ஞாயிறு, மே 31, 2020

இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்!


இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்!

(நூலறிமுகம்… தொடர்: 044)


 மு.சிவகுருநாதன்  


(ரோமுலஸ் விடேகர் எழுதி,  ஓ. ஹென்றி பிராசின்ஸ் மொழிபெயர்த்த,  இந்தியப் பாம்புகள்’ என்ற நூல் குறித்த பதிவு.)



     பாம்புகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளும் புனைவுகளும் சமூகத்தில் அதிகம். அதை அகற்றாமல் பாம்புகளை பாதுகாக்க இயலாது. ச.முகமது அலி எழுதிய  'பாம்பு என்றால்?' என்ற நூல் தமிழில் குறிப்பிடத்தக்க ஒன்று. பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை டிசம்பர் 2008 இல் வெளியிட்ட இந்நூல் குறித்த அறிமுகத்தை பின்வரும் இணைப்பில் காணலாம்.


   கல்விக்காக 1951 இல் சென்னை வந்த ரோமுலஸ் விடேகர் 1969 இல் சென்னை பாம்புப் பண்ணையையும் 1974 இல் சென்னை முதலைப் பண்ணையையும் தொடங்கினார். இவரது Common Indian Snakes: A Field Guide (1978), Snakes of India (2004), Lizards (2006)  ஆகிய நூல் சிறப்பானவை. இவற்றில் ‘Common Indian Snakes: A Field Guide’ என்ற நூலின் ஓ.ஹென்றி பிரான்சிஸ் தமிழாக்கத்தை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. இது இந்தியப் பாம்புகள் பற்றிய ஒரு பொதுவான வழிகாட்டி நூலாகும். வண்ண, கருப்பு, வெள்ளைப் படங்களும் இந்நூலில் உண்டு. 

  • பாம்புகளைக் கொன்றுவிட்டால் அதன் இணை பழிவாங்கும்.
  • கண்ணைக் கொத்தும்.
  • பாம்பு பால் குடிக்கும்.
  •  இசைக்கேற்ப நடனமாடும்.
  • பாம்புத்தலையில் ‘நாகமணி’ உள்ளது.
  •  உழவன் பாம்பு தொழுநோயை உண்டுபண்ணும்.
  • கொம்பேறி மூர்க்கன் கடிபட்டவனின் பிணம் எரிவதைப் பார்க்கும்.
  •  வளையம் போன்ற உடலமைப்பு கொண்ட பாம்பு தீண்டினால் உடலில் கட்டுக்கள் தோன்றும்.
  • நாகப்பாம்பும் சாரைப்பாம்பும் இனச்சேர்க்கை செய்யும்.
  • வால் மொட்டையாக இருப்பதால் இருதலைப் பாம்பு, (பக்.103-106)

            என்பது போன்ற மூடநம்பிக்கைகள் ஏராளம். நச்சுப் பாம்புக்கடிக்கு மந்திரம் ஓதுதல், மூலிகை வைத்தியம், தொலைபேசி சிகிச்சை என பல உள்ளன. இதெல்லாம் பயனளிப்பவை அல்ல. பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதால் இம்முறைகளினால் கடிபட்டோர் உயிர் பிழைத்திருக்கலாமே தவிர இந்த வைத்திய முறைகளால் அல்ல என்பதை மக்கள் சமூகம் முதலில் உணரவேண்டும். 


   இந்தியாவில் காணப்படும் நஞ்சற்ற 20 வகையான பாம்பினங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்திய மலைப் பாம்பு, சாதாரண உழவன் பாம்பு, இருதலை மணியன், பச்சைத் தண்ணீர் பாம்பு, சாரைப் பாம்பு, கொம்பேறி மூர்க்கன், கண்கொத்திப் பாம்பு போன்றவை அவற்றுள் சிலவாகும்.

   இந்தியாவில் நான்கு வகையினத்தைச் சேர்ந்த பாம்புகளே நஞ்சானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் சில (10) இந்நூலில் விளக்கப்படுகின்றன. 

  • கட்டுவிரியன் (சாதாரண  கட்டுவிரியன், பட்டைக்  கட்டுவிரியன்)
  • இந்திய நாகம் (ஒற்றைச் சக்கர, இரட்டைச் சக்கர இந்திய நாகம், ராஜநாகம்)
  • நாணற்குச்சி பவளப்பாம்பு
  • வலைக் கடியன் கடற்பாம்பு
  • விரியன் (கண்ணாடி, புல், சுருட்டை விரியன்)  

  
    நஞ்சுப் பாம்பின் கடிக்கு ‘நஞ்சுமுறி மருந்து’ ஒன்றே தீர்வாகும். மும்பையிலுள்ள ஹாஃப்கின் நிறுவனம் குதிரைகளில் உடலில் நான்கு நச்சுப் பாம்புகளின் நீர்த்த நஞ்சை மெதுவாக செலுத்தி, அதன் உடலில் குறிப்பிட்ட அளவு எதிர்ப்பு சக்தி உருவானதும், அதிலிருந்து ரத்தத்தை வெளியேற்றி ஊநீரைப் பிரித்து உறைநிலையில் காயவைக்கப்பட்டு, 10 மி.லி. குப்பிகளில் அடைக்கப்பட்டு இந்தியாவிலுள்ள நான்கு பெரும் நச்சுப்பாம்புகளின் கடிக்கு அருமருந்தாக திகழ்வது விளக்கப்படுகிறது. (பக்.113) 

  பாம்பு பற்றிய குறிப்புகள், பாம்புக்கடியின் அறிகுறிகள், முதலுதவி சிகிச்சைகள் விளக்கப்படுகின்றன. இந்தியாவில் தென்படும் பாம்புகளின் பட்டியல், வட்டார வழக்கில் பாம்புகளின் பெயர்கள், பாம்புகளை அடையாளம் காணும் குறிப்புகள், குறிப்பாக நஞ்சுப்பாம்புகளை இனங்காணும் ஆறு வழிமுறைகள், கலைச்சொற்கள் என விரிவான தகவல்கள் பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது. பாம்புகளைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் சூழலியல் ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இந்நூல் அமையும்.

நூல் விவரங்கள்:

 இந்தியப் பாம்புகள்

ஒரு வழிகாட்டி நூல்

 ரோமுலஸ் விடேகர் 

(தமிழில்)  ஓ. ஹென்றி பிராசின்ஸ்  

முதல் பதிப்பு: 1999
மூன்றாம் பதிப்பு: 2011

பக்கங்கள்: 168
விலை: 60

 வெளியீடு: 

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

இயக்குநர்,
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா,
நேரு பவன்,
5 இன்ஸ்டிடியூஷனல் ஏரியா,
பேஸ் II, வஸந்த குஞ்ச்,
புதுதில்லி – 110070.

இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்,       திருவாரூர் 

முகநூல்: முனியப்பன் சிவகுருநாதன்


வலைப்பூ: மு.சிவகுருநாதன்


வலைப்பூ: பன்மை


twitter 


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
அலைபேசி:    9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக