26. கல்வி அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள்
(இந்நூல்
என்
வாசிப்பில்…
புதிய
தொடர்)
மு.சிவகுருநாதன்
(புலம் வெளியீடாக (ஆகஸ்ட் 2015) வந்துள்ள ‘வகுப்பறையின்
கடைசி நாற்காலி’ என்ற ம.நவீன் எழுதிய நூல் குறித்த பதிவு.)
நூல் முன்னட்டை |
வழக்குரைஞர்
பசுபதி தொடங்கிய ‘மை ஸ்கீல்ஸ்’ அறவாரியத்திற்குத்
தொடராக எழுதப்பட்ட பத்திக் கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 23 கட்டுரைகளை புலம்
நூலாக்கியுள்ளது. நூலாசிரியர் ம.நவீன், ‘வல்லினம்’ (இணைய இதழ்), ‘பறை’ (ஆய்விதழ்),
யாழ் (மாணவர் இதழ்) ஆகியவற்றின் ஆசிரியர். கவிதை, சிறுகதை, திறனாய்வு என பல்வேறு களங்களில்
செயல்படுபவர். மலேசியாவில் பள்ளி ஆசிரியராக இருக்கும் அவர் தனது கல்விப்புல அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னுரையில் பிரளயன், “கற்பித்தலென்பது கலகம் செய்வதே”யென்ற நீல் போஸ்ட்மேன்,
சார்லஸ் வெய்ன் கார்ட்னெர் நூலை மேற்கோளைக் காட்டி கலகம் என்பதற்கான விளக்கமளிக்கிறார்.
“நிலவுகிற அனைத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற நமது ‘பொதுப்புத்தியோடு’ மல்லுக்கு
நிற்பதும், அதில் புதிய திறப்புகளை ஏற்படுத்த முயல்வதும்கூட ஒரு கலகச் செயல்பாடுதான்”,
என்று சொல்லி நவீனின் வகுப்பறை அனுபவங்களை இதனோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறார்.
இதுவரையில் பின்தங்கிய மாணவனைத்தான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்திவருகிறது
நமது கல்வியமைப்பு. இவர் தன்னை பின்தங்கிய ஆசிரியனாக அறிமுகம் செய்துகொள்வதோடு, “ஒவ்வொரு
ஆசிரியருக்கும் அவர் செய்யும் பணி மீதும் அதன் அமைப்பு மீதும் விமர்சனம் இருக்கவேண்டும்”,
என்று சொல்கிறார். இதுதான் இந்திய மற்றும் தமிழகச் சூழலில் சிக்கலான அம்சம். இங்கு
அமைப்பைப் புரிந்துகொண்டு அதற்கு எதிராக செயலாற்றுபவர்கள் வெகு சொற்பமே.
நாள்குறிப்பு போல் விரியும் இந்த சிறிய பத்திக் கட்டுரைகள் கல்விமுறையையும்
ஆசிரியர்களையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றன. மலேசியக் கல்விமுறைக்கும்
தமிழகக் கல்வி முறைக்கும் பெருத்த வித்தியாசம் இல்லை. நாம் ‘கடைசி பெஞ்ச்’ என்பதை அவர்கள்
‘கடைசி நாற்காலி’ என்கிறார்கள் அவ்வளவே.
மாணவர்களில் பின்தங்கியோர் ஒருவரும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு
செய்யும் நவீன், பின்தங்கிய ஆசிரியர்கள் உண்டு என சொல்லத் தயங்கவில்லை. அவர் தன்னையும்
ஒரு பின்தங்கிய ஆசிரியன் என்று சொல்லி, லியோனார்டோ டாவின்சியை தெரியாத ஆசிரியர்கள்
பற்றியும் சொல்கிறார்.
வாழ்வு நான்கு சுவரைத் தாண்டியது என்பதை மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கு
யார்தான் சொல்வது? புரிய வைப்பது? அலுமினியத் தகட்டிற்கு குளிர்பான டின்னைப் பயன்ப்படுத்தலாம்
என்பதையும் செம்மறிஆடு சொன்னதைக் கேட்கும், வெள்ளாடு சொன்னதைக் கேட்காது என்பதையும் சொல்லிக்கொடுக்க படைப்புத் திறனுள்ள மாணவர்களே வேண்டும்.
ஓவியப்பாடம் இல்லாததால் வகுப்பைவிட்டு வெளியேறும் சிறுமி, கால்பந்தை உதைத்து
விளையாட கனவு காணும் சிறுவன், மாணவிகளுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட விரும்பும்
சிறுமி சர்வேஷ் என அங்கீகாரத்திற்கு ஏங்கும் குழந்தைகள் ஏராளம். அவர்களது இருப்பை அங்கீகரித்தால்
அவர்கள் கல்வி கற்பதும் மறுத்தால் கற்க மறுப்பதும் நடந்தேறுகின்றன.
எய்ட்ஸ் நோயை 1000 வெள்ளியில் குணப்படுத்தும், 690 வெள்ளிக்கு ஞானம் வழங்கும்
கார்ப்பரேட் சாமியார்கள் நிறைந்த உலகில், பாடத்திட்டங்களும் அறிவை மழுங்கடிக்கும்,
மாணவர்களை மொண்ணையாக்கும் தன்மை இருப்பது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளை உருவாக்கும்
முயற்சி. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ ஓர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு நாட்டுக்கும்
வீட்டுக்கும் நல்லக் குடிமகனாகத் தக்கவைப்பதுதான் அதிகார வர்க்கச் செயல்பாடு. இதைச்
செய்வது கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பாடத்திட்டங்கள், பாடநூற்கள் ஆகியவற்றின் பணி.
பல அய்ரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று, “மீன் இயல்பாய் நீந்துவதைப் போன்று,
பறவை இயல்பாய் பறப்பதைப் போன்று, நீர்நாய் பந்தை லாவகமாய்ச் சுழற்றுவதைப் போன்று”,
கல்வி நடைமுறைகள் எல்லாம் இயல்பாய் அமைந்தால்
மிகவும் நன்றாக இருக்குமல்லவா!
மாணவர்களுக்குத் தொடர்பில்லாமல் தயாரிக்கப்படும் புத்தகங்களை வாசிக்கக் கட்டாயப்படுத்தும்
பெரும்பாலான ஆசிரியர்கள் எதையும் வாசிப்பதில்லை என்பதுதானே நகைமுரண். ஆசிரியர்களிடம்
“நீங்கள் கடைசியாக படித்த புத்தகம் எது?”, என்ற கேள்வியின் பதிலைக் கொண்டு உங்கள் குழந்தையின்
எதிர்காலத்தை ஊகிக்கலாம் என்கிறார். திருட்டுத்தனம் செய்து வெற்றிபெற கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்களிடம் இதற்கும் ‘ரெடிமேட்’ பதில்கள் இருக்கவே செய்யும். நூலின் அட்டையை மாற்றி
‘ஆய்வு’ செய்து பேராசிரியர்களாகும் நம்மவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?
வகுப்பறையின் கடைசி நாற்காலி
ம.நவீன்
வெளியீடு: புலம்
விலை:
ரூ. 70
பக்.:
96
முதல்
பதிப்பு: ஆகஸ்ட் 2015
புலம்,
332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005.
பேசி: 98406 03499
மின்னஞ்சல்: pulam2008@gmail.com
புலம்,
332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005.
பேசி: 98406 03499
மின்னஞ்சல்: pulam2008@gmail.com
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக