திங்கள், மே 25, 2020

எல்லைக்கோடுகளின் பாசிசம்!


எல்லைக்கோடுகளின்  பாசிசம்!

மு.சிவகுருநாதன்


       கொரோனா உலகைப் புரட்டிப் போட்டுள்ளது. உலகமய ஏகாதிபத்தியம் இதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது; வருங்காலத்தில் இன்னும் மேலதிகமாகவும் பயன்படக்கூடும். எதையும் பணமாக மாற்றுவதே முதலாளித்துவத்தின் வேலை, அதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல. வணிகத்திற்கு தேச எல்லைகளே இல்லை என்கிறது; கொரோனா மாவட்ட எல்லைகளை மூடுகிறது.

     அரசுகளுக்குக் கூட கொரோனா வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு, எட்டுமணி நேர வேலை உரிமை பறித்தல் போன்ற மகிழ்ச்சிகளில் திளைக்கின்றன. போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோகின்றன. இனி போராடும் சூழல் வாய்க்குமா என்பதே கேள்விக்குறி.

     எப்போதும் போல் பேரிடர்களில் சாமான்ய மனிதனுக்கு எல்லாம் பாதகமே. அவன் அன்றாட வாழ்க்கைக்கே அல்லாட வேண்டிய நிலைதான். எந்த ஒரு பேரிடரின் போதும், பேரிடருக்குப் பின்னும்  துன்பம் மட்டுமே தொடர்கதையாய் நீளும்.

       பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று மாவட்டங்களை மண்டலமாகப் பிரிக்கும் உரிமைகூட மாநில அரசிற்கு இல்லை என்றாகிவிட்டது. மாநில சுயாட்சி என்பது மறைந்து / மறந்துபோன அத்தியாயம். 

     அருகருகே உள்ள மாவட்டங்கள் ஒரே மண்டலமாக இருப்பினும் e pass இன்றி அனுமதியில்லை. ஒவ்வொரு மாவட்டமும் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோட்டைப்போல முடக்கப்படுவது அநியாயமல்லவா!

      அப்போது நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான ஒரு ஆற்றங்கரை கிராமத்தில் நான் பிறந்தபோது, அது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது (கல்வி மாவட்டம்: பட்டுக்கோட்டை). பிறகு நாகப்பட்டினம் மாவட்டமாகி பிறகு ஒன்றாக இணைந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று மூன்றாக உடைந்தது. அந்த மூன்றில் ஒரு துண்டான நாகப்பட்டினம், துளசியாப்பட்டினம் வளவனாற்றங்கரையில் தொடங்கி சிதம்பரம் கொள்ளிடக்கரையில் முடியும். மிக நீளமான இம்மாவட்டம் தற்போது நாகை, மயிலாடுதுறை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

   இந்த இரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. எனவே கொரோனா மற்றும் பிற நோயாளிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் சேர்க்கப்படுகின்றன. ஆனால் பொதுமக்கள் நுழைய வழியில்லை என்றால் எப்படி? கொள்ளிடக் கரைகளில் உள்ள மக்கள் சில கி.மீ. தொலைவில் உள்ள சிதம்பரத்தை நாட முடியாமல் தடுக்கப்பட்டு, ஒரு வசதியுமற்ற மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தை அடைவது எவ்வளவு பெரிய கொடுமை!  

   நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரே பெருநகரம் நாகை மட்டுமே. மருத்துவம் போன்ற முதன்மைத் தேவைகளுக்கு திருவாரூர் மாவட்டத்தையே நாட வேண்டும். அதைப்போல முத்துப்பேட்டையில் (திருவாரூர்) வசிப்போருக்கு அருகிலுள்ள பெருநகரமும் அரசு தவிர்த்த அனைத்துத் தேவைகளுக்கும் அணுகுவது பட்டுக்கோட்டை நகரத்தைத்தான். இப்போது 20 கி.மீ. தொலைவிருந்தாலும் தஞ்சை மாவட்ட எல்லைக்கோடு குறுக்கே நுழைந்து தடுக்கிறது. இவர்கள் 60 கி.மீ. உள்ள மாவட்டத் தலைநகரான திருவாரூக்கு வருவது எப்படி? கொஞ்சம் பெரிய கிராமமான திருவாரூரில் அப்படியென்ன வசதிகள் இருக்கின்றன?

     திருவாரூர் அருகே 8 கி.மீ. மாவட்ட எல்லைகள் முடிந்து விடும் நிலையில், நாகை மாவட்டச் சேர்ந்த  அண்டை கிராம மக்கள் எங்கும் செல்வர்? அரசு எந்திரத்தை தேடி நீண்டதூரம் பயணிப்பது அவர்களுக்கு பல்லாண்டாக விதிக்கப்பட்டது. இன்றையமையாத தேவைகளுக்கு மாவட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்பது கொடுமையானது; வன்முறையானது. அவர்கள் திருவாரூர், திருத்துறைப்பூண்டி என அருகில் உள்ள நகரங்களையே நாட வேண்டியுள்ளது. இதை மாவட்ட எல்லைக்கோடு தடுக்கிறது. இதுதான் எல்லைக் கோட்டின் பாசிசம்.

    மாவட்டம் பிரிப்பது ஏதேனும் ஒரு அறிவியல்பூர்வமான வரம்பிற்குட்பட்டது என்று எண்ண வேண்டியதில்லை. குரங்கு அப்பம் ஒன்றை பிரித்த கதை உங்களுக்குத் தெரியுந்தானே! அதற்கும் மாவட்டப் பிரிப்பிற்கும் வித்தியாசங்களில்லை. இதே நிலைதான் வட்டங்கள் பிரிப்பு மற்றும் மத்திய அரசின் நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு எல்லாம். 

    நாடாளுமன்றத் தொகுதிகளை அப்படியே மாவட்டமாகப் பிரிக்கலாம் என்பதே மத்திய அரசின் அணுகுமுறை.  அங்கு மட்டும் என்ன வாழுதாம்? அது மறுவரையறையில் சில தொகுதிகளைக் காணமாலடித்து விடுகிறது.  புதுக்கோட்டை போன்ற தொகுதிகள் காணமல் போன கதைகளும் உண்டு.

    திருவாரூர் மாவட்டப் பிரிவினையின்போது ஒன்றிய அடிப்படை கணக்கில் கொள்ளப்பட்டது. இரு ஒன்றியங்கள் சேர்ந்து ஒரு வட்டமாக இருக்கும். அப்போது அந்த வட்டாட்சியர் இரு மாவட்ட ஆட்சியருக்குக் கீழ பணியாற்ற வேண்டியும் வந்தது. மதுக்கூர், வலங்கைமான் இரண்டையும் திருவாரூடன் இணைத்தனர். கடும் எதிர்ப்பால் மதுக்கூர் கைவிடப்பட்டு வலங்கைமான் சமாதானம் செய்யப்பட்டது. இவர்களுக்கு 10 கி.மீ. தொலைவிலுள்ள கும்பகோணம் நகரத்தை இன்றியமையாதத் தேவைகளுக்குச் சார்ந்திருக்க வேண்டும். மாவட்டத் தடையால் மக்கள் அவதி மேலும் அதிகமாகிறது.

    எனக்கு அருகிலுள்ள சில எடுத்துக்காட்டுகளையே இங்கு சுட்டுகிறேன். தமிழகம் முழுமைக்கும் இது பொதுவான நிலைமைதான். ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களது விருப்புரிமையை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு மாவட்டங்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர். இதைச் சரி செய்யாவிட்டால் வருங்கால இன்னல்களுக்கு அளவிருக்காது.

   இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இவ்வாறான எல்லைக்கோடுகள் உருவாக்கப்பட்ட போது ரத்த உறவுகள்கூட எல்லைக் கோட்டால் பிரிக்கப்பட்டன. இந்தக் கோட்டை மையமாகக் கொண்டுதான் ரத்த ஆறு ஓடியது. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோதும் எல்லைகோடுகள் கொடுமைகள் அரங்கேறின. இந்த எல்லைக்கோடுகள் கொரோனா சூழலில் சாதாரண மக்களை இன்னலுக்கு உள்ளாக்குகின்றன. இதிலிருந்து மீள என்னதான் வழி? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக