வெள்ளி, மே 18, 2012

பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் தமிழக அரசு


பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் தமிழக அரசு
  
         -மு.சிவகுருநாதன்

    தேர்வாணையத்தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. விண்ணப்பங்கள் பெறுவதில் தள்ளு முள்ளு, அடிதடி நடப்பதை ஊடகங்கள் வழி அறியமுடிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோக முறைகேடுகளால் தர்மபுரியில் காவல்துறை அட்டூழியம் அரங்கேறியது.

   இவற்றில் அரசு எந்திரத்தின் ஆணவ மற்றும் அலட்சியப்போக்கு இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது. நாட்டில் படித்தவர்கள் எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் அரசின் துறைகள் செயல்படுவது கேவலமானது.

  ஆனால் சுமார் 1600 மருத்துவப் படிப்பு இடங்களுக்காக இன்னும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் 25000 மருத்துவப்படிப்பு விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தும் தொடர்ந்து கூட்டம் அலைமோதுவதாக செய்திகள் வருகின்றன.

  பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும் முனைப்புடன் இருப்பது தெரிகிறது. தங்கள் குழந்தைகள் என்ன மதிப்பெண் எடுப்பார்கள் என்றுகூட தெரியாத நிலையில் இவ்வாறு அதீத ஆர்வக்கோளாறுடன் செயல்படுவதில் இருக்கும் முனைப்பு  அக்குழந்தைகளின் வேறு நலன் சார்ந்த நடவடிக்கைகளில் மட்டும் ஏன் இல்லை என்று கேட்கத் தோன்றுகிறது.

  +2 தேர்வு முடிவுகளை வெளிவருவதற்கு முன்னதாக பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் வேலையை அரசு செய்வது அநியாயமானது. +2 தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட எவ்வித ஏற்பாடும் இல்லாத நிலையில் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். 

   +2 தேர்ச்சி பெறாதவர்கள் கூட இப்போது விண்ணப்பம் வாங்க வாய்ப்புள்ளது. +2 மதிப்பெண் பட்டியலுடன்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனும் போது  ஏன் முன்னதாக விண்ணப்பங்களை விநியோகிக்கவேண்டும்?  நுழைவுத்தேர்வு இல்லை என்ற நிலையில் அரசின் இந்தக் கொள்ளையை யாரும் கண்டுகொள்வதில்லை. எதிர்கட்சிகளுக்கு இதையெல்லாம் கண்டுகொள்ள நேரமில்லை. கல்வியாளர்களாவது குரல் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக