புதன், மே 30, 2012

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு  

                                                                                      -மு.சிவகுருநாதன்

     வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை கணிசமாக உயர்த்திய மத்திய அரசு உப்பு சப்பில்லாத காரணங்களைச் சொன்னதோடு தனது பொறுப்புகளையும் தட்டிகழித்தது. பெட்ரோலியத்துறை அமைச்சர் உள்நாட்டில் இல்லாத, நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த சமயத்தில் திட்டமிட்ட இவ்விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. விலை நிர்ணயம் எங்கள் கைகளில் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன, அதில் நாங்கள் தலையிடமுடியாது என்றெல்லாம் சொல்லி தப்பிக்கப் பார்த்த மத்திய அரசு அம்பலப்பட்டுப் போனது.


   இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயற்கையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கும் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சொல்லுகிற காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மங்களுர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முடக்கம், பெட்ரோல், டீசல் தேவை அதிகரிப்பு காரணமாக சொல்லப்படுகிறது. 


  கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் தேவை ஏன் அதிகரித்தது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்குவதில்லை. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டயுடன் பதுக்கல் நடைபெற வழியுண்டு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால்  அவதியுற்ற வாகன உபயோகிப்பாளர்கள் அதிகமாக வாங்கி டேங்கை நிரப்பிக்கொள்ள முயல்வர். அப்போது தட்டுப்பாடு வர வழிவகையுண்டு. ஆனால் இவர்கள் சொல்லும் காரணம் கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை. 


   பெட்ரோல் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு சமயங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு பலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இங்குள்ள போக்குவரத்து வசதிகளைப் பார்க்கும்போது அது எவ்வளவு கொடிய யோசனை என்பது விளங்கும். இன்று இவ்வளவு இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கும்போதே பேருந்து, தொடர்வண்டிகளில் கூட்டம் அலைமோதுவதை யாரும் உணராமல் இருக்கமுடியாது. 


  இவ்வாறு செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டின் உபரி விளைவாக காய்கறி உள்ளிட்ட விலைகள் மேலும் உயரப்போகிறது. இந்தச் சுமையையும் மக்களே சுமந்தாகவேண்டும்.


   செயற்கையாக  உருவாக்கப்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டின் மூலம் மத்திய அரசும் அதன் பின்னணியிலுள்ள எண்ணெய் நிறுவனங்களும் பொதுமக்கள் மத்தியில் பெட்ரோல் விலை உயர்வை மறக்கடிக்க வைத்துள்ளன. இன்று மத்தியதர வர்க்கம் பெட்ரோல் என்ன விலையிருந்தாலும் பரவாயில்லை, ஒழுங்காகக் கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. 

     இதன்மூலம் அற்ப மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் மைய அரசின் இறுதிகாலத்தை இனிமையாக ஓட்டமுடியாது. இதன் விளைவுகளை இவர்கள் அறுவடை செய்தே தீருவார்கள். ஆனால் அது பா.ஜ.க. போன்ற வலதுசாரி சக்திகளுக்குச் சாதகமாக இருக்குமே தவிர பாமர மக்களுக்கு எந்நாளும் சாதகமாக இருக்காது என்று மட்டும் இப்போதே அவதானிக்கலாம்.

செவ்வாய், மே 29, 2012

சிற்றிதழ் அறிமுகம்: புறனடை உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம்

சிற்றிதழ் அறிமுகம்: புறனடை

உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம் 
                                                                                  - மு.சிவகுருநாதன்







   தீவிர எழுத்து, படைப்பு, வாசிப்பு போன்ற செயல்பாட்டை இன்றும் உயிர்ப்புடன் தொடர தமிழ்ச் சிறுபத்திரிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவியிருக்கின்றது.  ஆயுட்காலம் மிகக் குறைவாக இருந்தாலும் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் இதழ்கள் தோன்றிக் கொண்டேயுள்ளன.  அந்த வகையில் வந்திருப்பது 'புறனடை' இதழ் 
(ஜனவரி 2012).
    "சிறுபத்திரிக்கைகள் ஒரு வரலாற்றுப் பருவத்தைக் கடந்து இடைநிலை இதழ்களாக மாறிவிட்டன. அவை மரபணு மாற்றப் பழங்கள் போல வண்ணமும் திரட்சியும் நேர்த்தியும் கொண்டுள்ளன.  ஆனால் அவற்றைப் போலவே சாரம்சமும் உயிர்ப்பும் நீக்கப்பட்ட பரிமாண நேர்த்தி மட்டும் கொண்டுள்ளன". (பக். 05).
    "சிறுபத்திரிக்கைகளின் வழி நுண்தளங்களில் உருவான கலை / அரசியல் சிந்தனைகளின் மொத்த திரட்சியையும் அடையாளங்கள், உள்முரண்கள், அரசியல் அனைத்தையும் நீக்கம் செய்து விட்டு வாசிப்புக் கிளர்ச்சிக்கான அறிச்சரக்காக மாற்றுவதைத்தான் அவை (இடைநிலை இதழ்கள்) செய்து வருகின்றன". (பக். 08) என்ற வரலாற்றின் வெற்றிடத்தில் சிறுபத்திரிக்கைகளின் எதிர்பரிமாணம் என்ற பிரவீன் கட்டுரையைப் படிக்கும் போது சஞ்சாரம் இதழ் தொடங்கும் போது நாங்கள் எழுதிய அறிக்கை (சஞ்சாரம் -1 மார்ச் - மே 2008) நினைவுக்கு வருகிறது.
    ஈழம் குறித்த ராஜ்-ன் 'எழுத்துச் சந்தையின் அபத்த அரசியல்' கட்டுரை ஈழப் பிரச்சினைகளில் நமது தமிழ் தேசியர்களின் சாதித்துவ நிலைப்பாடு, நமது நாட்டின் பிற தேசிய இனப் போராட்டங்களை  காணாத போக்கு, விடுதலைப் புலிகளின் செயல்பாடு போன்றவை விமர்சிக்கப்படுகின்றன.
    தென்னாசியாவின் இயற்கை வளங்களின் மீது பன்னாட்டுக் கம்பெனிகள் எப்போது ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பது உண்மைதான்.  இந்தியாவில் பெருமளவு காணப்படும் தோரியம் யுரேனியத்தை விட பன்மடங்கு அணு ஆற்றலைத் தரும் என்பது அணு விஞ்ஞானிகளின் பிழைப்பு வாதமே தவிர வேறில்லை.  தோரியத்தை யுரேனியம் இருந்தால்தான் யுரேனியமாக மாற்ற முடியும்.  அதிக செலவு பிடிக்கும் இந்த முறைகள் நிறைய பின் விளைவுகளைத் தன்னகத்தே கொண்டவை.  இதை விடவும் ஈழத்தில் இன்று காலூன்றியுள்ள இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கமே இந்திய அரசை இயக்குவதாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
    தொலைக்காட்சி ஊடகங்கள் பற்றிய கஜேந்திரனின் கட்டுரை இந்து மக்கள் திரள் தொலைக்காட்சியால் திரட்டப்படுவதை விவரிக்கிறது.

    "அரசியல் தளத்தில் மண்டல் கமி­ஷனை வீழ்த்துவதற்கான தற்காலிக வேலைத் திட்டமாக பொழிப்புரைச் செய்யப்பட்ட அத்வானியின் ரதயாத்திரை என்பது உண்மையில் இராமாயணத் தொடரால் ஒரு பார்வையாளனாக இந்துத்துவத்தின் பக்கம் சாய்வுற்றிருந்தவர்களை செயலூக்கத்தோடு செங்கல் சுமக்க வைக்க முடுக்கிவிடப்பட்ட திட்டமிட்ட தொலை நோக்குடைய செயல்தொகுதியின் ஓர் அலகு" (பக். 14) என்று வரையறுக்கும் இக்கட்டுரை இந்திய அரசை அருந்ததிராய் சொல்வது போல் 'இந்து கார்ப்பரேட் அரசு' எனச் சொல்வது போல் தி.மு.க.வை 'திராவிடக் கார்ப்பரேட் அரசு' என்று வகைப்படுத்தலாம் என்கிறார்.
    "பெருமுதலாளி வர்க்கத்தின் நிர்வாக சபையே அரசு என்ற புரட்சியாளர் லெனின் கூற்றுக்கு இசைய பெருமுதற்குழுமமாய் (Corporate) பருத்து அதன் வழி மக்கள் திரளின் அரசியல் விருப்பத்தை வளைக்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான தேர்வாக தி.மு.க.வும் சன் நெட்வொர்க்கும் வடிவெடுத்துள்ளதை" இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. (பக்.16)
   
    இன்றும் கிராமத்தில் இழிதொழிலாகக் கருதப்படும் சவரத்தொழில் Cavin Care, Naturals, லக்மே போன்ற பன்னாட்சிக் கம்பெனிகள் எந்தச் சாதியினரும் ஈடுபடும் தொழிலாக மாற்றியிருக்கும் பின்புலத்தில் உயர்த்தப்பட்ட சாதியினர், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள், திரைத்துறையினர் போன்றோர் ஆதிக்கம் மிகுந்து இத்தொழிலில் கிராமத்திலிருந்து செல்லும் தொழிலாளி இறுதிவரை தொழிலாளியாகவே மிஞ்ச வேண்டியுள்ளதை "அம்பட்டனும் ப்யூட்டிஷ்யனும் - கார்ப்பரேட் கத்தரிகள்" என்ற இரா. செல்வன் கட்டுரை எடுத்துரைக்கிறது.  இத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் தொந்தரவுகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய பகுதி.
    கா. இரவிச்சந்திரனின் "காலனிய நவீனத்துவமும் சைவப் பதிப்பாளுமைகளும் இசைவும் முரணும்" என்ற கட்டுரை, தமிழில் மடாலயங்கள், ஆதினங்கள் குறித்த விரிவான, ஆழமான  சமூகவியல்சார் நூலொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
    உ.வே.சா., சபாபதி நாவலர் ஆகியோர் நவீன சிந்தனைக் கூறுகளை இனங்காண இயலாத அளவிற்கு சனாதன சமய - சமூகக் கட்டுப்பாட்டில் மூழ்கியிருந்த நிலையில், இவர்களின் சமகாலத்தில் இயங்கிய ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றோரிடம் ஒரு சில நவீனத்துவ கூறுகள் காணப்படுவதாக இக்கட்டுரையாசிரியர் இனங்காண்கிறார்.  சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இவர்களுக்கு பெரிய சலுகைகள் வழங்கிவிட வாய்ப்பில்லை என்றுதான் நாம் கருதவேண்டியுள்ளது.
    "பெளத்தமாய் திமிறும் சங்கப் பிரதிகள் - வரலாற்றின் கலையும் வெளிகள்" என்ற பு. ஜார்ஜ்-ன் கட்டுரை, பவுத்த இலக்கியமான சங்க இலக்கியம் கபளீகரம் செய்யப்பட்டு வைதீக இலக்கியமாக மாற்றப்பட்டு நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவதைச் சாடுகிறது.
    கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த பவுத்தம் 17ஆம் நூற்றாண்டு வரை மலர்ச்சியுற்றிருந்ததை விளக்கும் பல்வேறு ஆவணங்களைச் சுட்டும் இக்கட்டுரை, யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு கி.பி. 640-இல் வந்து தங்கிய போது, அசோகரால் காஞ்சியில் அமைக்கப்பட்ட ஸ்தூபியை கண்டதாக அவர் குறிப்பிடுவதையும் தெரிவிக்கின்றது.  தமிழ் - பவுத்தம், தமிழ் - சமணம் குறித்த விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டியதன் தேவையை இது உணர்த்துகிறது.
   
    பத்தி பகுதியில் தேவராஜன் "ஓரறிவின் பேரறிவு - தந்திர இலைகள்" கட்டுரையில் ஆப்பிரிக்காவில் வாழும் Passion flavour vine என்னும் தாவரம் வண்ணத்துப்பூச்சிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட தகவமைப்பை விளக்குகிறது.  ஆனால் ஆறறிவு என்று சொல்லிக் கொள்ளும் மனிதன் இன்றைய நிலைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனும் போது வருத்தமாகவே உள்ளது.
    தமிழ் நதி "ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்" என்ற பத்தியில் ஈழ நினைவுகளைச் சொல்கிறார்.  இது ஒரு சிறுகதையாகக் கூட பரிணாமம் பெறக் கூடும்.  ஆர். அபிலாஷின் "அப்பாவின் புலிகள்" சிறுகதை இடம் பெற்றுள்ளது.  ஆர். அபிலாஷ், அருள், என்.டி. ராஜ்குமார், பிரவீன், ஆன்டனிராஜ், ஹெச். ஜி. ரசூல், வா. மணிகண்டன் ஆகியோரின் கவிதைகளும் இதழில் உள்ளன.
    கவிஞர் குட்டி ரேவதியின் 17 பக்க விரிவான நேர்காணல் இடம் பெற்றுள்ளது.  பரந்த அளவில் விரிவாக விவாதிக்க வேண்டிய நேர்காணல் இது.  இதிலிருந்து குட்டி ரேவதியின் சில கருத்துக்கள் மட்டும் கீழே...

01. எனக்கான 'உடலரசியல்' மற்றும் 'பாலுரிமை' நான் அறிவிப்பதையே, ஓர் இருளப்பெண்ணுக்கேயானதும் எனத் திணிப்பது நகைப்புக்கு இடமானது இல்லையா? (பக். 19)

02. நாங்கள் (கவிஞர்கள்) இப்படி உதிரிகளாக இயங்குவது கூட தற்கால நவீன இலக்கியத்தின், செயல்பாட்டின் தொடர்ச்சியான வழிமுறை என்றே நினைக்கிறேன். (பக். 20)


03. நான் 'அறம்' குறித்த கோட்பாட்டாளராக மாற விரும்பவில்லை.  அதைப் பழகுபவராகவே இருக்க விரும்புகிறேன். (பக். 20)

04. பிரமிளின் தொடர்ச்சி நான்! நம் அறிவு மரபின் தொடர்ச்சி என்பதே சனாதனச் சிந்தனைகளின் மீதான கல்லெறிதல்தான்! (பக். 20, 21)


05. எங்களுக்குள்ளான (மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி) விமர்சனங்கள் பற்றி நான் சிந்திப்பதே இல்லை.  ஆனால் நாங்கள் எல்லாருமே அவரவரின் தனித்துவ கருத்தியலில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். (பக். 26)

06. இடதுசாரிகள் மீதான என்னுடைய விமர்சனமும் லீனாவினுடையதும் வெவ்வெறு தன்மைகளில் இருக்கிறது. லீனாவின் எழுத்தில் விடுதலைக்கு எதிரான ஆதிக்கச் சிந்தனையைத் தான் பார்க்க முடிகிறது.  ஆதிக்கப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள் தம் சுய அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை விடுதலை என்று பேசுவது சிறந்த நகை முரண்தான். (பக். 29)


07. இன்னும் வரலாற்று நுணுக்கங்களோடும் மொழியியலாளர்களின் திறன்களோடும் சித்தர் தத்துவ, இலக்கியப் பிரதிகளில் உள் நுழைய வேண்டி இருக்கிறது.  அப்போதுதான் வைதீகம் பிரதிகளில் நுழைந்த முறைகளையும் அடையாளங்களையும் பிரித்தறிய முடியும்.  வைதீகம் நுழைந்ததன் வழிதான், பெண்மை நீக்கம், பெண் வெறுப்பு, உடலை இழிவாக நோக்குதல் போன்ற சிந்தனைகளும் ஊடுருவியிருக்க வேண்டும். (பக். 32)


08. சைவப் பிள்ளைகளும் சைவ முதலியார்களும் தங்களுக்கேயான அறிவுத்துறையாக சித்த மருத்துவத்துறையை மாற்றுவதில் முறைப்புடன் ஈடுபட்டார்கள்.  (பாளையங்கோட்டை சித்த மருத்துவக்) கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல நிலைகளிலும் இந்த இரு பிரிவினருக்குமிடையேயான மோதலும் கசப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும். (பக். 33)


09. மற்ற துறை பணியாளர்களிடமிருந்து, எழுத்தாளன் வேறுபட்டவன்.  மொழியின் பிரக்ஞைக்கும், எழுத்தின் பண்பாட்டுக்கும் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறான்.  மற்ற துறைகளைப் போன்றதொரு துறையாக எழுத்துப்பணி இருக்க முடியாது! அதற்காக எழுத்தாளனை நான் எந்த சிம்மாசனத்திலும் இருத்தவில்லை! அவனுக்குத் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதற்கான அவசியமும் வல்லமையும் அதிகம்! (பக். 34)


10. தற்கால சினிமாவை பெண் கையாளுவது என்பதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன.... இலக்கியத்தில் மிகவும் தேர்ந்தவர்களால் கூட சினிமாவைக் கையாள முடியாமல் போயிருக்கிறது... இது இரண்டுமே வேறு வேறு அனுபவங்களை உங்களிடம் கேட்கிற ஒரு கலைவடிவமாக இருக்கிறது. 
(பக். 34)
    மிக நீண்ட நேர்காணலில் இவை சில புள்ளிகள் மட்டுமே. முழுமையாகப் படித்து வாசகர்கள் விமர்சிக்கட்டும். 

பக். 56        விலை ரூ. 15

தொடர்பு முகவரி:

    நா. பிரவீண்குமார்,
    ப்ளாட் எண் 11, 42-வது தெரு,
    அவிநாஷ் நெஸ்ட் - 2-ம் தளம்,
    தில்லை கங்கா நகர்,
    சென்னை - 600 061.
    பேசி: 9710014218, 9884772864,
    மின்னஞ்சல்: puranadai@gmail.com

வெள்ளி, மே 25, 2012

இறுகிப்போன, தட்டையான, மிகக்குறுகலான பார்வை

இறுகிப்போன, தட்டையான, மிகக்குறுகலான பார்வை

                                                                                -மு.சிவகுருநாதன் 

    தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (The National Counter Terrorism Center - NCTC) அமைக்கப்படுவதால் மத்திய - மாநில அரசுகளிடையே ஏற்பட்டுள்ள உறவுச்சிக்கல் குறித்து இன்றைய (25.05.2012) தினமணி நடுப்பக்கத்தில் உதயை மு.வீரையன் 'உரிமையும்  உறவும்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.


   தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம், மத்திய-மாநில உறவுச்சிக்கல்கள் ஒருபுறமிருக்க  பயங்கரவாதம் தொடர்பான அரசுகளின் கருத்துருவாக்கத்தை எவ்வித கேள்வியும் இன்றி மிகவும் தட்டையான பார்வையுடன் பல கட்டுரைகள் எழுதப்படுகிறன. இவற்றை தினமணி போன்ற இதழ்கள் ரொம்பவும் அறிவுப்பூர்வமானதாக வெளியிடுகிறன.  இவைகளைக் கொண்டும் மக்களின் பொதுப்புத்தியில் பயங்கரவாதம் பற்றிய அரச கருத்துருவாக்கம் பதிய வைக்கப்படுகிறது. இந்நிலையில்  அரச பயங்கரவாதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டுகிறது. 

   இக்கட்டுரையைப் படிக்கும்போது நமக்குள் எழும் சில வினாக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 

01.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு யாரெல்லாம் காரணம்? பயங்கரவாதம் - தீவிரவாதம் என்ற ஒற்றைச் சொல்லால் இதை எப்படி அணுகமுடியும்? 
02.1999 கார்கிலில் நடந்தது உண்மையில் ஒரு போரா? இதனால் பலனடைந்தவர்கள் யார்? 
03.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிக்கல்கள் ஏன் ஏற்பட்டன? அவற்றை நமது அரசுகள் எவ்வாறு எதிகொண்டன? 
 04.மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை  (1980) அரசு ஏன் விலக்கிக்கொள்ள மறுக்கிறது? இந்த கோரிக்கைக்காக ஐரோம் சானு ஷர்மிளாவின் உண்ணாவிரதம் பல்லாண்டுகளாக இன்றும் தொடர்கிறதே.
05.ராஷ்டிரிய ரைபிள்ஸின் தலைமையகம் முன் பெண்கள்  ''INDIAN ARMY RAPE US'' என்ற பாதாகைகளுடன் போராடவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது?
06.தண்டகாரண்யப் பகுதிகளில் நடைபெறும் இயற்கை வளங்கள் கொள்ளை போக அனுமதிக்கும் அரசுகள் மாவோஸ்ட் பழங்குடிகளை மட்டும் ஏன் தீவிரவாதிகளாக பார்க்கிறது?
07. மேற்கு வங்காளம்,  ஒரிசா, பஞ்சாப், குஜராத் ஆகிய பல மாநில அரசுகள் பல்வேறு கொடிய அடக்குமுறை சட்டங்கள் இயற்றி மக்களை வதைத்துவருகிறன.
08.மிசா, தடா, பொடா போன்ற கொடிய அடக்குமுறை சட்டங்கள், ராணுவம், காவல்துறை,  பயங்கரவாதத் தடுப்பு மையம் ஆகியவற்றை மட்டும் நம்பி மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் ஜனநாயக அரசுகளை கேள்வி  கேட்காமல் மத்திய-மாநில உறவுச்சிக்கல் குறித்து மட்டும் பேசுவது ஏற்புடையதா? 
09.நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வுகளை நாடாமல் அரசும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கண்டிக்க மனம் வராதது ஏனோ?
10.ஐந்தாண்டுகளுக்கு ஓர் முறை வாக்களிப்பதினால் மட்டுமே மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிடுவதில்லை.  

வியாழன், மே 24, 2012

பெட்ரோல் விலை உயர்வு அநியாயமானது

 பெட்ரோல் விலை உயர்வு   அநியாயமானது         -மு.சிவகுருநாதன்

      பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ 7.50 உயர்த்தியுள்ள மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கை மிகவும் அபாயகரமானது. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு  காரணமாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான பின்னணி அதுவல்ல. இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவிற்கு மன்மோகன் சிங் கும்பல்தான் காரணம்.

   அமெரிக்காவின் மிரட்டலுக்கு அல்லது அவர்களுக்கு சேவகம் செய்ய ஈரானிலிருந்து எண்ணைய், எரிவாயு இறக்குமதிக்கு முட்டுக்கட்டை போடும் இக்கும்பல் நமது நாட்டை இன்று சீரழிவுப் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

      நமது நாட்டுக் கொள்கை முடிவுகளை நாம் எடுக்காமல் அமெரிக்கா  போன்ற வல்லாதிக்கத்தின் பிடியில் ஒப்படைக்கும்  மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் (?!)  கூட்டணியின் தவறான கொள்கைகளின் விளைவு  இது. இவை மட்டுமல்ல; இன்னும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கப்போகின்றன.

      பெட்ரோல் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு முதல் காரணம் அதன் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் எண்ணற்ற வரிகள். நம்மை விட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, வல்லரசுக் கனவில்லாத பல நாடுகள் இத்தகைய வரிகள் இல்லாத காரணத்தால் குறைவான விலையில் பெட்ரோலை மக்களுக்கு வழங்குகிறன.

    எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக எப்போதும்போல் பழைய பல்லவி பாடப்படுகிறது. இதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இந்த இழப்புகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்யவேண்டியது அரசின் கடமையே தவிர   அந்த சுமையை மக்கள் மீது வைப்பதல்ல.

   எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்பதும் பம்மாத்து வேலை. அப்படியென்றால் எண்ணெய் நிறுவனங்கள்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும்வரை ஏன் காத்திருக்கவேண்டும்?

    ஐக்கிய முற்போக்குக்   கூட்டணியில் (UPA) அங்கம் வகிக்கும் மு.கருணாநிதியின் தி.மு.க., மமதா பானர்ஜியின் திர்ணமூல் காங்கிரஸ் போன்றவை ஒவ்வொரு முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்படும் போதும் சம்பிரதாயமான எதிர்ப்பறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு  தூங்கப் போய்விடுகின்றன. பாமர மக்களின் கஷ்டங்கள் பற்றிப் பேசுவதாக பொய்வேடம்  இவைகள்  தங்களுக்கு நல்ல பசையுள்ள துறைகள் இருக்கும் வரையில் அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறப் போவதில்லை.

    பேருந்து கட்டணம், மின்கட்டணம், பால் விலை என்று பல்வேறு விலை உயர்வுகளை இடைத்தேர்தல் பரிசாக தமிழக மக்களுக்கு வழங்கிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெட்ரோல் விலை உயர்வு பற்றி பேசும் தார்மீகத் தகுதி இல்லாதபோதும் மக்கள் பாசம் பொங்க கண்டன அறிக்கை வெளியிடுகிறார்.நல்ல காமெடி போங்கள்!

   பெட்ரோல் விலை உயர்வு எதோ நடுத்தர வர்க்கச் சமாச்சாரம் என்று நினைத்து கண்டும் காணததுபோல் இருந்தோமேயானால் விரைவில் வரப்போகிறது  மண்ணெண்ணைய், சமையல் எரிவாயு, டீசல் விலைகளில் கணிசமாக உயர்வு.

   அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களைத் தூண்டிவிட்டும், பின்னணியில் இருந்தும் 2014 பொதுத்தேர்தலில் ஆதாயம் அடைய பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் கும்பல் முயற்சி செய்கிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுப் பிரச்சினையிலும் அவர்கள் பலனடையவே குரல் எழுப்புகிறார்கள். மக்கள் படும் துயரங்களில் பங்கெடுக்க அல்ல. எனவே மக்கள் எச்சரிக்கையோடிருக்கவேண்டும்.
     

புதன், மே 23, 2012

இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி


இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி                  
                            
                                  -மு.சிவகுருநாதன்
  


   மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது மூன்றாண்டு காலத்தையும் மாநிலத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு ஓராண்டு காலத்தையும் நிறைவு செய்தது மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்துடன்  இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் 60 ஆண்டுகள் நிறைவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கென அரசுகள் பல கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கின்றன. இவையெல்லாம் ஆளும்கட்சிக்கு விலையில்லா விளம்பரங்களாக உதவுகின்றன.

     இந்த பல கோடி விளம்பரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது. அத்துடன் கூடவே பல பத்தரிக்கை முதலாளிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசு எந்திரத்தின் குறைகள் மூடி மறைக்கப்படுகின்றன.

   ஆளும் கட்சிப் பத்திக்கைகளுக்கு அரசு விளம்பரங்கள் அளிப்பது ஒருவகை. இதில் தமிழகத்தைப் பொருத்தவரையில் மக்கள் குரல், நமது எம்.ஜி.ஆர்., முரசொலி, தினகரன் ஆகியன அடங்கும். ஆட்சி மாறியவுடன் தனது குரலையும் மாற்றிக்கொண்டு ஜால்ரா அடிக்கும் இதழ்கள் ஓர் வகை. இதற்கு தினத்தந்தி ஒரு நல்ல உதாரணம். அரசு விளம்பரங்கள் அளிப்பதன் மூலமாக அரசின் எடுபிடிகளாக மாறும் பத்தரிக்கைகள் மூன்றாவது ரகம். இதில் தற்போது தினமணி – எக்ஸ்பிரஸ் குழுமம் முன்னணியில் நிற்கிறது. கூடவே தனது பார்ப்பனத் தந்திரங்களை விடாமல் கடைபிடிக்கும் தினமலர்களும் இருக்கத்தான் செய்கின்றன.

   புதுக்கோட்டை இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகள் நாளிதழ்களில் பக்கம்பக்கமாக மிளிர்கின்றன. தேர்தல் ஆணைய தன் முனைப்பு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டுள்ளது. தி.மு.க. தனது முந்தைய செய்கைகள் தன்னைத் திருப்பித் தாக்குவதை நினைத்து ஒடுங்கிக் கிடக்கிறது. குடும்பச் சண்டைகள் இன்னும் கொஞ்ச காலத்தில் கட்சியையே இல்லாமல் செய்துவிடக்கூடும். 

   இங்கு பத்தரிக்கை தர்மம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. பணம் பெற்றுக்கொண்டு சாதகமான செய்தி வெளியிடுவது பலமுறை அம்பலத்திற்கு வந்துள்ளது. அரசின் விளம்பரங்களுக்காக அரசுக்கு ஜால்ரா அடிப்பதும் ஒரு வகையான ஊழலே. பிரபலங்களைப் பற்றி மோசமான செய்திகளை வெளியிடாதிருக்க பணம் கேட்டு மிரட்டும் புலனாய்வு இதழ்கள் தமிழகத்தில் வெகு பிரசித்தி பெற்றிருக்கின்றன.

     நடிகை ரோஜாவிற்கு எய்ட்ஸ் என்று புலனாய்வுச் செய்தி வெளியிட்ட நக்கீரனுக்கு இதுவரை எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டதாக நக்கீரன் எழுதிய விவகாரம் ஜெ.ஜெயலலிதாவைவிட மாட்டுக்கறி உண்ணும் கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களையே இழிவுபடுத்தியது என்பதுதான் உண்மை.

    முடியாட்சியில் மன்னர் அசோகன் செய்த மக்கள் நல அரசை இந்த போலி ஜனநாயகவாதிகளால் தர முடியாதது விசித்திரமான உண்மை. இங்கு ஜனநாயகம் என்ற பெயரில் நாடாளுமன்ற, சட்டமன்ற எண்ணிக்கை அடிப்படையிலான போலி ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. துளியளவு வாக்கு சதவீத வித்தியாசமும் பேரளவு  உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபாடும் உள்ள இன்றைய ஜனநாயக முறையை மாற்ற சம்மந்தப்பட்ட கட்சிகள் முன்வராததுதான் வேடிக்கை.

   60 ஆண்டு ஜனநாயகம் என்று பெருமை பேசும் அதிகார வர்க்கங்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை ஓரளவு பலன் தரும். இதன் மூலம் இப்போதிருக்கக்கூடிய பெருமளவு முறைகேடுகள் குறைய வாய்ப்புண்டு. கூட்டணி அரசியல் பேரம், குதிரை பேரம் போன்றவற்றின் பலன்களை அடைய முடியாமற் போய்விடும் என்ற பயம் இதற்குக் காரணமாக இருக்கும்.

   எடுத்துக்காட்டாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் அடிக்கும் சட்டத்திற்குப் புறம்பான கூத்துகள் முடிவுக்கு வரும். இத்தகைய முறைகேடுகளை தி.மு.க. செய்யும்போது அ.இ.அ.தி.மு.க. வெளியிலிருந்து கூச்சல் போடும். அ.இ.அ.தி.மு.க. ஆளும்கட்சியான பிறகு மீண்டும் தி.மு.க. செய்ததையே அட்சரம் பிசகாமல் தானும் செய்யும்.

  இந்த 60 ஆண்டுகளில் ஜனநாயகம் யாருக்குச் சேவை புரிந்திருக்கிறது? ஆளும் வர்க்கம் தங்களுக்கு சேவை செய்ய ஏதுவாக ஜனநாயகம் வளைக்கப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தால் சாமான்ய மக்கள் அடைந்த பலன்களைவிட அதிகாரவர்க்கங்கள் பெற்றவை ஏராளம். 

   2 ஜி அலைக்கற்றை மட்டுமல்ல; இந்தியாவின் இயற்கை வளங்கள்  யாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன? 2 ஜி அலைக்கற்றைக்கு சமமாக நிலக்கரி சுரங்க முறைகேடுகள் இப்போது அம்பலமாகியுள்ளன. இதிலிருந்தே ஜனநாயகத்தின் பலன்களை யார் அனுபவிக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

  இன்னும் பழம்பெருமை பேசுவதில் பயனில்லை. உரிய முன் முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் 60 ஆண்டுகளென்ன? 100 ஆண்டுகள் ஆயினும் இந்த அவலங்கள் நீடிக்கவே செய்யும். இது இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி மட்டுமல்ல; இதன் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் கோடானுகோடி சாமான்ய இந்திய மக்களுக்குத்தான் உண்மையான தோல்வி

செவ்வாய், மே 22, 2012

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்


பரண் – 0007 :-

தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்

-    மு.சிவகுருநாதன்

(வட்டார வழக்கில் எழுதப்படுகிற படைப்புகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடமாக வைக்க மறுத்து வருகின்றன. அப்படி பாடமாக வைக்கப்பட்டாலும் பின்னாட்களில் எதிர்ப்பு வருகின்றது என்கிற பெயரில் அவைகள் நீக்கப்படுகின்றன. தொன்னூறுகளின் இறுதியில் சோலை சுந்தரபெருமாளின் ‘ஒரே ஒரு ஊர்ல...’ என்ற நாவல் ஒர் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையொட்டி இக்கடிதம் தினமணிக்கு எழுதப்பட்டது. ஆனால் தினமணி வெளியிடவில்லை. பிறகு ‘கேப்பியார்’ இதழில் வெளிவந்தது. (இதழ் வருடம், மாதம் சரியாக நினைவில்லை.) இக்கட்டுரையில் அ.மார்க்ஸ் – ன் பாதிப்பு நிறையவே இருக்கும். பிறகு சோலையின் ‘செந்நெல்’ நாவல் பாடமாக்கப்பட்டபோதும் இதேமாதிரியான எதிர்ப்பு உண்டானது.  தொன்னூறுகளின் இறுதியில் வெளிவந்த இக்கட்டுரை பரண் பகுதியில் வெளியாகிறது. ‘கேப்பியார்’ இதழுக்கும் அதன் ஆசிரியர் கே.புஷ்பராஜ் –க்கும் எனது நன்றிகள்.)


      தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்பல்கலைக்கழகம், அவ்வப்போது ஆர்ப்பாட்டமாக நடந்தேறும் தமிழ் மாநாடுகள் போன்றவற்றின் வரிசையில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத்துறையின் மூலம் தமிழை வளர்த்தெடுக்கக் கிளம்பியிருக்கிறது அரசு. பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதவேண்டும் என்ற கோஷம் மேலெழும்புகிறது. தமிழை செந்தரப்படுத்தி (standardised) தனித்தமிழில் ஆக்கங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
  
   மொழி, பண்பாடு போன்றவற்றைப் பேசுகிறபோது எந்த-யாருடைய மொழி, பண்பாடு என்ற கேள்வி எழும். அப்படி கட்டமைக்கப்படுகிற மொழியும் பண்பாடும் தமிழர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்குமா? இந்தக் கட்டமைப்பில் உள்ளிருப்போர் யார் வெளியேற்றப்படுபவர்கள் யார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

    மொழியின் இடுகுறித்தன்மை, நவீனத்துவ – பின் நவீனத்துவ சிந்தனைகள் போன்றவற்றின் வெளிச்சத்தில் இதுபற்றி மேலும் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

    கருவியாகிய மொழி பேச்சு மரபையும் (oral tradition) எழுத்து மரபையும் (literate tradition)  உள்ளடக்கியது. இதில் இலக்கியம் எந்த வடிவத்தில் இருக்கவேண்டுமென மூன்றாம் உலக நாடுகளின் சிந்தனைகள் விவாதங்களாக உருவெடுத்து எழுத்துமரபை மறுதளித்து பேச்சு மரபின் முக்கியத்துவத்தையும் மாற்றுக்கல்வி என்று வருகிறபோது வட்டாரமொழியினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அவ்வட்டார மொழி பேசுகின்ற ஆசிரியரால் நடத்தப்படவேண்டுமென்பது தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.

    தமிழ்ச் சூழலில் தமிழிலக்கிய, பண்பாட்டு வரலாறு என்பது உரையாசிரியர்களின் வரலாறாக நீண்டிருக்கிறது.

   தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள செந்தமிழ் வரையறைகளும் இழிசனர் வழக்கு என்று கட்டம் கட்டியதும் அடித்தட்டு (subaltern) மக்களின் பேச்சுமொழியையும் அவர்களது பண்பாட்டையும் அழித்தொழித்து மேட்டுக்குடிப் (elite) பண்பாட்டை நிலைநிறுத்தி பொதுமைப்படுத்தி அதிகாரத்தைக் கட்டமைத்த வேலையைத்தான் இன்றும் அரசுகள் செய்கிறது. கொடுந்தமிழ் என்ற சொல்லாக்கம் தொல்காப்பியத்தில் கூறப்படவில்லையாயினும் திசைச்சொல்லை கொடுந்தமிழாக்கி அதன் மூலம் விளிம்புநிலை மக்களின் பேச்சுமொழியை அழித்தொழித்து சைவப்பண்பட்டை மொழியை அதிகாரத்தில் ஏற்றிவைத்ததில் உரைகாரர்களின் பங்கு கணிசமானது.

   இன்று யாருடைய தமிழை தனித்தமிழாக்கி செந்தரப்படுத்தும் வேலை நடக்கிறது? பலகுரல் தன்மையை (plurality) மறுத்து ஒரே குரலாய் முழுமுதற்பார்வையைத் (totality) தரும் பெருங்கதையாடல் (meta narratives) சமாச்சாரங்கள் அனைத்தும் அதிகாரத்துவத்திற்கும் பாசிசத்திற்குந்தான் இட்டுச்செல்லும் என்பதை மறுக்கமுடியாது. தலித் தமிழ், கொங்குத்தமிழ், நாஞ்சில் தமிழ், தஞ்சைத் தமிழ், சென்னைத் தமிழ், மலைத் தமிழ் போன்று வட்டாரத்திற்கொன்றாக இருக்கும் தமிழ்களைப் புறக்கணித்து தனித் தமிழை பொதுத் தமிழாக கட்டமைக்க முயல்வது எவ்வளவு பெரிய வன்முறை?

   பின் நவீனத்துவம் பகுத்தறிவின் வன்முறை பற்றிப் பேசுகிறது. தரப்படுத்துதல், தூய்மைபடுத்துதல் போன்ற பெயரில் மொழியின் தொடுக்கப்படும் வன்முறை குறித்தும் இதனால் நசுக்கப்படும் கிளை மொழிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. வட்டார மொழியில் எழுதப்படும் கவிதை, சிறுகதை, நாவல் போன்றவைகள் கொச்சை என்று ஒதுக்கப்படுவதும் மு.வ. போன்றவர்கள் சிறந்த நாவலாசிரியர்கள் போற்றப்படுவதும் தமிழின் அவலம்.

   வட்டார மொழி வாக்கியங்களைக் கொடுத்து கொச்சைகளைத் திருத்தி எழுது என்று தமிழில் இன்னமும் கேள்வி கேட்டு வருகிறோம். ஆனால் பல்கலைக்கழகங்களில் ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற துறை வேறு. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் சைவக் கறை படிந்த இந்த தனித்தமிழை - பொதுத் தமிழை உயர்த்திப் பிடிப்பதிலும் மொழி, பண்பாடு இவற்றின் பன்மைத்தன்மையை மறுப்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

   இதற்கு நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அளிக்கும் தமிழ்ப்பட்டங்கள் – பாடத்திட்டங்கள் போன்றவையே காரணமாகும். இவைகள்  ‘’நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி.’’ என்ற பெரியாரின் சிந்தனையின் பால் முகம் காட்டாது தொடர்ந்து மதவாதிகளாக – இந்துத்துவவாதிகளாக   தமிழ்ப் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

  இனக்குழுக்களின் வட்டார மொழிகளையும் பண்பாடுகளையும் அழித்தொழித்து பொது மொழியையும் பண்பாட்டையும் கட்டமைப்பதானது பேரினவாத ஒடுக்குமுறையாகவே இனங்காணப்படும். வட்டார வழக்குகளும் அதன் இலக்கியங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அதனதன் வழியிலேயே ஏற்றுக்கொண்டு அதன் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதே பொருத்தமாக இருக்கமுடியும்.

    தேசிய அடையாளம் போல செந்தரப்படுத்தப்பட்ட தனித்தமிழ் அடையாளமும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். பொதுத் தமிழின் அதிகாரத்துடனும் பண்பாட்டுப் பாசிசத்துடனும் வட்டார மொழி வழக்காறுகளும் அடித்தட்டு மக்களும் தொடர்ந்து போரிட வேண்டிவரும்.

  இறுதியாக, அரசுக் கருத்துருவச் செயல்பாடு மற்றும் நிறுவனமயமாக்கல் ஆகியவற்றின் மூலமாக மொழியை வளர்த்தெடுக்க முயல்வது அவலை நினைத்து உரலை இடிப்பது போலாகும்.
    
நன்றி:- கேப்பியார் இதழ்

திங்கள், மே 21, 2012

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்


பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில் 

                                               -மு.சிவகுருநாதன்
    
இடமிருந்து அப்துல் காதர்,அ.மார்க்ஸ்,மு.சிவகுருநாதன்,பா.ரவிக்குமார்,த.பிரிட்டோ


 1995 இல் அ.மா.வின் நேர்காணலை சுபமங்களாவிற்காக கும்பகோணத்தில் த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் பதிவு செய்தோம். இதை த.பிரிட்டோ தொகுத்து எழுதினார். பின்னர் அ.மா.விடம் காட்டி திருத்தம் செய்து நேர்காணல் இறுதி வடிவம் பெற்றது. இந்த நேர்காணல் சுபமங்களா ஜூலை-1995 இதழில் வெளியானது. த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், மு.சிவகுருநாதன் ஆகிய மூன்று பெயர்களுடன் இந்நேர்காணல் வெளியிடப்பட்டது.

    ஓடை.பொ.துரையரசன் தொகுத்து பயணி வெளியீடாக வந்திருக்கும் அ.மா. நேர்காணல் தொகுப்பில் இந்நேர்காணல் இடம்பெற்றுள்ளது. த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம் ஆகிய பெயர்களில் இந்நேர்காணல் வெளியாகியுள்ளது.

     இந்த நேர்காணல் குறித்து அப்போதைய காலச்சுவடு  ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக சுபமங்களா இதழில் எதிர்வினையாற்றியிருந்தனர். அதற்கு நான் இச்சிறு பதிலை எழுதினேன். பெரிய ஜனநாயகவாதியாக மதிக்கப்பட்ட கோமல் சுவாமிநாதன் இக்கடிதத்தை வெளியிடவில்லை.

    வேறு எங்கும் வெளியிடப்படாத இக்கடிதத்தை இங்கு பிரசுரிக்கிறேன். அப்போது எனக்கு வயது 22. இத்துடன்  மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோரின் கூட்டுக் கடிதத்தைக் கிண்டல் செய்து கேப்பியார் இதழில் மோகன் எழுதிய குறிப்பொன்றும் இங்கு நன்றியுடன் எடுத்தாளப்படுகிறது.


 
குருபீடமும் வாரிசு அரசியலும்

    அ.மார்க்ஸ்  நேர்காணல் தொடர்பான தொடர்ந்த விவாதங்களை வரவேற்கிறோம். அக்டோபர் 1995 சுபமங்களா இதழில் காலச்சுவடு மும்மூர்த்திகள் எழுதியுள்ள கருத்துகள் மீதான எதிர்வினையைத் தருவது அவசியமாகிறது. அதில் இவரது சிஷ்யர்கள் .................... என்று கேட்பதற்கு இவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. என்று வருகிறது. பேட்டி எடுப்பவர்கள் அவரது சிஷ்யர்களாக இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் சுராவின் சிஷ்யர்கள். அப்படியானால் நீங்கள் அமாவின் சிஷ்யர்கள் என்று எதிர்நிலை கட்டமைப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள்.

    தலைமை வழிபாடும் தங்களிடம்தான் இருக்கிறதே தவிர எங்களீடம் இல்லை. எங்களது கருத்துகளில் பெரும்பாலும் உடன்பாடுள்ள ஒரு சிறிய வட்டத்தைத்தான் என்று அமா கூறியுள்ளதை கவனிக்கவும்.

  அமைப்பியல், பின்-அமைப்பியல் சிந்தனைகள் எவ்வளவோ தோன்றிவிட்டபிறகு எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் சிஷ்யனாக இருக்கவேண்டிய அவசியமெதற்கு? இந்த நிலைக்கு ஆட்பட்டிருக்கும் மூன்று இளைஞர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

  சுரா ஆசிரியராக இருந்து வெளியான காலச்சுவடு இதழ்களுக்கும் வெகுஜன வணிக நடவடிக்கைகள் நம் வாழ்வு, சிந்தனை மற்றும் ரசனையால் புல்வெளிகளையும் நீர் நிலைகளையும் நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் அறிவுஜீவிகளுக்கு இது திருப்தி தராது. இளம் வாசகனை தீவிர எழுத்தைப் படிக்கத் தூண்டும் ஆவலே நோக்கம் என்று கூச்சல் போட்டு வெளியான சமீபத்திய இதழ்களையும் பார்க்கும்போது ஒன்று புலப்படுகிறது.

  மொழிபெயர்ப்பாக இருக்கட்டும் அல்லது வேறு எதுவாகினும் தாங்கள் செய்தால் அது சீரியஸ் எழுத்து மற்றவகள் செய்தால் அது ஐரோப்பிய கல்லறைகளிருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்றும் அவதூறு செய்வதன் அரசியல் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.

  இதேபோல் தலித் இலக்கியம் – இயக்கம் பற்றிய இவர்களது சொல்லாடல்கள் அனைத்தும் அதற்கு எதிராகவே இருப்பதை கூர்ந்து கவனிப்பவர்கள் அறிந்துகொள்ளமுடியும். ஊடகத்தின் சவாலை ஏற்று விவாதங்களில் பங்கு பெற்றால் நன்றாக இருக்கும்.

   சுபமங்களா வாசகர் வட்டம் என்பது சுபமங்களாவில் என்ன மாதிரியான விஷயங்கள் விஷயங்கள் வெளிவரும் என்பதையும் குறிக்கும். வன்முறை சூழலில்தான் இருக்கிறது, எங்களது எழுத்துக்களில் இல்லை என்ற நேர்காணல் தலைப்பை இன்றைய இலக்கியச்சூழலில் என்று மாற்றிவிட்டார்கள். இன்றைய சூழலில் இலக்கியம் – அரசியல் என்ற வேறுபாடுகள் முற்றிலும் நீங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

  காலச்சுவடு-10 இல் கண்ணன் தலையங்கம் எழுதியிருக்கிறார். அதைப் படித்த அழகிய சிங்கர் நீங்கள் எழுதிய தலையங்கம் உங்கள் தந்தை எழுதும் தலையங்கம் போல் உள்ளது. உண்மையா? என்று கேட்கிறார். பதிலில்லை.

இறுதியாக சில குறிப்புகள்:

01.சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். இப்பொழுது மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் என்ற பல்வெறு பெயர்களில் எழுதிவருகிறார் என்றும் தெரிகிறது.

02.சுராவின் காலச்சுவட்டில் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அவருடைய சிஷ்யனாகித் தீரவேண்டிய இந்த மும்மூர்த்திகளுக்கு இருப்பதுபோல் எங்களுக்குக் கிடையாது.

03.அமா சூறாவளி வீசினார், ஞானி தென்றலாகத் தவழ்ந்தார் என்று கூறுவதைத் தவிர்த்து விவாதங்களை நேர்மையாக எதிர்கொண்டால் நன்றாகயிருக்கும்.

04.இலக்கியமும் அரசியலும் வேறு வேறல்ல. எங்கும் தலைமை வழிபாடும் குரு பீடமும் சிஷ்யக்கூட்டங்களும் இருப்பதில் எங்களுக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. அது சுரா, அமா யாராக இருந்தாலும் சரி. இதை நீங்களும் உணர்ந்துகொண்டால் நல்லது.
        
 மு.சிவகுருநாதன்   அண்ணாபேட்டை - 614714   10.10.1995

 
எழுதியது எப்படி பற்றிய குறிப்பு

     அ.மார்க்ஸ் சுபமங்களா நேர்காணலில் சுந்தர ராமசாமியின் தலித் இலக்கியக்கோட்பாடு பற்றி சொல்லியிருந்ததற்கு சுந்தரராமசாமி மறுப்புக்கு மார்க்ஸ் எழுதிய பதிலுரைக்குப் பதிலுரையாக காலச்சுவடு ஆசிரியர் குழுவினர் மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன், கண்ணன் மூவரும் சேர்ந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளனர்.

    நமது குழப்பமெல்லாம் மூவரும் சேர்ந்து ஒரு கடிதத்தை எழுதுவது 
 எப்படி என்பதே. ஒருவர் பேனாவில் மையூற்ற, அடுத்தவர் எழுத, மூன்றாமவர் கவரில் அடைப்பாரா... அல்லது ஒருவர் சொல்ல, அடுத்தவர் எழுத, மூன்றாமவர் திருத்தங்கள் போடுவாரா... அல்லது ஒருவர் எழுத, அடுத்தவர் வேண்டாதவற்றை அடிக்க, மூன்றாமவர் நகலெடுப்பாரா... அல்லது சில வார இதழ்களில் ஒரே தொடர்கதையை வாரம் ஒருவர் என்று மாறி மாறி எழுதுவது போல் ஆளுக்கொரு பத்தி வீதம் எழுதுவார்களா... அல்லது ஒரே பேனாவை மூவரும் பிடித்துக்கொண்டு எழுதுவார்களா... புரியலயே.
                                                   - மோகன் 
 நன்றி :- கேப்பியார் (ஜனவரி – பிப்ரவரி 1996)

ஞாயிறு, மே 20, 2012

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள்

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள் 

                                                                                                           - மு.சிவகுருநாதன்

    (கூடங்குளம் அணுஉலை, இந்திய அணுசக்தி திட்டங்கள், ஒப்பந்தங்கள் குறித்த 4 குறுநூற்களின் அறிமுகம்) 





01. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் 
                                                                                    - அ. முத்துகிருஷ்ணன்

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாகத் தொடரும் நிலையில் அப்போராட்டங்கள் மற்றும் அணு உலைகளின் பாதிப்புக்களை விளக்கும் இக்குறுநூல் உயிர்மை 100 வது (டிசம்பர் 2011) வெளியான கட்டுரைகளின் தொகுப்பாகும்.  மிக எளிமையாக அணு உலைகளின் பாதிப்புக்களைச் சொல்லும் இக்குறுநூலை உயிர்மை, தலித் முரசு, வாசல், பூவுலகு, விஜயா பதிப்பகம், சமநிலைச் சமுதாயம், பசுமை நடை, பயணி, NAAM, THE ROOTS, Chennai Solidarity Group for Kudankulam Struggle, தமிழக பசுமை இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் போன்ற பல்வேறு பதிப்பகங்களும் இயக்கங்களும் சேர்ந்து மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளன.  மின்சாரத் தேவையையொட்டி நடுத்தர வர்க்க மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள அணு உலை ஆதரவுக் குரலை அசைக்கும் வல்லமை இந்த குறுநூலுக்கு உண்டு என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

    அணு உலைகள், மனித உரிமைகள் போன்ற மக்கள் பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடும் மற்றும் கருத்தியல் சக்திகளாகத் திகழும் அ. மார்க்ஸ், அ. முத்துகிருஷ்ணன்  போன்றவர்களை அந்நிய கை கூலிகள் என்று கேவலமாக எழுதும் இந்துத்துவ வெறி எழுத்தாளன் ஜெயமோகனுக்கும் அவனது துதிபாடிக் கும்பல்களுக்கும் இந்நூல் பேரிடியாக அமையும் என்பதில் அய்யமில்லை.

             ரஷ்யாவின் VVER-1000 அணு உலைகள் இதுவரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை.  ரஷ்யப் பொறியாளர்களுக்கு இதில் அனுபவமும் இல்லை.  இதிலுள்ள குளிர்விக்கும் கலனில் முதன் முறையாக கடல் நீரைப் பயன்படுத்தி பரிசோதிக்கப் போகிறார்கள்.  கூடங்குளம் - அணு உலையா இல்லை, VVER உலைகளுக்கான பரிசோதனைக் கூடமா? கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பட்டனந்திட்டா, கொல்லம் மாவட்டத்தின் மக்கள பரிசோதனைக் கூட எலிகளா? என்று கேட்கும் போது நடுத்தர வர்க்க மனச்சாட்சி கொஞ்சமாவது அசைய வாய்ப்புண்டு.  அப்போதாவது அவர்களது பொதுப்புத்தியில் ஏதேனும் மாற்றம் நிகழும்.

    கதிரியக்கக் கழிவுகளை பந்தாக உருட்டு வைத்துவிடுவோம் என்று பேசும் அப்துல்கலாம்களுக்கு ப்ளுடோனியம் 239-ன் அரை ஆயுள் 24000 ஆண்டுகள், யுரேனியம் -235-ன் அரை ஆயுள் 70 கோடி ஆண்டுகள் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.  "அரசவைக் கோமாளிக்கு சில கேள்விகள்" - கட்டுரை அறிவுப்பூர்வமானவை.  இதைப்போன்ற எண்ணற்ற கேள்விகள் அப்துல்கலாமை நோக்கிக் கேட்கப்பட்டுவிட்டன.  ஆனால் எதற்கும் பதில் கிடைத்தபாடில்லை.  அவரது இணையக் கட்டுரையை ஒரு பள்ளிக்கூட மாணவனால் கூட மறுக்கமுடியும்.

    அணு உலையின் பாதிப்புகள், கதிரியக்க ஆபத்து, விபத்துக் காப்பீட்டுச் சட்டம், உலகின் அபாய  அணு உலைகள், மாற்று மின்சாரம் போன்ற பல தலைப்புகளில் எளிமையான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுப.உதயகுமார் குறித்த அறிமுகமும் உள்ளது.  "அமெரிக்காவில் வாழ்ந்த பின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல், தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்து வந்த மிகச் சிலரில் உதயகுமார் முதன்மையானவர்", என்று சொல்லப்பட்டுள்ளது.  இது நூற்றுக்கு நூறு சரி.  இப்படி உண்மையான தேச பக்தர் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்படுகிறது.  இருந்தாலென்ன? மகாத்மா காந்தியும் 1947 ஆகஸ்டு 15க்கு முன்பு தேசத் துரோகிதானே! மன்மோகன்சிங்குகள் தேசபக்தர்களாக வலம் வரும் நாட்டில் உதயகுமார்கள் தேசத் துரோகிகளாகத்தான் இருக்க முடியும்.

    64 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூலில் ஆங்காங்கே தேவையான படங்களும், கருத்துப் படங்களும் நிரம்பியுள்ளன.  இது குறித்த விரிவான வாசிப்பு தேவைப்படுவோருக்கு உதவிய நூற்கள் - கட்டுரைகள் பெரிதும் பயன்படும்.  மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்து வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

விலை: ரூ. 15                பக்கம் : 64

வெளியீடு    :    
             உயிர்மை பதிப்பகம்,
            11/29, சுப்பிரமணியம் தெரு,
            அபிராமபுரம், சென்னை - 600 018.
            பேச: 044 - 24993448,
            மின்னஞ்சல்: uyirmmai@gmail.com.

02. உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் வேண்டாம் 
                                                                                 - கட்டுரைத் தொகுப்பு (வெளிச்சம்)

    அண்மையில் ஜப்பான் நாட்டில் சுனாமியால் புகுஷிமா அணு உலை விபத்து நடந்தேறியவுடன்  கூடங்குளம் அணு உலையைத் திறக்க மத்திய அரசும் அணுசக்திக் கழகமும் விரைவு காட்டிய வேளையில் திரண்டெழுந்த மக்கள் புரட்சி பல மாதங்களாக இன்றும் நீடித்திருக்கிறது.  பல்வேறு வடிவங்களில் பல தரப்பிலிருந்து இப்போராட்டங்களை ஒடுக்கச் செய்யப்படும் முயற்சிகள் இன்று வரை தோல்வியைச் சந்தித்துள்ளன.

    கூடங்குளம் போராட்டத்தை ஒட்டியும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் போலி ஆய்வு முடிவுகள் குறித்தும் தீராநதி, காலச்சுவடு, சாளரம், பசுமைத் தாயகம் ஆகிய இதழ்களில் வந்த 5 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 70 பக்கங்களுடன் வெளியான இக்குறுநூல் வெளிச்சம் அமைப்பால் இலவசமாக விநியோகிகப்பட்டுள்ளது

    "அணுமின் நிலையங்கள் தேவையா?" என்ற இரா. அருளின் கட்டுரை, அணு மின்சாரம் தூய்மையானது, மாசுக்கள் குறைந்தது, பொருளாதார ரீதியில் பலனளிக்கக் கூடியது, குறைந்த செலவில் (அப்துல்கலாம் சொல்வது போல் ரூ. 3க்கு ஒரு யூனிட் அணு மின்சாரம்) தயாரிப்பது, 100% விபத்தில்லாதது என்றெல்லாம் அதிகார வர்க்கம் நாளும் சொல்லிவரும் பொய்மைகளை அம்பலப்படுத்துகிறது.

    இந்தியப் பேரரசு தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இரு வேறு அளவு கோல்களை பயன்படுத்துவதையும் உலகமெங்கும் அணு உலைகளுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்தையும் இவையனைத்தும் படிப்படியாக மூடப்பட்டு வருகின்ற செய்தியினை புள்ளி விவரங்களுடன் இக்கட்டுரை விளக்குகிறது.

    அணுசக்தித் திட்டங்களுக்கு மாற்றாக மாற்று எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழக அரசு கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்துவதோடு இனி தமிழ்நாட்டில் அணுசக்தித் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கேரளா, மேற்கு வங்காளம் போல் அறிவிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. அணு உலையை நிரந்தரமாக மூடினால் அச்சத்தைப் போக்கும் சாமியாடிகள் மற்றும் பேயோட்டிகளுக்கு வேலை இல்லாமற்போகும்.

    "கூடங்குளம் காத்திருக்கும் அபாயம்" என்ற மண்குதிரையின் கட்டுரை 1989இல் தூத்துக்குடியில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தலைமையிலான போராட்டம் தொடங்கி தற்போது நடைபெறும் மக்கள் எழுச்சியையும் விவரிக்கிறது.  இத்திட்டம் சோவியத் யூனியனிலிருந்து வருவதால் இடதுசாரிகள் மவுனம் சாதிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.  இது உண்மை அல்ல.  ஆளும் காங்கிரஸ், தி.மு.க., இந்து மத வெறி பா.ஜ.க. ஆகியவற்றுடன் இணைந்து இடதுசாரிகள் அணு உலை ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே எடுத்திருக்கிறார்கள்.

          VVER-1000 அணு உலைகள் இரண்டில் ஒன்று டிசம்பர் 2009லும் மற்றொன்று மார்ச் 2010லும் செயல்பட்டு தலா 1000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து நாட்டின் மின் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது இப்போராட்டம் வலுப்பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.  இந்த கணக்கெல்லாம் உண்மையில் நடக்கக் கூடியவை அல்ல.  இந்திய அரசும், அணுசக்தி அதிகார அமைப்புகளும் உருவாக்கி வரும் மாயைகள் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

    அணுசக்தித் துறையின் அநியாயச் செலவுகளைக் கேள்விக்குள்ளாக்கிய புகழ்பெற்ற அறிஞர் டி.டி. கோசாம்பியின் ஆய்வுப் பொறுப்பு பறிக்கப்படுதல், விஞ்ஞானி கே.எஸ். ஜெயராமன்-ஐ 'Science Today' பத்திரிக்கையில் எழுத விடாமல் தடுக்கப்படுதல், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அறிவியற் கோட்பாட்டுத்துறைப் பேராசிரியர் டாக்டர் தீரேந்திர சர்மா இரவோடிரவாக மொழித் துறைக்கு மாற்றப்படுதல் போன்ற அக்கிரமங்களை அணு உலையால் பயனடையும் போலி விஞ்ஞானிகள் கும்பல், அரசு மற்றும் அரசு அதிகாரிகள், அணு உலை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் கைங்கர்யத்தால் நிகழ்ந்தேறிய விதத்தை இராஜேந்திர பிரசாத்தின் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    இலங்கை இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சேயின் இனவெறி அரசுக்கு உதவி செய்ததன் வாயிலாக தெற்குப் பிராந்தியத்தில் சீனா வெகுவாக காலூன்றியுள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாடும் கேரளாவும் முதல் பலி என்றும் அதற்கு இந்த கூடங்குளம் அணு உலை பெரிதும் உதவும்
என்கிறார் பா. செயப்பிரகாசம்.

    "அரசியல் இயக்கங்களை தூர நிறுத்தியதுதான் போராட்டக் குழு செய்த உன்னதமான செயல்" என்ற மதிப்பிடும் இக்கட்டுரை அணுசக்தியின் விளைவுகளை மக்களிடம் போராட்டக்காரர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

    பா. செயப்பிரகாசம் தனது மற்றொரு கட்டுரையில் அப்துல்கலாம் மன்மோகன், சிதம்பரம், பிரணாப் போன்றவர்களின் பிம்பந்தான் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

    அ. மார்க்ஸ் டிசம்பர் 2011 தீராநதி இதழில் அப்துல்கலாமிற்கு ஒரு கட்டுரையில் எதிர்வினையாற்றியிருந்தார்.  அதுபோல பல்வேறு கட்டுரைகள் இதழ்களிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன.  பெரிய கட்டுரைகளைத் தவிர்த்து அவற்றைச் சேர்த்து இந்த இலவச வெளியீட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

விலை: இல்லை        பக்கம்: 70

வெளியீடு    :   
             வெளிச்சம்,
            கு. பால்ராஜ், வழக்கறிஞர்,
            செயல்பாட்டாளர்கள் பொதுமேடை,
            35 A, முடங்கியார் சாலை, ராஜபாளையம். செல்: 94434 56023.

03. இந்திய அணுசக்தித் திட்டம் - அறிவிப்புகளும் உண்மையும் 
                                                                                                      - சுவ்ரத் ராஜு

    'மும்பை அரசியல் - பொருளாதார ஆய்வுக் குழு'வின் 'இந்தியப் பொருளாதாரம் பற்றிய நோக்குகள்' என்ற இதழின் 48வது வெளியீட்டில் இயற்பியலாளர் சுவ்ரத் ராஜு இந்திய அணு ஆற்றல் திட்டங்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.  இக்கட்டுரைகளை அனாமதேயன் மொழி பெயர்த்து தனது வலைப்பூவில் வெளியிட்டிருந்தார்.  வினவு உள்ளிட்ட பல இணையப் பக்கங்கள் இதனை வெளியிட்டன.  இத்துடன் "தி இந்து"  நாளேட்டில் அப்துல்கலாம் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக சுவ்ரத் ராஜும் எம்.வி. ரமணாவும் எழுதிய கட்டுரையயான்றும் இணைக்கப்பட்டு 80 பக்கம் கொண்ட இக்குறுநூல் உருவாகியுள்ளது.

    "அணுசக்திப் புரட்சி என்பது தொழிற்புரட்சியைப் போன்றே" என்று சொல்லி ஹோமி ஜஹாங்கீர் பாபாவிடம் இந்திய அணுசக்தித் துறையை கையளித்த ஜவஹர்லால் நேருவும் அமெரிக்காவிற்கு ஆதரவான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி "அணு மின்சக்தி தூய்மையானது; பாதுகாப்பானது; செலவு குறைந்தது" என்றெல்லாம் பித்தலாட்டம் நடத்தும் மன்மோகன் சிங்கும் ஒரே பாதையில்தான் செல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

    இந்தியாவில் அணுமின்சக்தி உற்பத்தி பற்றிய பொய்யான, ஆர்வக்கோளாறான கணிப்புகளைத்தான் இந்திய அணு சக்தித் துறை (DAE) தொடக்கம் முதலே வெளியிட்டு வருகிறது.  ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், அனில் கடோத்கர், ஜெயின் என்ற வரிசையில் எவரும் உண்மைகளை ஒத்துக்கொண்டதில்லை.  பொய்யான தகவல்களையும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும் அறிவியலின் பெயரால் மக்களை ஏமாற்றவே செய்துள்ளனர்.

    இந்தியாவில் தலைமைக் கணக்கு (CAG) அதிகாரி,  "மார்ச் 1998 முடிய
ரூ. 5291.48 கோடிகளைச் செலவழித்தும் கூடுதல் மின்னுற்பத்தி பெரிய பூச்சியமே" என்று தணிக்கை அறிக்கையில் எழுதியதும் 2009 ஆம் ஆண்டிலும் முந்தைய ஆண்டைவிட அணு மின் சக்தி உற்பத்தி 3% அளவிற்கே இருந்ததையும் சுவ்ரத் ராஜு அம்பலப்படுத்துகிறார்.

         முப்படி நிலை அணுமின் திட்டத்தின் மூன்றாவது படிநிலையில் தோரியம் - 232 (Th 232)ஐ யுரேனியம் - 233 (U 233)ஆக மாற்றம் செய்து, இதனை அணுப்பிளப்பு எரிபொருளாகப் பயன்படுத்தி அணுமின்சக்தி தயாரிப்பது.   உலகில் எவரும் செய்யாத நடைமுறைச் சாத்தியமற்ற இம்முறையைத் தொடங்கி 55 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியா இன்னும் முதல் படியிலேயே நிற்பதை எடுத்துக்காட்டுகிறது.

    "அணுசக்தி அமைப்புக்களைக் கட்டுப்படுத்தும் உறுதியான நிர்வாக கட்டமைப்புகள் இல்லை" என்று சொல்லும் ஆசிரியர், பாபா நேருவிடம் தனக்கிருந்த தனிப்பட்ட நெருக்கத்தினைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிற அங்கங்களில் செயல்படும் குறைந்தபட்ச கண்காணிப்பு, சீர் செய்தல் வழிமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதையும் 1954இல் நிறுவப்பட்ட இவ்வமைப்பு கெட்டித் தட்டிப்போன சிறிய அதிகார வர்க்கக் கும்பலால் 55 ஆண்டுகளைக் கடந்த பின்னும் நிர்வகிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்.

    பாபாவின் தொடக்கக் கால கணிப்புக்குப் பின் 55 ஆண்டுகள் ஆனபிறகும் இந்தப் படிநிலைகள் தொடர்பான தொழில் நுட்பங்கள் நம்பிக்கை அளவிலேயே இருக்கின்றன.   முதல் படி நிலை "உலகத்தரத்திலான செயல்பாட்டிலும்", இரண்டாவது படிநிலை "உலகின் முன்னேறிய தொழில்நுட்பம்" என்ற நிலையிலும் மூன்றாவது படிநிலை "உலகளவில் தனித்துவமானது" என்ற நிலையிலும் இருப்பதாக இந்திய அணுசக்தித் துறை கணிப்பதையும் இரண்டாவது படிநிலையான வீரிய ஈனுலை கட்டும் திட்டம் அணு ஆயுதத் தயாரிப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும் சுவ்ரத் ராஜு அம்பலப்படுத்துகிறார்.

    இந்த வீரிய ஈனுலைகளில் எரிபொருளுடன் யுரேனியப் போர்வை உள்ளது.  இப்போர்வை அணு ஆயுதத் தரத்திலான புளூட்டோனியத்தைப் பெற்றெடுக்கிறது.  கல்பாக்கத்தில் கட்டப்படும் PFBR மட்டுமே ஆண்டுதோறும் 140 கிலோ கிராம் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற க்ளாசர் மற்றும் ரமணாவால் மதிப்பீடுகள் இந்திய அரசு பெருமளவில் அணு ஆயுதக் குவிப்பு செய்வதற்கு வழி வகுக்கும் என்பதையும் தெளிவாக்குகிறது.

        "சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அணு மின் சக்தித் திட்டங்கள் பெருந்தோல்விகளைச் சந்தித்த போதும் மத்திய அரசின் பேராதரவைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அணு குண்டு தயாரிப்பதற்கு அதன் பங்களிப்பே"  என்பதை நூலாசிரியர் உறுதி செய்கிறார்.  ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய் போன்ற அணு விஞ்ஞானிகள்,  நேரு, இந்திரா காந்தி, ராஜுவ் காந்தி, வாஜ்பாய், இன்றைய மன்மோகன்சிங் போன்றோரது கூற்றுக்களும் செயல்களுமே இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

    எக்கேடு கெட்டாலும் அணுசக்தித் துறையில் ஏராளமாக முதலீடு செய்வது மேலும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இந்திய அணு சக்திக் கழகத்தை வளர்த்தெடுத்தது, தேசப் பாதுகாப்பு என்ற போலி முகமூடிக்கள் மறைத்துக் கொண்டது போன்றவற்றின் ஊடாக இந்திய மக்களின் வரிப்பணம் பெருமளவில் கொள்ளை போக ஆவன செய்ததுதான் அணு மின் சக்தித் துறையின் கை கண்ட பலன்  என்பது நமக்குப் புரிகிறது.

    அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னுள்ள அரசியல் செயல்பாட்டினை பின்னிணைப்புக் கட்டுரை விளக்குகிறது.  டாக்டர் ஆர். ரமேஷ், டாக்டர். வீ. புகழேந்தி, டாக்டர். வி.டி. பத்மநாபன் ஆகியோரடங்கிய பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவின் கட்டுரையும் கூடங்குளம் அணு உலை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? என்ற சுவ்ரத் ராஜு, எம்.வி. ரமணாவின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

    இறுதியான 9 பக்கங்கள் நீளும் விரிவான  References  வாசிப்புக்கும் ஆய்வுக்கும் வழி கோளும் என்று நம்பலாம்.

விலை         :     ரூ. 50            பக்கம்     :     80

தொகுப்பு    : க. காமராசன்

வெளியீடு    :    
            முகம்,
            20/37, 13வது தெரு,
            அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர்,
            கோவை - 5, போன்: 0422 - 2593938,
            மின்னஞ்சல்     : mugambooks@gmail.com
            இணையம்     : www.mugam.in

04. பேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை
                                                                       - மெய். சேது. ராமலிங்கம்

    இந்திரா காந்தி காலத்தில் தொடங்கப்பட்ட வலிமையான இந்தியா என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி ரா (RAW) போன்ற உளவு அமைப்புகளின் மூலம் தெற்காசியப் பகுதிகளில் தங்களுக்குக் கீழ்ப்படியாத ஆட்சியாளர்களை எதிர்த்து உள்நாட்டுக் கலகங்கள் உற்பத்தி செய்யப்பட்ட முறைகளை, அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதையும் இந்நூல் நினைவுப்படுத்துகிறது.  இதன் தொடர்ச்சியாக வல்லரசுக் கனவின் பிதாமகனான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மேட்டுக்குடி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் உருவாக்கிய இப்பிரச்சாரம் இன்று வரை தழைத்திருப்பதன் உண்மையை விளக்குகிறார்.

    அணுசக்தி இழப்பீட்டுச் சட்டத்தின் மூலம் வெறும் 1500 கோடிகளை மட்டும் கொடுத்துவிட்டு நாட்டு மக்களை பல தலைமுறைகள் அழித்து விடலாம் என்ற நிலையும் அதற்கு மேலான இழப்பீட்டை நம் நாட்டு மக்கள் தலையில் சுமத்த வேண்டும் என்பதுதானே நமது அரசுகளின் நோக்கம்.  வல்லரசுக் கனவிற்கான விலை எமது உயிர்கள் பலிகடாவாக்கப்படுவதை தெரியாமல் பெரும்பான்மையான இந்திய சமூகம் தூங்கிக் கொண்டுள்ளது.

    பல ஆயிரம் கோடிகள் செலவழித்து தயாரிக்கப்படும் அணு மின்சாரத்தை விட காற்றாலை, சூரிய மின்சாரங்கள் செலவு குறைந்தவை.  மாசுக்களற்றவை.  இருப்பினும் நமது அமெரிக்கச் சார்புத் தன்மை நம்மை அடிமைகளாக மாற்றி வருவதை இந்நூல் குறிப்பிடத் தவறவில்லை.

    கதிரியக்கம் என்றால் என்ன? அதன் பாதிப்புகள், அணுக் கழிவுகள் பற்றி மிகவும் எளிமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  அணு மின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துகள், தொடர் கதிரியக்கத்தின் பல தலைமுறைப் பாதிப்பு போன்றவற்றையும் இந்நூல் விவரிக்கிறது.

    அமெரிக்க மற்றும் பன்னாட்டு அணுக் கம்பெனிகளை பாதுகாக்கும் அணு உலை விபத்துக்களுக்கான குடிமை இழப்புச் சட்டம் - 2010-ன் முக்கிய அம்சங்களோடு இச்சட்டமானது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 அளிக்கும் உயிர் வாழும் உத்திரவாதத்திற்கு எதிராக உள்ளதையும் குறிப்பிடுகிறது.

   
           ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து நடந்த பிறகும் இந்திய அரசு, இந்திய அணு சக்தி கழககும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையயன்றால் இதன் பாதிப்பு மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

    அணு ஆயுத வலிமை, நாட்டை முழுமையாக ராணுவமயப்படுத்துதல் போன்றவற்றால் பட்டினிச் சாவுகளும் விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்ற எச்சரிக்கையையும் இந்நூல் விடுக்கிறது.  அணு உலை தொடர்பான மதியின் தினமணி கார்ட்டூன் இரண்டு இடம் பெற்றுள்ளது. 

    சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி 5% என்று உள்ளது.  இது தவறு.  மரபுசாரா மாற்று மின்னுற்பத்தி சுமார் 12% ஆகும்.  இம்மாதிரியான பிழைகள் இருப்பினும் கூடங்குளம் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் இந்த நூலையும் நாம் பாராட்டலாம்.

விலை     :     ரூ. 20                பக்கம்     : 38

வெளியீடு    :   

            சுற்றுச் சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பு,
            24, ராஜுவ் காந்தி நகர், எடமலைப்பட்டிப்புதூர்,
            திருச்சி - 620 012.
            செல்        :    94431 43380, 94426 10605.

சனி, மே 19, 2012

சிற்றிதழ் அறிமுகம் மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்


சிற்றிதழ் அறிமுகம்

மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்    -மு.சிவகுருநாதன்



(தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாட்டிற்கான கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ்)

   திருவாருர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து அம்ரா பாண்டியனால் கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் மார்ச்-ஏப்ரல்-2012 சமீபத்தில்தான் என் பார்வைக்கு வந்தது.

  48 பக்கங்கள் நிறைந்த இந்த இதழ், எந்த இசத் திற்குள்ளும் அடைபடாமல் தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாடு ஆகியவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுமென பிரகடனம் செய்கிறது.

  தமிழ்த் தேசியப் பொதுவுடைமை கட்சி (ததேபொக) பெ.மணியரசன் நேர்காணல், தியாகு, பா.செயப்பிரகாசம் ஆகியோரின் கட்டுரைகளைப் பார்க்கும்போது வழக்கமான தமிழ் தேசியத்திற்குள் இதழ் அடைபட்டுவிடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் ஆகியவற்றை மறுக்கும்போது தமிழ்த் தேசியம் மட்டும் இவற்றிலிருந்து எவ்வாறு மேம்பட்டது என்று மணியரசன் விளக்கவேண்டும். ஆனால் செய்வதில்லை. தேசியம் ஒரு பாசிசம் என்ற கருத்தில் உடன்பாடில்லையென்றால் இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் ஆகியவற்றை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும்.

  தமிழ்ச்சூழலில் பெரியாரை ஆதரித்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் பெரியாரை எதிர்த்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் பெரியாரின் இந்துத்துவ எதிர்ப்பை கணக்கில் கொள்வதில்லை. எனவேதான் இந்துத்துவவாதிகளுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வதில்கூட இவர்கள் வெட்கப்படுவதில்லை.

   சமகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள்ப் போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானதாகும். தமிழகத்தின் அதிகாரத்தை மாறி மாறி சுவைக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பெரும்பான்மையான பொதுமக்களும் இப்பிரச்சினையில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து நாம் ஆராயவேண்டிய நேரமிது. ஜனநாயகம் பற்றிப் பேசும் நாம் இவற்றை ஏற்றுக்கொள்ளமுடியுமா?  நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது சாத்தியமா என்றும் யோசிக்கவேண்டும். இங்குதான் தமிழ் தேசியர்களும் தமிழ் அறிவுலகமும் பெற்றிருக்கின்ற வீழ்ச்சி புலப்படும்.

  அப்துல் கலாமின் கூடங்குள விஜயம் மக்களிடம் அவரின் முகமுடி கிழிந்ததைத் தவிர வேறெந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவரின் இலங்கைப் பயணத்தில் மீனவர்கள் நலன் சார்ந்ததாகச் சொல்லப்பட்ட கருத்துகள் பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதரவான குரல். அப்துல் கலாம் உள்ளிருப்பது பன்னாட்டு மூலதன, அணு ஆயுத, போர்த்தளவாட விற்பனை முகவரின் முகம். இவரின் இந்துத்துவ முகத்தைகூட மன்னிக்கலாம். ஆனால் பன்னாட்டு கைகூலி முகத்தை மன்னிக்கவே முடியாது.

  (இங்கு ஓர் இடையீடு:- இந்துத்துவத்தின் பின்புலத்தில் சுதேசிக் கருத்தாக்கம், தமிழ் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு இருப்பதால்தானோ என்னவோ தமிழ் தேசியர்கள் இந்துத்துவத்துடன் இணக்கம் கொள்ள வைக்கிறது.)

  ப.பரிதி பாண்டியனின் சுட்டுவிரல் பத்தியில்  நையாண்டி ரசிக்கும்படியாக உள்ளது. குமுதம் அரசு, உயிர்மை மனுஷ்யபுத்திரன் போன்றோர் இவரின் எள்ளலுக்குத் தப்பவில்லை. தொடரட்டும்.

  கல்வி பற்றிய பாலமுரளி வர்மன் கட்டுரை நடப்பு கல்விமுறையில் உள்ள குறைகளைச் சுட்டுகிறது; அங்கலாய்க்கிறது. ஆனால் மாற்றுவழிகளைப் பற்றிப் பேச மறுக்கிறது. இடதுசாரி, வலதுசாரி என அனைவரும் ஒழுக்கக்கல்வி பற்றிப் பேசுகிறார்கள். எந்தவகையான ஒழுக்கக்கல்வி என்பதில்தான் பிரச்சினை வருகிறது.

   சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சொன்னதற்கேற்ப இரா.மோகன்ராஜன், தாமிரா ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இரா.காமராசு, பசு.கவுதமன், பால செழியரசு, கோ.அருணகிரி, கலைபாரதி ஆகியோரது கவிதைகள் முதல் இதழில் வெளியாகியுள்ளன. அனார் கவிதைத் தொகுப்பு விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.

   இதழ் தொடர்ந்து வெளியாக வேண்டுமென்பதே நாமனைவரின் எதிர்பார்ப்பு.

தனி இதழ் ரூ 15 
ஆண்டு சந்தா ரூ 100 
மூன்றாண்டு சந்தா ரூ 250

தொடர்பு முகவரி

5/103, முதன்மைச் சாலை,
அசேசம்-614001,
மன்னார்குடி.

தொலைபேசி 04367255694
அலைபேசி 7598428694
மின்னஞ்சல் pandianamra@gmail.com