வெள்ளி, மே 15, 2020

ஏனிந்த அவசரம்?

ஏனிந்த அவசரம்?


மு.சிவகுருநாதன்


      பத்தாம் வகுப்பிற்கு இவ்வாண்டு மட்டுமல்ல, எப்போதும் பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே நமது நிலைப்பாடு. இதற்கு அரசு மட்டுமல்ல கல்வியாளர்கள் கூட தயாராக இல்லை என்பது வருத்தமளிக்கக் கூடியது.

     இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

    இந்நிலையிலும் 4 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் நேரத்தில் யாருக்காக இவ்வளவு விரைவில் ஜூன் 01 இல் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல.

     இது ஒரு திசைதிருப்பல் உத்தியாகவே பார்க்க வேண்டும். கொரோனா நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகள், சென்னையில் ஏற்பட்ட அதீதப் பரவல், புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகளிலிருந்து மக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்களைத் திசை திருப்பும் உத்தியே இது.

    மோடி சர்க்காரின் உத்திகளை இவர்களும் அப்படியே கையாள்கிறார்கள். தேர்வு ரத்தை மத்திய அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்று இப்போது கைகாட்டுகிறார்கள். அதற்கு ஏன் இவ்வளவு அவசரம்?

     ஏற்கனவே ஜூன் இறுதியில் மறு கால அட்டவணை வெளியிடுவதாகச் சொல்லிவிட்டு, உடனே. மே இரண்டாம் வாரத்திலேயே வெளியிட்டதன் ரகசியம் இதுதான்.

   பொதுத்தேர்வு குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இப்போதுள்ள சூழலில், ஊரடங்கு காலத்தில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுகளை நடத்த வாய்ப்பே இல்லை.

    கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பரில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10 வகுப்புத் தேர்வுகளுக்கு இவ்வளவு அவசரமும் அதீத அக்கறையும் தேவையில்லை.

    இப்படி அடிக்கடி தேர்வுகளை ஒத்திவைத்து கால அட்டவணைகளை வெளியிடுவது குழந்தைகள், பெற்றோர் மீதான கொடூரத் தாக்குதலாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய அரசியல் உடன் முடிவு கட்டப்படுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக