புதன், டிசம்பர் 09, 2015

17. இந்தியத் தத்துவங்களுக்கு அடைப்படை நாத்திகமே.



  17. இந்தியத் தத்துவங்களுக்கு அடைப்படை நாத்திகமே.
                 (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                      மு.சிவகுருநாதன்


(‘இந்திய நாத்திகம்’ என்னும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா  வின் நூல் சாமி மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக டிசம்பர் 2013 இல் வந்துள்ளது. அந்நூல் குறித்தப் பதிவு இங்கே.) 



        இந்திய தத்துவம்: ஓர் அறிமுகம் – வெ.கிருஷ்ணமூர்த்தி (படைப்பாளிகள் பதிப்பகம், 2008), உலகாயதம் – தோதாத்ரி (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2010) போன்ற தேவிபிரசாத் சட்டோபாத்யாயா வின் நூற்களும், பண்டைய இந்தியா – ஆர்.எஸ்.நாராயணன் என்கிற ஆர்.எஸ்.என்.சத்யா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மூன்றாம் பதிப்பு, செப். 2008), இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – சிங்கராயர் (விடியல் பதிப்பகம், அக். 2011) போன்ற டி.டி.கோசாம்பியின் நூற்களும் இந்திய வரலாற்றில் பகவத் கீதை – கே.சுப்பிரமணியன் (விடியல் பதிப்பகம், ஜூலை 2006) என்ற பிரேம்நாத பசாஸ் -ன் நூலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்ச்சூழலில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இது போன்ற நூற்கள் இந்திய தத்துவம், வரலாறு குறித்த அறிமுகம் மற்றும் புரிதலைத் தந்துள்ளன. நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்க முடியாதவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக  அமைந்துள்ளது.

   இதுவரையில் தமிழில் வெளியாகாத தேவிபிரசாத் சட்டோபாத்யாயா வின் நூலான ‘இந்திய நாத்திகம்’ (Indian Athesism) என்ற நூல் சாமியால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயத்தால் டிசம்பர், 2013 இல் வெளியாகி உள்ளது. 17 தலைப்புகளில் 344 பக்கங்கள் நிறைந்த இந்நூலில் இந்திய தத்துவ மரபுகள் அனைத்திலும் உள்ள நாத்திகத்தன்மையை பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்துகிறது. 

  ஆசிரியரைத் தாண்டிச் செல்வதுதானே மாணவர்களின் சிறப்பு. அந்த ஆசிரியர்களுக்கும் அதுதான் பெருமையாக இருக்க முடியும். இந்திய தத்துவங்களை வெறும் இந்துத் தத்துவங்களாக கண்ட டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இவரது ஆசிரியர். அவரது கருத்துகளை மறுதலித்து புதிய ஆய்வு முறையை உருவாக்கியவர் மார்க்சியரான தேவிபிரசாத். இந்நூல் கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துக் கொள்வோம்.

  இந்திய ஞான மரபின் பிரதிநிதிகளிடையே உடன்பாடு இருந்தது என்று சொன்னால், அது நாத்திகம் பற்றிய கருத்தில்தான். இம்மரபில் தலைசிறந்தவர்களில் பலர் நாத்திகர்களாகவே இருந்து வந்துள்ளனர். இவர்கள் தர்க்கம் மூலம் அடைந்த பகுத்தறிவை புறந்தள்ளியே கடவுள் இருப்பை ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர். எனவே இவர்கள் பகுத்தறிவை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இத்தகைய அலாதியான, ஒப்புயர்வற்ற சூழல் உலக தத்துவ வரலாற்றில் எங்குமில்லை. 



  இந்திய நாத்திகம் பெற்றிருந்த தத்துவச் தற்சார்பு, இது குறித்து இந்திய ஞானிகளிடமிருந்த கருத்தொற்றுமை ஆகியவற்றை நாத்திகத்தின் பலமாகக் கொள்ள முடியும். 

   இந்தியாவில் நிலவிய எல்லா தத்துவப் போக்குகளிடம் கொண்டிருந்த உறவு, தத்துவ முதிர்ச்சி பெற்ற நாத்திகமும், முரண்பட்ட பழமை நம்பிக்கையும் இணைந்திருந்த தன்மை, கடவுள் பற்றிய மாயைகளை முற்றாக நிராகரித்துவிட்டு மறுதலிக்கவேண்டிய நூற்றுக்கணக்கான மாயைகளை சுதந்திரமாக உலவவிட்டது, மூடநம்பிக்கைகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிய பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தாதது போன்றவை நாத்திகவாதத்தின் பல்வீனங்களாகப் பட்டியலிடப்படுகின்றன. 

   “இந்திய தத்துவம் சாராம்சத்தில் ஆன்மீகவயமானது”, என்கிற கற்பிதத்தைக் கட்டமைத்த டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் போன்ற சிலர் அப்போதும் இருந்தபோதிலும், ஆதிகாலத்திலும் இடைக்காலத்திலும் சிந்தனையாளர்கள் நாத்திக நூற்களை எழுதிக் குவித்துள்ளனர். 

    வேதப் பழமைவாதிகள் தங்களை ஆத்திகர் என்றும் தமது எதிரிகளை நாத்திகர் என்றும் அழைத்துக் கொண்டனர். வேதத்தின் மேன்மையை ஒப்புக்கொள்வதைப் பொருத்தே அவற்றின் அர்த்தத்தைப் பெற்றன. வேதத்தை வழி மொழிந்தவர் ஆத்திகர்; மறுத்தவர் நாத்திகர். கடவுளை நம்புவதும் நம்பாததும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினை, என்று கடவுளை முற்றாக கைகழுவிய பூர்வ மீமாம்ச தத்துவம் ஆத்திக கருத்துடன் ஒன்றியிருந்தது சான்றாக காட்டப்படுகிறது. 

  சைவர்களும் பாசுபதர்களும் பக்தி மார்க்கத்தின் பிரதிநிதியாக இருந்தனர். இவர்களது தத்துவம் சிறப்பானதாக இல்லை. இவர்கள் வேதத்தைப் பொருட்படுத்தாதது அல்லது அரைகுறையாக கண்டது பழமைவாதிகளை எரிச்சலூட்டியது. இவர்களைத் தொட்டால் பாவம், பாவத்தை நீக்க குளிப்பது என்று  பழமைவாதிகள் தீர்மாணித்தனர். இங்கு கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு ஒரு பிரச்சினையே இல்லை. வேதமே இங்கு முதன்மையாகப் பார்க்கப்பட்டது. 



    வேதாந்தம் (உத்திர மீமாம்சம்), நியாய வைசேஷிகம் ஆகிய இரண்டையும் தவிர்த்து பூர்வ மீமாம்சம், சாங்கியம்,  பவுத்தம், சமணம், சாருவாகம், உலகாயதம், பிரஹஸ்பத்யம், யோகம் உள்ளிட்ட அனைத்துத் தத்துவங்களும் நாத்திகத் தத்துவங்களே. இந்திய தத்துவங்களில் பழமையானது பூர்வ மீமாம்சம். இது நாத்திகத்தின் தீவிர ஆதரவான ஒன்று. ஆகவே இந்திய ஞான மரபில் நாத்திகத்தைக் கேள்விக்குள்ளாக்க விரும்பினால், அதைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல்வேறு தத்துவ ஆசான்களை புறந்தள்ளியாக வேண்டும். இது நடக்கக் கூடிய ஒன்றல்ல.

   யோகத்திற்கு தத்துவ அடிப்படை ஏதுமில்லை. பதஞ்சலி தன்னுடைய யோக சூத்திரத்திலுள்ள பயிற்சிகள் மூலம் சாங்கியத்துடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்றார். அப்பிணைப்பு மிகவும் தளர்வாக கட்டப்பட்டது. 

   கடவுள் (ஈஸ்வர) வாதத்திற்கும் இயற்கை (ஸ்வபாவ) வாதத்திற்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதம் பின்னாட்களில் இந்தியச் சிந்தனையில் தோன்றிய மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையே நிகழ்ந்த மோதலின் முன்னோட்டம் எனலாம்.

   இயற்கை வாதத்தை உலகாயதர்களும் சாங்கியர்களும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் சாருவாகம் எனவும் அறியப்பட்ட ஆதி இந்திய சுதந்திரச் சிந்தனையாளர்கள் இயற்கை வாதத்தின் மிகத் தீவிரமான வடிவத்தை பிரதிநிதித்துவப் படுத்தினர். கரடு முரடான பொருள் முதல்வாதம், கண்ணுக்குத் தெரியாத எதையும் நம்பாமை, வேத மேலாதிக்கத்தை ஏற்காமை, சமரசமற்ற பகுத்தறிவு இன்னும் சரியாகச் சொல்வதானால் விதண்டாவாதம் ஆகியன இவர்களது தொடக்க காலகுணம். 

  இந்திய தத்துவத்தில் மிகப் பழமையானது சாங்கியம். அதன் நாத்திக உள்ளடக்கம் இந்தியச் சிந்தனை வரலாற்றில் புகழ்பெற்றது. சாங்கியத்தின் தொன்மை, தொடக்க காலத்திலிருந்த செல்வாக்கு, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவை இதன் மீதான் ஈர்ப்பிற்குக் காரணங்களாகும். உலகாயத்தைத் தவிர வெறெந்த தத்துவமும் சந்திக்காத சேதாரத்தைச் சாங்கியம் எதிர்கொண்டது. சாங்கியத்தில் இப்போது தப்பிப் பிழைத்திருப்பது சிறு துண்டுகள் மட்டுமே.

    ‘உலகப் படைத்தவர்’ என்கிற கற்பனையைப் போல ‘அதற்கொரு நன்னெறிக் காவலர்’ என்கிற அனுமானமும் அவசியம் இல்லாதது; ‘வினையே அதன் விளைவுக்குக் காரணம் என்ற சாங்கிய சூத்திரம். ஆண்டவனே உலகை ஆள்பவர் என்றால் சாதாரண அரசர்களைப் போல அவருக்கு சொந்த நலன்கள் இருக்கமுடியும்.

    மனித குலத்தைத் துன்பக் கடலிருந்து மீட்பதைத் தனது தலையாயக் கடமையாகக் கருதி அதற்கான நடைமுறைத் திட்டத்தை வகுத்திட முனைந்த புத்தருக்கு, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி பிறவற்றைவிட முக்கியமானதாக பட்டிருக்கும். ஆனால் தன் சீடர்கள் இவற்றை விவாதிப்பது வீண்வேலை என்று புத்தர் கருதினார். 

    கடவுளை நம்பிக்கொண்ட ஒருவர் தலைவிதியை மறுப்பது சாத்தியமில்லாதது. எனவே புத்தர் கபிலர் வழியை பின்பற்ற விரும்பியது தெளிவாகிறது. நாத்திகம் பவுத்தப் பார்வையில் முக்கிய அங்கம் என்றால் அது மிகையல்ல. 

   புத்தரின் மறைவுக்குப் பின் ராஜகிருகத்தில் கூட்டப்பட்ட முதல் சபையில் நடத்தை விதிகள் வகுக்கப்பட்டன. பழமையான விதிகள் காலவதியானவை என்று ஒரு தரப்பு எதிர்க்க, இரண்டாவது சபை அவர்களை ஏற்க மறுத்து சபையை விட்டு வெளியேற்றியது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட 10,000 பேர் ‘மகாசங்கம்’ என்ற தனிச்சபை கண்டனர். இவர்கள் மகாயான முன்னோடிகள் பழமையாளர்கள் தேரவாதிகள் எனப்பட்டனர். இவர்கள் ஹீனயான முன்னோடிகள் ஆவர்.

   அசோகரின் ஆதரவில் கூட்டப்பட்ட மூன்றாவது சபையில் இரண்டு பிரிவுகள் தோன்றின. பழமைவாதிகளால் (தேரர்கள் அல்லது ஸ்தவிரர்கள்)  11 குழுக்கள் புத்த மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. 

  வெளியேறியவர்கள் (சர்வாஸ்தி வாதிகள்) நாளந்தாவில் தஞ்சமடைந்தனர். பிறகு இவர்கள் மதுரா, காஷ்மீர், காந்தாரம் ஆகிய இடங்களில் பரவினர். இவர்கள் கனிஷ்கர் ஆதரவில் நான்காவது சபையைக் கூட்டி (கி.பி.100) அதில் பெருமளவில் இலக்கிய பணியாற்றினர். அது ‘விபாசம்’ அல்லது ‘மகாவியாபம்’ எனப்பட்ட ‘அபிதம்ம வியாசம்’ எனப்பட்டது. அவர்கள் விபாசத்தின் சீடர்கள் என்ற பொருள்படும்  வைபாசிகர்கள் என அழைக்கப்பட்டனர். வைபாசிக வாதம் வலுவான தரவுகளின் அடிப்படையில் கடவுளின் இருப்பை ஆணித்தரமாக மறுக்கிறது.

   பவுத்தத்தின் இன்னொரு பிரிவான மகாயானம் கி.பி.முதல் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்றது. இவர்கள் தங்களை ‘மாபெரும் ஊர்தி’ என்று உயர்த்திக் கொண்டவர்கள் தேரவாதிகளை (ஹீனயானிகள்) ‘கீழ்மையான ஊர்தி’ எனத் தாழ்த்தினர். புத்தகால தொடக்க வடிவங்களிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டனர். 

   கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க முதல் மகாயான நூலை  எழுதியவர் நாகார்ஜூனர். இவரது உரைகள் மாணவர்களால் சமஸ்கிருதத்தால் எழுதப்பட்டது. பின்பு நேப்பாள மொழியில் பெயர்க்கப்பட்டது. இந்நூலில் நாத்திக உள்ளடக்கம் இருப்பினும் மாயாவாதத்தைப் பின்பற்றி நிற்பது பெருங்குறையாகப் பார்க்கப்படுகிறது. 

    சமணம் பவுத்தத்திற்கு முந்தைய இந்திய ஞான மரபு. அதில் இறுதி மற்றும் 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர். பார்சவநாதர் 23 வது தீர்த்தங்கரர். இவர் மகாவீரருக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சமண மரபுப்படி அதன் தோற்றம் மிகவும் ஆதிகாலம் என்று சொல்லப்படுகிறது. இம்மரபு கடவுட்கொள்கையை பொருட்படுத்தவேயில்லை. இவ்வுலகின் படைப்பாளியும், தார்மீக நெறியாளருமாகக் கடவுள் விளங்குகிறான் என்பதை கனவிலும் கருதவில்லை. சமணத்தின் செயல்பாடுகள் எவ்வளவு விந்தையாகத் தோன்றினாலும் அதன் நாத்திக உள்ளடக்கம் வியப்பை உண்டாக்குவது. 

   சமண சமய அறிஞர்கள் ஹரிபத்ரர் (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு), குணரத்னா  (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) ஆகியோர் நியாய-வைசேஷிகத்தை தமது தருக்க விவாதங்களின் மூலம் எதிர்கொண்டனர். 

   வேதங்கள் என்றால் ‘மலைப்பூட்டக் கூடிய இலக்கிய திரட்சி’ என்ற பொருள்படும். இவை மரபுப்படி சம்ஹிதைகள், பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள்  என நான்காக பகுக்கப்படுகின்றன. இறுதியாக உள்ள உபநிடதங்கள் வேத முடிவு அல்லது வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஓராயிரம் ஆண்டுகள் அதற்கு மேலும் மக்களின் சிந்தனைப் போக்குகள் உறைந்துபோய் கிடந்ததாகச் சொல்வது வரலாற்றிற்கு முரணானது. 

   மீமாம்ச பிரதிநிதிகளில் குறிப்பிடத்தகுந்தவர் குமாரிலர். இவ்வுலகில் தீமைகள் இருப்பது, கடவுள் இல்லவே இல்லை என்பதற்கான சான்று என்றவர் இவர். தங்களுடைய தத்துவ அடிப்படைகளை உயர்த்திப் பிடிக்க கடவுளை மறுப்பது ஒன்றே வழி  என்பதில் மீமாம்சகர்கள் உறுதியாக நின்றனர்.

  தொடக்க கால நியாய-வைசேஷிகம் நாத்திகக் கொள்கையின்பால் கட்டப்பட்ட இந்திய ஞான மரபாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அது தனது தத்துவ நிலைப்பாட்டில் பிறழ நேர்ந்தது. சாரம்சத்தில் அறிவியல் சார்ந்த கருதுகோளான அணுவியல் கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் தத்துவ நோக்கிலான தேவையின் பொருட்டே பிற்காலத்தில் இவர்கள் கடவுளை ஏற்க வேண்டு வந்தது. அணுவியக் கருதுகோள் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அரிதான அக்காலத்தில் முன்னேற்றமான ஒன்று எனினும் பல்வேறு பல்வீனங்களைக் கொண்டிருந்தது. அணுச்சேர்க்கைகளை இவர்களால் விளக்க இயலவில்லை. 

     இறுதி இயலில், நாத்திக மரபின் தொடர்ச்சி மார்க்சியத்தைத் தவிர வெறெங்கும் காணமுடியாது என்பது சொல்லப்படுகிறது. நாத்திக பரப்புரை பற்றி லெனின் 1922 இல் பேசும்போது, “இப்பொருள் குறித்த எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களையும் மொழிபெயர்க்கவும் அல்லது குறைந்தபட்சம் அவற்றில் தகுதியானவற்றை மீளாய்வு செய்யவும் வேண்டும்”, என்று வலியுறுத்துகிறார்.

  நவீன வாழ்வின் துயரங்களிலிருந்து மீள மார்க்சியக் கல்வி மட்டும் போதுமானது என்று மார்க்சியவாதி எண்ணினால் அது பெருந்தவறாகும். அம்மக்களிடம் பல்வேறு தரப்பட்ட நாத்திகப் பிரச்சார எழுத்துகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மதம் அவர்களின் மண்டையில் எற்றியிருக்கும் மந்த உணர்விலிருந்து விடுபட சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் கொண்டு, அவர்களை உசுப்பி விடவேண்டும். இன்னும் வளர்ச்சியடையாத மக்களிடம் மதம் சார்ந்த கேள்விகளின்பால் அறிவார்ந்த கண்ணோட்டத்தையும், மதங்கள் பற்றிய அறிவார்ந்த விமர்சனத்தையும் தோற்றுவிக்கும் முறைகளை மார்க்சியர்கள் கற்றுக் கொள்ளவேண்டும். 

   இன்றைய தமிழ்ச்சூழலுக்கு அவசியமான நூல் இது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்க முடியாது. மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவு, திருத்தம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் மொழிபெயர்ப்பாளர் சாமிக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். 


இந்திய நாத்திகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா 
தமிழில்:  சாமி 

பாரதி புத்தகாலய வெளியீடு,
முதல் பதிப்பு: டிச. 2013
பக்கங்கள்: 344
விலை: ரூ. 220 

வெளியீடு:

பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

பேச: 044 – 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com 

1 கருத்து:

கருத்துரையிடுக