திங்கள், மார்ச் 19, 2012

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!    -மு.சிவகுருநாதன் 

  
      கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் ஜெ.ஜெயலலிதாவை நம்பி ஏமாந்து போயுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக ஜெ.ஜெயலலிதா நான் உங்களில் ஒருத்தி என்றார். இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த கையோடு கூடங்குளம் அணு உலையைத் திறக்க அமைச்சரவையை கூட்டி முடிவு செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

      ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருக்கும் அணு உலை ஆதரவில் பெரும் போட்டியே நிலவுகிறது.  கருணாநிதி அன்றாடம் விடும் அறிக்கைகளும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளும் இதைத்தான் நிருபிக்கின்றன.

       மத்திய அரசின் குழு பிறகு மாநில அரசு ஏற்பாடு செய்த குழு அனைத்தும் வெறும் கண்துடைப்பு நாடகங்களே. இவை எல்லாம் போராடும் மக்களை ஏமாற்ற நடத்திய ஒத்திகைகள்தான். எல்லாக் குழுக்களும் எந்தவித ஆய்வும் செய்யாமல் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதைத்தான் சொல்லின.

    பல மாதங்களாகத் தொடரும் இப்போராட்டம் இன்று பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழக காவல்துறை  படையணிகள் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய ராணுவப் படைகளும் மத்திய தொழில் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன்.

   போராடும் இம்மக்கள் காந்தியின் அகிம்சைப் பாதை மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் நமது அரசுகள் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதை எப்படி தமிழக மக்களும் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களும் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதே பெருங்கவலையாக உள்ளது. 

     கூடங்குளத்தில் படைகளைக் குவித்து மக்களை பீதியூட்டும் வேலையை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. வழக்குரைஞர் சிவசுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதுகூட தெரியாமல் உள்ளது. அவர்களை இந்த அரசுகள் சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பது நிருபணமாகிறது.

     போராட்டக்காரர்கள் கைதைத் தொடர்ந்து இடிந்தகரையில் இருந்த சுப.உதயகுமார் , புஷ்பராயன்  ஆகியோர் பெரும் மக்கள் திரளுடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கியுள்ளனர். சுப.உதயகுமாரை எப்படியும் கைதுசெய்துவிடுவது என்ற முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. மத்திய - மாநில அரசுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கையை, மனித உரிமை மீறலை அனைவரும் கண்டிக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களத்தில் என்றும் இணைந்திருப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக