வியாழன், மார்ச் 15, 2012

சிற்றிதழ் அறிமுகம் - எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை

எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை   
 
                                                                                 - மு. சிவகுருநாதன்
 
(சிற்றிதழ் அறிமுகம் - மந்திரச் சிமிழ் காலாண்டிதழ் 07-10 
(ஏப்ரல் 2011 - மார்ச் 2012)  
எல்லையற்று விரியும் தாள் பறவை)             
 
 
 
 
 
 2010-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெருவைச் சேர்ந்த (லத்தீன் அமெரிக்கா) மரியா வர்கஸ் லோஸாவின் பழைய நேர்காணல் (1990) ஒன்று தமிழாக்கப்பட்டுள்ளது.  எதற்காக எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு "எனது சோகம் என்னை எழுத வைக்கிறது.  அந்த சோகத்தை எதிர்கொள்ளவே நான் எழுதுகிறேன்"  என்று பதிலளிக்கிறார்.  இரு பெரும்பாலோர்க்குப் பொருந்தும் ஒன்றாகவே உள்ளது.  
 
 'இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் - பிராய்டின் மூடுண்ட கனவுகள்' கட்டுரையில் ஜமாலன் பின்வரும் கருத்துக்களை முன் வைக்கிறார். 
 
 "மனம் என்பதில் நினைவிலியை தனி மனிதனின் எல்லைக்குட்படுத்துவது. அதன் வழியாக முதலாளித்துவத்திற்கான எல்லைகளை மறு வரையறை செய்தது.  முதலாளித்துவத்திற்கு தேவையான உற்பத்திச் சக்திகளான மனிதர்களின் உடலை அவர்களது விருப்பத்தை முதலாளித்துவ எல்லைக்குள் வரையறை செய்தது.   விருப்பத்தை உட்செறித்த வேட்கையாகவும், இது இன்மையால் திருப்தியற்றதாக உள்ளதாகவும், அதனைப் பதிலீடு செய்வதற்காக சமூகத்தின் உற்பத்தியில் பங்கு பெறச் செய்வதாகவும் எதிர்மறையான கருத்தாக்கத்தை கட்டமைத்து, விருப்பு சமூக உற்பத்திக்கான ஆற்றல் அதனை இன்மையாக்கியதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி எந்திரங்களில் விருப்பின் பதிலீடுகளைத் தேடும் மனதாக உருவானது.  முதலாளித்துவத்தின் பித்து நிலை என்பது இப்படி இருப்பு-இன்மை என்கிற இருமைக்குள் சிக்கியதால், மனமும் முதலாளித்துவத்தின் இருப்பு-  இன்மை என்பதற்குள் சிக்கிக் கொண்டு விட்டது". (பக். 114) 

ஆண்டி - இடிபஸ் (Anti - Oedipus) : டெல்யூஸ் - கட்டாரி எழுதிய நூலிலிருந்து 'விருப்ப எந்திரங்கள்  உறுப்புகளற்ற உடல்'  நிஜந்தனால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  "ஒரு உறுப்பு - எந்திரம் ஆற்றல் கொண்ட எந்திரத்துடன் இணைக்கப்படுகிறது; ஒன்று போக்கை உற்பத்தி செய்கிறது.  இன்னொன்று தடை செய்கிறது.  மார்பு, பால் சரக்கும் எந்திரம்; வாய், அதனோடு இணைக்கப்படும் எந்திரம். நோயாளியின் வாய் பல செயல்களைச் செய்கிறது. அதன் உடையாளருக்கு அரு ஒரு சாப்பிடும் எந்திரமா அல்லது சுவாசிக்கும் எந்திரமா, ஒரு ஆசன வாய் எந்திரமா, ஒரு பேசும் எந்திரமா அல்லது சுவாசிக்கும் எந்திரமா (ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கும் போதும்) என்பதில் தெளிவு இருப்பதில்லை" (பக். 91) என்று விருப்ப உற்பத்தி, உறுப்புகள் இல்லாத உடல் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. 

டெல்யூஸ் - கத்தாரியின் 'வேர்த்தண்டு ரைசோம்' என்ற கட்டுரையை எஸ். சண்முகம் மொழி பெயர்த்துள்ளார்.  அதில் "நாங்கள் இருவரும் இணைந்துதான் எதிர் இடிபஸ்  (Anti - Oedipus) எழுதினோம்.  நாங்கள் இருவரும் தனித்தனி பன்முகத்தோடு இருப்பதால், ஏற்கனவே எங்களை பலவும் சூழ்ந்திருந்தன"  (பக். 32) என்றும்
 
 "ஒரு புத்தகத்திற்கு பருண்மைப் பண்போ அல்லது அகப் பண்போ கிடையாது, அது பல்வேறு விடியல்களால் பொருண்மைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.  மேலும் பல வித்தியாசமான தேதிகளும் வேகங்களால் உந்தப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு புத்தகத்தை கற்பித்துக் கூறுவதற்கு இந்த பண்புகளின் இயக்கத்தை, அதன் உறவுகளின் புற வெளியையும் கவனிக்காது செல்வதுதான் மரபு" (பக். 32) 
 
    "ஒரு வேகத் தண்டிற்கு முதலோ முடிவோ கிடையாது; அது எப்போதும் நடுவில் இருக்கிறது". (பக். 53) 
 
    "பலகையை சுத்தப்படுத்தி, துலங்குவது அல்லது பூஜ்ஜிய அடித்தளத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து, ஒரு துவக்கத்தைத் தேடுவது, அடித்தளத்தைத் தேடுவது - இவையனைத்துமே ஒரு பொய்யான கருத்துருவத்தை பயணம் மற்றும் நகர்தல் குறித்து உருவாக்குகிறது". (பக். 53)
 
   "அமெரிக்க இலக்கியமும், ஆங்கில இலக்கியமும் பெரிய அளவிற்கு இந்த வேர்த்தண்டுத் தன்மையைக் கொண்டிருக்கின்றன.  அவர்களுக்கு ஒவ்வொன்றின் இடையே எப்படிப் பயணிப்பது என்று தெரிந்திருக்கிறது". 
(பக். 53) என்றும் விளக்குகிறார்கள்
 
 ஆசிரியர் க. செண்பகநாதனின் 'கூடங்குளம் : மரணக்கூடாரம்' என்ற கட்டுரை மன்மோகன் சிங்கைப் போல ராக்கெட் வடிவமைப்புப் பொறியாளர் (அப்துல்கலாமை விஞ்ஞானி என்றழைப்பதில் மாற்றுக் கருத்துண்டு.  
க.செண்பகநாதன் கலாமை முன்னாள் ஜனாதிபதி என்று சொல்லக் கூட முடியவில்லை என்கிறார்) அப்துல்கலாமும் கார்ப்பரேட் ஏஜெண்ட் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. சோவியத் ரஷ்யா, செர்னோஃபில் அணு உலை விபத்தை எடுத்துக்காட்டி கூடங்குளம் அணு உலை எந்த வகையிலும் நல்லதல்ல என்றும் தமிழர்களை ஒடுக்க, அழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைச் சாடுகிறது. 
 
 மணல் மகுடி குழுவினரின் 'சூர்ப்பணங்கு' நாடகம் குறித்த ஜெ. சாந்தாராமின் பதிவு மிக விரிவானது. 
 
 "பஞ்சத்தில் நிராதரவான நல்லத்தங்காள் தன் ஏழு குழந்தைகளை  மாய்த்துக் கொள்ள பாழுங்கிணறு செல்வதும், ஆட்சியாளருக்கு எதிராக ஆவேசமுறுவதும், நல்லத்தங்காள் கதையை நடிக்க பெண் வேடமிட்டு அணங்குகளாய் மாறியவர்கள் இன்றை பெண்ணிலையின் துன்ப - துயரங்களைப் பேசி விமோசனமடைய ஆணாதிக்கத்திற்கு எதிராக ஆர்ந்தெழுவதும், இறுதியில் பல்லுயிர் ஓம்பும் தாய்மையின் குறியீடாக பால்மடு கனத்த ஏழு முலைகள் கொண்ட மீவிலங்குப் பெண் வந்து எல்லா உயிர்களுக்கும் பாலூட்டுவதுமாக" (பக். 71) சூர்ப்பணங்கு நாடகம் நிகழ்வதை காட்சிகளினூடாக சாந்தாராம் விவரிக்கும் போது நாடகத்தை நேரில் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

Pantomime என்பதை ஊமைக் கூத்து என்று சொல்லாமல் பேசாக் கூத்து அல்லது மவுனக் கூத்து என்றே விளிப்பது நல்லதெனப்படுகிறது.
 
 "பெண் தன்னிலை தன்னைத் தானாக முன் நிறுத்துவது மற்றமையின் விருப்பத்திலிருந்துதான்.  தாய், மகள், சகோதரி, மனைவி என்று உறவின் பாற்பட்ட தன்னிலையாக இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பிளவுறும் தன்னிலையைக் காண வேண்டியதாக அலைவுறும் புள்ளிகளில் நிலை பெறுவதாகக் கொண்டு விட, படைப்பில் கண்டுவிடத்தான் பொருளாம்சத்தை தேட வேண்டியிருக்கிறது". (பக். 105) என்று முபீன் சாதிகா 'பெண்: புராணம் - பிளவு - தன்னிலை' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
 
 சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹாங்காங் 1839-ல் இங்கிலாந்தின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டது.  பிறகு ஜப்பான் ஆளுகையின் கீழ் இருந்து இரண்டாம் உலகப் போர் முடிவில் மீண்டும் இங்கிலாந்தின் அதிகாரத்தின் கீழ் வந்தது.  1997 ஜூலை 01 அன்று ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த இங்கிலாந்து, இங்குள்ள மக்கள் 50 ஆண்டுகளுக்கு சுதந்திரமாகவும் தனித்தன்மையுடனும் வாழ வழி வகுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் நடந்தேறியது.
 
 அதிக சுதந்திரமான ஹாங்காங் சமூகம் 50 ஆண்டுகள் வாக்குறுதியை, சீனா மீது சந்தேகக்கண் கொண்டே அணுகுகிறது.  இதை நினைவுப்படுத்தும் படம் 2046.  இப்படத்தை எடுத்த வாங் கர் வேய்-யின் In the Mood Of Love, Days of being wild  ஆகிய படங்கள் குறித்த பதிவு இரு கட்டுரைகளாக க. செண்பகநாதனால் எழுதப்பட்டுள்ளது. 
 
  ம. தவசி, உபாலி, இராகவன் ஆகியோர் எழுதிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  ம.தவசியின் நாவலை த.கிருஷ்ணமூர்த்தியும் தேவேந்திர பூபதியின் கவிதைகளை யவனிகா ஸ்ரீராமும் விமர்சிக்கின்றனர். ஆளுமை அறிமுகம்  பகுதியில் ஹெமிங்வே அறிமுகப்படுத்தப்படுகிறார்.
 
 போர்ஹேஸ் -ன் உரைநடைப் புதிர், கவிதைகள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் உள்ளிட்ட 24 கவிதைகள் உள்ளன.  யவனிகாவின் 'ஒரு மனித ஞாபகம்' கவிதை கார்ல் மார்க்ஸ் -ஐ அருமையான வழிப்போக்கன் என்கிறது.  எல்லா கவிதைகளும் மனத்திற்கு நெருக்கமாக இருக்கின்றன.  
 
     தமிழில் ஒரு சிறு பத்திரிக்கை மரணிக்கும் பொழுது எங்கோ ஓர் மூலையில் ஒரு பத்திரிக்கை உயிர்த்துக் கொண்டுள்ளது நல்ல செய்திதான். 
 
 மந்திரச் சிமிழ் காலாண்டிதழ் 07-10 
(ஏப்ரல் 2011 - மார்ச் 2012)  
எல்லையற்று விரியும் தாள் பறவை
 
பக். 144 விலை ரூ. 90 ஆண்டு சந்தா ரூ. 100
 
தொடர்பு முகவரி: 
 
க. செண்பகநாதன்,
 24 / 17 சி.பி. டபிள்யூ. டி. குடியிருப்பு,
கே.கே. நகர், சென்னை - 600078. 
தொலைபேசி: 044 - 23663847 
செல்பேசி: 98949 31312 
www.manthirachimizh.com,
nsenbaga@gmail.com,
nesenbaga@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக