வெள்ளி, மார்ச் 09, 2012

பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு

பரண்-0004 :  பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு  


                                                                                            -மு.சிவகுருநாதன் 

ஓர் முன் குறிப்பு:- 


     தொழிற்சங்கவாதியும் இலக்கிய விமர்சகருமான தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் முயற்சியால் தோழர் என். வீரபாண்டியனின் ஆசிரியப் பொறுப்பில் 'மேடை' என்ற சிற்றிதழ் 1998 இல் மூன்று இதழ்கள் வெளியானது. முதலிரண்டு இதழ்களில் என்னுடைய கட்டுரைகள் வெளிடப்பட்டது. 'மேடை'- மே- 1998 இல் பிரசுரமான இக்கட்டுரை மார்ச் -08 உலகப் பெண்கள் தினத்தையொட்டி பரண் பகுதியில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.


            ''நீ என்னை நேசிக்கிறாய் எனில்
             காலம் என்னுடம்பில் இரக்கமின்றிப் பதித்திருக்கும் வடுக்களை
             நினைவின் நெருடலில் ரணமாகும் புண்களை
             உன் கருணையினால் மெல்ல ஒற்றியெடு போதும்.'' 01

        காலங்காலமாக விளிம்பில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்ணினத்தின் மீது கருத்தியல்கள் வன்முறையாய்  திணிக்கப்பட்டிருக்கின்றன. மதம், மொழி, இலக்கியம் போன்றவை இத்தகைய வன்முறைக்கு களன்களாக இருந்திருக்கின்றன.

       இன்றைய நிலையில் கூட பண்பாடு என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் அத்துக்களை மீறுவதும் அடுத்த கட்ட நகர்வை துரிதப்படுத்துவதும்  அவசியமாகிறது. சங்க இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைப்பது மிகவும் பிற்போக்குத்தனமான அதிகார பாசிசத்திற்கே இட்டுச்செல்லும். 02

       பெண்களின் கூந்தல்தான் சங்ககாலப் புலவர்களிருந்து இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் வரை பாடுபொருள். பாடுபோருளைப் போல கருத்துகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை என்பதே உண்மை.

       பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டா? என்று ஆராய்ந்த இறையனாரின் குறுந்தொகைப் பாடல்  


''...... அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே '' என்று கேட்கிறது. 03

     தலைவியின் கூந்தல் தலைவனுக்கே உரியதாம். இதனால் கபிலர் பாரி இறந்தபின் அவனுடைய பெண்களுக்கு கணவன் தேடும்போது 'கூந்தற்கிழவன்' என்ற சொல்லாக்கத்தைப் பயன்படுத்துகிறார்.

         ''......... பெரும் பெயர் பறம்பே
         கோளிரன் முன்கைக்  குறுந்தொடி மகளிர்
         நாறிருங்  கூந்தற் கிழவரைப் படர்ந்தே'' 04

    பெண் என்ற தன்னிலையின் இருப்பு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அவள் ஆணுக்கு உரிமையானவள். பெண்ணுடல் ஆணால் இயக்கப்படவேண்டிய ஒரு பொருள் என்பது போன்ற எண்ணங்கள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்றன.

    பெண்ணுடலை சில உறுப்புகளிலேயே முடங்க வைத்திருக்கிறது சமூகம். அதில் கூந்தலும் ஒன்று.

      கூந்தலுக்கு உரிமையாளனாகிய  கூந்தற் கிழவன்  பரத்தையரை நாடிச் சென்றபோதும் உழைப்பிற்காக பிரிந்து சென்றபோதும் எண்ணெய் பூசப்படாமல், அழகை இழந்து பூச்சூடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. வையாவிக் கோப்பெரும் பேகன்  தன் மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்து நல்லூர்ப் பரத்தையிடம் வாழ்கிறான். அப்போது கண்ணகியின் கூந்தல் நிலையை பெருங்குன்றுக்கிழார் ,


     ''அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
      நெய்யொடு துறந்த  மையிருங்  கூந்தல்
      மண்ணுரு மணியின் மாசற மண்ணிப்
      புதுமலர் கலை வின்று பெயரின்
      அதுமனேம் பரிசிலாவியர் கோவே.''

என்று விவரிக்கிறார். 05

     இதே பேகனைப் பாடிய அரிசிற்கிழார் என்ற மற்றோரு புலவர்

          ''அருந்துய ருழக்கு நின்றிருந்திழை  யரிவை
            களிமயிற் கலாவங் கால் குவித் தன்ன
            ஒலிமென் கூந்தற் கமழ் புகை கொளீஇத் ''     என்கிறார். 06

                  கூந்தலுக்கு எண்ணெய் தடவுதல், பூச்சூடுதல், அலங்கரித்தல் போன்றவை சாதாரண செயல்கள் அல்ல. அவை கணவனது நிலை அறிந்து நடக்கும் நிகழ்வுகளாய் இருந்திருக்கின்றன. மகாபாரதத்தில் பாஞ்சாலி பகைவரை அழிக்கும் வரையில் கூந்தலை முடியாமல் இருப்பதை இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.

      இளங்கோவடிகளும் தம் பங்கிற்கு கண்ணகியினுடைய கூந்தலின் அலங்கோலத்தை வருணிக்கத் தவறுவதில்லை.

     இன்னும் கூட சங்க காலத்தில் பெண்களின் நிலை மிகவும் உயர்வாக இருந்தது. பிற்காலத்தில்தான் அவர்கள் அடிமையாக்கப்பட்டார்கள்  என்றெல்லாம் பலரும் பலவாறு ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்கள். இதே போல் வேத காலத்தில் பெண்களுக்கு அதிக உரிமைகள் இருந்தன. குழந்தைகள் இல்லாத விதவைகளுக்கு மறுமணம் செய்துவைக்கப்பட்டது என்றெல்லாம் வரலாறு எழுதி வருகிறோம்.

       உரிமையாளனைத் தவிர வேறு எவருக்கும் கூந்தலைத் தொடுகிற உரிமை இல்லையாம்! வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் கூந்தலைப் பற்றித் தூக்கியதாகக் கூற அதைத் தமிழில் கம்பர் பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்து தமிழ் மரபைக் காப்பாற்றி அரிய சாதனை செய்திருக்கிறார். கம்பனுக்கு என்றென்றும் தமிழ்ச் சமூகம் கடன்பட்டிருக்கிறது (!?).

       கூந்தலின் சொந்தக்காரன் இறந்து விட்டால் கைம்பெண்களின் நிலை என்ன? ஆனந்தப் பையுள் , தாபத நிலை, முதுபாலை போன்ற துறைகளின் வாயிலாக விதவைகளின் நிலை சொல்லப்படுகிறது.

     உரிமையாளன் போய்விட்டபிறகு கூந்தலுக்கு என்ன வேலை? கூந்தல் களையப்படுகிறது / மொட்டையடிக்கப்படுகிறது.

     கூந்தல் களைந்து , கை வளையல்கள் இன்றி அல்லியரிசி உண்ணும் நிலையை தாயங்கண்ணியார் ,

           ''கூந்தல் கொய்து , குறுந்தொடி நீக்கி
           அல்லி  உணவின் மனைவியொடு , இனியே
            புல் என் றனையால் .....''  என்று குறிப்பிடுகின்றார். 07

      பாண்டியன் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனது பகைவர் இறந்தபோது அவர்தம் மனைவியர் கூந்தல் களைந்து கைம்பெண் கொலமேற்பதை கல்லாடனார் என்னும் புலவர்,

                  ''ஒன்னு தன் மகளிர் கைம்மை கூர
                    அவிரறல் கடுக்கு மம்மென்
                    குவையிருங்  கூந்தல் கொய்தல் கண்டே .'' 08     - வாகைத்திணையில் அரசனைச்  சிறப்பித்துப் பாடுகிறார்.  பகைவனைக் கொன்று அவனது மனைவியை கைம்பெண் நிலையை அடைய வைப்பது மிகுந்த வீரமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

      இதேபோல் பல்வேறு சங்கப் பாடல்களின் பக்கங்களில் கூந்தற் செய்திகள் நிறைந்து கிடக்கிறது.

       இனியும் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. தொல்காப்பியம், நன்னூல், போன்ற இலக்கண நூற்களையும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற இலக்கிய நூற்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழ்ப்பண்பாட்டைக் கட்ட நினைப்பது அபத்தமாகவே போய்முடியும்.

    காலங்கள் மாறினாலும் பெண்கள் பற்றிய சமூகக் கண்ணோட்டம் பெரிதாக மாறிவிடவில்லை. இப்போதும் விதவைக்கோலம் பெண்களுக்குச் செய்யப்படும் அதாவது வளமான பூமிக்கு செய்யப்படும் பண்படுத்தல்கள் என்றெல்லாம் கூறுகின்ற மதத் தலைவர்களின் கண்ணோட்டம் எவ்வளவு கொடூரமானது? 09

      இறுதியாக, உரிமைகளை யாரும் யாருக்கும் வழங்கமுடியாது. நமக்கான உரிமைகளை நாமே எடுத்துக் கொள்வோம். பெண்ணிய இயக்கங்கள் / வாதிகள் இவற்றையெல்லாம் மறு வாசிப்பு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.

குறிப்புகள்:-

01 . தினமணி மகளிர் மலர்-மார்ச்-1997  - சம்யுக்தாவின் கவிதை வரிகள்.
02 . செந்தமிழ் - பிப்ரவரி-1998
03 . குறுந்தொகைப் பாடல் - 02
04 . புறநானூறு-113
05 . புறநானூறு-146
06 . புறநானூறு-025
07 . புறநானூறு-147
08 . புறநானூறு-250      
09 . தினமணி தீபாவளி மலர் - அக்டோபர்-1997 :- சங்கராச்சாரி பேட்டி.

                                நன்றி:-                                        'மேடை'- மே- 1998

  எதிர்வினை:- 

               'மேடை'  இதழ் மூன்றில் (ஆகஸ்ட்-1999) வெளியான விமர்சனம் ஓன்று.

    இலக்கியம் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. எனவே அக்கட்டுரை பற்றி புதிய கருத்து எதுவும் தோன்றவில்லை.
                                                                                                 - கி. வெங்கட்ராமன்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக