செவ்வாய், மார்ச் 27, 2012

மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை

மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை                     -மு.சிவகுருநாதன்

   
     கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர். அணு உலை எதிர்ப்புப் போராளிகளின் இம்முடிவு வரவேற்கத்தக்கது. 


     சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்படும்வரை இடிந்தகரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் விலக்கிகொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    இத்தகைய நிகழ்வுகள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தோல்வியல்ல. இந்தியளவில் இப்போராட்டம் அணு உலைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இந்தப் போராட்டம் முன்னுதாரணமாக அமையும். 

      அரச பயங்கரவாதம் உள்ளிட்ட எந்த பயங்கரவாதமும் பெறுகின்ற வெற்றி தற்காலிகமானது. இறுதி வெற்றி மக்களுக்கே. மத்திய - மாநில அரசுகளின் இந்த அடக்குமுறைகள் காரணமாகவும் பெரும்பாலான தமிழக மக்கள் அரசுகளின் பொய்களை நம்பிக்கொண்டிருப்பதாலும் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஒரு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டனர். எனவே அவர்கள் வேறுவகையான போராட்ட வடிவங்களை கைகொள்ளவேண்டிய தேவை உண்டாகியிருக்கிறது. 

     அணு சக்தி தொடர்பான சர்வதேச அமைப்புகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்றுள்ள சூழலில் இவைகள் மக்களுக்கு சாதகமாக செயல்படும் என்று சொல்வதற்கில்லை.    

      200 நாட்களுக்கு மேலாக பல்வேறு அவதூறுகளுக்குமிடையில் இவ்வளவு நீண்ட நெடிய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய கூடங்குளம் பகுதி தலித், மீனவ, விவசாய மக்களை பாராட்ட வார்த்தைகளில்லை. அரசுகள் சாதி,மத,மொழி ஆகியற்றைப் பயன்படுத்தி, இவர்களை பிளவுபடுத்த முனைந்தபோது தங்களது ஒற்றுமையை பறைசாற்றிய இவர்களுக்கு என்றும் வரலாற்றில் இடமுண்டு. 


    மத்திய அரசு இராணுவமாகவும் மாநில அரசு காவல்துறையாகவும் மாறிப்போன இன்றைய சூழலில் அகிம்சை எந்தளவிற்கு ஆளும் வர்க்கத்தை அசைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆயுத பலமற்ற மக்களுக்குள்ள ஒரே ஆயுதம் அகிம்சை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக