செவ்வாய், மார்ச் 13, 2012

தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி

தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி         -மு. சிவகுருநாதன்

(ஜனவரி 2012 தமிழில் வெளியான 'மற்றமை' (Other) பயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் - 1 பற்றிய அறிமுக பதிவு)
 
 
 
 
         தமிழில் உளவியல் சார் ஆய்வுகள் மிகவும் குறைவு.  தமிழ்ப் படைப்பிலக்கியம், அரசியல், பண்பாடு, கலைகள், திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவை உளவியல் ஆய்வுக்குட்படுத்தப்படும் போது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.  ஆனால் அது அதிகளவில் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை.  இந்நிலையை மாற்ற தமிழில் வெளியாகியிருக்கும் பயன்பாட்டு மன அலசல் (Applied Psycho analysis) ஆய்விதழான மற்றமை பயன்படும் என்று நம்ப இடமுண்டு.
 
 மன அலசல் கட்டுரைகள் வாசிக்க கடினமாக இருப்பதற்கு அதன் கட்டமைப்பு மற்றும் கலைச்சொற்கள் காரணம் என்று சொல்லி முதல், கடைசி மற்றும் கட்டுரைகளில் கலைச்சொற்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம் இச்சிற்றிதழில் உள்ள கட்டுரைகளை ஆழ்ந்து படிக்க உதவுகிறது. 
 
 ஈழத்தமிழர்களின் மனக்காயம் (Trauma) பட்டோருக்கான மன மருத்துவம், சிகிச்சை, மன அலசல் செய்ய வேண்டிய அவசியத்தையும் இரண்டாம் உலகப் போரில் வதை முகாம்களில் சிக்கிச் சீரழிந்த யூதர்களின் மனக்காயத்தின் பாதிப்பு தொடர்வதையும் இணைக்கிறது.
 
 "கேரளருக்கு நிபுணர் அறிக்கை, (இந்தியா) சுப்ரீம் கோர்ட், 999 வருட ஒப்பந்தம் (foreclose) ஆகிவிட்டது".  
 
 "வைகைக் கரையர்களுக்கு தொழில், அரசியலரின் அடையாளம், பதிலடி கொடுப்பது, 13 பாதைகளை அடைப்பது, தென் பாண்டியர்களின் முற்றுமைப் போராட்டமே ஆக உள்ளது".
 
 முல்லைப் பெரியாறு சிக்கலில் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க இந்தியாவில் எந்த அறவியல் (Ethics) நிலைப்பாடும் இல்லை என்பதை வெளித்தள்ளல் (Projection) என்ற சொல் கொண்டு அலசப்படுகிறது. 
 
 சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை பேரகன் (super ego), அகன் (ego) என்ற சொற்கள் கொண்டு விளக்கி, பேரகனும் அகனும் வலிமையற்று இருந்தால் ஆதார இச்சை (id) தன்னிச்சையாக இருக்குமென ஒரு கட்டுரை விளக்குகிறது.
 
 பள்ளிகள், பணியிடம், மத நிறுவனங்கள் எங்கும் எதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுடன் காவல்துறை, இராணுவ, இந்திய அமைதி காக்கும் படை (IPKF) செய்கின்ற பாலியல் வல்லுறவுக் கொடுமைகள் எண்ணிலடங்கா.  இந்தியப் படை இலங்கையில் செய்ததைத்தான் ஆப்பிரிக்காவில், காங்கோவில் செய்திருக்கிறது.
 
 நர்சு அருணாவின் கருணைக் கொலையை உச்ச நீதிமன்றம் சட்டப்படி மறுக்கிறது. ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு குடியுரிமை (civil rights)  மறுக்கப்படுவதையும் பெண்ணுடல் மீது மேற்கொள்ளப்படும் உளவியல் தாக்குதல்களை ஆய்வுக்குட்படுத்துகிறது.
 
 Eddy Murphy, 'Nutty Professor - Part - I-ல் ஏற்ற கதாபாத்திரமான Buddy Love-ஐயும் சேர்த்து வேறுபட்ட 6 கதாபாத்திரங்களையும் கொண்டு மன அலசல் முறையில் செய்யப்படுகிறது. ஃபிராய்டின் கருத்துப்படி, வக்கிரமானது (Pervesion) சமூக கலாச்சாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நகைச்சுவை போன்ற வடிவங்களிலும் வெளிப்படும் என்று படிக்கும்போது நம் கண்முன் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல், சந்தானம் ஆகியோரின் காமெடிக் கூத்துகள் வந்து தொலைக்கின்றன. 
 
 சித்த விரிவாக்கமும் குறியீடாக்கமும், ஈடிபஸ் (Oedipal) பருவத்திற்கு முந்தைய தாயிடமிருந்து (Pre-Oedipal mother) விடுதலை பெறுவதற்கு முன் நிபந்தையாக உள்ளதை ரீன் கோலா வலியுறுத்துவதை பெண் ஆவல் (Female Psyche) குறித்த கட்டுரை பேசுகிறது.
 
 ஈடிபஸ் - ஒரு வரலாற்றுத் தருணம் என்ற Anika Lamire கட்டுரையின்  சுருக்க மொழியாக்கம் ஈடிபஸ் பற்றி பேசுகிறது.  பேரா. ஏ.கே. ராமானுஜத்தின் கட்டுரை பற்றியும் தந்தையைக் கொன்று தாயை மணப்பவனாக ஈடிபஸ் குறுக்கிப் பார்க்கப்பட்டதனால் கிழக்கத்திய மனம் அதிர்வடைந்து விட்டது என்றும் குறிப்பிடுகிறார்.

"குழந்தை சமூக விதி, ஒழுங்கை (Law) ஏற்காத போது, தாய், தந்தை (கணவன்) அந்தஸ்தை ஏற்காதபோது, தன்னிலையானது அதிகாரத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டும், தாயின் ஆவலுக்கு (desire) கட்டுப்பட்டதாகவும் நீடிக்கும்".

"இதற்கு மாறாக குழந்தை சமூக விதி ஒழுங்கை ஏற்கும்போது அது அதிகாரத்தைக் கொண்டுள்ள தந்தையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது.  தந்தை தாயின் ஆசைப் பொருளாக அதிகாரத்தை மீண்டும் இருத்துகிறார்" என்றும் சொல்லி ஈடிபஸ் கூறுகள், சமூக, கலாச்சாரக் கட்டமைப்புகள் மொழியின் மூலம் அறிமுகப்படுத்தப்படுதலை விவரிக்கிறது.
 
 மொழியும் உளவியலும் என்ற கட்டுரை பழமொழிகளுக்கும் மன அலசலுக்குமுள்ள தொடர்பு பற்றிப் பேசுகிறது.  பேரா. தே. லூர்து அவர்களின் "சூழலியம்: - பழமொழிகளை முன் வைத்து........"  என்ற நூலில் சொல்லப்பட்ட 'மூத்தோர் வாக்கும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்' என்ற வரிகளிலுள்ள சமூக ஒழுங்கு, குறியீட்டுத் தன்மை போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்துகிறது.  'அகதி சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
 
 சார்விலகா (தந்தை), புண்டரீகா (மகன்), அதில் சொல்லப்படும் கீதை பற்றிய விளக்கவுரை போன்றவற்றின் மூலம் ஒரு இந்திய உளப்பகுப்பாய்வாளரின் குரலை உறுதி செய்வதோடு, கிரிந்தர சேகர் போஸிடம் விசித்ரமான மெளனங்களை வலிந்துருவாக்குகிறது என்பதையும் சார்விலகா கட்டுரை மன அலசலுக்குட்படுத்துகிறது.
 
 இந்த இதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழி பெயர்ப்பாக இருப்பது மிகுந்த ஆயாசத்தை உண்டு பண்ணுகிறது.  இனிவரும் இதழ்களில் தமிழின் பல்வேறு பிரதிகளில் மன அலசல் ஆய்வுகள் வெளிவரும் என்று நம்புவோம்.
 
மற்றமை (Other)                             பக். 84,                   விலை ரூ. 80/-
 
ஆசிரியர்: க. செல்லபாண்டியன்
 
தொடர்பு முகவரி:
 
 5/445, தியாகி ரெங்கசாமி தெரு,
ஏஞ்சல் நகர்,
ஆத்திக்குளம் - அஞ்சல்,
மதுரை - 2
செல்: 94892 44928
மின்னஞ்சல்: mattramai@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக