மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அரச பயங்கரவாதம்
-மு.சிவகுருநாதன்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிற்கான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை மத்திய - மாநில அரசுகள் மிகவும் மோசமான கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றார்கள். இந்த அவதூறை மத்திய அரசு இன்னும் நிருபித்தபாடில்லை. இதற்கிடையில் மாநில அரசு அணு உலைக்கு ஆதரவாகக் களமிறங்கி போராட்டக்காரர்களை ஒடுக்க எந்த நிலைப்பாட்டை எடுக்கவும் தயாராக உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிற்குப் போட்டியாக நக்சலைட் -மாவோஸ்ட் தொடர்பு என்ற புதுக்கதையை கிளப்பிவிட்டுள்ளது. மக்கள் தொலைக்காட்சி தவிர இதர ஊடகங்கள் அனைத்தும் கூடங்குளம் அணு உலைப் போராட்டத்திற்கு எதிராகவே உள்ளன.
தமிழக அரசு போராட்டக்காரர்கள் வன்முறையை ஏவுவதற்காகவே இம்மாதிரியான புனைவுகளை உற்பத்தி செய்கிறது. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் விலைவாசி குறையும் என்றுகூட விஷமப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. கூடங்குளம் அணு உலை திறந்தால் குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்று சொல்லவேண்டியதுதான் பாக்கி! எஞ்சிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்.
ம.தி.மு.க., பா.ம.க., வி.சி. தவிர்த்த பிற கட்சிகளும் இதழியல், காட்சியியல் ஊடங்களும் ஓரணியில் திரண்டு அணு உலைக்கு ஆதரவான நிலையில் இருக்கும்போது குறைந்தபட்ச ஆதரவு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் போராட்டவியூகங்களை மறு ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகிறது.
போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டவர்கள் ஒரு வார காலமாக நடத்திவரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இப்போராட்டம் இத்துடன் முடிந்துவிட போவதில்லை. நீண்ட நெடிய போராட்டத்திற்கு நாம் தயாராகவேண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் தலைவர்கள் நலம் மிக முக்கியம்.
மகாத்மா காந்தி மீண்டும் இங்கு வந்து போராடினாலும் அவருக்கு நக்சலைட் -மாவோஸ்ட் முத்திரை குத்தப்படும். காந்தியவாதி ஹிமான்சு குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் காந்தியவாதி சுப.உதயகுமாருக்கும். நாம் அடிக்கடி சொல்வதைப்போல மன்மோகன் சிங், ப.சிதம்பரம், நரேந்திர மோடி போன்றோர் தேசப் பக்தர்களாக உள்ள நாட்டில் ஹிமான்சு குமார் , சுப.உதயகுமார் போன்றோர் தேசத் துரோகிகளாகவும் நக்சலைட் -மாவோஸ்ட் -களாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக