செவ்வாய், மே 29, 2012

சிற்றிதழ் அறிமுகம்: புறனடை உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம்

சிற்றிதழ் அறிமுகம்: புறனடை

உலகமயச்சூழலில் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் இடம் 
                                                                                  - மு.சிவகுருநாதன்







   தீவிர எழுத்து, படைப்பு, வாசிப்பு போன்ற செயல்பாட்டை இன்றும் உயிர்ப்புடன் தொடர தமிழ்ச் சிறுபத்திரிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவியிருக்கின்றது.  ஆயுட்காலம் மிகக் குறைவாக இருந்தாலும் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் இதழ்கள் தோன்றிக் கொண்டேயுள்ளன.  அந்த வகையில் வந்திருப்பது 'புறனடை' இதழ் 
(ஜனவரி 2012).
    "சிறுபத்திரிக்கைகள் ஒரு வரலாற்றுப் பருவத்தைக் கடந்து இடைநிலை இதழ்களாக மாறிவிட்டன. அவை மரபணு மாற்றப் பழங்கள் போல வண்ணமும் திரட்சியும் நேர்த்தியும் கொண்டுள்ளன.  ஆனால் அவற்றைப் போலவே சாரம்சமும் உயிர்ப்பும் நீக்கப்பட்ட பரிமாண நேர்த்தி மட்டும் கொண்டுள்ளன". (பக். 05).
    "சிறுபத்திரிக்கைகளின் வழி நுண்தளங்களில் உருவான கலை / அரசியல் சிந்தனைகளின் மொத்த திரட்சியையும் அடையாளங்கள், உள்முரண்கள், அரசியல் அனைத்தையும் நீக்கம் செய்து விட்டு வாசிப்புக் கிளர்ச்சிக்கான அறிச்சரக்காக மாற்றுவதைத்தான் அவை (இடைநிலை இதழ்கள்) செய்து வருகின்றன". (பக். 08) என்ற வரலாற்றின் வெற்றிடத்தில் சிறுபத்திரிக்கைகளின் எதிர்பரிமாணம் என்ற பிரவீன் கட்டுரையைப் படிக்கும் போது சஞ்சாரம் இதழ் தொடங்கும் போது நாங்கள் எழுதிய அறிக்கை (சஞ்சாரம் -1 மார்ச் - மே 2008) நினைவுக்கு வருகிறது.
    ஈழம் குறித்த ராஜ்-ன் 'எழுத்துச் சந்தையின் அபத்த அரசியல்' கட்டுரை ஈழப் பிரச்சினைகளில் நமது தமிழ் தேசியர்களின் சாதித்துவ நிலைப்பாடு, நமது நாட்டின் பிற தேசிய இனப் போராட்டங்களை  காணாத போக்கு, விடுதலைப் புலிகளின் செயல்பாடு போன்றவை விமர்சிக்கப்படுகின்றன.
    தென்னாசியாவின் இயற்கை வளங்களின் மீது பன்னாட்டுக் கம்பெனிகள் எப்போது ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பது உண்மைதான்.  இந்தியாவில் பெருமளவு காணப்படும் தோரியம் யுரேனியத்தை விட பன்மடங்கு அணு ஆற்றலைத் தரும் என்பது அணு விஞ்ஞானிகளின் பிழைப்பு வாதமே தவிர வேறில்லை.  தோரியத்தை யுரேனியம் இருந்தால்தான் யுரேனியமாக மாற்ற முடியும்.  அதிக செலவு பிடிக்கும் இந்த முறைகள் நிறைய பின் விளைவுகளைத் தன்னகத்தே கொண்டவை.  இதை விடவும் ஈழத்தில் இன்று காலூன்றியுள்ள இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கமே இந்திய அரசை இயக்குவதாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
    தொலைக்காட்சி ஊடகங்கள் பற்றிய கஜேந்திரனின் கட்டுரை இந்து மக்கள் திரள் தொலைக்காட்சியால் திரட்டப்படுவதை விவரிக்கிறது.

    "அரசியல் தளத்தில் மண்டல் கமி­ஷனை வீழ்த்துவதற்கான தற்காலிக வேலைத் திட்டமாக பொழிப்புரைச் செய்யப்பட்ட அத்வானியின் ரதயாத்திரை என்பது உண்மையில் இராமாயணத் தொடரால் ஒரு பார்வையாளனாக இந்துத்துவத்தின் பக்கம் சாய்வுற்றிருந்தவர்களை செயலூக்கத்தோடு செங்கல் சுமக்க வைக்க முடுக்கிவிடப்பட்ட திட்டமிட்ட தொலை நோக்குடைய செயல்தொகுதியின் ஓர் அலகு" (பக். 14) என்று வரையறுக்கும் இக்கட்டுரை இந்திய அரசை அருந்ததிராய் சொல்வது போல் 'இந்து கார்ப்பரேட் அரசு' எனச் சொல்வது போல் தி.மு.க.வை 'திராவிடக் கார்ப்பரேட் அரசு' என்று வகைப்படுத்தலாம் என்கிறார்.
    "பெருமுதலாளி வர்க்கத்தின் நிர்வாக சபையே அரசு என்ற புரட்சியாளர் லெனின் கூற்றுக்கு இசைய பெருமுதற்குழுமமாய் (Corporate) பருத்து அதன் வழி மக்கள் திரளின் அரசியல் விருப்பத்தை வளைக்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான தேர்வாக தி.மு.க.வும் சன் நெட்வொர்க்கும் வடிவெடுத்துள்ளதை" இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. (பக்.16)
   
    இன்றும் கிராமத்தில் இழிதொழிலாகக் கருதப்படும் சவரத்தொழில் Cavin Care, Naturals, லக்மே போன்ற பன்னாட்சிக் கம்பெனிகள் எந்தச் சாதியினரும் ஈடுபடும் தொழிலாக மாற்றியிருக்கும் பின்புலத்தில் உயர்த்தப்பட்ட சாதியினர், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள், திரைத்துறையினர் போன்றோர் ஆதிக்கம் மிகுந்து இத்தொழிலில் கிராமத்திலிருந்து செல்லும் தொழிலாளி இறுதிவரை தொழிலாளியாகவே மிஞ்ச வேண்டியுள்ளதை "அம்பட்டனும் ப்யூட்டிஷ்யனும் - கார்ப்பரேட் கத்தரிகள்" என்ற இரா. செல்வன் கட்டுரை எடுத்துரைக்கிறது.  இத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் தொந்தரவுகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய பகுதி.
    கா. இரவிச்சந்திரனின் "காலனிய நவீனத்துவமும் சைவப் பதிப்பாளுமைகளும் இசைவும் முரணும்" என்ற கட்டுரை, தமிழில் மடாலயங்கள், ஆதினங்கள் குறித்த விரிவான, ஆழமான  சமூகவியல்சார் நூலொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
    உ.வே.சா., சபாபதி நாவலர் ஆகியோர் நவீன சிந்தனைக் கூறுகளை இனங்காண இயலாத அளவிற்கு சனாதன சமய - சமூகக் கட்டுப்பாட்டில் மூழ்கியிருந்த நிலையில், இவர்களின் சமகாலத்தில் இயங்கிய ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றோரிடம் ஒரு சில நவீனத்துவ கூறுகள் காணப்படுவதாக இக்கட்டுரையாசிரியர் இனங்காண்கிறார்.  சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இவர்களுக்கு பெரிய சலுகைகள் வழங்கிவிட வாய்ப்பில்லை என்றுதான் நாம் கருதவேண்டியுள்ளது.
    "பெளத்தமாய் திமிறும் சங்கப் பிரதிகள் - வரலாற்றின் கலையும் வெளிகள்" என்ற பு. ஜார்ஜ்-ன் கட்டுரை, பவுத்த இலக்கியமான சங்க இலக்கியம் கபளீகரம் செய்யப்பட்டு வைதீக இலக்கியமாக மாற்றப்பட்டு நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவதைச் சாடுகிறது.
    கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த பவுத்தம் 17ஆம் நூற்றாண்டு வரை மலர்ச்சியுற்றிருந்ததை விளக்கும் பல்வேறு ஆவணங்களைச் சுட்டும் இக்கட்டுரை, யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு கி.பி. 640-இல் வந்து தங்கிய போது, அசோகரால் காஞ்சியில் அமைக்கப்பட்ட ஸ்தூபியை கண்டதாக அவர் குறிப்பிடுவதையும் தெரிவிக்கின்றது.  தமிழ் - பவுத்தம், தமிழ் - சமணம் குறித்த விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டியதன் தேவையை இது உணர்த்துகிறது.
   
    பத்தி பகுதியில் தேவராஜன் "ஓரறிவின் பேரறிவு - தந்திர இலைகள்" கட்டுரையில் ஆப்பிரிக்காவில் வாழும் Passion flavour vine என்னும் தாவரம் வண்ணத்துப்பூச்சிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட தகவமைப்பை விளக்குகிறது.  ஆனால் ஆறறிவு என்று சொல்லிக் கொள்ளும் மனிதன் இன்றைய நிலைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனும் போது வருத்தமாகவே உள்ளது.
    தமிழ் நதி "ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்" என்ற பத்தியில் ஈழ நினைவுகளைச் சொல்கிறார்.  இது ஒரு சிறுகதையாகக் கூட பரிணாமம் பெறக் கூடும்.  ஆர். அபிலாஷின் "அப்பாவின் புலிகள்" சிறுகதை இடம் பெற்றுள்ளது.  ஆர். அபிலாஷ், அருள், என்.டி. ராஜ்குமார், பிரவீன், ஆன்டனிராஜ், ஹெச். ஜி. ரசூல், வா. மணிகண்டன் ஆகியோரின் கவிதைகளும் இதழில் உள்ளன.
    கவிஞர் குட்டி ரேவதியின் 17 பக்க விரிவான நேர்காணல் இடம் பெற்றுள்ளது.  பரந்த அளவில் விரிவாக விவாதிக்க வேண்டிய நேர்காணல் இது.  இதிலிருந்து குட்டி ரேவதியின் சில கருத்துக்கள் மட்டும் கீழே...

01. எனக்கான 'உடலரசியல்' மற்றும் 'பாலுரிமை' நான் அறிவிப்பதையே, ஓர் இருளப்பெண்ணுக்கேயானதும் எனத் திணிப்பது நகைப்புக்கு இடமானது இல்லையா? (பக். 19)

02. நாங்கள் (கவிஞர்கள்) இப்படி உதிரிகளாக இயங்குவது கூட தற்கால நவீன இலக்கியத்தின், செயல்பாட்டின் தொடர்ச்சியான வழிமுறை என்றே நினைக்கிறேன். (பக். 20)


03. நான் 'அறம்' குறித்த கோட்பாட்டாளராக மாற விரும்பவில்லை.  அதைப் பழகுபவராகவே இருக்க விரும்புகிறேன். (பக். 20)

04. பிரமிளின் தொடர்ச்சி நான்! நம் அறிவு மரபின் தொடர்ச்சி என்பதே சனாதனச் சிந்தனைகளின் மீதான கல்லெறிதல்தான்! (பக். 20, 21)


05. எங்களுக்குள்ளான (மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி) விமர்சனங்கள் பற்றி நான் சிந்திப்பதே இல்லை.  ஆனால் நாங்கள் எல்லாருமே அவரவரின் தனித்துவ கருத்தியலில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். (பக். 26)

06. இடதுசாரிகள் மீதான என்னுடைய விமர்சனமும் லீனாவினுடையதும் வெவ்வெறு தன்மைகளில் இருக்கிறது. லீனாவின் எழுத்தில் விடுதலைக்கு எதிரான ஆதிக்கச் சிந்தனையைத் தான் பார்க்க முடிகிறது.  ஆதிக்கப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள் தம் சுய அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை விடுதலை என்று பேசுவது சிறந்த நகை முரண்தான். (பக். 29)


07. இன்னும் வரலாற்று நுணுக்கங்களோடும் மொழியியலாளர்களின் திறன்களோடும் சித்தர் தத்துவ, இலக்கியப் பிரதிகளில் உள் நுழைய வேண்டி இருக்கிறது.  அப்போதுதான் வைதீகம் பிரதிகளில் நுழைந்த முறைகளையும் அடையாளங்களையும் பிரித்தறிய முடியும்.  வைதீகம் நுழைந்ததன் வழிதான், பெண்மை நீக்கம், பெண் வெறுப்பு, உடலை இழிவாக நோக்குதல் போன்ற சிந்தனைகளும் ஊடுருவியிருக்க வேண்டும். (பக். 32)


08. சைவப் பிள்ளைகளும் சைவ முதலியார்களும் தங்களுக்கேயான அறிவுத்துறையாக சித்த மருத்துவத்துறையை மாற்றுவதில் முறைப்புடன் ஈடுபட்டார்கள்.  (பாளையங்கோட்டை சித்த மருத்துவக்) கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல நிலைகளிலும் இந்த இரு பிரிவினருக்குமிடையேயான மோதலும் கசப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும். (பக். 33)


09. மற்ற துறை பணியாளர்களிடமிருந்து, எழுத்தாளன் வேறுபட்டவன்.  மொழியின் பிரக்ஞைக்கும், எழுத்தின் பண்பாட்டுக்கும் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறான்.  மற்ற துறைகளைப் போன்றதொரு துறையாக எழுத்துப்பணி இருக்க முடியாது! அதற்காக எழுத்தாளனை நான் எந்த சிம்மாசனத்திலும் இருத்தவில்லை! அவனுக்குத் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதற்கான அவசியமும் வல்லமையும் அதிகம்! (பக். 34)


10. தற்கால சினிமாவை பெண் கையாளுவது என்பதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன.... இலக்கியத்தில் மிகவும் தேர்ந்தவர்களால் கூட சினிமாவைக் கையாள முடியாமல் போயிருக்கிறது... இது இரண்டுமே வேறு வேறு அனுபவங்களை உங்களிடம் கேட்கிற ஒரு கலைவடிவமாக இருக்கிறது. 
(பக். 34)
    மிக நீண்ட நேர்காணலில் இவை சில புள்ளிகள் மட்டுமே. முழுமையாகப் படித்து வாசகர்கள் விமர்சிக்கட்டும். 

பக். 56        விலை ரூ. 15

தொடர்பு முகவரி:

    நா. பிரவீண்குமார்,
    ப்ளாட் எண் 11, 42-வது தெரு,
    அவிநாஷ் நெஸ்ட் - 2-ம் தளம்,
    தில்லை கங்கா நகர்,
    சென்னை - 600 061.
    பேசி: 9710014218, 9884772864,
    மின்னஞ்சல்: puranadai@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக