புதன், மே 13, 2020

பள்ளிகளுக்கு வெளியே கல்வி


பள்ளிகளுக்கு வெளியே கல்வி


(நூலறிமுகம்… தொடர்: 030)


மு.சிவகுருநாதன்


(பாரதி புத்தகாலயத்தின்  ‘Books for Children’  வெளியீடாக வந்த,  விழியன்  எழுதிய  ‘காலப்பயணிகள் மற்றும் ஒரே ஒரு ஊரிலே…’ என்ற இரு சிறார் நாவல்கள்  குறித்த பதிவு.)




      விழியன் என்ற உமாநாத் செல்வன் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர். குழந்தை இலக்கியப் படைப்பாளியாக மட்டுமில்லாமல் செயல்பாட்டாளராகவும் வலம் வருபவர். குழந்தைகளுக்கான பல்வேறு வகையான கதைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவர் நூற்றுக்கணக்கான கதைகளையும் சுமார் 20 குழந்தைகளுக்கான சிறிய நூல்களை எழுதியுள்ளார். 

     தனிக் குடும்பச் சூழலில் இன்று குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா, பாட்டிகள் இல்லை. எனவே அந்த இடத்தை பெற்றோர்களே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு கதை சொல்ல பெற்றொருக்கு உதவியாக வலைப்பூ (https://vizhiyan.wordpress.com/) மற்றும் பல வாட்ஸ் அப் (Vizhiyan Kids Stories)  குழுக்களில் கதைகளை தொடர்ந்து எழுதியும் பதிவிட்டும் வருகிறார். கணிதவியலில் ஆர்வத்தைத் தூண்டும் பதிவுகளையும் எழுதுகிறார். 

   கல்வி உரிமைகள், குழந்தை உரிமைகள் சார்ந்தும் இயங்கி வருகிறார். 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தேவையில்லை என்றும் ‘கொரோனா’ சூழலில் தற்போது 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 ஐ ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க, ஒரு குழுவை ஒருங்கிணைத்தார். கல்விக்கொள்கை சார்ந்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார்.  
  
    ‘The Rise’ அமைப்பினரின் உலகத் தமிழ் விருதுகள் 2019 இல் ‘குழந்தை இலக்கியச் சுடரொளி’ எனும் விருதைப் பெற்றுள்ளார். தமுஎகச, விகடன், கலகம், நியூஸ் 7 யுவரத்னா, சேஷன் சன்மான், சென்னைப் புத்தகக் காட்சி, தேசிய சிறுவர் புத்தக் கண்காட்சி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 

    இவரது குழந்தை இலக்கியப் பணிகளுக்காக உலகத் தமிழ்ச் செம்மொழிப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (Honorary Doctorate) அளித்துச் சிறப்பித்துள்ளது. இவருடைய சிறார் கதைகளுள் ஒன்று (சூரியன் எடுத்த விடுமுறை) இலங்கையில் ஐந்தாம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றது. 


     ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாம்களில் தனது குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டார். அப்போது ஆண்டுக்கு 300 நாள்களுக்கு மேல் இயங்கும் ஒரு அரசுப்பள்ளி மாணவர்களிடம் உரையாடி அவர்களது துயரங்களை எழுதி வாங்கி வந்தார். அவர்களுக்கு ‘கஜா’ என்பது எளிதில் மீளக்கூடிய துயரமாகவும் கல்வியே மீளமுடியாத துயரமாகவும் இருந்தது. இத்தகைய குழந்தைகளும் தனது கதைகள் மற்றும் செயல்பாடுகள் வழியே உதவி செய்கிறார் விழியன். 

    அனைத்து வயதுக் குழந்தைகளையும் சென்றடையும் குழந்தை இலக்கியங்கள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறார். வளரிளம்பருவக் குழந்தைகளை முதன்மைப்படுத்தி இலக்கிய ஆக்கங்கள் உருவாக வேண்டும் என உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார். விழியனின் சிறார் நாவல்கள் இரண்டை இங்கு கவனத்தில் கொள்வோம்.

ஒன்று:   காலப்பயணிகள்

    வினய், ராகவ், ஆர்த்தி, ப்ரிதா ஆகிய நால்வரும் காலச்சக்கரத்தில் பயணிகளாக காலத்தின்  முன்னும் பின்னும் பயணிப்பதே இக்கதையாகும். புத்தகம் அளிக்கும் குறிப்பின் மூலம் இவர்கள் பயணிக்கின்றனர். 


    முதல் குறிப்பு: தசரதரின் பிள்ளை. வில்லை முறித்துத் திருமணம் புரிந்தவர். எனவே ராமனைத் தேடிய பயணம். அதற்கு முன்னதாக சஞ்சீவி மலையில் மூலிகை தேடிய அனுமனைக் காண்கின்றனர். “அந்தக் காலத்தில் ஏது டிஞ்சரும் டெட்டாலும்” எனவே மூலிகை வைத்தியம் தான் என்பதை அறிந்து கொள்கின்றனர். 

“அங்கிள் நீங்க இலங்கைக்கு வரும்போது பாலம் எதாவது கட்டினீர்களா? எங்க ஊரில் பெரிய சர்ச்சை நடக்கின்றது தெரியுமா? (பக்.16)

சீதா அண்ட்டி எப்படி இருப்பாங்க? 

நீங்கள் எங்க அங்கிள் பிறந்தீர்கள்?

போன் எல்லாம் இல்லாமல் நீங்க உங்க அப்பா, அம்மாவிடம் எப்படி பேசுவீங்க?

இன்னும் எவ்வளவு ஆண்டு காட்டில் இருப்பீர்கள்?

அனுமன் அங்கிள் உங்க Date of Birth என்ன?

மாலையில் டீவி பார்ப்பீர்களா? என்ன சேனல் உங்களுக்கு விருப்பமானது?

இவ்வளவு தூரம் ஏன் நடந்தே வந்தீர்களா? கார், விமானம் எல்லாம் இல்லையா?”,  (பக்.17)

     என கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தார்கள். குழந்தைகள் கேள்விகள் கேட்பதற்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? ஒரு சிறு அனுமதி மட்டும் போதுமே! “ஏன் இந்த குரங்குகளை போரில் ஈடுபடுத்துகிறீர்கள்?, உங்களுக்குப் பதிலாக உங்களுடைய காலணிகள் ஆட்சி செய்கிறதா?”,  என்று வேறு சில கேள்விகளையும் இந்தக் குழந்தைகள் கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

  அடுத்த புதிர்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி. பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்தவர். வீரத்திற்குப் பெயர் எடுத்தவர். 

   குழந்தைகள் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமபட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்வது, பாடங்கள் அப்படித்தானே இருக்கின்றன? பள்ளி விழாவில் கட்டபொம்மனுக்கு இடமிருக்கிறது; அதுவும் ஒரு சடங்குதானே! 

  குழந்தைகள் கட்டபொம்மனிடம் அதிகம் கேள்விகள் கேட்பதில்லை. எட்டப்பன் பற்றி எச்சரிக்கை செய்கின்றனர். அவரது மனைவி வீரசக்கம்மாளுடன்தான் இவர்கள் அதிக நேரம் இருக்கின்றனர். 

  “நீங்க தான் வீரபாண்டிய கட்டபொம்மனா? ஆனால் நீங்கள் சிவாஜியைப் போல இல்லையே, (பக்.26) என்பதும் “அரசே, ‘மாமனா மச்சானா மானங்கெட்டவனே’ என்ற வசனத்தை நீங்கள் பேசவே இல்லையே?”, (பக்.28)  என்று கட்டம்பொம்மனிடம் வினய் கேட்கும் சுட்டித்தனம் நல்ல நையாண்டியாக உள்ளது. 

    இடையில் புத்தகம் காணாமற்போகும் பதற்றமும், பிறகு கிடைப்பதும், நாடக விழாப் பரிசுகளும் குழந்தைகளுக்கு மகிழ்வைத் தருகின்றன. அடுத்து: வேங்கடரத்தினம், தமிழ்நாட்டின் தலைவர்.

   இதுவரை கடந்த காலத்திற்குச் சென்ற குழந்தைகள் இப்போது செல்லப் போவது எதிர்காலத்திற்குள். (கி.பி. 2300) சக்கர நாற்காலியில் இருக்கும் முதல்வர் வேங்கடரத்தினத்திற்கு கை, கால்கள் இல்லை. “நினைத்தவுடன் கட்டளைகள் பிறப்பிக்கும் கருவிகள் மூலம் கட்டளைகளைப் பிறப்பித்து ஆட்சி செய்து வருகின்றார்” (பக்.42) 

    ஸ்டீபன் ஹாக்கின்ஸ் நம் நினைவிற்கு வந்து போகிறார்.  அந்தக் காலத்தில் நமக்கு கை, கால்கள் ஏன் மூளையும் தேவையில்லை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மட்டும் போதுமானது, என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன இக் காட்சிகள்!

    நெகிழிப் (பிளாஸ்டிக்) பயன்பாட்டைக் குறைத்தது, சூரிய ஒளி போன்ற மாற்று வள ஆதாரங்களைப் பயன்படுத்தியது போன்ற உங்களது செயல்களால்தான்  கி.பி. 2300 இல் நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று முதல்வர் சொல்லி குழந்தைகளுக்கு சூழலியல் புரிதலை ஏற்படுத்துகிறார்.

    வாழ்வின் வெற்றிக்கு காலம்தான் ரகசியக் குறியீடு, இதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை என்பதை உணர்ந்து இவர்கள் வெளியேறுகையில் அடுத்த நான்கு பேர் உள்ளே நுழைகின்றனர். நூலகம், நூலக வாசிப்பையும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க இக்கதை முயல்கிறது. முதலில் இவற்றைப் பெற்றோர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் பாடநூல் சாராத பிற நூல்களை வாசிப்பதும் நூலகங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதும் சாத்தியப்படும்.

    இக்கதையில் வரும் நூலகத்திற்கு அனுப்பும் பெற்றோர் கிட்டத்தட்ட கனவுப் பெற்றோராகத்தான் இருக்க இயலும். பள்ளி முடிந்ததும் தனிப்பயிற்சி, விடுமுறை நாள்களில் வேறு ஏதேனும் சிறப்புப் பயிற்சி என்று ஆண்டுகள் கடந்து, குழந்தைகள் பெரியவர்களாகி விடுவதுதான் நடக்கிறது. 


இரண்டு:    ஒரே ஒரு ஊரிலே…


    அருண், சரவணன், செந்தில், ஆராதனா ஆகிய நால்வரும் பள்ளித் தோழர்கள். இவர்களை மையமிட்டே கதை நகர்கிறது. இவர்களுடன் அசோக், குமார், வரலெட்சுமி மற்றும் சோழவரம்பன் (சோழன்) என்ற நாய்க்குட்டியும் உண்டு. நாய்க்குட்டிக்கு நல்ல பெயர் சோழவரம்பன்! சல்மான் ருஷ்டிக்குத்தான் பெயர் வைக்கத் தெரியுமா?


    சென்ற கதையில் நூலகம் செல்வதை வலியுறுத்துவது போல, இக்கதை விளையாட்டு, சுற்றுலா அல்லது களப்பயணத்தை வலியுறுத்துகிறது. பெற்றோர் அல்லது ஆசிரியர்களுடன் செல்லுபோது ஏற்படும் இறுக்க உணர்வால் குழந்தைகளால் எதையும் கற்றுக்கொள்ள இயலாமற் போய்விடும் என்பதே நடைமுறை யதார்த்தம். அதனால்தான் இங்கு நண்பர்களுடன் செல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      செந்திலின் குடும்பச்சூழல், அப்பா இல்லாத குடும்பத்தில் அண்ணன் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றும் நிலை, பள்ளிக்கட்டணத்தை நண்பன் தன் அப்பாவிடம் போன் செய்து செலுத்துவது, உணவைப் பகிர்ந்துண்ணல் மற்றும் குறும்புத்தனங்களும் கதையில் உண்டு.    

   பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இவர்களது விளையாட்டிடமாக உள்ளது. அதில் சோழனுடன் சேர்ந்து 5 பேரும் கண்ணாமூச்சி விளையாடுவர். இந்த விளையாட்டில் சோழன் நடத்தை தனி அழகுதான்! அந்த இடம் பறிபோக அருகிலுள்ள காலிமனையை சுத்தம் செய்து கிரிக்கெட் விளையாடத் தயார் செய்கின்றனர். அதற்கு வரலட்சுமியின் அம்மா பணம் அளிக்காது, எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் வரலெட்சுமியை விளையாட்டில் நண்பர்கள் சேர்த்துக் கொள்ளத் தயங்குவதில்லை. அவர்கள் குழந்தைகள் அல்லவா!

    ஒரு கிரிக்கெட் விளையாட்டில் ஆராதனா அடித்த பந்து வரலட்சுமி வீட்டுக் கண்ணாடியை பதம் பார்த்தது. உடன் ஆராதனாவிடமிருந்து மட்டையை வாங்கி நானே அடித்தேன் என்று பொய் சொல்லும் செந்தில்; அதற்கு அவன் அளிக்கும் விளக்கம் என கதை நீள்கிறது. 

    குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பெற்றோரின் அனுமதி மற்றும் சுடலைமுத்து (முத்தண்ணா) துணையுடன் அவர்கள் வீட்டருகேயுள்ள மலைக்கோயிலுக்குச் சென்று திரும்புவதுதான் கதை. இவர்களுடன் கூடவே சோழனும் செல்கிறான். 

   இந்த ஏழுபேர் பயணத்தில் சைக்கிள் பயணம் மலைக்கோயிலை நோக்கி… ஒரு ரயில்வே கிராசிங், அசோக்கின் சைக்கிள் டயர் வெடித்தது. அங்கே பஞ்சர் ஒட்ட வேண்டும். காத்திருக்கையில் அங்குள்ள டீக்கடைக்காரரின் குட்டிப்பெண் இவர்களுடன் இணைகிறாள். அவள் பெயரும் ஆராதனா; எனவே குட்டி ஆராதனா. அவளது அப்பாவுடன் அனுமதி பெற்று அனைவரும் மலைக் கோயிலைச் சுற்றிப்பார்ப்பதும் விளையாடுவதும் என மனமகிழ்வுடன் பொழுதைக் கழிக்கின்றனர்.

    கண்ணாமூச்சி விளையாட்டில் கோயிலுக்கு உள்ளே சென்று ஒளிந்த அருண்  அங்கேயே தூங்கிப்போக, குழந்தைகளிடம் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஒருவழியாக அருணைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகின்றனர். மீண்டும் விளையாட்டு, கூத்து என உல்லாசமாக திரும்பி குட்டி ஆராதனா கடையில் டீ குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் அவர்களிம் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. 

   இப்போது அவர்களுக்கு புதிய நண்பர் ஒருவர் கிடைத்தாயிற்று; சோழனுக்கும்தான். வீட்டுக்கு வந்துபோகும் அளவிற்கு குட்டி ஆராதனாவுடன் நட்பு கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பிரிய வேண்டிய கட்டாயம் வந்தபோதும் அவர்களது நட்பு மட்டும் தொடர்கிறது. 

   நமது பள்ளிக் கல்வியில் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. ஆசிரியராக அனுமதியின்றி செய்தால்தான் உண்டு. அதிலும் அவரது அதிகாரம் நீளும். பாடநூலைவிட குழந்தைகளின் பட்டறிவு நிறைய அவர்களுக்குக் கற்றுத்தருகிறது. பள்ளிக்கு வெளியேயும் கல்வி இருப்பதை உறுதி செய்வது பாராட்டிற்குரியது. 

  சுடலைமுத்து (முத்தண்ணா) குழந்தைகளைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு பீடி குடிப்பது பதிவாகிறது. இத்தகைய சித்தரிப்பு இங்கு தேவையில்லை என்று தோன்றுகிறது. நாவலில் வரும் அனைவரும் உயர்குணங்களைக் கொண்டிருக்க, சாமன்ய மனிதனான சுடலைமுத்துவின் சித்தரிப்பு குழந்தைகளிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமல்லவா! இவரது பெயர்கூட ‘பக்கா’ கிராமம்; கிராமப்புற மக்களை நோக்கிய, நகர்சார் மனிதர்களின் சிந்தனையாக இதைக் கொள்ளலாமா! 

    மலைக்கோயிலில், “தட்டையான பெரிய பாறை. புத்தரின் செதுக்கல்கள் காணப்பட்டது. புத்தமதத் துறவிகள் இங்கே அமைதியாக தியானம் செய்வார்கள் போலும்”, (பக்.45) என்றுள்ளது. இதைச் சமணர்கள் என்று சொல்லி இருக்கலாமெனத்  தோன்றுகிறது.        
   
நூல் விவரங்கள்:

 காலப்பயணிகள் மற்றும் ஒரே ஒரு ஊரிலே… (சிறார் நாவல்கள்)    
 விழியன்

வெளியீடு: 

Books for Children  (பாரதி புத்தகாலயம்)
 காலப்பயணிகள்
முதல் பதிப்பு: நவம்பர் 2016
 பக்கங்கள்: 48
விலை: 35
 
  ஒரே ஒரு ஊரிலே…
முதல் பதிப்பு: நவம்பர் 2016
பக்கங்கள்: 48
விலை: 35

தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 13/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக