அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்
- மு. சிவகுருநாதன்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, பூவுலகின் நண்பர்கள், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எதிர் வெளியீடு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 'கூடங்குளம் அணுமின் திட்டம் - இந்திய அணுமின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் தமிழக - கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்' - நூலாசிரியர்கள் : மரு. ரா. ரமேஷ், வி.டி. பத்பநாபன், மரு. வீ. புகழேந்தி என்ற நூல் குறித்த பார்வை)
ஜப்பானில் சுனாமியின் காரணமாக விபத்துக்குள்ளான புகுஷிமா அணு உலைக்குப் பிறகு தீவிரமாயிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலு சேர்க்க வந்துள்ள 9 கட்டுரைகள் அடங்கிய இந்நூல் மிக முக்கியமானதென்று கருதுகிறேன்.
முதல் கட்டுரை மத்திய அரசு வல்லுநர் குழுவின்அறிவுப் பின்புலத்தை கேள்விக்குட்படுத்துகிறது. வல்லுநர் குழுவின் தலைவர் ஏ.ஈ. முத்துநாயகம் கடலியல் வல்லுநர் அல்ல; ஏவுகணைத் தொழில் நுட்ப வல்லுநர் என்றும் நிபுணர் குழுவின் 15 பேரில் அறுவர் இந்திய அணுசக்தித் துறை (DAE - Department of Atomic Energy) மற்றும் இந்திய அணுமின் குழுமத்தில் (Nuclear Power Corporation of India) பணிபுரிபவர்கள் அல்லது ஓய்வு பெற்றோர். சாந்தா, முத்துநாயகம் உள்ளிட்ட ஐவர் அணுசக்தித் துறையுடன் தொழிற் தொடர்பு கொண்டவர்கள். மீதி நால்வர் மட்டுமே அணுசக்தித் துறையுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள் என்றும் இவர்களில் ஹர்ஷ் கே. குப்தா மட்டுமே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர் என்ற விவரத்தை அம்பலப்படுத்துகிறது.
இதைப் போலவே தமிழக அரச நியமித்த பேரா. இனியன் தலைமையிலான நால்வர் குழுவின் நிலையும் இதேதான் என்பதைத் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தகைய நடவடிக்கைகள் திருடர்கள் கையில் சாவி கொடுப்பது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிபதியாக்குவது போன்றவற்றிற்கு இணையானது.
இந்திய அணுசக்தித் துறை, அணுமின் குழுமம் ஆகியவை அளிக்கும் தரவுகள், ஆதாரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு எவ்வித கேள்விகளும் எழுப்பாமல் அறிவியல் சிந்தனைக்கு எதிராக வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு வல்லுநர் குழுவின் ஆய்வு முறையும் அப்துல்கலாம் அறிக்கை உருவாக்கிய முறையும் அமைந்திருப்பதை இரண்டாவது கட்டுரை வெளிப்படுத்துகிறது.
கூடங்குளம் அணு உலையின் அமைவிடம் குறித்த நிலவியல் ஆய்வுகளை நிபுணர் குழு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அணு உலைகளின் நில அதிர்வுகளைத் தாங்கும் திறன் குறித்து ஆராயும் தொழில் நுட்ப வல்லுநர் டாக்டர் ஆதிமூலம் பூமிநாதன் பரிந்துரைப்படி இப்பகுதியில் அடித்தளப் பாறையில் ஊடுருவியிருக்கும் கால்கேரியஸ் பொருள் (கால்சியம் அதிகம் உள்ள பொருள்) உள்ள இடங்களை சிமெண்ட் கலவை கொண்டு நிரப்புவது என்ற யோசனை செயல்படுத்தப்பட்டது. இங்கு சுண்ணாம்புப் பாறை மற்றும் கால்சைட் எனும் பிதுங்கு எரிமலைப் பாறை இருந்து விடும் வாய்ப்பை ஆய்வுக்குட்படுத்தவில்லை. ஆனால் தமிழ்நாடு நிலவியல் சுற்றாய்வுத் துறை ஆய்வாளர் ஆர். ராமசாமி 1987 ஆம் ஆண்டிலேயே இங்கு பல்வேறு வகை எரிமலைப் பாறைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
கூடங்குளம் அமைவிடத்தில் விரிவான நிலவியல் சுற்றாய்வை மேற்கொண்ட டாக்டர் பிஜூ லாங்கினோஸ், பேரா. ராம சர்மா ஆகியோர், கடினப் பாறைகளைச் சுண்ணாம்புப் பாறைகளை மூடி மறைத்துள்ளதையும், அவற்றின் ஊடாக மாக்மா எரிமலைப் பாறைகள் ஊடுருவியிருப்பதையும், ஊடுருவல் நடக்குமிடத்தில் ஆழமான உடைவு (fracture) இருப்பதையும், இந்த உடைவுகளின் வழியே மாக்மா வெளியேற வாய்ப்புண்டு எனவும் சொன்னார்கள். மேலும் கடினப்பாறையின் கீழ் பிதுங்கி நிற்கும் உறுதி குன்றிய பிதுங்கு எரிமலைப் பாறைகள் (sub - volcanic rocks) இருப்பதை உறுதிப்படுத்திய நிலக் காந்தவியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளதையும் மூன்றாவது கட்டுரை விளக்குகிறது.
நிலக்காந்தவியல் ஆய்வின் போது (Ground Magnetic survey) அப்பகுதியிலுள்ள உருமாறிய பாறைகளின் (Meta morphic rocks) ஊடாக பிதுங்கு எரிமலைப் பொருள் ஊடுருவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த உருமாறிய பாறையின் மேடுகளில் பிதுங்கு எரிமலைப் பாறையின் பெரிய உடுவைகளும் (dykes) பள்ளங்களில் (graben)அதன் சிறு உடுவைகளும் 110 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவியிருக்கின்றன. கண்டமேலோட்டின் கெட்டித் தன்மை 110 - 150 மீட்டர் எனும் போது அங்கு அமைக்கப்படும் கூடங்குளம் அணு உலைகள் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என மக்கள் கேள்வி எழுப்புவது நியாயமானதுதானே?
கூடங்குளம் அணு உலையின் அமைவிடத்திற்கு 900 மீட்டர் தொலைவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. 40000 மீட்டர்கெட்டியாக இருக்க வேண்டிய நில மேடு 110 - 150 மீட்டர் அளவில் மெலிந்திருக்கும் நிலையில் சுண்ணாம்புக்கல் தோண்டியெடுக்கும் பணியும், அமைவிடத்தில் தேக்கி வைக்கப்பட்ட அணை நீரின் அழுத்தத்தாலும் அணு உலை பாதுகாப்பு மேலும் குறையும். இந்த தனியார் சுரங்கம் பற்றிய கேள்விக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் எந்த சுரங்கப் பணியிலும் ஈடுபடவில்லை என்ற கோமாளித்தனமான பதிலளித்துள்ள நிபுணர் குழுவை என்ன செய்வது?
கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் கிடைக்கும் சில தனிமங்களுக்கான தனியார் ஈடுபடும் மணற் கொள்ளைகள் ஒரு புறமும் அணு உலைகளைக் குளிர்விக்க கடல் நீரை எடுப்பதற்காகப் போடப்பட்டுள்ள குழாய்கள், கட்டுமான அமைப்புகள் மறுபுறமும் கடலரிப்பு கடற்கரையில் மணல் சேராமைக்கான காரணங்களாக இருக்கின்றன. மேலும் கடுமையான கடலரிப்பும் மணற் கொள்ளையும் நடைபெறும் இடிந்தகரையையொட்டி அணு உலைக்குத் தேவையான நன்னீர் வழங்கும் கடல்நீர் உப்புகற்றி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் நிபுணர் குழுவின் கண்ணில் படாததுதான் வேதனை.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் குவாரியில் ஆய்வு நடத்திய ஜெர்மன் புவியியல் ஆய்வாளர் டாக்டர் ஹெல்முட் ப்ருக்னர் (1987) சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கடல் ஆக்ரமித்திருந்தது என்றும் அதன் பிறகு வந்த ஒன்றரை கோடி ஆண்டில்இப்பகுதி கடலிலிருந்து மெதுவாக மேலெழும்பியது என்றும் சொன்னார். 1988 - 89இல் வெளியான இவரது ஆய்வுக் கட்டுரைகளின்படி இதே காலகட்டத்தில்தான் யாழ்ப்பாண சுண்ணாம்புப் பாறைகளும் காரைக்கால் மணற்பாறைப் படுக்கைகளும் உருவாகியிருக்க வேண்டும் எனவும் கருதினார். பின்னால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இப்பாறைகளில் நிக்கல் அதிகளவு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, நிக்கல் எரிமலைப் பாறைகள்அல்லது வேறு பாறைகளிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது.
கடலுள் உடைந்து விழுந்து மூழ்கி அழிந்து போன தென் தனுஷ்கோடி, கூடங்குளம் அமைவிடத்தை மாபெரும் சுனாமி தாக்கவல்ல அபாயம், உடைந்து சாய்ந்து சரியும் மன்னார் வளைகுடா, கிழக்குக் குமரி - கொழும்பு வண்டல் குவியல்கள், இவற்றை இயக்கும் இந்திராணி நிலப் பிளவு போன்ற எந்தவொரு அறிவியல் பூர்வமான உண்மைகளை அணுசக்தி ஆதரவாளர்களும், நிபுணர் குழுக்களும், அப்துல்கலாமும் கண்டு கொள்ளாத அவலத்தை இக்கட்டுரைகள் உரைக்கின்றன.
மன்னார் வளைகுடாவில் பெட்ரோலிய ஆய்வுகளுக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் எரிமலைக் கற்கள் கிடைத்துள்ளன. குமரி முகட்டின் வடபகுதியில் உள்ள நிலமேலோடு கண்ட மேலோட்டாலும் (continental crust) தென் பகுதியில் உள்ள நில மேலோடானது கடல் மேலோட்டாலும் (oceanic crust) ஆனவை. குமரி முகட்டில் ஏற்படும் ஒவ்வொரு நிலவியல் நிகழ்வும் நேரடியாகவும், இந்திராணி நிலப்பிளவின் வழி மன்னார் வளைகுடாவில் உள்ள சரிந்து சாயும் வண்டல் குவியல்களைப் பாதித்து மன்னார் வளைகுடா மெகா சுனாமியை ஏற்படுத்த முடியுமென ஆய்வுகள் சொல்லுகின்றன.
ஆஸ்திரேலியாவிலிருந்து அரபிக்கடல் வரை தென்கிழக்கு வடமேற்குத் திசையில் மிக அதிக நிலத்தடி வெப்ப ஓட்டத்தைக் கொண்டுள்ள பிராந்தியம் ஒன்றுண்டு. இதுதான் இந்திய - ஆஸ்திரேலிய பூகம்பப் பிராந்தியம்
(Indo - Australian Seismic Belt) என்றழைக்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில்தான் கடல் தரையில் மேலதிக அளவில் கடல் மலைகளும், எரிமலைகளும் காணப்படுகின்றன என்பது ஆய்வாளர் பீட்டர் ஹெடெர்வாரியின் கருத்து.
(பக். 46)
அபிஷேகப்பட்டி, சுரண்டையில் முறையே 1998, 2001 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சிறு அளவு எரிமலை வெடிப்புக்களில் இருந்து வெளியேறிய எரிமலைப் பாறைகள் குறித்தும் அந்த நிகழ்வுகளுக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேரா. விக்டர் ராஜமாணிக்கத்தின் அறிக்கை சுட்டிக் காட்டியது. (பக். 48). இவற்றை அரசின் அதிகார அமைப்புகளும், நிபுணர் குழுக்களும், விஞ்ஞானிகளும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாதென உச்சநீதிமன்றமும் கைவிரித்துள்ள நிலையில் தமிழக - கேரள மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை இக்கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது.
அணு உலை இயங்கும் போது வெளிப்படும் கழிவுகளை பிளாஸ்டிக் மாதிரி மறு சுழற்சி செய்து விடுவோம், மேசைப் பந்தாக உருட்டி வைத்து விடுவோம் என்று புனை கதைகளை பரப்புபவர்கள் அமெரிக்க அணுசக்திக் கல்லறைக்காக தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகளுக்குப் பின்னர் கைவிடப்பட்ட யுக்கா குறித்து வாய்திறப்பதில்லை என்ற உண்மையை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.
யுக்காவில் சம காலத்தில் எரிமலை வெடிப்புகள் எதுவும் நிகழாத நிலையில் அமெரிக்க அரசு எரிமலைப் பேரிடருக்கான ஆய்வை மேற்கொண்டது. இதற்காக 25 ஆண்டுகளில் அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 10000 கோடி. இருப்பினும் இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் யுக்கா அணு உலைக் கல்லறைத் திட்டத்திற்கு உகந்த இடமல்ல என்ற முடிவை 2009 இல் வெளியிட்டது. (பக். 51). எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நமது உத்தமர்கள் யுக்காவில் செய்த எரிமலைப் பேரிடர் ஆய்வை ஏன் கூடங்குளத்தில் செய்யச் சொல்லக் கூடாது?
கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்திலிருந் வடமேற்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் ராதாபுரம் நகருக்குத் தெற்கில் அமைந்த பண்ணையார்குளம் கிராமத்தில் 2011 நவம்பர் 26ஆம் தேதி கார்ஸ்ட் குழி உண்டானது.
மழையின் போது நிலத்திற்குள் மழை நீர் இறங்குகிறது. காற்றிலுள்ள கரியமில வாயுவுடனும் நிலத்துடனும் மழை நீர் உறவு கொள்ளும் போது கரியமிலம் (கார்பானிக் அமிலம்) உருவாகிறது. இந்த அமில நீர் கரையும் பண்பு கொண்ட அடித்தளப் பாறையின் ஊடாக இறங்கும் போது அதைக் கரையச் செய்து நிலத்தடி குகைகளை உருவாக்கி விடுகிறது. இதுவே கார்ஸ்ட் எனப்படும் நிலவியல் அமைப்பாகும். (பக். 52) இப்படியான நிலவியல் அமைப்பு கொண்ட கூடங்குளத்தில் அணு உலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட அடிப்படையே தவறானதாகும். மன்னார் வளைகுடா கடல் உள்வாங்குதல் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில் இது குறித்தான முறையான ஆய்வு செய்யாமல் அணு உலையைத் திறக்க மட்டும் அவசரப்படுவது ஏன் என்ற கேள்வி இந்நூலைப் படிப்பவர்கள் அனைவருக்கம் கண்டிப்பாக எழக்கூடும்.
இறுதிக் கட்டுரையில் கூடங்குளத்தின் உண்மைப் பிரச்சினை, அதற்கான தீர்வுகள் என 38 கருத்துக்கள் தொகுப்பாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றில் சில...
01. யுக்காவைவிட கூடங்குளம் அமைவிடத்தில் எரிமலை அபாயம் இருப்பதை உணர்த்தும் சுயேட்சையான அறிவியல் ஆய்வு முடிவுகளை இந்திய அணுசக்தித் துறை ஏற்றுக் கொள்ளவேயில்லை. 2002 மே 20 அன்று அறிவியல் ஆதாரங்களுடன் அணுகிய போது தலைமை நீதிபதி பி.என். கிர்பால், இதை ஏற்க மறுத்து, வழக்கு தொடர்ந்த காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மார்கண்டனுக்கும் நாகர்கோயில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் ரூ. 1000 அபராதம் விதித்த நிகழ்வு யாரும் மறக்க முடியாதது.
02. தென்னகத்திலேயே மேலதிக நிலத்தடி வெப்பங் கொண்ட (sub crustal heat flow) இடம், கூடங்குளத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலுள்ள நாகர்கோயில் என்று சுகந்தா ராய் குழுவினர் 2007-ல் உறுதி செய்தனர். நில மேலோட்டில் மாக்மா மேலெழும்பி வருவதையும் எரிமலைப் பேரிடர் ஆய்வு (volcanic Hazard Analysis) மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது சுட்டுகிறது.
03. முன்பு அணு உலையைக் குளிர்விக்க பேச்சிப்பாறை, கோதையாறு அணைகளிலிருந்தும் அல்லது நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் திட்டமிருந்தது. ஆனால் திடீரென்று டாடா நிறுவனத்தின் வழியாக இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கிய கடல்நீர் உப்பகற்றி ஆலையைத்தான் (sea water desalination plant) கூடங்குளம் அணுமின் நிலையம் நம்பியுள்ளது. மன்னார் வளைகுடாவை மட்டும் நம்பியிராமல் மாற்று நீராதரங்கள் மூலம் பாதுகாப்பாக அதிக நீரை சேமித்து வைத்துக் கொள்ள அணுசக்திக் கட்டுப்பாடு அமைப்பு வலியுறுத்தியும் கூட அணுமின்நிலைய நிர்வாகம் அவற்றைக் காதில் வாங்குவதில்லை.
04. 1989ஆம் ஆண்டு இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பு இத்திட்டத்திற்கு வழங்கிய அனுமதியில் கடலரிப்பு மற்றும் கடற்கரைப் பெருக்கம் (sea erosion and accretion) குறித்த ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியது. இன்று வரை அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
05. கடல் நீர் உள்வாங்கும் தருணங்களில் அணு உலையின் தேவைகளுக்காக கடல் நீரை உள்ளிழுக்கும் குழாய் பெறும் காற்றை மட்டும் உறிஞ்ச நேரிடலாம். கடல்நீர் உப்பகற்றி ஆலைகளுக்கும் இதே நிலைதான்.
06. அருகிலிருக்கும் தாக்கும் சுனாமிகள் (near field tsunami) இந்தியாவின் கடலோரப் பகுதிகளைத் தாக்காது என்ற நம்பிக்கை அறிவியலாகாது.
சுனாமி உருவாக வாய்ப்பாக வல்லுநர்கள் முன் வைக்கும் மூன்று காரணங்கள்
அ. சக்தி வாய்ந்த பூகம்பங்களை ஏற்படுத்தக் கூடிய நிலப்பிளவுகள்
ஆ. கடலடி எரிமலைகள் (under sea volcanoes)
இ. கடல் தரையில் ஏற்படும் நிலச்சரிவுகள் (submarine land slides)
07. 2011 நவம்பர் 19 அன்று குமரி முனைக்கு தெற்கே குமரி முகட்டின் அருகே கடலடியில் 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை கேரளத்தில் உள்ள நிலவியல் ஆய்வு மையம்(Centre of Earth Sciences), இந்திய வானியல் துறை (Department of Meteorological of India) , ஹைதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவல் சேவைக்கான தேசிய மையம் (India National centre for Ocean Information Services) ஆகியன அறிக்கைகள் வெளியிட்டன. இந்திராணிப் பிளவில் நடந்த இந்த நிலநடுக்கம் பற்றி அணு உலை நிர்வாகமோ, நிபுணர் குழுவோ இதுவரை எதுவும் சொல்லவில்லை.
08. அணுசக்தித் துறையின் அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகளை வல்லுநர் குழுவும் செய்திருப்பதால் மத்திய - மாநில அரசுகள் இந்த நிபுணர் குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.
09. கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் குறித்து சரிவர ஆராயவும் ஏற்கனவே நடந்த ஆய்வுகளைப் படிக்கத் தவறிய அணுசக்தித் துறை, அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பு, கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாணையம் வெளிப்படையாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும்.
10. கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் சுனாமிப் பேரிடர் ஆய்வு, எரிமலைப் பேரிடர் ஆய்வு, மாற்று நீராதர ஆய்வு, கடற்கரை உறுதித்தன்மை குறித்த ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவுகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக முன் வைக்க வேண்டும்.
இத்தகைய பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டும் குறியாக இருக்கும் அதிகார வர்க்கத்தையும் அறிவியல் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகளையும் இந்நூல் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.
கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தைவிட மேற்கு வங்கத்தின் ஹரிப்பூர் அமைவிடம் நிலவியல் ரீதியில் மோசமானது. இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் அணு உலைகளைக் கட்டிக் கொள்ளலாம். நாங்கள் அளிக்கத் தயாராக இருக்கிறோம். என்று இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாக் 2011 டிசம்பர் 07 - ல் கருத்து தெரிவித்துள்ளார். கூடங்குளத்தின் நிலவியல் பிரச்சினைகளை அறிந்துதான் ரஷ்யா அணு உலைகளை இந்தியாவிற்கு வழங்கியதா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புவது நியாயமானதுதான்.
அனைவரும் படித்து எளிமையாகப் புரிந்து கொள்ளும்வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் அச்சிட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும். அப்போது அணு உலைக்கான போராட்டத்தின் தீவிரத்தை அனைவரும் உணர்வர். அப்போதுதான் இனி தமிழகத்தில் அணு உலை நிறுவ வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகும்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு,
பூவுலகின் நண்பர்கள்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
எதிர் வெளியீடு
ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள
'கூடங்குளம் அணுமின் திட்டம் - இந்திய அணுமின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும்
தமிழக - கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்'
- நூலாசிரியர்கள் : மரு. ரா. ரமேஷ், வி.டி. பத்பநாபன், மரு. வீ. புகழேந்தி )
பக். 64 விலை. ரூ. 70
தொடர்பு முகவரி:
781 - விநாயகர் கோயில்தெரு,
கணுவாய்,
கோயம்புத்தூர் - 108.