ஞாயிறு, மே 17, 2020

ஊரார் வரைந்த எல்லைக்கோட்டைத் தாண்டுதல்


ஊரார் வரைந்த எல்லைக்கோட்டைத் தாண்டுதல் 

(நூலறிமுகம்… தொடர்: 033)
 
மு.சிவகுருநாதன் 

(கீழாண்ட வெளியீட்டகத்தின்  பிப்ரவரி 2015 இல் வெளியான, துரை. குணா எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற குறுநாவல் பற்றிய  பதிவு.)




    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலரான துரை.குணா ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்னும் சாதியக் கொடுமையின் அவலத்தை அப்பகுதி வட்டாரத்தின் எளிய மொழியில் குறுநாவலாக்கினார். இவரது கவிதைத் தொகுப்பு ‘கீழத்தெரான்’. (வெளியீடு: நன்செய் பிரசுரம், திருத்துறைப்பூண்டி)



    எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், புலியூர் முருகேசன், துரை.குணா போன்றவர்கள் தங்களது எழுத்துகளுக்காக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தோழர் துரை.குணா இக்குறுநாவலுக்காகவும் அதன் பின்னரும் வழக்கு, கைது, மிரட்டல்கள் என சாதிய வெறியர்கள் மற்றும் அரசு எந்திரத்தின் எதிர்ப்புகளையும் ஒருங்கே சந்தித்து வருகிறார். 

       இந்தக் குறுநாவல் மூலம் குளந்திரான்பட்டு கிராமத்திலுள்ள பெண்கள் மற்றும் அங்குள்ள கலாச்சாரம் இழிவுபடுத்தப்பட்டதாக சாதியவாதிகளால் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகள் அளித்தும் அவரது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலமும் நடந்தது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பொ.இரத்தினம், எவிடன்ஸ் கதிர் போன்றோரின் முயற்சியால் பிணை கிடைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவர் மீதான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு  தமுஎகச கண்டன அறிக்கை வெளியிட்டது. 

    சமூக ஆர்வலரான இவர் குளந்திரான்பட்டு ஊரிலுள்ள வெட்டுகுளம் ஆக்ரமிக்கப்பட்டு விளைநிலமானது குறித்து துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டார்.  அதில், இந்திய அரசியல் அமைப்பு விதிகளின் கீழ் பணிபுரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை என்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் போன்ற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது. 



   குளத்தின் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டபோதிலும், அதிகாரிகளை அவதூறாக சித்தரித்தல், இழிவுபடுத்துதல், பொதுமக்களிடம் குழப்பம் ஏற்படுத்துதல் என்ற புகாரின்பேரில் இவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ‘ஊரார் வரைந்த ஓவியம்’ 30 பக்கங்கள் உடைய ஒரு குறுநாவல் என்று சொல்லக் கூடிய அளவிலான சிறிய கதையாகும். இன்றும் கிராமங்களில் தலித்கள் மீது காட்டப்படும் சாதிய வன்மத்தை, ஒரு நிகழ்வின் வாயிலாக அப்பகுதியில் வட்டார மொழியில் எளிமையாகச் சொல்லிச் செல்லும் கதையிது.

    எளிய வட்டார வழக்கில் கொஞ்ச பக்கங்களில் ஆங்காங்கே ஊடும் பாவுமாக இருக்கும் சொலவடைகளும் உவமைகளும் நாவலுக்கு மெருகூட்டுகின்றன. இவை ஆசிரியரின் கைவண்ணத்தையும் உணர்த்துகின்றன. 

“காத்துலே சாயாத வாழ, ஊர் கூத்துல சாஞ்சது”, (பக்.10)

“நீருலே நீந்துன மீனு, சாக நெலத்துல துள்ளன”, (பக்.12)

“ஆளுக்கொழுத்தா அங்குட்டும், அரசன் கொழுத்தா இங்குட்டும் நிப்பான்”, (பக்.13) 

“கொடலுல இருகிறதெல்லாம் கொழுப்புன்னு பேசக்கூடாது”, (பக்.14)

“ஒரு மயிராயிருந்தாலும் சொனே மயிராயிருக்கனுமுண்டா”, (பக்.15)

“ஆத்துல ஒரு காலும், சேத்துல ஒரு காலும் வைக்கிறவன்…”, (பக்.22)

 “செம்புளியாட்டு கெடை மாதிரி இருந்தக் கூட்டம் கொஞ்ச கொஞ்சமா கலஞ்சது”, (பக்.10)

   முன்னடியானுக்கு பங்குனியில் காப்பு கட்டி காத்தான் பாடும் திருவிழாப்பாடலும் உண்டு. (பக்.26)

    சங்கரன் – மாரியாயியின் ஒரே மகனான சாத்த ஊமை என்ற ஜீவபாரதி ஊர்க்கோயிலில் சூத்திரப் பூசாரியிடம்  தாம்பளத்தைத் தொட்டு துண்ணூறெடுத்ததுதான் மோதலுக்குக் காரணமாகிறது. 

    இந்நாவலில் கதைகொல்லி கொஞ்சம் விலகி நின்று ஊரார் பேச்சுகளை, வாக்குமூலங்களை அப்படியே பதிவு செய்வதோடு சரி; பெரும்பாலும் கதைக்குள் மூக்கை நுழைப்பதில்லை. மேலத்தெரு, பறத்தெரு (தலித் தெரு) முரண்பாடுகள், சாதிய வன்மங்கள் அனைத்தும் அவர்களது உரையாடல்களாகவே நாவலில் தொகுக்கப்படுகின்றன. மேலத்தெரு, கீழத்தெரு சாதி முரண்பாடுகள் தலித்களுக்கு எதிராகவென்றால் ஒன்றிணைவது வாடிக்கையான ஒன்றுதான். 



   “அத்தேப் பெரியக் கூட்டத்து நடுவே வச்சிகிட்டு, ஏன் சோத்தான் கன்னலத்துலே காதோடுச் சேர்த்து… ஒரே அரையா அரைஞ்சிப்புட்டாறு, அதுக்கும் பக்கத்துலே நின்ன தாடிக்கார கெழவன் துள்ளிக்கிட்டு வந்து… எப்புறா, தப்படிக்காமே கோயிலுக்கு வந்திய? ‘நாட்டார்’ மருவாதேயேப் போச்சிடா?னு அடிக்க பாய்ந்தான்.

“நம்ம தெரு பாதி பயலுக பயந்து ஓடி மறஞ்சாங்கெ…”

   “விருந்தாடி வந்த பயலுக, வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னவங்கெ ரோசம் பொறுக்க முடியாமே, வரிஞ்சிகட்டிகிட்டு ‘வாங்கடா ஒரு கை பார்போம்’முன்னு அடி, நெறவிபுட்டாங்கே… நெறவி!” (பக்.30&31)

 “தேர் நெல கொண்டு நின்ன எடமெல்லாம் தென்தூசி பறந்தது!

அருவாளோடு கம்பீரமாய் சுத்தி காவலுக்கு நின்ன தெய்வமெல்லாம்
உசுர கையில புடுச்சிகிட்டு கழிஞ்சிக்கிட்டு நின்னுச்சி!

மேல்சாதிகாரனை, கீழ்சாதிகாரன் அட்சிச்சது இதுதான் முதல்முறை.
நம்பவே முடியல், பார்த்த கூத்தாயிக்கே வேத்துபோச்சி!”, (பக்.31) 

     கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதும் தலித் இளைஞர்களின் விழிப்புணர்வும் ஆதிக்க சக்திகளுக்கு பெரும் பீதியை உண்டாக்குகிறது. 

     “என்னைக்கி காட்டுவிடுதியான் இந்த ஊருக்குள்ளே,  இந்தக் கமிணாட்டிக் கட்சியை கொண்டு வந்தானோ, அன்னையிலேர்ந்து இந்த ஊரு குட்டிச் செவராப் போச்சி”, (பக்.08)  மேலத்தெரு ஆதிக்கச் சாதியினரின் பேச்சு இதைத்தான் உணர்த்துகிறது. 

    “அண்ணாச்சாமி தேவன் குதிரேமேல ஏறி வந்து, நம்ம தெரு பொம்புளையல, ‘கண்டாங்கி சேலைய கட்டுங்கடி கண்டார ஓழியலா, கரட்டுக்காலுக்கும் மேலனு’ சாட்டையாலே அடிச்ச ஊருடாயிது”, (பக்.14)

      காலங்காலமாக நடக்கும் இந்த சாதியக் கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு? இடதுசாரி இயக்கங்களின் அணிதிரட்டல் ஒரு கட்டத்தில் நிற்கிறது. அதன் பிறகும் ஆதிக்க சக்திகள் அபாரமாய் வளர்ந்து நிற்கின்றன. தலித் இயக்கங்கள் இருக்குமிடம் தெரியவில்லை. இந்தக் காட்டு விடுதியாரின் கதை நமக்கு அதைத்தான் சொல்லிச் செல்கிறது. 

  “கெழவன் சாதிவெறி தலைவிச்சி ஆடுன அந்தக் காலத்துலேயே அம்பு நாடு ஒம்பதுக் குப்பத்தையும் எதுத்துக்கிட்டு தனியா நின்னு ஏறுக்கட்டுவனவன்”, 

“நம்மாளுக, செருப்புப் போட்டுக்கிட்டு நடக்க முடியாத அந்தக் காலத்துலேயே தோள்ல துண்டப் போட்டு ஜில்லாக் கலெக்டரயே நிக்க வச்சி கேள்வி கேட்டவன்”, (பக்.15) 

  “நடந்தது ஒண்ணும் பெரிய விசயமேயில்ல. இது நம்ம ஊரு, நாமலேப் பேசி தீத்துக்கிறலாம். அதெ வுட்டுப்புட்டு… நான் கட்சியில சொல்லிருக்கேன், கட்சிக்காரனையும் கூட்டத்துக்கு அழைச்சிக்கிட்டு வரேனு கீழத்தெருவுலே ரெண்டு பேரு சொல்றானாம்?”, (பக்.08)

   “இப்போயிருக்கிற தமாத்துண்டு வாண்டுப் பயலுவல்லாம் மெட்ராசு, திருப்பூரு, நாமக்கல்லுனுப் போயி, சம்பாரிச்சி நாலுக்காச கண்ணுலப் பாத்ததும், பேண்டு சட்டையலப் போட்டுக்கிட்டு போனு ஒயற காதுல மாட்டிக்கிட்டு இவனுகப் பண்ற அட்டகாசம் இருக்கே ‘சே… சே…’ தாங்க முடியலே. நம்மக்கிட்டே, காவைத்து கஞ்சிக்கி கம்முகட்டுல துணிய வைச்சிக்கிட்டு கால் கடுக்க நின்னப் பயலுவ இன்னைக்கி காரூலப் போனா எப்புர்றா ஊருல மழை பேயும்’, (பக்.08) என்று பெருமாள் சலித்துக் கொள்வது, ஆதிக்கச் சாதியினரின் பொதுப்புத்தி எண்ணவோட்டங்களுக்கு ஒரு சோற்றுப் பதம். 

    “போன வருசம் கருக்காக்குறிச்சி, ராஜாகுடியிருப்புலே… கீச்சாதிப் பயலுகளுக்கு  என்ன வேண்டிக் கிடக்குது ‘கேப்பி நீயூயர்’னு. இங்கிலீசு வருச பொறப்பண்ணிக்கி நடுராத்திரியில தெருத்தாண்டி, வீடு பூந்து… அடிச்சான் பாத்தியா மாப்ளே? அது மாறி இவனுகள அடிச்சாதான், இனிமே இவனுக, நம்மளைப்பாத்து இனி அஞ்சுவானுங்க”, (பக். 09) 

     என்கிற சாதிய வன்மம் எதைக்காட்டுகிறது. சாமி குப்புடுதல், திருநீறு எடுத்தல், தேர் இழுத்தல், சாமி தெருவுக்கு வருதல் போன்றவற்றிற்கு மட்டுமல்ல; தனது எல்லைக்குள் எந்தக் கொண்டாட்டங்களை தலித்களுக்கு அனுமதிக்க மறுப்பது இந்தியாவெங்கும் தொடரும் சாதிய வன்கொடுமையான உள்ள நிதர்சனத்தை  எடுத்துரைக்கிறது. 

    மேலத்தெரு, கீழத்தெரு, பில்லுக்குறிச்சி குடியான சாதிகள் (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உள்ளூர் ஆதிக்க சக்திகள்) ஒன்று திரண்டு கூட்டம் முடிவாகிறது. தலித் தெரு மக்களிடம் அவ்வளவாக ஒருங்கிணைப்பு இல்லை. எனவே சங்கரன் புதுப்பாதை ஒன்றைத் தேர்வு செய்கிறார். வேறு வழியில்லை, அதுதான் தற்கொலைப் பாதை! இதை கதைப்போக்கில் குறிப்பால் உணர்த்தும் வரிகளாக இவைகள் அமைகின்றன. 

“அவன் போன பாதை யாரும் போகாத பாதை, அவன் போட்ட புதுபாதை, அவன் போன போன பாதை (…..)

அது சாமிபோகும் பாதை, குளிச்சவுக, முழுகுனவுக, யாருமாயிருந்தாலும் அந்தப்பாதையில் பயந்துப் போக மாட்டர்கள்”, (பக்.23) 

    “தப்படிக்கிறதும், மது சட்டித் தூக்குறதும், அடிமைத் தொழிலில்லே, இது சாமிக்கி.. நீ செய்யுறதொண்டு, இது ஆதியிலேயிருந்தே… அப்படித்தான் நடக்குது, நீ படிசசிருந்தா? அதுக்காக ஊர் வளக்கத்தே புதுசா மாத்த முடியுமா?”னு , சாமி பேரச் சொல்லியே இன்னும் நம்மல ஏமாத்த பாக்குறாங்கப்பா”, (பக்.31&32) என்று பயந்து, தலைகுனிந்து, முகம் பார்க்காது, தரைபார்த்துச் சொல்லியபின் சங்கரனின் ஐந்து விரல்கள் மகனின் கன்னத்தில் பதிகின்றன. 

    “ஊருக்காரேன் ஒன்ன அடிச்சி, அவராதம் கட்டச் சொல்லி, வெத்தல் வச்சி காலுலக் கும்புட்டு விழச் சொல்லுரதே… நானும் நொப்பனும் பாத்து சகிச்சிக்கிட்டு நம்ம சாதிக்காரன் மாறி நிக்கமுடியாது, அங்குனேயே உசுரே மடிச்சிக்குவோம், நீ கெளம்பி போடா செல்லம்”, (பக்.36) என்று மாரியாயி மகன் ஜீவபாரதியை (சாத்த ஊமை) அனுப்புவதோடு, தன்னுடைய நினைவாக, (செலவுக்கு அது தங்கமல்ல) தனது தாலியைக்கொடியைக் கழற்றிக் கொடுத்து,

    “இது ஓன் அம்மாவுட்டு பித்தள தாலி, இது ஒனக்கு, வேற எதுக்கும் ஒதவாது? ஒனக்கு அம்மா ஞாபகம் வரும் போதல்லாம்… இதயெடுத்துப் பாத்துக்க, அம்மா ஒன் நெனப்பாவேயிருப்பேன்”, (பக்.36) என்று சொல்வதை மகனால் மட்டுமல்ல; படிக்கும் அனைவராலும் கலங்காதிருக்க இயலாது. 

     அடுத்த நாள் நடக்கும் பஞ்சாயத்தில் தனது மகனை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பார்கள். எனவே இதை விரும்பாத சங்கரனும் மாரியாயியும் வெளியூருக்கு விடியற்காலை முதல் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வெள்ளரிக் கொடிகளுக்காக வைத்திருந்த குருணை மருந்தை (பூச்சிக்கொல்லி) தின்று விட்டுத் தற்கொலை செய்துகொள்வதாகக் கதை முடிகிறது.  

      நாவலில் வரும் பெண்கள் சித்தரிப்புகள் ஒவ்வொரு சாதிக்குள்ளும் உள்ள பெண்களின் நிலையையும் சாதிக்கட்டுமானத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. 

   “ஊருலே ‘வாயாடி, பொல்லாதவ’னு இருந்தாலும், ‘சங்கர மேல உசுரேயே வைச்சிருப்பா’, இந்த விசயத்துல அவ யோக்கியம், மத்த பொம்புளய மாறி புருசனே வெச்சிக்கிட்டே காடுக் கரையிலே யாரும் இவளக் கண்டதில்லேனு சொல்லுவாக”, (பக்.28) 

     அன்று ஆண்டைகளும் பண்ணையார்களும் இருந்த இடத்தில் இன்று சாதிய வெறியர்கள் உள்ளன. இவர்களுக்கு பெண்கள் போகப்பொருள் மட்டுமே. இதற்கு வைதீக தர்மங்கள் உதவி செய்கின்றன. தமிழ்ப் பண்பாட்டு அம்சங்களும் இதனுடன் உறவு கொண்டவை; எல்லாம் பெண்களை அடக்கி ஆள்பவை.

   “ச்சீ… எல்லாம் தொட நடுங்கிப் பயலாயிருக்குறான்… பொட்டச்சியா மாறி சீலையே எடுத்து கட்டிக்கிட்டு திரிங்கடா”, (பக்.15) என்று வீரம் பேசித் திரியும் போதும், வசவுகளிலும் பெண்கள்தான் சிதைக்கப்படுபவர்களாக உள்ளனர். 

   “எல்லாம் பொம்புளயால வர்ற பெரச்சின?” (பக்.12) என ஒடுக்கப்பட்ட, ஆதிக்க சாதிகள் அனைத்தும் நினைக்கின்றன. ஆனால், இவை முற்றிலும் ஆண்களால், ஆணாதிக்கத்தால், சாதியால், வருணத்தால் வரும் பிரச்சினை என்று என்றும் நினைப்பதே இல்லை. எனவே தெளிவு வரும் வரையில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

  “நம்ம பெத்தப்புள்ளதான், நம்மள அடிக்கிறாங்கெனு நெனச்சி மனசுல வச்சிக்கிட்டு, ஒதிங்கி போய் தொலங்கடா” (பக்.31) என்ற ஆதிக்கச் சாதியின் குரலும்

  “நம்ம ஊட்டுப்புள்ள அவெ ஊட்டுல வளர்ருது, அவெ ஊட்டுப்புள்ள நம்ம ஊட்டுல வளர்ருது”,  (பக்.31) என்ற ஒடுக்கப்பட்ட தலித்தின் மனகுரலும் 

     பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகத்தான் வெளிப்படுகின்றன. இங்குப் பண்பாடெல்லாம் பெண்களின் கற்பு, கூந்தல்களுடன் பின்னப்பட்டவை. இவை ஆதிக்கச் சாதிப் பண்பாடுகள் மட்டுமல்ல; ஆணாதிக்கப் பண்பாடுகளும் கூட. 

   எனவே, பெண்களுக்கு சாதியில்லை, அவளது தூமைக்காக தீட்டென விலக்கி வைக்கப்படுகிறாள். பெண்ணுடல் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஆகவே சாதியப் படிநிலையின் ஆகக் கடைசியாக பெண் இருக்கிறாள். எனவே தான் பெண்களால் இயல்பாக எளிதில் சாதியை உதறித்தள்ள முடிகிறது; சாதிய மனம் இறுகிப்போன ஆண்களால் அது இயலுவதில்லை. 

    ஒரு தலித் படைப்பு பெண்களுக்கு எதிராக அமைவது நமது சமூகத்தின் அவலமே தவிர, இந்தப்படைப்பின் அவலமல்ல. அடித்தட்டு, விளிம்பு நிலையினரை ஒட்டியெழும் பிரதிகள் இவற்றில் கவனம் கொள்வது சாதியொழிப்புடன் ஆணாதிக்க அழிப்பையும் சாத்தியமாக்கும். எனவே எழுத்தாளர்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.  

நூல் விவரங்கள்:

 ஊரார் வரைந்த ஓவியம் (குறுநாவல்)
துரை. குணா
 இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 2015
பக்கங்கள்: 36
விலை: 40

 வெளியீடு:
கீழாண்ட வீடு  வெளியீட்டகம்,
குளந்திரான்பட்டு,
புதுக்கோட்டை – 622302.
கைபேசி: 9942854766

விநியோக உரிமம்
 கருப்புப்பிரதிகள்,
பி 55 பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 600005.
பேச: 9444272500
மின்னஞ்சல்: karuppupradhigal@gmail.com

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 16/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக