பரண்-0005 :
கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்
- மு.சிவகுருநாதன்
(நாளை (14.03.2012) இந்திய நாடாளுமன்றத்தில் ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை ஆகிய அகலப் பாதைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. தொண்ணூறுகளின் மத்தியில் கிழக்குக் கடற்கரைச் சாலை வேண்டும் என்று போராடியவர்கள் இன்று அகல ரயில்ப்பாதைக்காக போராடிக்கொண்டுள்ளனர். டி.ஆர்.பாலு போன்ற காரியவாதிகளால் இது நடப்பது சத்தியமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல்கள் தொடர்கின்ற நிலையில் பல நாட்டு கடற்படை மற்றும் கப்பல்கள் மூலம் இந்திய மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது வேதனையளிக்கக்கூடியது. இந்த காலச் சூழலில் பொருத்தப்பாடுடைய, தொண்ணூறுகளின் மத்தியில் தினமணி பிரசுரிக்க மறுத்த இச்சிறு கட்டுரை இங்கு வெளியாகிறது.)
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைப் பிடித்துச் சென்றனர் அல்லது காணவில்லை, மீனவர்களுக்கும் கடற்ப்படையினருக்கும் தகராறு, துப்பாக்கிச் சூடு போன்றவை அன்றாடச் செய்திகளாகிவிட்ட நிலையில், கடலூரிலிருந்து தற்போது அமைக்கப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR- East Coast Road) வேதாரண்யத்தைத் தவிர்த்து திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை வழியாக செல்லும் எனத் தெரிகிறது.
இதற்குச் சொல்லப்படும் காரணம் இச்சாலையால் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் பாதிக்கப்படும் என்ற சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கோரிக்கை என்பதாக இருக்கிறது. இதை மந்திரியே சொல்லியிருக்கிறார். கூடங்குளம் அணு மின் நிலையம், இறால் பண்ணைகள், சாயப்பட்டறை, தேஹிரி அணைக்கட்டு போன்ற பல தமிழக- இந்திய அளவில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எவ்விதம் அரசால் புறந்தள்ளப்பட்டிருக்கின்றபோதும் இதற்குச் சொல்லப்படும் காரணம் சொத்தையானதாகவே இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்கின்ற அரசின் பொய்முகம் கீழ்க்கண்ட காரணத்தால் கழன்று போய்விடுகிறது.
கோடியக்கரை வனவிலங்கு உய்விடம் மற்றும் பறவைகள் புகலிடம் வேதாரண்யத்திலிருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது. ஆனால் திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை சாலையில் அதாவது தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை வருகின்ற வழியில் அச்சாலைக்கு வெகு அருகாமையில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் புகலிடம் உள்ளது. இங்கும் கோடியக்கரைக்கு வருகின்ற அனைத்துவகையான பறவையினங்களும் வந்து போகின்றன. இந்தப் புகலிடம் மட்டும் பாதிப்படையாதா? 10 கி.மீ. தொலைவில் உள்ளபகுதி பாதிப்படையும்போது அருகிலுள்ள பகுதி மட்டும் என்னாகும்? இங்குள்ள பறவைகள் புகலிடத்தை கோடியக்கரைக்கு மாற்றப் போகிறார்களா? .........தெரியவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் வேண்டியதில்லை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் பொதுமக்களைவிட அரசின் செய்கைகள் காரணமாகவே பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அணு குண்டு சோதனை என்ற பெயரில் நாம் பாலைவனங்களை கூட ஒழுங்காக வைக்கவில்லை. இந்நிலையில் தில்லியில் மட்டும் புகையைத் தடுத்தால் போதும் என்றாகிவிட்டது.
பாரதி கனவில் வீதி சமைத்த சேதுசாலை இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அத்துடன் கிழக்குக் கடற்கரைச் சாலையும் இங்கு வராமற்போனால் வேதாரண்யம் மற்ற பகுதிகளிருந்து துண்டிக்கப்பட்டுத் தீவு போலாகிவிடும். இன்றுள்ள நிலையில் இங்கு விளைகிற உப்பை எடுத்துச் செல்வதற்குக்கூட போதுமான சாலைவசதிகள் இல்லை. மேலும் கடற்படை ரோந்து மற்றும் பாதுகாப்புப்பபணிகளுக்கு சாலையின்றி எவ்விதம் இப்பகுதி மக்களுக்கும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கமுடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போதையச் சூழலில் கடற்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பென்பது கானல் நீராகத்தான் இருக்கிறது. கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றவர்கள் இலங்கைப் படையிடம் மாட்டாமலும் குண்டடிபட்டு சாகாமலும் திரும்புவார்களா? என்ற ஏக்கம் ஒருபுறமிருக்க இங்கு ரோந்து வருகின்ற இந்தியப் படையினர் சினம்கொள்ளத்தக்கதான பணிகளை எவ்வாறு தவிர்ப்பது அல்லது எதிர்கொள்வது என்ற பயம் மறுபுறம் என பொதுமக்களும் மீனவர்களும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
படையினர் கோபப்படும் செய்கைகளாக குடிநீர் பிடித்தல், கடற்கரையைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துதல் போன்றவைகள் இருக்கின்றன. ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் படையினருக்கும் பொதுமக்கள் / மீனவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வருகின்றன.
இந்தியாவின் எந்த நகரம் / கிராமங்களில் முறையான கழிப்பிட வசதி இருக்கிறது? அடிப்படை வசதிகள் ஏதுமற்று இருக்கின்ற பொதுமக்களை மிரட்டும் போக்கை ராணுவத்தினர் கைவிடவேண்டும்.
இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது மொழியாகும். தமிழ் மொழி தெரியாதவர்களாக படைவீரர்கள் - அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே உரையாடல் சாத்தியமில்லாமற் போய்விடுகிறது. மனிதர்கள் யாருமற்ற சியாச்சின் போன்ற பனிப் பிரதேசங்களில் பணிபுரிவோருக்கு வேண்டுமானால் மொழி ஒரு இடைஞ்சலாக இல்லாமல் இருக்கலாம். மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பயன்படுத்தப்படும் ராணுவத்திற்கு அம்மக்கள் மொழியில் பரிச்சயம் இருக்கவேண்டும். தமிழ் பேசும் அதிகாரிகளை நியமித்து இரு தரப்பார் தொடர்பை உறுதிப்படுத்தி மக்களின் பாதுகாப்பை நிலைநிறுத்தி பயத்தை விலக்கவேண்டும்.
நம்மை, நம் நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவம் மக்களின் மாமூல் வாழ்விற்கு பாதிப்பேற்படுத்தும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆட்படுகின்றனர். அவர்களுடைய பாதுகாப்பிற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில் நமது படையினரே அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவது துரதிஷ்டவசமானது.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமோ அல்லது கடும் எச்சரிக்கை / கடும் நடவடிக்கைகள் மூலமோ எப்போதோ தடுக்கபட்டிருக்கவேண்டியது, இன்றும் தொடர்வது வேதனையளிக்கிறது. கட்சத்தீவை தாரை வார்த்தல் மற்றும் நமக்குள்ள கடலுரிமையை விட்டுக்கொடுத்தல் என்பதுபோல வருங்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும்.
இலங்கைப் படையினரின் அட்டூழியங்கள் தடுக்கப்பட்டு நமது உரிமைகளை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்க்கப்படவேண்டும். பாதுகாப்பு அமைச்சர் திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். தற்போதைய நிலையின் தீவிரத்தை உணர்ந்தாவது உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இது ஒருங்கிணைந்த பல்வேறு பணிகள் வாயிலாகவே சாத்தியமாகும்.
பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எல்லையோரங்கள் மீதிருக்கின்ற நமது கவனிப்பு கடற்கரையோரங்கள் மீது இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.
ஆகவே, கிழக்குக் கடற்கரைச் சாலையை உள்நாட்டுச் சாலையாக மாற்றாமல் வேதாரண்யம் வழியாகவே சாலையை அமைத்தல், படையினருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கையாக தமிழ் மொழி பேசும் அதிகாரிகளை பணிக்கு அமர்த்துதல், மக்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் அச்சத்தைப் போக்குதல், கடற்படைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், மீனவர்களை இலங்கைப் படையினரிடமிருந்து காத்தல், நமக்கான கடல் உரிமைகளை விட்டுக் கொடுக்காதிருத்தல் - மீட்டல் போன்ற தொடர்பணிகள் மூலமே இச்சிக்கல்களுக்குத் தீர்வு காணமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக