செவ்வாய், மே 22, 2012

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்


பரண் – 0007 :-

தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்

-    மு.சிவகுருநாதன்

(வட்டார வழக்கில் எழுதப்படுகிற படைப்புகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடமாக வைக்க மறுத்து வருகின்றன. அப்படி பாடமாக வைக்கப்பட்டாலும் பின்னாட்களில் எதிர்ப்பு வருகின்றது என்கிற பெயரில் அவைகள் நீக்கப்படுகின்றன. தொன்னூறுகளின் இறுதியில் சோலை சுந்தரபெருமாளின் ‘ஒரே ஒரு ஊர்ல...’ என்ற நாவல் ஒர் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையொட்டி இக்கடிதம் தினமணிக்கு எழுதப்பட்டது. ஆனால் தினமணி வெளியிடவில்லை. பிறகு ‘கேப்பியார்’ இதழில் வெளிவந்தது. (இதழ் வருடம், மாதம் சரியாக நினைவில்லை.) இக்கட்டுரையில் அ.மார்க்ஸ் – ன் பாதிப்பு நிறையவே இருக்கும். பிறகு சோலையின் ‘செந்நெல்’ நாவல் பாடமாக்கப்பட்டபோதும் இதேமாதிரியான எதிர்ப்பு உண்டானது.  தொன்னூறுகளின் இறுதியில் வெளிவந்த இக்கட்டுரை பரண் பகுதியில் வெளியாகிறது. ‘கேப்பியார்’ இதழுக்கும் அதன் ஆசிரியர் கே.புஷ்பராஜ் –க்கும் எனது நன்றிகள்.)


      தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்பல்கலைக்கழகம், அவ்வப்போது ஆர்ப்பாட்டமாக நடந்தேறும் தமிழ் மாநாடுகள் போன்றவற்றின் வரிசையில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத்துறையின் மூலம் தமிழை வளர்த்தெடுக்கக் கிளம்பியிருக்கிறது அரசு. பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதவேண்டும் என்ற கோஷம் மேலெழும்புகிறது. தமிழை செந்தரப்படுத்தி (standardised) தனித்தமிழில் ஆக்கங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
  
   மொழி, பண்பாடு போன்றவற்றைப் பேசுகிறபோது எந்த-யாருடைய மொழி, பண்பாடு என்ற கேள்வி எழும். அப்படி கட்டமைக்கப்படுகிற மொழியும் பண்பாடும் தமிழர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்குமா? இந்தக் கட்டமைப்பில் உள்ளிருப்போர் யார் வெளியேற்றப்படுபவர்கள் யார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

    மொழியின் இடுகுறித்தன்மை, நவீனத்துவ – பின் நவீனத்துவ சிந்தனைகள் போன்றவற்றின் வெளிச்சத்தில் இதுபற்றி மேலும் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

    கருவியாகிய மொழி பேச்சு மரபையும் (oral tradition) எழுத்து மரபையும் (literate tradition)  உள்ளடக்கியது. இதில் இலக்கியம் எந்த வடிவத்தில் இருக்கவேண்டுமென மூன்றாம் உலக நாடுகளின் சிந்தனைகள் விவாதங்களாக உருவெடுத்து எழுத்துமரபை மறுதளித்து பேச்சு மரபின் முக்கியத்துவத்தையும் மாற்றுக்கல்வி என்று வருகிறபோது வட்டாரமொழியினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அவ்வட்டார மொழி பேசுகின்ற ஆசிரியரால் நடத்தப்படவேண்டுமென்பது தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.

    தமிழ்ச் சூழலில் தமிழிலக்கிய, பண்பாட்டு வரலாறு என்பது உரையாசிரியர்களின் வரலாறாக நீண்டிருக்கிறது.

   தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள செந்தமிழ் வரையறைகளும் இழிசனர் வழக்கு என்று கட்டம் கட்டியதும் அடித்தட்டு (subaltern) மக்களின் பேச்சுமொழியையும் அவர்களது பண்பாட்டையும் அழித்தொழித்து மேட்டுக்குடிப் (elite) பண்பாட்டை நிலைநிறுத்தி பொதுமைப்படுத்தி அதிகாரத்தைக் கட்டமைத்த வேலையைத்தான் இன்றும் அரசுகள் செய்கிறது. கொடுந்தமிழ் என்ற சொல்லாக்கம் தொல்காப்பியத்தில் கூறப்படவில்லையாயினும் திசைச்சொல்லை கொடுந்தமிழாக்கி அதன் மூலம் விளிம்புநிலை மக்களின் பேச்சுமொழியை அழித்தொழித்து சைவப்பண்பட்டை மொழியை அதிகாரத்தில் ஏற்றிவைத்ததில் உரைகாரர்களின் பங்கு கணிசமானது.

   இன்று யாருடைய தமிழை தனித்தமிழாக்கி செந்தரப்படுத்தும் வேலை நடக்கிறது? பலகுரல் தன்மையை (plurality) மறுத்து ஒரே குரலாய் முழுமுதற்பார்வையைத் (totality) தரும் பெருங்கதையாடல் (meta narratives) சமாச்சாரங்கள் அனைத்தும் அதிகாரத்துவத்திற்கும் பாசிசத்திற்குந்தான் இட்டுச்செல்லும் என்பதை மறுக்கமுடியாது. தலித் தமிழ், கொங்குத்தமிழ், நாஞ்சில் தமிழ், தஞ்சைத் தமிழ், சென்னைத் தமிழ், மலைத் தமிழ் போன்று வட்டாரத்திற்கொன்றாக இருக்கும் தமிழ்களைப் புறக்கணித்து தனித் தமிழை பொதுத் தமிழாக கட்டமைக்க முயல்வது எவ்வளவு பெரிய வன்முறை?

   பின் நவீனத்துவம் பகுத்தறிவின் வன்முறை பற்றிப் பேசுகிறது. தரப்படுத்துதல், தூய்மைபடுத்துதல் போன்ற பெயரில் மொழியின் தொடுக்கப்படும் வன்முறை குறித்தும் இதனால் நசுக்கப்படும் கிளை மொழிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. வட்டார மொழியில் எழுதப்படும் கவிதை, சிறுகதை, நாவல் போன்றவைகள் கொச்சை என்று ஒதுக்கப்படுவதும் மு.வ. போன்றவர்கள் சிறந்த நாவலாசிரியர்கள் போற்றப்படுவதும் தமிழின் அவலம்.

   வட்டார மொழி வாக்கியங்களைக் கொடுத்து கொச்சைகளைத் திருத்தி எழுது என்று தமிழில் இன்னமும் கேள்வி கேட்டு வருகிறோம். ஆனால் பல்கலைக்கழகங்களில் ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற துறை வேறு. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் சைவக் கறை படிந்த இந்த தனித்தமிழை - பொதுத் தமிழை உயர்த்திப் பிடிப்பதிலும் மொழி, பண்பாடு இவற்றின் பன்மைத்தன்மையை மறுப்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

   இதற்கு நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அளிக்கும் தமிழ்ப்பட்டங்கள் – பாடத்திட்டங்கள் போன்றவையே காரணமாகும். இவைகள்  ‘’நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி.’’ என்ற பெரியாரின் சிந்தனையின் பால் முகம் காட்டாது தொடர்ந்து மதவாதிகளாக – இந்துத்துவவாதிகளாக   தமிழ்ப் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

  இனக்குழுக்களின் வட்டார மொழிகளையும் பண்பாடுகளையும் அழித்தொழித்து பொது மொழியையும் பண்பாட்டையும் கட்டமைப்பதானது பேரினவாத ஒடுக்குமுறையாகவே இனங்காணப்படும். வட்டார வழக்குகளும் அதன் இலக்கியங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அதனதன் வழியிலேயே ஏற்றுக்கொண்டு அதன் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதே பொருத்தமாக இருக்கமுடியும்.

    தேசிய அடையாளம் போல செந்தரப்படுத்தப்பட்ட தனித்தமிழ் அடையாளமும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். பொதுத் தமிழின் அதிகாரத்துடனும் பண்பாட்டுப் பாசிசத்துடனும் வட்டார மொழி வழக்காறுகளும் அடித்தட்டு மக்களும் தொடர்ந்து போரிட வேண்டிவரும்.

  இறுதியாக, அரசுக் கருத்துருவச் செயல்பாடு மற்றும் நிறுவனமயமாக்கல் ஆகியவற்றின் மூலமாக மொழியை வளர்த்தெடுக்க முயல்வது அவலை நினைத்து உரலை இடிப்பது போலாகும்.
    
நன்றி:- கேப்பியார் இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக