வெள்ளி, மார்ச் 02, 2012

பரண்- 0002 : 'கேப்பியார்' இதழில் வெளியான குறிப்புகள்

பரண்- 0002   :  'கேப்பியார்' இதழில் வெளியான குறிப்புகள் 


       கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள பரணியரத்தலவிளை குக்கிராமத்திலிருந்து  'கேப்பியார்' என்றொரு சமூக, கலை,இலக்கிய இதழ் தொன்னூறுகளில் தொடர்ந்து வெளிவந்தது. கே.புஷ்பராஜ் (KPR) என்ற இலக்கிய, அரசியல் செயல்பாட்டளாரால் நடத்தப்பட்ட இப்பத்தரிக்கை அவருடைய பெயரில் வந்தாலும் மிகவும் சீரியசான இதழாக இது இருந்தது.

      வானவில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நடத்திய கேப்பியார் எல்லைத்தமிழன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். குமாரசெல்வா, ஜெ.ஆர்.வி.எட்வர்ட் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். காலச்சுவடு மாதிரியான மேட்டிமை குணம்கொண்ட இதழ்களின் நடுவில் தலித்,ஒடுக்கப்பட்டோர் சார்பாக கேப்பியார் இயங்கியது.

      இன்று  'கேப்பியார்' இதழ் நின்றுபோனாலும் இந்த இதழ்  இலக்கிய-அரசியல்-  சமூக உலகில் ஏற்படுத்திய தாக்கம் பாரதூரமானது. சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளை கலைத்துபோட்டதில்  கேப்பியாருக்கும் பங்குண்டு.

     இந்த 'கேப்பியார்' இதழில் மோகன், சுரேஷ்,கேப்பியார் போன்ற பலர் எழுதிய இலக்கிய-அரசியல்-சமூக விமர்சனங்களை உள்ளடக்கிய சிறு குறிப்புகள் மிகவும் பிரசித்தம். அவற்றில் சிலவற்றை நானும் எழுதியிருக்கிறேன். அவைகளை இப்பகுதியில் மீள் பிரசுரம் செய்கிறேன். கே.புஷ்பராஜ் (KPR) அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.


ஒரு முன்னுரைக் குறிப்பு 

    சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சரியான கவனிப்பைப் பெறாது இப்போது அதிகமான விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் கவிதைத்தொகுதி யூமா. வாஸுகியின்  'உனக்கும்  உங்களுக்கும் '. அதிலுள்ள திறந்த முன்னுரைக்காகப் போற்றப்பட்டும் தூற்றப்பட்டும் வருகிறது. அதன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வெறும் செக்ஸ் குறிப்பு போன்று - சுஜாதாவின் கைங்கர்யத்தால் கவிதை - ஓவியம் பற்றி சொன்னதை எல்லாம் தவிர்த்துவிட்டு  யூமா. வாஸுகியின் படத்தோடு  குமுதம், ஒரு இதழில் வித்தியாசமான முன்னுரை என்ற தலைப்பில் வெளியிட்டு தந்து வக்கிரத்தை தீர்த்துக் கொள்கிறது. முன்னுரையில் மட்டும் குமுதத்திற்கான சரக்கு இருப்பதை அறிந்து பயன்படுத்துகிறபோது சரக்கு அம்பலப்பட்டுத்தான் போகிறது.

ஜூலை-ஆகஸ்ட் : 1995                                                 -மு.சிவகுருநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக