வியாழன், மே 17, 2012

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்

                                                                                –மு.சிவகுருநாதன்


(14.05.2012 அன்று திருவாருரில் நடைபெற்ற சோலைசுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் கருத்தரங்கம் குறித்த பதிவு.)

 









 
 
     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் (தமுஎகச) சார்பில் 14.05.2012 அன்று திருவாருர் காமராசர் திருமண அரங்கில் சோலை சுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்டத்தலைவர் கு.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமுஎகச கிளைச்செயலாளர் கவிஞர் மனிதநேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    தமுஎகச மாவட்டச்செயலாளர் இரா.தாமோதரன் மூன்று கருத்தரங்கச் சொற்பொழிவாளர்கள் (ச.தமிழ்ச்செல்வன், இரா.காமராசு, சி.அறிவுறுவோன்) பற்றியும் சோலையின் தாண்டவபுரம் நாவல் குறித்தும் அறிமுகம் செய்தார். செந்நெல், தப்பாட்டம், பெருந்திணை, மரக்கால் நாவல்கள் வரிசையில் தாண்டவபுரம் நாவல்சிறப்பாக வெளிவந்துள்ளதை குறிப்பிட்டுப் பேசிய அவர் இந்நாவல் எவரையும் எம்மதத்தையும் இழிவு செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
    தமுஎகச மாநிலக்குழுவைச் சேர்ந்த சு.தியாகராஜன் சில கேள்விகளை முன்வைத்தார். பன்னாட்டு கம்பெனிகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், சங்கம்  வைத்துக்கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. அதைப்பற்றியெல்லாம் எழுதாமல் சைவமதத்தைப் பற்றியும் திருஞானசம்மந்தர் பற்றியும் நாவல் எழுதவேண்டிய அவசியமென்ன?  இவற்றை எப்படி முற்போக்கு என்று சொல்வது? திருஞானசம்மந்தர் மனோன்மணி உறவுச்சித்தரிப்புகள் எனக்கு ஆபாசமாகத் தொன்றுகிறது. நமது எதிரிகள் நாளை பகத்சிங் பற்றிகூடஇவ்வாறு ஒரு அவதூறான புனைவை உற்பத்தி செய்தால் நாம் என்ன செய்வது? என்று வினாக்கள் எழுப்பி இதற்கு கருத்தரங்க உரையாளர்கள் பதில் சொல்ல வேண்டுமென்ற கோரிக்கை வைத்து அரங்கில் அதிர்ச்சி அலைகளை எற்படுத்தினார்.

    பின்னர் பேசிய தமுஎகச  மாநிலச் செயற்குழுவைச் சேர்ந்த கவிஞர் களப்பிரன் கடந்த இரண்டு நாட்களாக டி.செல்வராஜின் தோல், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் ஆகிய நாவல்கள் பற்றிய கூட்டங்கள் நடைபெற்றன. இன்று சோலை சுந்தரபெருமாளின் தாண்டவபுரம் நாவல் குறித்த இக்கருத்தங்கம் நடைபெறுகிறது. வேறு எந்த அமைப்பிலும் இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கவாய்ப்பில்லை என்றார்.

அவர்மேலும்பேசியதாவது: 
 
   இந்துத்துவஅமைப்புகள், சைவமடங்கள் ஆகியவற்றின் எதிர்ப்பிற்குப் பின்னால் நாவல் விற்பனை அதிகரித்துள்ளதோடு போதிய கவனிப்பையும் பெற்றுள்ளது. தமிழையும் சைவத்தையும் காப்பாற்றும் இந்நாவல் இந்துத்துவத்தின் பக்கம் சாயும் அபாயம் இருப்பதையும் நாம் உணரவேண்டும்.



   பின்னர் கருத்தரங்க உரையாற்றவந்த ஆய்வாளர் சி.அறிவுறுவோன், பரதக்கலைக்கும் சைவமதத்திற்கும் உள்ள தொடர்பை இந்நாவல் பேசுகிறது. எனது ஆசிரியரான ந.கோபாலய்யர் எழுதிய  தமிழ்நாட்டு பிராமணர்கள் என்ற நூலில் சில விஷயங்கள் காணக் கிடைக்கின்றன. தமிழ் அரசர்கள் தில்லை வாழ் அந்தணர்களிடம் முடிசூட்ட வேண்டுகின்றனர். அதற்கு அவர்கள் மறுத்து விடுகின்றனர். மதுரையில் தமிழ்ச்சங்கம் உருவான பின்னணியை இதன் மூலம் நாம் தெளிவாக உணரமுடியும்.

    சிவலிங்கவழிபாடு, தேவதாசிமுறை ஆகியவற்றிற்குள்ள உறவை ஆய்வாளர் பெங்களூர் குணா தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரது ஆய்வை பலர் எற்பதில்லை. சிவலிங்க வழிபாடு சிந்து சமவெளியில் இருந்ததை ஆய்வாளர் பூர்ணசந்திரஜீவா ‘சிந்துவெளியில்முந்துதமிழ்’ என்ற தனது நூலில் தெளிவுபடுத்துகிறார்.

     ராஜீய உறவுகளுக்கு பொதுமொழி அன்றும் இன்றும் அவசியமாக இருக்கிறது. பிராகிருதம், பாலி, தமிழ் ஆகியவற்றிற்கு எதிராக இங்கு பிராமணமொழியான சமஸ்கிருதம் பொதுமொழியாக கட்டமைக்கப்பட்ட்து. வடமொழி vs தமிழ், வருணம் vs தமிழ், சாதி vs தமிழ் ஆகிய முரண் எதிர்வுகளுக்குள் அன்றைய தமிழ்ச்சமூகம் போராடியிருக்கிறது.  இங்குதான்  நான்மறை ஓதி (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்ஆகியவைஅல்ல.) சிவலிங்க வழிபாட்டை திருஞானசம்பந்தர் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

     பழங்காலத்தில் மீமாம்சம் என்றொரு பிரிவு இருந்தது. இப்பிரிவு பெருங்கடவுட்கொள்கையை எதிர்த்து உருவானதாகும். இவர்கள் சிறு தெய்வவழிபாட்டை ஆதரித்தவர்கள். அக்காலத்தில் இவர்களே கடவுள் மறுப்பாளர்கள்.

அக்காலத்தில் திணைச்சமூகமே தொல்குடி பொதுவுடமைச் சமூகமாக இருந்தது. இது ஆய்வாளர்கள் பலர் ஒப்புக்கொண்ட கருத்தாகும். அந்த வகையில் இந்நாவல் ஒரு சிறப்பான வரவு என்றார்.

     இரா.தாமோதரன் தனது அறிமுக உரையில் விவசாயி தோற்றம் உடைய சி.அறிவுறுவோன் என்று சொல்லி அவரது தொடக்ககால இயக்கப்பின்னணி குறித்து விரிவாக விளக்கினார். தோற்றம் எப்படியிருப்பினும் புறப்பொருள்வெண்பாமாலை, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு என நீண்ட இவரது பேச்சு ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியரை ஒத்திருந்தது.

    அடுத்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் முனைவர் இரா.காமராசு பேசினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

     மணிக்கொடி எழுத்தாளர்கள் மற்றும் தி.ஜா. போன்றோர் மேட்டுக்குடி மொழியை தஞ்சை மொழியாக கட்டமைத்திருந்த நிலையில் அடித்தளமக்களின் வாழ்க்கையைமொழியை தங்களது எழுத்துகளில் வடித்தவர்களில் சி.எம்.முத்து (இடதுசாரி இயக்கத்தில் இல்லாவிட்டாலும் கூட) ,  சோலைசுந்தரபெருமாள் ஆகியோர் முக்கியமானவர்கள்.

     இந்நாவலில் தான் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் பார்வைகளாக கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்தார்.

01.நீண்டமுன்னுரை, பின்னட்டைக்குறிப்பு, பாரதி புத்தகாலய விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் போன்றவை இந்நூல்  படைப்பு என்பதைவிட ஆய்வு என்பதான தோற்றத்தை அளித்ததை உணரமுடிந்தது. படைப்பில் உருவாக்கப்படும் புனைவுகள் ஆய்வுகள் வழி உருவாவதில்லை. இங்கு உருவான சர்ச்சைகளுக்கும் இதுவும் ஒரு காரணமாகத் தோன்றுகிறது.

02.சோலையின் முந்தைய நாவல்களினின்று வேறுபட்ட மொழிநடை, பக்கங்கள் அதிகம். இருப்பினும்  இந்நாவல் திணைச் சமூகப்பண்பாட்டு அடையாளங்களைச் செம்மையாகப் பதிவு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

03.சமணத்தை எதிர்த்து சைவத்தை தூக்கிப்பிடிக்கும் போக்கு.சங்கரமடம், சைவமடம் ஆகியவற்றிற்கு இடையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. பெருஞ்சமயத்தை பின்பற்றி நிற்பது வெகுமக்கள் மரபு இல்லை.  கடவுள், அரசன் ஆதிக்கம் சார்ந்த பேரடையாளங்களின் திசைவழியே மரபு-பழமை பற்றிய புரிதல்களையும் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

04.இந்துத்துவ ஆட்களின் மிரட்டல்களுக்கு சோலை பயப்படத் தேவையில்லை. அவருக்கு இடதுசாரி இயக்கங்கள், அமைப்புகள் என்றும் பாதுகாப்பு அரணாக துணை நிற்கும்.

   இறுதியாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்தரங்க நிறைவுரையாற்றினார்.  அந்த உரையின் சில பகுதிகள் கீழே தரப்படுகிறது.

    மறுவாசிப்பு  இடதுசாரிகள்காலங்காலமாக செய்து வருவதுதான். அண்ணா கம்பரசம் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஜீவா கம்பராமாயணப் பெருமைகளை தமிழகமெங்கும் பரப்பினார். சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழிலக்கியங்களை நா.வானமாமலை, கே.முத்தையா போன்றோர் மறுவாசிப்பு செய்ததன் தொடர்ச்சியாக சோலை சுந்தரபெருமாள் இந்த  நாவலில் செய்துள்ளார்.

     இந்நாவலை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை, திருஞானசம்பந்தரை இழிவுபடுத்துவதாகச் சொன்னாலும் உண்மை அதுவல்ல. சோலை தன் நாவலில் திருஞானசம்பந்தரை பார்ப்பனரல்லாதவர் என்று சொன்னதே இவர்கள் எதிர்ப்பிற்கு உண்மையான காரணம். மதுரை  ஆதீனமாக  நித்தியானந்தா  நியமன  எதிர்ப்பிற்கும்  சாதிதான் காரணம்.

      ஆய்விற்கு முழு உண்மை வேண்டும். புனைவுகளுக்கு நம்பத்தகுந்த உண்மைகளே போதுமானவை. சங்ககாலத்தில் இறுக்கமான மதநிறுவனங்கள் இருந்ததென்று சொல்லும்போது அதிகப்படியான தரவுகள் வேண்டும். இப்போதிருக்கிற தரவுகள் போதாது.  பக்தி இயக்கம், பக்தி இலக்கியம் குறித்து முறையான  – விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

     சைவம் முற்போக்கு என்று சொல்லும் போது இவற்றிற்கு முன்னால் பின்னால்உள்ள விஷயங்களையும் நாம் பேசியாக வேண்டும். முற்போக்கு என்பதற்கு இறுதியான வரையறை அளிக்கமுடியாது. இது காலந்தோறும் மாறுபடக் கூடியது.

சோலையின் வழக்கமான மொழிநடை இதில் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இடையிடையே ‘காண்டு’ என்பது போன்ற தற்கால வழக்குகளும் உள்ளன. இவையும் வேறு சிலவும் அடுத்த பதிப்பில் திருத்தம் பெற வேண்டும்.

     தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட நாடார் இன மக்களுக்காகப் போராடி இயக்கம் கண்டவர் வைகுண்டசாமி. அவரைப் பற்றிய பாடத்தைப் பாடநூற்களில் சேர்க்கக் கோரியபோது அவரை மனிதனென்று சொல்லக்கூடாதென ஆதிக்க சக்திகள் எதிர்த்தன. அதைப்போல திருஞானசம்பந்தர் மனிதன் என்கிறபோதும் எதிர்ப்பு வருகிறது.

     காந்தி, அம்பேத்கர், பகத்சிங் போன்ற அனைவரையும் இன்று இந்துத்துவசக்திகள் கபளிகரம் செய்து வருகின்றன. இவர்களைப் பற்றி நிறைய அவதூறுகள் ஏற்கனவே பரப்ப்ப்பட்டுள்ளன. மேலும் அவதூறுப் படைப்புகள் வந்தால் கருத்து சுதந்திரம் என்ற நிலையில் தான் நாம் அவற்றை அணுகவேண்டும்.

      இந்தியாவில் சாதீயம் குறித்து அம்பேத்கர்,  இ.எம்.எஸ்.,  சுவிராஜெய்ஸ்வால்,  கெய்ல்ஓம்வெத் போன்றோர் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளனர். இவற்றின் பின்புலத்தில் பெரியார் செய்த கடவுள் குறித்தான ஆய்வுகளையும் நாம் தொடர வேண்டும்.

      தமுஎகசவில் அருணன் தனது நாவலில் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்கு மாறான கருத்தை சோலை தாண்டபுரத்தில் சொல்கிறார். இருவரையும் ஒரே மேடையில் வைத்து விவாதிக்க வேண்டும்.

      இந்நாவலில்சைவத்தைஉயர்த்திப்பிடிக்கும்போக்குஉள்ளது. இதுகுறித்துவிரிவானஆய்வுகள்செய்துஅடுத்தபதிப்பில் உரிய திருத்தம் பெறவேண்டும்.  இது எனது சொந்தக்கருத்து.  சங்கத்தின் கருத்தல்ல. சங்கம் எப்போதும் கருத்து சொல்லாது.

     சோலை மிரட்டல்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட பயப்படத் தேவையில்லை. தமுஎகச அவற்றை எதிர்கொள்ளும். அவை நீதிமன்ற வழக்காயினும் நேரடித்தாக்குதலானாலும் தமுஎகச எப்போதும் சோலையுடனிருக்கும்.

    நிறைவாக ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு சோலை மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் தான் தொலைபேசியில் மிரட்டப்பட்ட நிகழ்வை எடுத்துரைத்தார். இன்னும் ஆய்வுகள் செய்ய தன்னுடைய உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றார்.

     தான் இந்நாவலில் சைவமதத்தை ஒருபோதும் உயர்வாக சித்தரிக்கவில்லை என்றும் சொன்னார். எத்தகைய எதிர்ப்புகள் வந்தபோதும் ராஜராஜன் காலத்திய சைவ வரலாற்றைப் பேசும் எனது நாவல் வந்தே தீரும்என்றார் உறுதியாக.  வருகின்ற எனது அடுத்தநாவலான  ‘பால்கட்டு’ – விலும் என் முன்னோர்களின் கதையைத்தான் சொல்லியிருக்கிறேன். எனது பாட்டி சொன்ன பல கதைகள் இன்னும் எழுதப்படவில்லை என்றும் சொல்லி நிறைவு செய்தார்.

     நிறைவாக தமுஎகச மாவட்டப்பொருளாளர் இரா.உமாநாத் நன்றி கூறினார். இக்கருத்தங்கில் பேரா.சிவராமன், பேரா.தி.நடராசன், பேரா.கோ.காண்டீபன், கருக்கல் இதழாசிரியர் அம்ராபாண்டியன், எழுத்தாளர்உத்தமசோழன், அறிவியல் இயக்கம் சந்திரசேகரன், மு.சவுந்தர்ராஜன் மற்றும் தமுஎகச தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக