சனி, மே 19, 2012

சிற்றிதழ் அறிமுகம் மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்


சிற்றிதழ் அறிமுகம்

மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்    -மு.சிவகுருநாதன்



(தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாட்டிற்கான கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ்)

   திருவாருர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து அம்ரா பாண்டியனால் கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் மார்ச்-ஏப்ரல்-2012 சமீபத்தில்தான் என் பார்வைக்கு வந்தது.

  48 பக்கங்கள் நிறைந்த இந்த இதழ், எந்த இசத் திற்குள்ளும் அடைபடாமல் தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாடு ஆகியவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுமென பிரகடனம் செய்கிறது.

  தமிழ்த் தேசியப் பொதுவுடைமை கட்சி (ததேபொக) பெ.மணியரசன் நேர்காணல், தியாகு, பா.செயப்பிரகாசம் ஆகியோரின் கட்டுரைகளைப் பார்க்கும்போது வழக்கமான தமிழ் தேசியத்திற்குள் இதழ் அடைபட்டுவிடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் ஆகியவற்றை மறுக்கும்போது தமிழ்த் தேசியம் மட்டும் இவற்றிலிருந்து எவ்வாறு மேம்பட்டது என்று மணியரசன் விளக்கவேண்டும். ஆனால் செய்வதில்லை. தேசியம் ஒரு பாசிசம் என்ற கருத்தில் உடன்பாடில்லையென்றால் இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் ஆகியவற்றை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும்.

  தமிழ்ச்சூழலில் பெரியாரை ஆதரித்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் பெரியாரை எதிர்த்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் பெரியாரின் இந்துத்துவ எதிர்ப்பை கணக்கில் கொள்வதில்லை. எனவேதான் இந்துத்துவவாதிகளுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வதில்கூட இவர்கள் வெட்கப்படுவதில்லை.

   சமகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள்ப் போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானதாகும். தமிழகத்தின் அதிகாரத்தை மாறி மாறி சுவைக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பெரும்பான்மையான பொதுமக்களும் இப்பிரச்சினையில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து நாம் ஆராயவேண்டிய நேரமிது. ஜனநாயகம் பற்றிப் பேசும் நாம் இவற்றை ஏற்றுக்கொள்ளமுடியுமா?  நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது சாத்தியமா என்றும் யோசிக்கவேண்டும். இங்குதான் தமிழ் தேசியர்களும் தமிழ் அறிவுலகமும் பெற்றிருக்கின்ற வீழ்ச்சி புலப்படும்.

  அப்துல் கலாமின் கூடங்குள விஜயம் மக்களிடம் அவரின் முகமுடி கிழிந்ததைத் தவிர வேறெந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவரின் இலங்கைப் பயணத்தில் மீனவர்கள் நலன் சார்ந்ததாகச் சொல்லப்பட்ட கருத்துகள் பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதரவான குரல். அப்துல் கலாம் உள்ளிருப்பது பன்னாட்டு மூலதன, அணு ஆயுத, போர்த்தளவாட விற்பனை முகவரின் முகம். இவரின் இந்துத்துவ முகத்தைகூட மன்னிக்கலாம். ஆனால் பன்னாட்டு கைகூலி முகத்தை மன்னிக்கவே முடியாது.

  (இங்கு ஓர் இடையீடு:- இந்துத்துவத்தின் பின்புலத்தில் சுதேசிக் கருத்தாக்கம், தமிழ் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு இருப்பதால்தானோ என்னவோ தமிழ் தேசியர்கள் இந்துத்துவத்துடன் இணக்கம் கொள்ள வைக்கிறது.)

  ப.பரிதி பாண்டியனின் சுட்டுவிரல் பத்தியில்  நையாண்டி ரசிக்கும்படியாக உள்ளது. குமுதம் அரசு, உயிர்மை மனுஷ்யபுத்திரன் போன்றோர் இவரின் எள்ளலுக்குத் தப்பவில்லை. தொடரட்டும்.

  கல்வி பற்றிய பாலமுரளி வர்மன் கட்டுரை நடப்பு கல்விமுறையில் உள்ள குறைகளைச் சுட்டுகிறது; அங்கலாய்க்கிறது. ஆனால் மாற்றுவழிகளைப் பற்றிப் பேச மறுக்கிறது. இடதுசாரி, வலதுசாரி என அனைவரும் ஒழுக்கக்கல்வி பற்றிப் பேசுகிறார்கள். எந்தவகையான ஒழுக்கக்கல்வி என்பதில்தான் பிரச்சினை வருகிறது.

   சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சொன்னதற்கேற்ப இரா.மோகன்ராஜன், தாமிரா ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இரா.காமராசு, பசு.கவுதமன், பால செழியரசு, கோ.அருணகிரி, கலைபாரதி ஆகியோரது கவிதைகள் முதல் இதழில் வெளியாகியுள்ளன. அனார் கவிதைத் தொகுப்பு விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.

   இதழ் தொடர்ந்து வெளியாக வேண்டுமென்பதே நாமனைவரின் எதிர்பார்ப்பு.

தனி இதழ் ரூ 15 
ஆண்டு சந்தா ரூ 100 
மூன்றாண்டு சந்தா ரூ 250

தொடர்பு முகவரி

5/103, முதன்மைச் சாலை,
அசேசம்-614001,
மன்னார்குடி.

தொலைபேசி 04367255694
அலைபேசி 7598428694
மின்னஞ்சல் pandianamra@gmail.com

1 கருத்து:

மு.சிவகுருநாதன் சொன்னது…

கருக்கல் இதழாசிரியர் அம்ரா பாண்டியன் மின்னஞ்சலில் சொன்னது

கடந்த மூன்று தினங்களாக பன்மை பார்த்து வருகிறேன்.மிக சிறப்பான பதிவுகள். திருவாரூர் சோலை நூல் விமர்சன அரங்க பதிவு,இன்று எங்கள் கருக்கல் இதழ் பதிவு எல்லாம் படித்தேன். எந்த இசமுமின்றி இதழ் வரும் என்ற எனது உரைக்குப் பிறகும் இடம் பெற்ற சில படைப்புகளை வைத்து அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். எந்த சாயலுமில்லாத இதழாக கருக்கல் இருப்பதை போகப் போக உணர்வீர்கள்.
நன்றி
அம்ரா பாண்டியன்

கருத்துரையிடுக