை நியாயம் என்று தெரியவில்லை.   மூன்று, ஐந்து நீதிபதிகள் குழுவாக ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்போது அவர்களிடத்தில் முரண்பட்ட தீர்ப்புகள் வருவதுண்டு தானே!.  இதை ராமானுஜம் அணிந்துரையில் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது.   ஆனால் பதிப்புரை செயல்வழிக் கற்றலுக்கெதிரான தவறான விமர்சனங்களாகச் சுட்டுகிறது. 

                        இந்த நூற்களெல்லாம் ஆசிரியர்கள் பார்வைக்குச் செல்ல வேண்டும்.   பெரும்பாலான ஆசிரியர்கள் படிப்பதேயில்லை என்பதால் இதை சாத்தியமாக்குவது அவ்வளவு எளிதானதல்ல.  இந்தக் கல்வியாண்டு (2010 - 2011) முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் ஒவ்வொரு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கும் நூல்கள், இதழ்கள் வாங்க ரூ. 10,000/- அளிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் தினத்தந்தி, தினகரன், தினமலர் போன்ற குப்பை நாளிதழ்களும் நாலாந்தர வணிக வார, மாத இதழ்கள் மட்டுமே வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை நிலவரம்.
 

            புதிய பாடநூற்கள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறைகள் போன்றவற்றை ஆய்வு செய்து வெளியிடப்படும் நூற்கள் நிறைய வெளியாக வேண்டும்.   அந்த வகையில் இம்முயற்சியை பாராட்ட வேண்டும்.  கல்வி குறித்து சமூகம் இனியாவது  சிந்திக்க தொடங்க வேண்டும்.


            1. தமிழகப் பள்ளிக் கல்வி - பிரச்சினைகளும் தீர்வுகளும். (தொ) 

                 பக். 72   விலை ரூ. 35.
            2. செயல்வழிக் கற்றல் எதிர்ப்புகளும் சில உண்மைகளும் - வே. சுடர்ஒளி
                 பக். 56. விலை ரூ. 20
            3. குழந்தைகள் கொண்டாடும் செயல் வழிக் கல்வி. (தொ)
                பக். 48.  விலை ரூ. 15
            4. நல்ல காலம் பிறந்து விடும். (தொ)
               பக். 32.  விலை ரூ. 10.

            வெளியீடு:

                        மக்கள் கல்விக் கூட்டமைப்பு,
                        சாந்தி நிலையம்,
                        10 விஸ்வலிங்கம் தெரு,
                        விழுப்புரம் - 605 602,

                        செல்:   94433 28740
                                      94426 22970


செவ்வாய், பிப்ரவரி 15, 2011

குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள்

குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள்
      - மு. சிவகுருநாதன்







(பவுத்த அய்யனார் தனக்கு சுந்தர ராமசாமி எழுதிய 200 கடிதங்களை ‘சுந்தர ராமசாமியின் கடிதங்கள்’ என்று தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார்.  அந்நூல் குறித்த ஒரு விமர்சனப் பதிவு)
           வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்தாளனுடன் தங்கி குருகுல வாழ்க்கை மேற்கொள்ளும் நினைப்புடன் சுந்தரராமசாமியை சந்தித்து திரும்பிய அய்யனார் 1986 முதல் சுரா மரணமடையும் 2005 வரை பல நூறு கடிதங்கள் மூலமும் நேரிலும் தனது உறவைத் தொடர்ந்திருக்கிறார்.23 வயதில்  தொடங்கிய சந்திப்பில் சுரா காட்டிய மதிப்பும் அன்பும் கருணையும் இறுதி வரையிலும் தொடர்ந்திருக்கிறது.  இதை எழுத்தாளன் - வாசகன், தந்தை - மகன், தோழன் என்ற நிலையை விட குரு - சீடன் என்ற உறவு நிலை நிலவியதாகவே நாம் இந்த கடிதங்களினூடாக அவதானிக்க முடிகிறது.

            ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், சாதி, மதம் இப்படி எதையும் பார்க்காமல் அனைவரிடமும் ஒரே விதமான அன்பைப் பொழியும் சுராவின் நினைவை என்றும் பாதுகாக்க அவர் இறந்த பிறகு ஒரு வேஷ்டி, சட்டையை  வாங்கி வந்து பத்திரப்படுத்தும் உறவை தந்தை - மகன் உறவு என்று கூட சொல்ல வாய்ப்புண்டு.  அதற்கு மேலான தோழமையை இங்கு காண முடியவில்லை. 

            தமிழ்ச் சூழலில் எளிய வாசகனான அய்யனாருக்கு, எழுத்தாளன் என்பவன் சாதாரண மனிதனிலிருந்து  உசத்தி என்பதிலிருந்து மீள முடியவில்லை.   எனவே, எழுத்தாளனை ஓடி ஓடி சந்திப்பதும், கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும், கடிதம் எழுதுவதும் நேர்காணல் எடுப்பதும் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  இதே மாதிரியான எண்ணத்தைத்தான் எழுத்தாளரான சுராவும் கொண்டிருந்தது வியப்பில்லைதான்.

             புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் வெளியிடப்பட்டு நூலானது.  கல்யாண்ஜி, கி. ராஜநாரயணன், கு. அழகிரிசாமி போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் கடிதங்கள் நூலாக்கம் பெற்றிருக்கின்றன.  அ. மார்க்ஸ்-க்கு டேனியல் எழுதிய கடிதங்களை தனி நூலாக்கி வெளியிடப்பட்டது.  அதைப் போலவே இந்த நூலும் அய்யனாருக்கு சுரா எழுதிய கடிதங்களின் தொகுப்பாக உள்ளது.  ஒரே நபருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் என்பதால் ஒரே மாதிரியான விவரணைகள் மட்டுமே உள்ளன.  சுராவின் ஆளுமையை முழுவதுமாக இக்கடிதங்களின் ஊடே கண்டடைய வாய்ப்பில்லை.

            புதுமைப்பித்தன், கல்யாண்ஜி ஆகியோரின் கடிதங்கள் வெளியிடப்பட்டது பற்றி சுராவிற்கு நல்ல அபிப்ராயம் இல்லை.  அதில் பொது வி
­யங்கள் இல்லையென எளிதில் கடந்து போய்விடுகிறார்.  தனது மகன் கடிதங்களை வெளியிட வேண்டுமென சொன்னவுடன் உடனே ஒத்துக் கொள்கிறார். அவர்களின் கடிதங்களில் பொது வி­ஷயம் இல்லை என்று சொன்னவர் தன் கடிதங்களில் பொது வி­ஷயம் இருக்கிறதா என்று பார்க்க முயலவில்லை.

            இருவர் படத்தைப் பற்றி எழுதும்போது மொத்த விமர்சனத்திற்கு மேலாக அவர் (கலைஞர் மீதா அல்லது மணிரத்னம் மீதா! தெளிவில்லை.) முகத்தைத் தார் பூசிக்காட்ட வேண்டுமென்ற மனோபாவம் எனக்கு உவப்பாக இல்லை என்கிற சுரா தனது நினைவோடைகள் மூலம் பல ஆளுமைகளின் முகத்தில் தார்பூச என்றுமே தயங்கியதில்லை.  சுரா எப்போதுமே தனக்கென வகுத்துக் கொண்ட உண்மைகளை பிறருக்கும் உண்டென்பதை உணரத் தவறியவர்.  அவரது மதிப்பீடுகள் பல ஜனநாயகமற்றவை.   அதைத்தான் கண்ணன் காலச்சுவடு மூலம் மாதாமாதம் இன்னும் பல மடங்குகள்  அதிகமாக செய்து கொண்டிருக்கிறார்.

             சுரா அய்யனாரை மதிப்புரை, அனுபவக்குறிப்புகள்,  இறுதியாக நாவல் என தொடர்ந்து எழுத வலியுறுத்தி வருகிறார்.   மதிப்புரை எழுத, “ உங்களிடம் உண்மை இருக்கிறது.  பாரபட்சம் இல்லாமல் செயல்படும் மனம் இருக்கிறது.   விமர்சனத்துக்கு ஆதாரமான தூண்கள் இவை.” எனச் சொல்வதுடன் தமிழ்ச் சூழலில் ‘அறிவாளிகளிடம்’ உண்மையில்லை என்றும் தைரியமளிப்பதுடன் அதை தனக்கும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறார்.   இதில் சுரா சொல்லும் உண்மை எது என்பதில் சிலருக்காவது மாற்றுக் கருத்து இருக்கும்.

            முதல் கடிதத்திலிருந்து இறுதிக் கடிதம் வரை புத்தக அறிமுகம், படிப்பு, படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமான நலம் விசாரிப்புகள் என கடிதங்கள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.  புத்தகம் படித்தல், வேலை, திருமணம், சைக்கிள் வாங்குதல், அச்சுத் தொழிலைப் பரிந்துரைத்தல், முத்துவைச் சேர்தல் / பிரிதல் போன்ற எதுவானாலும் உடனுக்குடன் தகுந்த ஆலோசனைகளைச் சொல்லி உறவை வலுப்படுத்தவும் பாசத்தைப் பகிரவும் செய்கிறார்.  தன் கடிதத்தை எதிர்பார்க்காமல் அய்யனார் தொடர்ந்து எழுத வேண்டுமென ஆசைப்படுகிறார்.

             பெண்கள் ஆடிய பறையாட்டம் எனக்குப் புதிய செய்தி.  இந்த மண்ணுக்குரித்தான கலைகளைக் கூடப் பார்க்காமல் 63 வயதில் வந்து நிற்கிறேன் என்பது வெட்கத்தைத் தரும் வி­ஷயம்தான் என்றும் தமிழக கிராமத்தைப் பற்றிய என் கற்பனை அபத்தமானது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க சுரா தவறவில்லை.   தான் உட்பட தமிழ் எழுத்தாளர்களின் சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாடுகள் வினோதமானவை என ஒத்துக் கொள்ளும் சுரா பிறிதோரிடத்தில் கிராமம் எப்படி இருக்கிறது?  பாரதிராஜாவின் சினிமா போல் இருக்குமா? என்று கேட்கிறார்.

            குடும்பம், இலக்கியம், படிப்பு, தொழில் சார்ந்த வேலைப்பளு நிரம்ப இருப்பதையும் உடல் / மனம் சார்ந்த உபாதைகள், மருத்துவம் செய்து கொண்ட விவரங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக ஒரு வித சுமையிறக்கம் அவருக்கு சாத்தியமாயிருக்கும் என்று தோன்றுகிறது.  சிறு வயதில் தன்னைப் பாதித்த இளம்பிள்ளை வாதம், இருதய நோய்க்கு நீண்ட காலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரை மூலம் மூச்சுப்பைகளில் டாக்ஸின் பாதிப்பு, பேருந்து பயணத்தின் அவஸ்தை போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகளும் குடும்பம், தொழில் ஆகியவற்றால் ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சினைகளையும் இறக்கி வைக்க
அய்யனார் பயன்பட்டிருக்கிறார்.

            சுராவிற்கு சாவைப் பற்றிய சஞ்சலம் இருக்கிறது.   ஆனால் வேறு பல பயங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவானதுதான் என்று எழுதுகிறார்.    சார்வாகன் இறந்ததாக வல்லிக்கண்ணன் தவறுதலாக இரங்கல் குறிப்பு எழுத, எனக்கும் இறந்து போகாமல் இறந்து போய்  என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதைத் தெரிவிக்கிறார்.  இந்த ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஆசையாக இருக்கிறது.  2003 சென்னைப் புத்தகக் கண்காட்சி பெற்ற வரவேற்பினால் எனக்கு ஆயுள் ஐந்து வருடங்களாவது கூடியிருக்கும் என்றும் எல்லாவிதமான கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த நான் வறுமையை மட்டும் இன்னும் அனுபவிக்கவில்லை.   இன்னும் 25 அல்லது 30 வருடங்கள் ஆயுள் இருந்தால் எதுவும் வரலாம் என்றும் விருப்பப்படுகிறார். 

            கனிமொழி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் விரும்பும் சுரா சல்மா மந்திரியாவார் என்று கணிப்பதுடன் தனக்கும் மந்திரி சபையில் இடமளித்து மனநல மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றின் பொறுப்பைத் தந்தால் சிறப்பான சாதனைகள் செய்வேன் என சல்மாவிடம் கூறியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  (சல்மா இன்று தேர்தலில் தோற்ற காரணத்தால் அமைச்சராக முடியாமல் போனாலும் அமைச்சருக்கு நிகரான பதவியில் இருக்கிறார்)

            இனி, புதுயுகம் பிறக்கும், சுபமங்களா போன்றவை நின்று போகிற வருத்தம் சுராவிற்கு உண்டு.  தன்னுடைய காலச்சுவட்டை சிறப்பாகக் கொண்டுவருவதற்கு அவர் செய்யும் முயற்சிகள் பல கடிதங்களில் வெளிப்படுகிறது.   ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு தன் மகனான கண்ணன் சொத்து வாரிசு மட்டுமல்ல; இலக்கிய வாரிசும் கூடத்தான் என்பதை அவர் கண்டடைகிறார்.  தம் மகனைப் பற்றிய உயர்வான பிம்பத்தை பல கடிதங்களில் கட்டமைக்கிறார். 

            கண்ணனை சார் என்று அழைக்காமல் உரிமையோடு கண்ணா என்று அழைக்க வேண்டும் என்று விரும்பும் சுரா, காலப்போக்கில் கண்ணனது பணிகள் நிலைப் பெற்று தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்.   இப்பொழுதும், இனியும் கண்ணன் வெளியிட இருக்கும் புத்தகங்களில் ஒன்று கூட நான் வெளியிட நினைத்தவை அல்ல.  கண்ணன் தேடிப் படித்து வெளியிடுகிறான் என்றும் இரண்டு காதுகளிலும் இரண்டு போன்களை வைத்துப் பேசக்கூடிய காலம் அவனை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் போது பெருமிதம் பீறிடுகிறது. 

            ஜெயா டி.வி.யில் வெளியான அய்யனார் பேட்டியைப் பற்றி எழுதும்போது, “என் பெயர், கண்ணன், காலச்சுவடு ஆகிய பெயர்களைக் கூறுவதை சற்று குறைத்துக் கொண்டிருக்கலாம்.  நீங்கள் யதார்த்தமாக பேசுகிறீர்கள்.  சூழல் அப்படியில்லையே?” என்று வருத்தப்படுகிறார்.  தமிழ் இனி, காலச்சுவடு சம்பந்தப்பட்ட காரியங்களையெல்லாம் கண்ணன் கவனித்துக் கொள்ளட்டும் என்று  முடிவு எடுக்கிறார்.  கண்ணனுக்கு எதிராக அய்யனாரை மாற்ற சிண்டு முண்டு முடிகிறவர்கள் சென்னையில் இருப்பதைக் கண்டு எச்சரிக்கை செய்கிறார். 

                       வெளி வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளையெல்லாம் சுராவிடம் விலாவாரியாக பகிர்ந்து கொண்டிருந்த அய்யனார், 2002இல் உலகத் தமிழ் மற்றும் காலச்சுவடு இதழ்ப்பணிக்காக கண்ணனிடம் சேர்ந்தபோதும் 2005 பிப்ரவரியில் வெளியேறிய போதும் ஏற்பட்ட சங்கடங்களைப் பகிர்ந்து கொண்டதில்லையாம்.  எனவே இதுபற்றிய சுராவின் நிலைப்பாடு தெரியாமற்போய் விட்டது.  கண்டிப்பாக மகனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருக்கமாட்டார் என்று நம்பலாம்.

            வல்லிக்கண்ணன், சிவசங்கரன், பிரமிள், ஞானக்கூத்தன், மாலன், சுஜாதா, சா. கந்தசாமி, நகுலன், நீல. பத்மநாபன், அ. மார்க்ஸ் போன்ற பலரும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் என்னை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படும் சுரா இவர்களைப் பற்றி மோசமாக எழுத எப்போதும் தயங்கியதில்லை.   அதற்கு இத்தொகுப்பிலிருந்தே பல உதாரணங்களைக் காட்ட முடியும். 

            ஞானக்கூத்தனின் ‘கவிதைக்காக’ நூலில், தனக்கு வேண்டியவர்களை அவர் தூக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு, நான் அறிந்திராத பல வி­யங்களை அவர் கற்றிருக்கிறார் என ஞானக்கூத்தனைக் கிண்டல் செய்கிறார்.   பிரமிள் ரவிசுப்ரமணியன் பற்றி உயர்வாக சில அபிப்ராயங்களைச் சொன்னதாக கண்ணன் கூறக் கேட்டும், பிரமிள், அநேகமாக அப்படியெல்லாம் எழுதியிருக்கமாட்டார் என்று முடிவு செய்கிறார்.

            அசோகமித்திரனின் ‘மானசரோவர்’, ஆ. மாதவனின் ‘தூவனம்’ ஆகியவற்றைப் படித்துவிட்டு, தரமான எழுத்தாளர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி எழுதுகிறார்களே என்று வருந்தி, நாமும் நமக்குத் தெரியாமல் இந்த வகையாக எழுதத் தொடங்கி விடுவோமோ, என்று கவலையும் கொள்கிறார்.   அசோகமித்திரனைப் பாராட்டித்தான் பேசினேன் என்று சொல்லி அதற்குள் பொடி வைத்து பேசும் கலை சுராவிற்கு மட்டுமே  வாய்க்கப்பெற்றது. 

            தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’ நாவலை வெங்கட்சாமிநாதன் பாராட்டும் போது ஏமாற்றமடைந்து அந்நாவலில் ஒன்றுமே இல்லை என்கிறார்.  அதைப் போலவே பாமாவின் ‘கருக்கு’ முக்கியமான படைப்புத்தான், சில குறைகள் இருந்தாலும்..... என்று இழுக்கிறார்.  நாவல் என்பது ஆற்றல் மிகுந்த தனியான கலை உருவம்.  அந்த ஆற்றலை அலட்சியம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்.   இந்த எச்சரிக்கை பாமா, சிவகாமி உள்ளிட்ட தலித் எழுத்துக்களும் பிற நவீன எழுத்து வகைக்குமென நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.  தனக்கு கிராம வாழ்க்கை தெரியாது என ஒத்துக்கொள்ளும் சுரா சிவகாமியின் ‘ஆனந்தாயி’ நாவலுக்குத் தேவையான பல வலுக்கள் இருந்தும் நல்ல நாவலாக நிமிரவில்லை என்று கறாரான விமர்சனம் செய்கிறார்.  இதைப் போலவே தமிழவனின் நாவல் நாவலாக உருப்பெறவில்லை என்கிறார்.

                        ஆனால் தன்னுடைய எழுத்தின் மீது சுராவிற்கு அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது.  தன்னுடைய மதிப்புரைகள் உண்மைகளை மட்டும் பேசுவதாக திடமாக நம்புகிறார்.  தனது இலக்கியத் தரத்திற்கு காலச்சுவடே அவருக்கு உரைகல்லாக இருக்கிறது.  
அய்யனாரின் கட்டுரைகள் காலச்சுவடு தரத்தை எட்டவில்லை.   கணையாழி தரத்திற்கு இருக்கிறது என்று சொல்லி நல்ல இலக்கியத்திற்கான ‘அக்மார்க்’ முகவராக தன்னை நிறுத்திக் கொள்ள பெரும் பிரயத்தனம் செய்கிறார்.

            பிறர் மீது தான் வைக்கும் எவ்வித விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் என்று விரும்பும் சுரா தன்னுடைய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், உரைகள் போன்றவற்றின் மீது சிறு விமர்சனம் செய்வதையும் ஏற்றுக் கொள்ள அவரது மனம் விரும்பவில்லை.

            தரவுகளை நினைவு வைத்துக் கொள்ளும் நரம்பு என் மூளையில் சுத்தமாக இல்லை என்று சொல்லி தனது மறதிகளை நியாயப்படுத்தும் சுரா இலக்கிய மதிப்பீடு சார்ந்த அபிப்ராயங்களில் வெளிப்படும் முரண்பாடுகளைப் பார்க்கும் மூளை நரம்பு அய்யனாருக்கும் தனக்கும் இருப்பதை அறிந்து கொள்ளும் அவர் தன் படைப்புக்களின் முரண்களை அறிய மறுத்ததுதான் மிகப் பெரிய சோகம்.

             அ. மார்க்ஸ் தொடர்ந்து என் கருத்துகளைத் திரித்துக் கூறி வருகிறார்   அதை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை என சுரா வருந்துகிறார்.  ஆனால் அவரது மகனான கண்ணன் இதைத்தான் இன்றுவரை தொழிலாகக் கொண்டுள்ளார்.

            நம்பகமான மருந்துக் கடையை தெரிந்து கொள்ள அளிக்கும் ஆலோசனையாகட்டும் அய்யனார் தம்பதிகளின் புகைப்படத்தில் அய்யனார் தொப்பியுடன் நவீன உடையணிந்து இருக்க வேண்டும் என்பதலாகட்டும் திருமணத்தில் எந்தவிதமான தொப்பி வைத்துக் கொள்வீர்கள்? என்று கேட்பதிலாகட்டும், டி.வி.எஸ். 50இல் வாகன நெரிசலில் வெட்டி வெட்டி திறமையாக அய்யனார் செல்வதைக் கற்பனை செய்வதிலாகட்டும் சுரா ஒரு குழந்தையாகிவிடுகிறார்.

             தோசை மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்.   ஓட்டல் தோசை தோசையின் பிணம் என்கிறார்.   தோசை என்றைக்கு வெறுக்கிறதோ அதற்கு மறுநாள் நான் இறந்து போய் விடுவேன் என்று நினைப்பதாக எழுதுகிறார்.    இந்த வகையில் சுராவின் சில முகங்களை இத்தொகுப்பு நமக்குக் காட்டுகிறது. 

             இறுதியாக, “தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது என்பது ஒரு விதி.   இடம், சந்தர்ப்பம் பார்த்தாவது செய்யத் தெரியவேண்டும் என்பது மற்றொரு விதி.   இந்த இரண்டாவது விதியையாவது நீங்கள் பின்பற்ற வேண்டும்.  நான் முதல் விதியைப் பின்பற்றுபவன் அல்ல.” என்று தன்னைப் பற்றி சொல்லும் சுரா தன்னைத் தவிர அனைவரும் முதல் விதியைப் பின்பற்ற வேண்டுமெனவும் தன்னையும் தனது படைப்புக்களையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் நினைத்து, வாழ்ந்து முடித்த ஒரு படைப்பாளியாகவே தெரிகிறார். 

பின்குறிப்பு:

            நூலில் ஏராளமாக எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளன.   சரி செய்திருக்கக் கூடாதா?  தெரியாத சில பெயர்களைப் பற்றிய குறிப்புகள் தேவை.   கனிமொழி மக்களவை உறுப்பினர் அல்ல.   மாநிலங்களவை உறுப்பினர்.

சுந்தரராமசாமியின் கடிதங்கள் (தொ) - பவுத்த அய்யனார்.  

பக். 272, டிசம்பர் 2010, விலை ரூ. 150

வெளியீடு:


                        மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்,
                        3/363, பஜனை கோவில்தெரு,
                        கேளம்பாக்கம், சென்னை - 603 103
                        செல்: 9688086641.

                   e-mail: ayyapillai@gmail.com

ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி - இரு மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி  - இருமாதஇதழ்    - மு. சிவகுருநாதன்







          “நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் ‘அத்தாரிட்டி’ களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கின்றோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது” என்று கண்ணை மூடிக் கொண்டு தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமாரின் மணற்கேணி இரு மாத இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் கிடைக்கவில்லை.   இதழ் 2 மற்றும் 3 புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.   இமையம், அ. ராமசாமி, தேன்மொழி, அழகரசன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் பங்கு பெறும் இவ்விதழ் அழகான வடிவம், தாள் மற்றும் அச்சில் 120 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  மேலே குறிப்பிட்ட வாசகங்கள் இரண்டாவது இதழின் தலையங்கத்தில் காணப்படுபவை.


            மூன்றாவது இதழில் ஆசிரியர் குழுவைக் காணவில்லை.   தலையங்கம் ரவிக்குமார் பெயரில் இருக்கிறது.  இதழ்களின் தலையங்கங்கள் ஆசிரியர் குழு அல்லது ஆசிரியரால் எழுதப்படுவதாகவே நாம் கருதி வந்திருக்கிறோம்.    ரவிக்குமார் ஆசிரியராக இருக்கும் இதழில் அவரை மறைமுகமாகத் திட்டி தலையங்கம் வெளிவருவது ஆச்சரியமாக உள்ளது.  அதனால்தான் என்னவோ ஆசிரியர் குழு காணாமற் போய்விட்டது.


            தலையங்கம் ஆசிரியரால் எழுதப்படுகிறது என்ற மரபை தொடர்ந்து உடைத்து வருவது ‘தமிழினி’ இதழ் என்று நான் கருதுகிறேன்.  அவ்விதழில் ஆசிரியர் நா. விஸ்வநாதன், சந்தாவுக்கு வ. சரவணன் ஆகிய பெயர்களிருந்தும் கரு. ஆறுமுகத்தமிழன்தான் எப்பொழுதும் தலையங்கம் எழுதி வருகிறார்.


            வங்க இலக்கியம், பாகிஸ்தானிய இலக்கியம் என சிறப்புப் பகுதிகள் மொழி பெயர்ப்பில் வெளி வருவது பாராட்டுக்குரியது.  இந்திரா பார்த்தசாரதி, எச்.எஸ். வெங்கடே­ மூர்த்தி, பர்த்தா சேட்டர்ஜி ஆகியோரின் நேர்காணல்கள் இரு இதழ்களில் இருக்கின்றன. தமிழ் பதிப்புத் துறை பற்றிய ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரை தமிழாக்கப்பட்டுள்ளது.  இவரது ‘சொல்வலை வேட்டுவன்’ நூலுக்கு மதிப்புரையும் உள்ளது.  ரவிக்குமாரின் ‘சூலகம்’ நூலுக்கு தேன்மொழியும் ‘மழை மரத்திற்கு’ சேரனும் மதிப்புரை (வெளியிடப்படாத முன்னுரை) எழுதியிருக்கிறார்கள்.   வெளிவர இருக்கும் ரவிக்குமாரின் நூலிற்கு இந்திரா பார்த்தசாரதி எழுதிய முன்னுரையும் இடம் பெற்றுள்ளது. 


            இமையம், அ. ராமசாமி ஆகியோரின் தன் வரலாற்றுக் கட்டுரைகளும் தேன் மொழியின் சிறுகதைகளும் உள்ளன.  தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய சுரேஷ் பிள்ளை மற்றும் பர்ட்டன் ஸ்டெய்ன் கருத்துக்களின் முக்கியத்துவத்தை விளக்கி எழுதப்பட்ட ரவிக்குமாரின் கட்டுரை ஒன்று பவுத்த, சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டு சைவக் கோயில்கள் கட்டப்பட்டது பற்றிய ஆதாரங்களை 1000 மாவது ஆண்டுக் கொண்டாடும் நேரத்திலாவது விவாதிக்கப்பட வேண்டும் என்கிறது.


            மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களின் (இதைத் தான் ரவிக்குமார் விரும்புகிறார்.  நான் முன்பு வெறுமனே பெயரை மட்டும் பயன்படுத்தி விட்டேன்.  மன்னிக்கவும்)  நிறைய மொழி பெயர்ப்பு இதழெங்கும் காணப்படுகின்றன.   பியரெத் ஃப்லுசியோவின் நாவல் மொழி பெயர்ப்புக்கு மொழி பெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் எழுதிய பின்னுரையும் இந்த இதழலில் உள்ளது.


            கிரந்த யூனிக்கோடு விவாதம் பற்றிய தொகுப்புக்களையும் ரவிக்குமாரின் விளக்கங்களையும் படிக்கும் போது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரும் கவிஞர் கனிமொழியும் தமிழுக்காக ஆற்றும் பணி நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கிறது.  இந்த விவகாரத்தால் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் தீபாவளி கூட கொண்டாட முடியாமல் போன கதையை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன் தனது தினமணி கட்டுரை மூலம் நீங்களும் அறிந்திருக்கலாம்.


            ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் தமிழில் இருந்தால் இவ்விதழ் உருவாகக் காரணமான அதிகார உறவுகள், இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் அதிகார உருவாக்கம், அதன்  நிர்ணயம் மற்றும் செயலாக்கத்தில் கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளலாம்.   ஆனால் என்ன செய்வது? அதிகாரங்களை அண்டிப் பிழைக்கும் தமிழ்ச் சூழலில் அதற்கான வாய்ப்பே இல்லை.  விமர்சனங்களிருப்பினும் வாசிக்கத் தவற விட வேண்டியதில்லை.  ‘மணற்கேணி’ அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிற்றிதழ்.  என்னைப் போன்று சிற்றிதழ்களைத் தேடிப் பிடித்து வாசிக்கும் ஒரு வித ‘மனநோய்க்கு’ ஆளானவர்களுக்கு வேறு என்னதான் வழி?

விலை: ரூ 40 ,
ஆண்டு சந்தா: ரூ 240
தொடர்பு முகவரி 
மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம்,அறை எண்:2 ,
புதிய எண்: 10 ,பழைய எண்: 228 ,
டாக்டர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-600005 .
செல்:9443033305
e .mail :manarkeni@gmail .com

சனி, பிப்ரவரி 12, 2011

ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு

ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின்  பங்கு    - மு. சிவகுருநாதன்
 

          ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மிக மந்தமான நடவடிக்கைகள் தற்போதுதான் சில கைதுகளை எட்டியிருக்கிறது.   இந்நிலையில் இஸ்ரோவின் 2 லட்சம் கோடி மெகா ஊழல் அம்பலமாயிருக்கிறது.  “நீ அவல் கொண்டு வா.  நான் உமி கொண்டு வருகிறேன்.  இரண்டையும் கலந்து ஊதி ஊதித் தின்போம்” என்று கிராமங்களில் வேடிக்கையாக சொல்வதுண்டு.  இது கூடப் பரவாயில்லை.  உமி கூட கொண்டு வராமல் அரசு (மக்கள்) அவலை தின்று தீர்ப்பதற்காகத்தான் ஆயிரக்கணக்கான புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.  இந்தியாவின் இயற்கை வளங்கள் வேதாந்தா, டாடா, ஜிண்டால், ரிலையன்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன.   2 ஜி அலைக்கற்றை என்ற நவீன அறிவியலின் மூலம் கிடைத்த இயற்கை வளத்தை இந்திய ஆளும் வர்க்கம் பல ஆண்டுகளாக களவாடி வந்துள்ளது.  இதைப் போலவே செயற்கைக்கோள் ஒளிபரப்பு போன்ற பல்வேறு தகவல் தொடர்பு வசதிகளைத் தரும் 4ஜி தொழில் நுட்பத்தின் எஸ் - பாண்ட் அலைக்கற்றையை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) தனது வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் (Antrix Corporation Ltd.) இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர் எம்.ஜி. சந்திரசேகர் தொடங்கிய தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு (Devas Multimedia Private Ltd) வாரி வழங்கியுள்ளது. 


            ஜனவரி 28, 2005இல் செய்து கொண்டு இந்த ஒப்பந்தத்தின் (ஒப்பந்த எண் :-  ANTX /203/DEVAS/2005 - நாள்: 28.01.2005 ) மூலம் அரசுக்கு ரூ. 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை தனது ஆய்வில் சொல்கிறது.


            இதற்கு விளக்கம் அளித்த இஸ்ரோ 2005இல் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இந்திய விண்வெளித் துறையின் ஆய்வில் இருப்பதாகவும், பொது நலன் கருதி தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று கூறியதுடன் இழப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.   இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் இஸ்ரோ அலைக்கற்றைகளை விற்பதில்லை என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.


            எஸ் - பாண்ட் அலைக்கற்றையை ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கோ தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கோ ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.   எனவே அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்ற கேள்விக்கே இடமில்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.   ஒப்பந்தம் போட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும் ஒன்றுமேயில்லை என இவர்கள் எப்படி மறுக்கிறார்கள் பாருங்கள்.  எப்போதும் போல் நமது பிரதமர் திருவாளர் பரிசுத்தம் மன்மோகன் சிங் தொடர்ந்து மெளனியாகவே இருக்கிறார்.  மத்திய அரசின் வானியல் பிரிவின் கட்டுப்பாட்டில்தான் இஸ்ரோ உள்ளது.  இத்துறை பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடிப் பொறுப்பிலுள்ளதை இங்கு சொல்லியாக வேண்டும்.


            2005இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நகல் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரோ தனது வர்த்தகப் பிரிவான ஆண்டிரிக்ஸ்-இன் தொழிற் கூட்டாளியான தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திடம் ரு. 174 கோடியைப் பெற்றுக் கொண்டு அந்த நிறுவனப் பயன்பாட்டிற்காக ஜி சாட் 6 (G SAT), ஜி சாட் 6 ஏ (G SAT -6) என்ற இரு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும்.   இதற்கு இஸ்ரோ ரூ. 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை செலவிடும்.  இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை திறன் கொண்டவை.  இதில் 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை தேவாஸ் பெற்றுக் கொண்டு 20 ஆண்டுகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும்.  இதற்கென தேவாஸ் ஆண்டுக்கு ரூ. 50 கோடி மட்டும் இஸ்ரோவுக்கு வழங்கும்.


            இவ்விரண்டு செயற்கைக்கோள்கள் செயல்படத் தொடங்கியவுடன் தேவாஸ் மல்டி மீடியா ரூ.2300 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிறுவனம் இந்த அலைக்கற்றையை என்ன செய்யும்? யாருக்கு விற்கும்? இதனால் கிடைக்கும் இலாபம் என்ன?  அந்த லாபத்தில் இஸ்ரோவின் பங்கு என்ன என்பதைப் பற்றி ஒப்பந்தத்தில் எந்த அம்சமும் இல்லை.  ஆனால் இந்த உரிமத்தை தேவாஸ் அரசின் முன் அனுமதியின்றி 60 நாட்கள் முன்பு வெறும் தகவல் மட்டும்  சொல்லிவிட்டு யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம்.  இது எப்படி இருக்கு?


            பெங்களூரில் உள்ள தேவாஸ் நிறுவனம் இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலாளர் எம். ஜி. சந்திரசேகரால் 2004 இல் தொடங்கப்பட்டு உடன் 2005இல் இவ்வொப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் செய்வதற்காகவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.   இதன் பின்னணியில் இருப்போர், பிநாமிகள் பற்றிய விவரங்கள் இனிமேல் தான் வெளியாக வேண்டும்.


            அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74% நேரடி அந்நிய முதலீட்டைப் பெற்றுள்ள இந்நிறுவனத்திற்கு தற்போது இணையதள சேவை அளிப்பதற்கான உரிமம் மட்டுமே உள்ளது.   செயற்கைக் கோள் மூலமான புவிமிசை கைப்பேசி தகவல் தொடர்பு சேவை எனப்படும் GSM க்கு இனிமேல்தான் உரிமம் பெற வேண்டும்.   பொதுச் சொத்தான அலைக்கற்றையை அரசு, அதிகாரிகளுடன் கூட்டுச் சதி செய்து கொள்ளையடித்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற ஒப்பந்தம் மூலம் எப்போது வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையை உண்டாக்க இஸ்ரோவின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள், பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்துள்ளனர். 


            2ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் என்று CAG அறிக்கை சொல்லியது.   2 ஜி அலைவரிசை 4.4 மெகாஹெர்ட்ஸ்தான்.  50 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன் கொண்ட 3 ஜி ஏலம் அண்மையில் விடப்பட்டது.  இதன் மூலம் அரசுக்கு ரூ. 67, 000 கோடி கிடைத்தது.   இதில் அரசு நிறுவனங்களான BSNL , MTNL   போன்றவை 20 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தலா ரூ. 12847 கோடி கட்டிப் பெற்றது.   ஆனால் 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வெறும் 1000 கோடிக்கு அதுவும் 20 ஆண்டுகளில்  ஆண்டுதோறும் ரூ. 50 கோடி மட்டும் கொடுப்பதாக 2005இல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டும்.   இதிலிருந்து அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கணக்கு பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.  இதற்கு  CAG அறிக்கை கூட தேவையில்லை.


            2 ஜி-யில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றார்கள்.  வேறு வழியின்றி 3 ஜி-யை ஏலம் விட்டார்கள்.  எஸ்-பாண்ட் அலைக்கற்றையை ரகசியமாக தேவாஸ் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.  வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அரிய அறிவியல் பயன்பாடு இதில் மட்டும் இருப்பதைக் கண்டுபிடித்து வழங்கியிருக்கிறார்களாம்.


            பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, வானியல் குழுமம் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தனியார்  நலனுக்காக மக்கள் பணத்தில் ஏன் இரு செயற்கைக் கோள்கள் ஏவப்பட வேண்டும் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை தலைமை பொதுக் கணக்குத் தணிக்கைத் துறை எழுப்பியுள்ளது.


            இந்த முறைகேடான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இந்நாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் இந்நாள் அலுவலர்கள், பிரதமர் மற்றும் இதற்கு தொடர்பான துறை அதிகாரிகள் போன்ற பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


            ஆ. ராசாவைப் போல இஸ்ரோவின் முன்னாள் இந்நாள் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.   பிரதமரும் உடனடியாக பதவி விலகி அனைத்து விசாரணைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.    தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கமான பல்லவியைப் பாடுகிறார்கள்.    ஆ. ராசாவைப் போல இன்னொடு பலிகடாவைத் தேடுகிறார்கள் போலும்.


            இந்திய ராணுவத்தில் சவப் பெட்டி வாங்குதல் தொடங்கி ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்குதலில் பெரும் ஊழல் நடைபெறுகிறது.   ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும் பல ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பிருந்தது.   இது தொடர்பாக ராணுவத்தில் விசாரணை நடைபெறுவதால் வேறு எந்த விசாரணைக்கும் ராணுவத்தினர் உட்படத் தேவையில்லை என தலைமைத் தளபதி கூறினார்.   இதைப் பற்றி யாரும் கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகப் பார்க்கப்படுகிறது.  இஸ்ரோவின் செயல்பாடுகளும் ராணுவத்தின் செயலைப் போன்று யாருடைய வினாக்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இங்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். 


            இஸ்ரோவின் நடவடிக்கைகள் குறிப்பாக சந்திராயன் உள்ளிட்ட மக்கள் பணத்தை வீணாக்கும் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்பதில்லை.   பல ஆண்டு காலம் செயல்பட பல நூறு கோடிகள் செலவழித்து அனுப்பப்பட்ட சந்திரான் - 1 கலம் 312 நாட்கள் மட்டுமே செயல்புரிந்து தோல்வியில் முடிந்து போனது.   ஆனால் மாதவன் நாயர் இதை ஒத்துக் கொள்ளவில்லை.   சந்திராயன் -1-ன் பணிகளில் 95% பூர்த்தியடைந்துவிட்டதாக கதையளந்தனர்.  வெறும் 300 நாட்களில் எப்படி முடிந்தது என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. 


            சந்திராயன் -2 திட்டத்தை உடன் தொடங்கவும் அதற்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்யவும் பொய்யான தகவல்களையும் புள்ளி விவரங்களையும் அளிக்க இஸ்ரோ என்றுமே தயங்கியதில்லை.   இந்தியா வல்லரசாதல், அறிவியல் தொழிற்நுட்பம், செயற்கைக் கோள் வழி தகவல் தொடர்பு வசதிகள் என்றெல்லாம் கூறி ராணுவத்தைப் போன்று வினாக்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இஸ்ரோவை வளர்த்தெடுத்ததன் விளைவுதான் இந்த பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் ஒப்பந்தம்.


            “இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவே இல்லையே, பிறகெப்படி இழப்பு ஏற்படும்?” என்று சொல்பவர்கள் CAG அறிக்கை மூலம் இப்பிரச்சினை வெளியே வராவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?  2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிப்பட்ட பிறகாவது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கலாம்.  ஆனால் எதுவும்  செய்யாமல் நடப்பது நடக்கட்டும் என்று இருந்த மன்மோகன் சிங் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த முதற் குற்றவாளியாகிறார்.   அவர் உடனடியாக பதவி விலகி நேர்மையான விசாரணை நடைபெற வழி வகுக்க வேண்டும்.


ஒரு பின்குறிப்பு:-

             அரசு வழக்கம்போல இஸ்ரோ அலைக்கற்றை ஊழலை விசாரிக்க இரு நபர் குழுவை அமைத்திருக்கிறது.   முன்னாள் அமைச்சரவைச் செயலரும் இன்றைய திட்டக் குழு உறுப்பினருமான பி.கே. சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விண்வெளி ஆணைய உறுப்பினரும் வானியல் நிபுணருமான ரோதம் நரசிம்மாவும் இடம் பெற்றுள்ளனர். 


            “திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போல” என்பதற்கு உதாரணமாக ஊழல் வழக்கொன்று நிலுவையிலிருக்கும் பி.ஜே. தாமஸ்-ஐ மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்தனர்.  இந்த ஊழலில்  திருடனையே போலீஸாக ஆக்கி திருட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. 


            இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆண்டிரிக்ஸ்-தேவாஸ் இடையே செய்து கொள்ளப்பட்ட அந்த மோசடி ஒப்பந்தத்தை டிசம்பர் 01, 2005இல் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது.   அப்போது அமைச்சரவைச் செயலராக இருந்தவர்தான் இந்த பி.கே. சதுர்வேதி.  ஆண்டிரிக்ஸ் - தேவாஸ் இடையேயான ஒப்பந்தம் ஏன், எப்படி ஏற்பட்டது என சதுர்வேதி நன்கு அறிந்திருப்பார்.   எனவே அவர் விசாரிப்பதுதான் நல்லது என்கிறார் காங்கிரஸின் அம்பிகா சோனி.   இது எப்படி இருக்கு?  சதுர்வேதியும் தம்மால் வெளிப்படையான அறிக்கையை தர முடியும் என்கிறார்.  திருடன் / கொலைகாரன் அந்தத் திருட்டை / கொலையை எவ்வாறு செய்தான் என்று நடித்துக் காட்டச் சொல்வதுண்டு.   ஆனால் அவனையே விசாரணை அதிகாரியாக நியமிக்கும் நிலை இதுவரை இல்லை என்றாலும் இனி நடந்தாலும் வியப்படைய வேண்டியதில்லை.


            இந்த முறைகேட்டில் இஸ்ரோ (ISRO), விண்வெளி ஆணையம் (DoS), பிரதமர் அலுவலகம், அமைச்சரவை போன்ற பல்வேறு அமைப்புகளும் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட தனிநபர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களே விசாரணை செய்து அறிக்கைத் தருவது என்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாகும்.  2 ஜி அலைக்கற்றை ஊழலில் எப்படி JPC விசாரணையை மறுத்தார்களோ அதைப் போல பிரதமர் அமைத்திருக்கும் இவ்விசாரணைக் குழு மூலம் பிரதமருக்கு இம்முறைகேட்டிலும் தொடர்பிருக்கும் என்ற அய்யத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. 
 

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும்

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும்         - மு. சிவகுருநாதன்





          சுமார் 2270 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசன் அசோகன் தன்னுடைய திக் விஜயங்களைக் கைவிட்டு விட்டு தர்ம விஜயங்களை நடத்தி இந்தியாவில் முதல் பெரும் மக்கள் நல அரசை (Welfare State)  ஏற்படுத்தினான்.


             63 ஆண்டு கால சுதந்திர, ஜனநாயகப் பெருமை பேசும் நமது நாட்டில் தலைவர்களும் அதிகாரிகளும் நடத்தும் திக் விஜயங்கள் அளவில்லாதவை.   தமிழகத்தில் முதல்வரோ, அமைச்சர்களோ வருகிறார்கள் என்றால்தான் அப்பகுதியில் சாலைகள் போடப்படுகின்றன.  எங்கும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு அந்த இடமே சுகாதாரமயமாக காட்சியளிக்கிறது.


            இந்த நவீன மன்னர்கள் உலா வரும் இடங்களில் மக்களின் நடமாட்டம் தடுக்கப்படுகிறது.  அவர்கள் போகும் சாலைகளில் இதர வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.  அக்கால மன்னர்கள் கூட இவ்வளவு கொடூர திக் விஜயங்களை நிகழ்த்தியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.


            சாலைகளில் குழி தோண்டி, மறைத்து வரவேற்பு வளைவுகளும் பதாகைகளும் அமைக்கப்படுகின்றன.    அப்பாவி பொதுமக்களின் அன்றாட இயல்பு வேலைகள் முற்றிலும் பாதிக்கும் வகையில் இதெல்லாம் நடக்கிறது.  இவையனைத்தையும் பார்த்துப் பார்த்து சகித்துக் கொள்ளும்  மனநிலையை பொதுமக்கள்  பெற்றிருப்பதோடு ஒரு வகையில் சுரணையற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.   இவை மட்டுமல்ல,  ஊழல் போன்ற எதுவும் இவர்களைப் பாதிப்பதில்லை.  ‘தேனெடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான்’ என்று சொல்லி சமாதானம் அடையும் நிலைதான் இருக்கிறது. 


            மாநிலமெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்து விட்டால் சாதியொழிந்து சமத்துவம் நிலவுகிற மாதிரி ஒரு கனவை ஆட்சியாளர்கள் காணுவது மட்டுமல்லாது மக்களையும் காண வலியுறுத்துகிறார்கள்.  நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு அளவில்லை.  உத்தப்புரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தீண்டாமைக் கொடுமைகளை அரசு எந்திரம் கண்டு கொள்வதேயில்லை.


            இதேபோல் உழவர் சந்தைகளும் உழவர் பெருமக்களுக்கான இயங்குவதாக யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.   நிறைய இடங்களில் உழவர் சந்தைகள் பாழடைந்து கிடக்கின்றன.  அப்படிச் செயல்படும் சிலவற்றிலும் வியாபாரிகள்தான் ஆக்ரமித்திருக்கிறார்கள்.  உண்மையான உழவர்கள் பலர் சாலையோரங்களில்தான் காய்கறி மற்றும் கீரைகளை விற்கும் நிலை உள்ளது.


            சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  , நாகர்கோவில்  வடசேரி உழவர் சந்தையை ஆய்வு செய்தாராம்.  பொதுமக்கள் காய்கறி வாங்க ஏதுவாக டிராலியை அறிமுகம் செய்து, அதைத் தள்ளிக் கொண்டு போய் தனக்குத் தேவையான காய்கறிகளை வாங்கியதாக படத்துடன் தினசரிகளில் செய்தி வெளியானது.  அந்தப் படத்தில் காய்கறி விற்கும் உழவர்கள் (!?) கையுறைகள் அணிந்த வண்ணம் இருக்கின்றனர்.  இது தமிழ்நாட்டில் நடக்கிறதா என்று யாரும் வியப்படைய வேண்டாம்.   அரசியல்வாதிகளுக்கு நிகராக அதிகாரிகள் நடத்தும் ‘திக் விஜயங்களின்’ ஒரு பகுதி என்பது சொல்லாமலே விளங்கும். 

  
            டிராலியில் தள்ளிக் கொண்டு சென்று தூக்க முடியாத அளவிற்கு காய்கறி வாங்க அதன் விலை ஈடு கொடுக்குமா?  மாவட்ட ஆட்சியர் வேண்டுமானால் டிராலியில் காய்கறி வாங்க முடியும்.  பொதுமக்களுக்கு சாத்தியப்படக் கூடிய ஒன்றா என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.இவர்கள் எப்போதுதான் திருந்துவார்கள் என்று தெரியவில்லை.   திருந்தாவிட்டால் திருத்தப்போவது யாரென்றும் புரியவில்லை.

            இதோ ஒரு பழைய உதாரணம்.  அடுக்கடுக்காக சுய முன்னேற்ற நூற்களை எழுதிக் குவிப்பவரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான வெ. இறையன்பும் மற்றும் பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் நடந்த சுனாமி பாதிக்கப்பட்டோருக்கான படகு வழங்கும் விழாவில் அந்தப் படகில் நின்று கொண்டு பயணித்து விபத்துக்குள்ளாகி மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.  ஒரு சிறிய படகில் பல பேர் நின்று கொண்டு பயணம் செய்தால் சம நிலை குலையும் என்ற எளிய உண்மையைக் கூட தெரியாத இவர்கள் புத்தி ஜீவிகளாக வலம் வருவதுதான் வேடிக்கையானது.  ஊருக்குத்தான் உபதேசம்?