திங்கள், மார்ச் 26, 2012

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013  

                                                                                                 -மு.சிவகுருநாதன் 


      தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (26.03.2012)  நிதியமைச்சர் 
ஓ. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசைப் போன்று சில பொருள்களுக்கு வரிகளை ஏற்றி சில பொருள்களுக்கு வரிகளை இறக்கி எதோ மக்களுக்கு சேவை செய்வதாக பம்மாத்து செய்வதே இவர்களின் வேலையாகிவிட்டது. இன்றும் அதேதான் நடந்துள்ளது.

        ரூ.1500 கோடிகள்  அரசிற்கு வருவாய்க்கு வழி காணப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் மக்களை அரவணைத்து மேலே உயர்த்த எந்தத் திட்டமும் வழக்கம்போல் இல்லை. சாதரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் விலை உயர வழிவகுத்துவிட்டு ஓட்ஸ், கோதுமை, இன்சுலின் போன்றவற்றிற்கு வரிகள் குறைக்கிறேன் என்று சொல்வது  வெறும் அபத்த நாடகம்.

      அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்திற்கு சுமார் ரூ.1800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்க இந்தப் பணம் பயன்படுமா என்பது தெரியவில்லை. வாக்ரிகள் போன்ற சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட விளிம்புநிலைச் சமூகங்களுக்குக் கல்வி அளிக்க இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியே? 

       இரண்டாண்டுகளுக்கு முன்பு அமல்படுத்திருக்கவேண்டிய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 வரும் கல்வியாண்டிலாவது நடைமுறைக்கு வருமா என்பது தெரியவில்லை. 25 % இடங்களை ஏழை மக்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் வழங்குவதை எப்படி உறுதிபடுத்தபோகிறார்கள் என்பதும் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. 

    மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநூற்கள், குறிப்பேடுகள் தவிர்த்த இதர இலவசங்கள் அவர்கள் பயபடுத்துவதற்கு உகந்ததாக இல்லை. தலித் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் குறிப்பேடுகள் போதுமானதாக இல்லை. அந்த வகையில் தற்போது வழங்கப்படும் குறிப்பேடுகளும் போதுமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இதனால் ஒருபயனும் விளையப்போவதில்லை. 

     புவியியல் படப் பயிற்சி ஏடுகள், கணிதவியல் பெட்டி போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்கலாம். ஆனால் இவற்றின் தரம் உறுதி செய்யப்படவேண்டும். நான்கு செட் சீருடைகள் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இதுவரையில் வழங்கிய சீருடைகளின் தரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் பெரும்பாலான அரசுப்பள்ளிகள் கூட சீருடைகளை பல்வேறு வண்ணங்களில் மாற்றிவிட்டதால் சீருடைக்கான தொகையை மாணவர்களின் பெற்றோரிடம் ரொக்கமாக வழங்கவேண்டும். இல்லாவிட்டால் இத்திட்டத்தின்  உரிய பலன் கிடைக்காமற்போகும். 

      இன்று தமிழக அரசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக மாறிப் போனாலும் அவர்களது போராட்ட வடிவத்தில் ஒன்றை செயல்படுத்த முனைந்திருப்பதை நாம் பாராட்டியாகவேண்டும். குடிசை வீடுகளுக்கு CFL  விளக்குகள் வழங்குவதே அது. சூரிய மின்சக்தி பயன்பாடுகள் பற்றி பேசுவதற்கும் நன்றி சொல்லலாம். 

     மொத்தத்தில் தொலைநோக்குப் பார்வையின்றி   ஒவ்வோராண்டும் மாநில அரசுகள் செய்யும் ஒரு சடங்காக இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது அமைந்துள்ளது.  மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் பாழடிக்கப்பட்ட நிலையில் இதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது விசித்திரமாகத்தான் இருக்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக