இறுகிப்போன, தட்டையான, மிகக்குறுகலான பார்வை
-மு.சிவகுருநாதன்
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (The National Counter Terrorism Center - NCTC) அமைக்கப்படுவதால் மத்திய - மாநில அரசுகளிடையே ஏற்பட்டுள்ள உறவுச்சிக்கல் குறித்து இன்றைய (25.05.2012) தினமணி நடுப்பக்கத்தில் உதயை மு.வீரையன் 'உரிமையும் உறவும்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம், மத்திய-மாநில உறவுச்சிக்கல்கள் ஒருபுறமிருக்க பயங்கரவாதம் தொடர்பான அரசுகளின் கருத்துருவாக்கத்தை எவ்வித கேள்வியும் இன்றி மிகவும் தட்டையான பார்வையுடன் பல கட்டுரைகள் எழுதப்படுகிறன. இவற்றை தினமணி போன்ற இதழ்கள் ரொம்பவும் அறிவுப்பூர்வமானதாக வெளியிடுகிறன. இவைகளைக் கொண்டும் மக்களின் பொதுப்புத்தியில் பயங்கரவாதம் பற்றிய அரச கருத்துருவாக்கம் பதிய வைக்கப்படுகிறது. இந்நிலையில் அரச பயங்கரவாதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டுகிறது.
இக்கட்டுரையைப் படிக்கும்போது நமக்குள் எழும் சில வினாக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
01.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு யாரெல்லாம் காரணம்? பயங்கரவாதம் - தீவிரவாதம் என்ற ஒற்றைச் சொல்லால் இதை எப்படி அணுகமுடியும்?
02.1999 கார்கிலில் நடந்தது உண்மையில் ஒரு போரா? இதனால் பலனடைந்தவர்கள் யார்?
03.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிக்கல்கள் ஏன் ஏற்பட்டன? அவற்றை நமது அரசுகள் எவ்வாறு எதிகொண்டன?
04.மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (1980) அரசு ஏன் விலக்கிக்கொள்ள மறுக்கிறது? இந்த கோரிக்கைக்காக ஐரோம் சானு ஷர்மிளாவின் உண்ணாவிரதம் பல்லாண்டுகளாக இன்றும் தொடர்கிறதே.
05.ராஷ்டிரிய ரைபிள்ஸின் தலைமையகம் முன் பெண்கள் ''INDIAN ARMY RAPE US'' என்ற பாதாகைகளுடன் போராடவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது?
06.தண்டகாரண்யப் பகுதிகளில் நடைபெறும் இயற்கை வளங்கள் கொள்ளை போக அனுமதிக்கும் அரசுகள் மாவோஸ்ட் பழங்குடிகளை மட்டும் ஏன் தீவிரவாதிகளாக பார்க்கிறது?
07. மேற்கு வங்காளம், ஒரிசா, பஞ்சாப், குஜராத் ஆகிய பல மாநில அரசுகள் பல்வேறு கொடிய அடக்குமுறை சட்டங்கள் இயற்றி மக்களை வதைத்துவருகிறன.
08.மிசா, தடா, பொடா போன்ற கொடிய அடக்குமுறை சட்டங்கள், ராணுவம், காவல்துறை, பயங்கரவாதத் தடுப்பு மையம் ஆகியவற்றை மட்டும் நம்பி மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் ஜனநாயக அரசுகளை கேள்வி கேட்காமல் மத்திய-மாநில உறவுச்சிக்கல் குறித்து மட்டும் பேசுவது ஏற்புடையதா?
09.நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வுகளை நாடாமல் அரசும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கண்டிக்க மனம் வராதது ஏனோ?
10.ஐந்தாண்டுகளுக்கு ஓர் முறை வாக்களிப்பதினால் மட்டுமே மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிடுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக