ஞாயிறு, மே 20, 2012

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள்

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள் 

                                                                                                           - மு.சிவகுருநாதன்

    (கூடங்குளம் அணுஉலை, இந்திய அணுசக்தி திட்டங்கள், ஒப்பந்தங்கள் குறித்த 4 குறுநூற்களின் அறிமுகம்) 





01. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் 
                                                                                    - அ. முத்துகிருஷ்ணன்

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாகத் தொடரும் நிலையில் அப்போராட்டங்கள் மற்றும் அணு உலைகளின் பாதிப்புக்களை விளக்கும் இக்குறுநூல் உயிர்மை 100 வது (டிசம்பர் 2011) வெளியான கட்டுரைகளின் தொகுப்பாகும்.  மிக எளிமையாக அணு உலைகளின் பாதிப்புக்களைச் சொல்லும் இக்குறுநூலை உயிர்மை, தலித் முரசு, வாசல், பூவுலகு, விஜயா பதிப்பகம், சமநிலைச் சமுதாயம், பசுமை நடை, பயணி, NAAM, THE ROOTS, Chennai Solidarity Group for Kudankulam Struggle, தமிழக பசுமை இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் போன்ற பல்வேறு பதிப்பகங்களும் இயக்கங்களும் சேர்ந்து மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளன.  மின்சாரத் தேவையையொட்டி நடுத்தர வர்க்க மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள அணு உலை ஆதரவுக் குரலை அசைக்கும் வல்லமை இந்த குறுநூலுக்கு உண்டு என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

    அணு உலைகள், மனித உரிமைகள் போன்ற மக்கள் பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடும் மற்றும் கருத்தியல் சக்திகளாகத் திகழும் அ. மார்க்ஸ், அ. முத்துகிருஷ்ணன்  போன்றவர்களை அந்நிய கை கூலிகள் என்று கேவலமாக எழுதும் இந்துத்துவ வெறி எழுத்தாளன் ஜெயமோகனுக்கும் அவனது துதிபாடிக் கும்பல்களுக்கும் இந்நூல் பேரிடியாக அமையும் என்பதில் அய்யமில்லை.

             ரஷ்யாவின் VVER-1000 அணு உலைகள் இதுவரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை.  ரஷ்யப் பொறியாளர்களுக்கு இதில் அனுபவமும் இல்லை.  இதிலுள்ள குளிர்விக்கும் கலனில் முதன் முறையாக கடல் நீரைப் பயன்படுத்தி பரிசோதிக்கப் போகிறார்கள்.  கூடங்குளம் - அணு உலையா இல்லை, VVER உலைகளுக்கான பரிசோதனைக் கூடமா? கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பட்டனந்திட்டா, கொல்லம் மாவட்டத்தின் மக்கள பரிசோதனைக் கூட எலிகளா? என்று கேட்கும் போது நடுத்தர வர்க்க மனச்சாட்சி கொஞ்சமாவது அசைய வாய்ப்புண்டு.  அப்போதாவது அவர்களது பொதுப்புத்தியில் ஏதேனும் மாற்றம் நிகழும்.

    கதிரியக்கக் கழிவுகளை பந்தாக உருட்டு வைத்துவிடுவோம் என்று பேசும் அப்துல்கலாம்களுக்கு ப்ளுடோனியம் 239-ன் அரை ஆயுள் 24000 ஆண்டுகள், யுரேனியம் -235-ன் அரை ஆயுள் 70 கோடி ஆண்டுகள் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.  "அரசவைக் கோமாளிக்கு சில கேள்விகள்" - கட்டுரை அறிவுப்பூர்வமானவை.  இதைப்போன்ற எண்ணற்ற கேள்விகள் அப்துல்கலாமை நோக்கிக் கேட்கப்பட்டுவிட்டன.  ஆனால் எதற்கும் பதில் கிடைத்தபாடில்லை.  அவரது இணையக் கட்டுரையை ஒரு பள்ளிக்கூட மாணவனால் கூட மறுக்கமுடியும்.

    அணு உலையின் பாதிப்புகள், கதிரியக்க ஆபத்து, விபத்துக் காப்பீட்டுச் சட்டம், உலகின் அபாய  அணு உலைகள், மாற்று மின்சாரம் போன்ற பல தலைப்புகளில் எளிமையான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுப.உதயகுமார் குறித்த அறிமுகமும் உள்ளது.  "அமெரிக்காவில் வாழ்ந்த பின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல், தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்து வந்த மிகச் சிலரில் உதயகுமார் முதன்மையானவர்", என்று சொல்லப்பட்டுள்ளது.  இது நூற்றுக்கு நூறு சரி.  இப்படி உண்மையான தேச பக்தர் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்படுகிறது.  இருந்தாலென்ன? மகாத்மா காந்தியும் 1947 ஆகஸ்டு 15க்கு முன்பு தேசத் துரோகிதானே! மன்மோகன்சிங்குகள் தேசபக்தர்களாக வலம் வரும் நாட்டில் உதயகுமார்கள் தேசத் துரோகிகளாகத்தான் இருக்க முடியும்.

    64 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூலில் ஆங்காங்கே தேவையான படங்களும், கருத்துப் படங்களும் நிரம்பியுள்ளன.  இது குறித்த விரிவான வாசிப்பு தேவைப்படுவோருக்கு உதவிய நூற்கள் - கட்டுரைகள் பெரிதும் பயன்படும்.  மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்து வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

விலை: ரூ. 15                பக்கம் : 64

வெளியீடு    :    
             உயிர்மை பதிப்பகம்,
            11/29, சுப்பிரமணியம் தெரு,
            அபிராமபுரம், சென்னை - 600 018.
            பேச: 044 - 24993448,
            மின்னஞ்சல்: uyirmmai@gmail.com.

02. உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் வேண்டாம் 
                                                                                 - கட்டுரைத் தொகுப்பு (வெளிச்சம்)

    அண்மையில் ஜப்பான் நாட்டில் சுனாமியால் புகுஷிமா அணு உலை விபத்து நடந்தேறியவுடன்  கூடங்குளம் அணு உலையைத் திறக்க மத்திய அரசும் அணுசக்திக் கழகமும் விரைவு காட்டிய வேளையில் திரண்டெழுந்த மக்கள் புரட்சி பல மாதங்களாக இன்றும் நீடித்திருக்கிறது.  பல்வேறு வடிவங்களில் பல தரப்பிலிருந்து இப்போராட்டங்களை ஒடுக்கச் செய்யப்படும் முயற்சிகள் இன்று வரை தோல்வியைச் சந்தித்துள்ளன.

    கூடங்குளம் போராட்டத்தை ஒட்டியும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் போலி ஆய்வு முடிவுகள் குறித்தும் தீராநதி, காலச்சுவடு, சாளரம், பசுமைத் தாயகம் ஆகிய இதழ்களில் வந்த 5 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 70 பக்கங்களுடன் வெளியான இக்குறுநூல் வெளிச்சம் அமைப்பால் இலவசமாக விநியோகிகப்பட்டுள்ளது

    "அணுமின் நிலையங்கள் தேவையா?" என்ற இரா. அருளின் கட்டுரை, அணு மின்சாரம் தூய்மையானது, மாசுக்கள் குறைந்தது, பொருளாதார ரீதியில் பலனளிக்கக் கூடியது, குறைந்த செலவில் (அப்துல்கலாம் சொல்வது போல் ரூ. 3க்கு ஒரு யூனிட் அணு மின்சாரம்) தயாரிப்பது, 100% விபத்தில்லாதது என்றெல்லாம் அதிகார வர்க்கம் நாளும் சொல்லிவரும் பொய்மைகளை அம்பலப்படுத்துகிறது.

    இந்தியப் பேரரசு தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இரு வேறு அளவு கோல்களை பயன்படுத்துவதையும் உலகமெங்கும் அணு உலைகளுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்தையும் இவையனைத்தும் படிப்படியாக மூடப்பட்டு வருகின்ற செய்தியினை புள்ளி விவரங்களுடன் இக்கட்டுரை விளக்குகிறது.

    அணுசக்தித் திட்டங்களுக்கு மாற்றாக மாற்று எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழக அரசு கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்துவதோடு இனி தமிழ்நாட்டில் அணுசக்தித் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கேரளா, மேற்கு வங்காளம் போல் அறிவிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. அணு உலையை நிரந்தரமாக மூடினால் அச்சத்தைப் போக்கும் சாமியாடிகள் மற்றும் பேயோட்டிகளுக்கு வேலை இல்லாமற்போகும்.

    "கூடங்குளம் காத்திருக்கும் அபாயம்" என்ற மண்குதிரையின் கட்டுரை 1989இல் தூத்துக்குடியில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தலைமையிலான போராட்டம் தொடங்கி தற்போது நடைபெறும் மக்கள் எழுச்சியையும் விவரிக்கிறது.  இத்திட்டம் சோவியத் யூனியனிலிருந்து வருவதால் இடதுசாரிகள் மவுனம் சாதிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.  இது உண்மை அல்ல.  ஆளும் காங்கிரஸ், தி.மு.க., இந்து மத வெறி பா.ஜ.க. ஆகியவற்றுடன் இணைந்து இடதுசாரிகள் அணு உலை ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே எடுத்திருக்கிறார்கள்.

          VVER-1000 அணு உலைகள் இரண்டில் ஒன்று டிசம்பர் 2009லும் மற்றொன்று மார்ச் 2010லும் செயல்பட்டு தலா 1000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து நாட்டின் மின் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது இப்போராட்டம் வலுப்பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.  இந்த கணக்கெல்லாம் உண்மையில் நடக்கக் கூடியவை அல்ல.  இந்திய அரசும், அணுசக்தி அதிகார அமைப்புகளும் உருவாக்கி வரும் மாயைகள் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

    அணுசக்தித் துறையின் அநியாயச் செலவுகளைக் கேள்விக்குள்ளாக்கிய புகழ்பெற்ற அறிஞர் டி.டி. கோசாம்பியின் ஆய்வுப் பொறுப்பு பறிக்கப்படுதல், விஞ்ஞானி கே.எஸ். ஜெயராமன்-ஐ 'Science Today' பத்திரிக்கையில் எழுத விடாமல் தடுக்கப்படுதல், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அறிவியற் கோட்பாட்டுத்துறைப் பேராசிரியர் டாக்டர் தீரேந்திர சர்மா இரவோடிரவாக மொழித் துறைக்கு மாற்றப்படுதல் போன்ற அக்கிரமங்களை அணு உலையால் பயனடையும் போலி விஞ்ஞானிகள் கும்பல், அரசு மற்றும் அரசு அதிகாரிகள், அணு உலை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் கைங்கர்யத்தால் நிகழ்ந்தேறிய விதத்தை இராஜேந்திர பிரசாத்தின் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    இலங்கை இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சேயின் இனவெறி அரசுக்கு உதவி செய்ததன் வாயிலாக தெற்குப் பிராந்தியத்தில் சீனா வெகுவாக காலூன்றியுள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாடும் கேரளாவும் முதல் பலி என்றும் அதற்கு இந்த கூடங்குளம் அணு உலை பெரிதும் உதவும்
என்கிறார் பா. செயப்பிரகாசம்.

    "அரசியல் இயக்கங்களை தூர நிறுத்தியதுதான் போராட்டக் குழு செய்த உன்னதமான செயல்" என்ற மதிப்பிடும் இக்கட்டுரை அணுசக்தியின் விளைவுகளை மக்களிடம் போராட்டக்காரர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

    பா. செயப்பிரகாசம் தனது மற்றொரு கட்டுரையில் அப்துல்கலாம் மன்மோகன், சிதம்பரம், பிரணாப் போன்றவர்களின் பிம்பந்தான் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

    அ. மார்க்ஸ் டிசம்பர் 2011 தீராநதி இதழில் அப்துல்கலாமிற்கு ஒரு கட்டுரையில் எதிர்வினையாற்றியிருந்தார்.  அதுபோல பல்வேறு கட்டுரைகள் இதழ்களிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன.  பெரிய கட்டுரைகளைத் தவிர்த்து அவற்றைச் சேர்த்து இந்த இலவச வெளியீட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

விலை: இல்லை        பக்கம்: 70

வெளியீடு    :   
             வெளிச்சம்,
            கு. பால்ராஜ், வழக்கறிஞர்,
            செயல்பாட்டாளர்கள் பொதுமேடை,
            35 A, முடங்கியார் சாலை, ராஜபாளையம். செல்: 94434 56023.

03. இந்திய அணுசக்தித் திட்டம் - அறிவிப்புகளும் உண்மையும் 
                                                                                                      - சுவ்ரத் ராஜு

    'மும்பை அரசியல் - பொருளாதார ஆய்வுக் குழு'வின் 'இந்தியப் பொருளாதாரம் பற்றிய நோக்குகள்' என்ற இதழின் 48வது வெளியீட்டில் இயற்பியலாளர் சுவ்ரத் ராஜு இந்திய அணு ஆற்றல் திட்டங்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.  இக்கட்டுரைகளை அனாமதேயன் மொழி பெயர்த்து தனது வலைப்பூவில் வெளியிட்டிருந்தார்.  வினவு உள்ளிட்ட பல இணையப் பக்கங்கள் இதனை வெளியிட்டன.  இத்துடன் "தி இந்து"  நாளேட்டில் அப்துல்கலாம் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக சுவ்ரத் ராஜும் எம்.வி. ரமணாவும் எழுதிய கட்டுரையயான்றும் இணைக்கப்பட்டு 80 பக்கம் கொண்ட இக்குறுநூல் உருவாகியுள்ளது.

    "அணுசக்திப் புரட்சி என்பது தொழிற்புரட்சியைப் போன்றே" என்று சொல்லி ஹோமி ஜஹாங்கீர் பாபாவிடம் இந்திய அணுசக்தித் துறையை கையளித்த ஜவஹர்லால் நேருவும் அமெரிக்காவிற்கு ஆதரவான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி "அணு மின்சக்தி தூய்மையானது; பாதுகாப்பானது; செலவு குறைந்தது" என்றெல்லாம் பித்தலாட்டம் நடத்தும் மன்மோகன் சிங்கும் ஒரே பாதையில்தான் செல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

    இந்தியாவில் அணுமின்சக்தி உற்பத்தி பற்றிய பொய்யான, ஆர்வக்கோளாறான கணிப்புகளைத்தான் இந்திய அணு சக்தித் துறை (DAE) தொடக்கம் முதலே வெளியிட்டு வருகிறது.  ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், அனில் கடோத்கர், ஜெயின் என்ற வரிசையில் எவரும் உண்மைகளை ஒத்துக்கொண்டதில்லை.  பொய்யான தகவல்களையும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும் அறிவியலின் பெயரால் மக்களை ஏமாற்றவே செய்துள்ளனர்.

    இந்தியாவில் தலைமைக் கணக்கு (CAG) அதிகாரி,  "மார்ச் 1998 முடிய
ரூ. 5291.48 கோடிகளைச் செலவழித்தும் கூடுதல் மின்னுற்பத்தி பெரிய பூச்சியமே" என்று தணிக்கை அறிக்கையில் எழுதியதும் 2009 ஆம் ஆண்டிலும் முந்தைய ஆண்டைவிட அணு மின் சக்தி உற்பத்தி 3% அளவிற்கே இருந்ததையும் சுவ்ரத் ராஜு அம்பலப்படுத்துகிறார்.

         முப்படி நிலை அணுமின் திட்டத்தின் மூன்றாவது படிநிலையில் தோரியம் - 232 (Th 232)ஐ யுரேனியம் - 233 (U 233)ஆக மாற்றம் செய்து, இதனை அணுப்பிளப்பு எரிபொருளாகப் பயன்படுத்தி அணுமின்சக்தி தயாரிப்பது.   உலகில் எவரும் செய்யாத நடைமுறைச் சாத்தியமற்ற இம்முறையைத் தொடங்கி 55 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியா இன்னும் முதல் படியிலேயே நிற்பதை எடுத்துக்காட்டுகிறது.

    "அணுசக்தி அமைப்புக்களைக் கட்டுப்படுத்தும் உறுதியான நிர்வாக கட்டமைப்புகள் இல்லை" என்று சொல்லும் ஆசிரியர், பாபா நேருவிடம் தனக்கிருந்த தனிப்பட்ட நெருக்கத்தினைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிற அங்கங்களில் செயல்படும் குறைந்தபட்ச கண்காணிப்பு, சீர் செய்தல் வழிமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதையும் 1954இல் நிறுவப்பட்ட இவ்வமைப்பு கெட்டித் தட்டிப்போன சிறிய அதிகார வர்க்கக் கும்பலால் 55 ஆண்டுகளைக் கடந்த பின்னும் நிர்வகிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்.

    பாபாவின் தொடக்கக் கால கணிப்புக்குப் பின் 55 ஆண்டுகள் ஆனபிறகும் இந்தப் படிநிலைகள் தொடர்பான தொழில் நுட்பங்கள் நம்பிக்கை அளவிலேயே இருக்கின்றன.   முதல் படி நிலை "உலகத்தரத்திலான செயல்பாட்டிலும்", இரண்டாவது படிநிலை "உலகின் முன்னேறிய தொழில்நுட்பம்" என்ற நிலையிலும் மூன்றாவது படிநிலை "உலகளவில் தனித்துவமானது" என்ற நிலையிலும் இருப்பதாக இந்திய அணுசக்தித் துறை கணிப்பதையும் இரண்டாவது படிநிலையான வீரிய ஈனுலை கட்டும் திட்டம் அணு ஆயுதத் தயாரிப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும் சுவ்ரத் ராஜு அம்பலப்படுத்துகிறார்.

    இந்த வீரிய ஈனுலைகளில் எரிபொருளுடன் யுரேனியப் போர்வை உள்ளது.  இப்போர்வை அணு ஆயுதத் தரத்திலான புளூட்டோனியத்தைப் பெற்றெடுக்கிறது.  கல்பாக்கத்தில் கட்டப்படும் PFBR மட்டுமே ஆண்டுதோறும் 140 கிலோ கிராம் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற க்ளாசர் மற்றும் ரமணாவால் மதிப்பீடுகள் இந்திய அரசு பெருமளவில் அணு ஆயுதக் குவிப்பு செய்வதற்கு வழி வகுக்கும் என்பதையும் தெளிவாக்குகிறது.

        "சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அணு மின் சக்தித் திட்டங்கள் பெருந்தோல்விகளைச் சந்தித்த போதும் மத்திய அரசின் பேராதரவைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அணு குண்டு தயாரிப்பதற்கு அதன் பங்களிப்பே"  என்பதை நூலாசிரியர் உறுதி செய்கிறார்.  ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய் போன்ற அணு விஞ்ஞானிகள்,  நேரு, இந்திரா காந்தி, ராஜுவ் காந்தி, வாஜ்பாய், இன்றைய மன்மோகன்சிங் போன்றோரது கூற்றுக்களும் செயல்களுமே இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

    எக்கேடு கெட்டாலும் அணுசக்தித் துறையில் ஏராளமாக முதலீடு செய்வது மேலும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இந்திய அணு சக்திக் கழகத்தை வளர்த்தெடுத்தது, தேசப் பாதுகாப்பு என்ற போலி முகமூடிக்கள் மறைத்துக் கொண்டது போன்றவற்றின் ஊடாக இந்திய மக்களின் வரிப்பணம் பெருமளவில் கொள்ளை போக ஆவன செய்ததுதான் அணு மின் சக்தித் துறையின் கை கண்ட பலன்  என்பது நமக்குப் புரிகிறது.

    அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னுள்ள அரசியல் செயல்பாட்டினை பின்னிணைப்புக் கட்டுரை விளக்குகிறது.  டாக்டர் ஆர். ரமேஷ், டாக்டர். வீ. புகழேந்தி, டாக்டர். வி.டி. பத்மநாபன் ஆகியோரடங்கிய பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவின் கட்டுரையும் கூடங்குளம் அணு உலை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? என்ற சுவ்ரத் ராஜு, எம்.வி. ரமணாவின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

    இறுதியான 9 பக்கங்கள் நீளும் விரிவான  References  வாசிப்புக்கும் ஆய்வுக்கும் வழி கோளும் என்று நம்பலாம்.

விலை         :     ரூ. 50            பக்கம்     :     80

தொகுப்பு    : க. காமராசன்

வெளியீடு    :    
            முகம்,
            20/37, 13வது தெரு,
            அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர்,
            கோவை - 5, போன்: 0422 - 2593938,
            மின்னஞ்சல்     : mugambooks@gmail.com
            இணையம்     : www.mugam.in

04. பேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை
                                                                       - மெய். சேது. ராமலிங்கம்

    இந்திரா காந்தி காலத்தில் தொடங்கப்பட்ட வலிமையான இந்தியா என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி ரா (RAW) போன்ற உளவு அமைப்புகளின் மூலம் தெற்காசியப் பகுதிகளில் தங்களுக்குக் கீழ்ப்படியாத ஆட்சியாளர்களை எதிர்த்து உள்நாட்டுக் கலகங்கள் உற்பத்தி செய்யப்பட்ட முறைகளை, அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதையும் இந்நூல் நினைவுப்படுத்துகிறது.  இதன் தொடர்ச்சியாக வல்லரசுக் கனவின் பிதாமகனான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மேட்டுக்குடி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் உருவாக்கிய இப்பிரச்சாரம் இன்று வரை தழைத்திருப்பதன் உண்மையை விளக்குகிறார்.

    அணுசக்தி இழப்பீட்டுச் சட்டத்தின் மூலம் வெறும் 1500 கோடிகளை மட்டும் கொடுத்துவிட்டு நாட்டு மக்களை பல தலைமுறைகள் அழித்து விடலாம் என்ற நிலையும் அதற்கு மேலான இழப்பீட்டை நம் நாட்டு மக்கள் தலையில் சுமத்த வேண்டும் என்பதுதானே நமது அரசுகளின் நோக்கம்.  வல்லரசுக் கனவிற்கான விலை எமது உயிர்கள் பலிகடாவாக்கப்படுவதை தெரியாமல் பெரும்பான்மையான இந்திய சமூகம் தூங்கிக் கொண்டுள்ளது.

    பல ஆயிரம் கோடிகள் செலவழித்து தயாரிக்கப்படும் அணு மின்சாரத்தை விட காற்றாலை, சூரிய மின்சாரங்கள் செலவு குறைந்தவை.  மாசுக்களற்றவை.  இருப்பினும் நமது அமெரிக்கச் சார்புத் தன்மை நம்மை அடிமைகளாக மாற்றி வருவதை இந்நூல் குறிப்பிடத் தவறவில்லை.

    கதிரியக்கம் என்றால் என்ன? அதன் பாதிப்புகள், அணுக் கழிவுகள் பற்றி மிகவும் எளிமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  அணு மின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துகள், தொடர் கதிரியக்கத்தின் பல தலைமுறைப் பாதிப்பு போன்றவற்றையும் இந்நூல் விவரிக்கிறது.

    அமெரிக்க மற்றும் பன்னாட்டு அணுக் கம்பெனிகளை பாதுகாக்கும் அணு உலை விபத்துக்களுக்கான குடிமை இழப்புச் சட்டம் - 2010-ன் முக்கிய அம்சங்களோடு இச்சட்டமானது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 அளிக்கும் உயிர் வாழும் உத்திரவாதத்திற்கு எதிராக உள்ளதையும் குறிப்பிடுகிறது.

   
           ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து நடந்த பிறகும் இந்திய அரசு, இந்திய அணு சக்தி கழககும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையயன்றால் இதன் பாதிப்பு மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

    அணு ஆயுத வலிமை, நாட்டை முழுமையாக ராணுவமயப்படுத்துதல் போன்றவற்றால் பட்டினிச் சாவுகளும் விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்ற எச்சரிக்கையையும் இந்நூல் விடுக்கிறது.  அணு உலை தொடர்பான மதியின் தினமணி கார்ட்டூன் இரண்டு இடம் பெற்றுள்ளது. 

    சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி 5% என்று உள்ளது.  இது தவறு.  மரபுசாரா மாற்று மின்னுற்பத்தி சுமார் 12% ஆகும்.  இம்மாதிரியான பிழைகள் இருப்பினும் கூடங்குளம் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் இந்த நூலையும் நாம் பாராட்டலாம்.

விலை     :     ரூ. 20                பக்கம்     : 38

வெளியீடு    :   

            சுற்றுச் சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பு,
            24, ராஜுவ் காந்தி நகர், எடமலைப்பட்டிப்புதூர்,
            திருச்சி - 620 012.
            செல்        :    94431 43380, 94426 10605.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக