வியாழன், மே 21, 2020

பிற்காலச் சோழர்களின் சமூக, பொருளியல் ஆய்வுகள்


பிற்காலச் சோழர்களின் சமூக, பொருளியல் ஆய்வுகள்


(நூலறிமுகம்… தொடர்: 037)


மு.சிவகுருநாதன் 


(நொபொரு கராஷிமா எழுதிய, பாரதி புத்தகாலயம் வெளியீடான வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் - சோழர் காலம் (850-1300)’ என்னும் நூல் குறித்த பதிவு.)





      தமிழகத் தொல்லியல் கழகம் (தஞ்சாவூர்) 1995 இல் வெளியிட்ட  நொபொரு கராஷிமாவின் இந்நூலை பாரதி புத்தகாலயம் 22 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பதிப்பித்துள்ளது. எ.சுப்பராயலு, ப.சண்முகம், சு.இராஜகோபால், ஆர்.பூங்குன்றன், இல.தியாகராஜன், சு.இராஜவேலு, மு.சிவானந்தம் போன்ற பலரது மொழியாக்கத்தில் மூன்று பகுதிகளாகவும் 11 அதிகாரங்களாகவும் இந்நூல், சோழர் காலத்தில் நிலவுடைமை, சமூக ஒருங்கிணைப்பு, அரசு வருவாய் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது.

    “பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற முன்னோடி வரலாற்றறிஞர்கள் அரசியல் வரலாற்றை நன்கு ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் சமூக, பொருளியல் வரலாற்றில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை. ஆகவே முன்னோர் கருதிப் பார்க்காத அல்லது குறையாக விட்டுச் சென்ற ஆய்வுகளில் இவ்வாசிரியர் மிகுந்த அக்கறை செலுத்தி நிறைவான முடிவுகளைக் காண முயன்றுள்ளார்”, (பக். 07&08) என்று மொழிபெயர்ப்பாளர் குறிப்பு தெரிவிக்கிறது. முன்னோடிகளின் அரசியல் வரலாறும் பக்கச் சார்பின்றி எழுதப்பட்ட முழுமையாக வரலாறாக இல்லை என்பதுதானே உண்மை. 

   “சமூக, பொருளியல் வளர்ச்சி பற்றிய அவர்களுடைய ஆய்வுகள் தேக்கநிலை ஆசியக் கொள்கையை மறுக்கப் போதுமானதாக இல்லை”, என்று சொல்லும் கராஷிமா, அறிவியல் வழி புறநோக்கு அணுகுமுறை தேவையென்ற நோக்கில் புள்ளியியல் முறை மூன்று, குறுகிய நிலவட்டங்களையே (micro-regions) ஆய்வுக்குரிய அடிப்படை அலகுகளாகக் கொள்ளப்பட்டதையும் சொல்கிறார். இந்த ஆய்வுகளின் முடிவுகள், “இந்திய சமூகத்தின் தனித்த வளர்ச்சியை விளக்குவதோடு, ‘ஐரோப்பாதான் நாகரிகத்தின் மையம்’ (Euro-centrism) என்ற கொள்கைப் பிடியிலிருந்து விடுபடவும் உதவும்”, என்கிறார். “அதே நேரத்தில் பழம் பெருமையைப் போற்றுவது நம் நோக்கம் அல்ல. புற நோக்கில் விருப்பு, வெறுப்பின்றி வரலாற்றைப் புரிந்து கொள்வதே முதன்மை நோக்கமாகும்”, என்று கூறும் இவர், “அண்மைக்கால வரலாற்றாய்வில் வரலாற்று மானுடவியல், புதிய பண்பாட்டு வரலாறு என்று புதிய புலங்கள் நாடப்பட்ட போதிலும் இந்த நூல் வரலாற்றாய்வுகளுக்கு மேலும் தெம்பையூட்டும்”, எனக் கணிக்கிறார். (பக்.11&12)

    நுழைவாயிலான ‘குறிக்கோளும் அணுகுமுறையும்’ என்ற கட்டுரையில், சோழர் காலம் குறித்த முந்தைய ஆய்வுகளில் பிராமணர் அல்லாத வெள்ளான் ஊர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமை, இதிலிருந்து அளவுக்கதிகமான பழமையைப் போற்றும் போக்கு, சபைகளின் தேர்தல் முறை (குடவோலை முறை) பற்றிய செய்தி நடுநாயகமாக இருந்தது ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. (பக்.21) மேலும் பர்ட்டன் ஸ்டெயின் ஆய்வுகளுக்கும் தமக்குமுள்ள முரண்பாடுகள், டி.டி.கோசாம்பி, டி.என்.ஷா போன்றோரது ஆய்வுகளிலுள்ள நிலவுடைமை சார் கருத்துகளையும் விவாதிக்கிறார். (பக்.31) 



   ஈசானமங்கலம் (பிரம்மதேயம்), அல்லூர் (வெள்ளான் ஊர்) என இரு ஊர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அல்லூரில் பெரும்பகுதி நிலம் பொதுவாக அனுபவிக்கப்பட்டது, ஆனால் பிரம்மதேய ஊரில் பிராமண நிலக்கிழார் கொண்ட அமைப்பான சபை நிர்வாக மன்றமாகவும், நிலவுரிமையாளர், பயிரிடுவோர் வேறுவேறாக இருந்த நிலையும் எடுத்துக் காட்டப்படுகிறது (பக்.49) இதனை வகையுருக்கள் (types) என்று பார்க்கக்கூடிய வகையுருப்பாட்டு (typoligical) ஆய்வாகப் பயன்படும். இதிலிருந்து சோழர்களின் அதிகாரக் கட்டமைப்பு (power structure), இந்தியக் கிராம சமூக வரலாற்று வளர்ச்சி பற்றிய கருதுகோள்களை முன்வைக்கலாம். எனினும் இந்த முடிவுகளை அவசரப்பட்டு பொதுமைப்படுத்தக்கூடதென எச்சரிக்கும் கராஷிமா, வகைக்கு ஒவ்வோர் ஊரே ஆராயப்பட்டதால் முன்னாய்வு எனக் கருதலாம், என்கிறார். (பக்.49) இவ்வாய்வுகளை இன்னும் நீட்டித்துச் செய்ய வேண்டியது அவசியமானதாகும். 

   சோழர்கால நிலவுடைமையில் மாற்றம் ஏற்பட, இரண்டு பொருளியல் காரணங்களை பின்வருமாறு விளக்குகிறார் கராஷிமா.   

      “ஒன்று, முதல் ராஜராஜன், முதல் ராஜேந்திரன் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் சோழராதிக்கம் பேரரசாகப் பரவியதை ஒட்டி எதிரி நாடுகளிடமிருந்து கொணர்ந்து குவிக்கப்பட்ட செல்வம் சோழநாட்டின் மையப்பகுதி மக்களிடயே பகிர்ந்தளிக்கப் பட்டமை. இரண்டு, அணைகள், ஏரிகள் முதலிய  புதிய நீர்ப்பாசன வசதிகள் பெருகியதன் காரணமாகப் பயிர் விளைச்சல் பெருகியமை. கீழ்க்காவேரிப் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட ஏராளமான பிரமதேய ஊர்கள் நீர்ப்பாசன வசதிப் பெருக்கத்துக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன எனலாம். மூன்றாவதாக ஒரு நிர்வாகத் தொடர்பான காரணத்தையும் குறிப்பிடலாம். அதாவது முற்சோழர் காலத்தில் பிரமதேய ஊர்கள் நிறைய ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலச்சொத்துரிமை மாற்றங்கள் எளிதானமையால், முதல் ராஜராஜன் காலந் தொடங்கி, பெருகி வந்த அரசு அலுவலர் தொகுதிக்கு உடையவர்களிடமிருந்து நிலங்களை எடுத்து வழங்குவது எளிதாயிற்று. இந்த எல்லாக் காரணங்களும் சேர்ந்து காணியுடைமை தனியுடைமை ஆன வளர்ச்சியை ஏற்படுத்தின”. (பக்.57)

    உலகியல் சார்பான நிலப் பரிவர்த்தனைகள் பரவலாக நடந்தன. பிராமண, வெள்ளான் ஊர்களிலும் நிலம் விற்பனைக்கு வந்ததும், காணி உடையவர்கள் (சில பிராமணர்களைத் தவிர) உடையான், கிழவன், அரையன், மூவேந்த வேளான் போன்ற பட்டங்களைப் பூண்டவர்களாகவும் அரசுக்கு வரி செலுத்தக் கடமைப்பட்டு இருந்ததும் ‘வேதாரண்யத்தில்  நிலப் பரிவர்த்தனைகள்’ என்ற  அதிகாரத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. (பக்.59&60)

   சிலர் ராஜகுலத்தார் என்று சொல்லி வேற்றார் காணிகளை அபகரித்தனர். படையினர் தலையீட்டில் நிலங்களைப் பயிரிடாமல் தரிசாக விட்ட நிகழ்வுகளும் உண்டு. படைவீரர்களுக்கு நிலம் விற்கப்பட்டது. இதை வாங்கிய சுருதிமான், பள்ளி போன்றவர்கள் மலைப்பகுதிகளிலிருந்து கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் சோழர் படையில் பணியாற்ற சமவெளிக்கு வந்தவர்கள். இவர்கள் நாளடையில் தங்களது படை ஆற்றலைப் பயன்படுத்தி நில புலன்களைச் சேர்த்தனர். பிற்காலத்தில் சோழராட்சி வலிமை குன்றியபோது  இவர்களது நிலவுடைமை மேலும் விரிவடைந்தது, (பக்.68&69) கீழக்காவேரி நிலவுடைமை ஆய்வில் தெரிய வருகிறது. 

    வெள்ளான் ஊர்கள் பெரும்பான்மையாகவும் பிரமதேயங்கள் சிறுபான்மையாகவும் இருந்த நிலையிலும், பிரமதேயங்கள் வெள்ளான் ஊர் மக்களிடையே பிராமணியக் கருத்துகளைப் பரப்பி சமூக அமைதிக்கு முனைப்பான பங்காற்றியது, உணவுப்பெருக்கத்திற்குத் தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம், என்று மதிப்பிடுகிறது. சோழ அரசின் அதிகாரக் கட்டமைப்பில், பிரமதேயங்கள் உள்ளூர் அதிகார மையங்களாக வெள்ளான் ஊர்களை ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்தப் பயன்பட்டன, என்கிற அதிகாரக் கட்டமைப்பு விளக்கப்படுகிறது. (பக்.83)

   கிராம சமூகங்கள் குட்டிக் குடியரசுகள் என்றும் அரச குல மரபுகள் வீழ்ச்சியுற்றபோதும், கிராம சமூகம் நிலைபெற்றது, (சர் சார்லஸ் டி மெட்காவு)  என்பது போன்ற கற்பனைகளுக்கு  இங்கு அளவில்லை. நாட்டின் நிர்வாக அளவு என்ற வகையில் கிராமத்தின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், சோழமண்டலத்திலிருந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றுத் தனித்தியங்கவில்லை என்பது 40 ஊர்கள் பற்றிய ஆய்வு தெளிவாக்குகிறது. (பக்.99)

    கல்வெட்டுக்களை வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்திய முந்தைய ஆசிரியர்கள் எந்த முறையையும் பின்பற்றவில்லை. இந்த நெறிசாராப் போக்கினால் தென்னிந்திய வரலாற்றுப் படைப்புகளில் தேக்கம் ஏற்பட்டதை உணர்ந்து, சோழர் கால கல்வெட்டுகளில் காணப்படும் ஆள்பெயர், பட்டம், தகுதிநிலை ஆகிய தரவுகளைத் தொகுத்துப் புள்ளியியல் முறைகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுருக்கமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. (பக்.100) உடையான், மூவேந்த வேளான், பிரமராயன், நக்கன், குரிசில்களின் பட்டங்கள், நாடாழ்வான், மத்தியஸ்தன் போன்ற பெயர் மற்றும் பட்டங்களின் பரவல் சுட்டப்படுகிறது. ‘உடையான்’ எண்ணிக்கை அதிகமாவது தனியார் நிலவுடைமை வளர்ச்சியைச் சுட்டுகிறது. பிராமண அலுவலர் (பிரமராயன்) வேளாண் சாதியைச் சேர்ந்த அலுவலர் (மூவேந்த வேளான்) ஆகிய இரண்டின் பரவலும் ஒன்றாகக் காணப்படுவது வருவாய் மற்றும் நிர்வாகத்திடம் இவர்களுக்கிருந்த தொடர்பை வெளிகாட்டுவதாகும். (பக்.104) மத்தியஸ்தன் சொல்வழக்கு குறைந்தும் நாடாழ்வான் மிகுவது கிராம நிர்வாகங்கள் வட்டாரத் தலைவர்களின் ஆதிக்கத்திற்கு வந்து, ஒரு புதுவகை நிலமானிய முறை எழத்தொடங்கியதாகவும் இந்த ஆய்வுகள் அவதானிக்கின்றன. (பக்.107)

    சோழராட்சியில் காலந்தோறும் வருவாய் இனங்கள் கூடிக்கொண்டு சென்றன என்ற முடிவுக்கு வருவாய் சொற்கள் பற்றிய ஆய்வு வருகிறது. (பக்.119) சோழர் கால கல்வெட்டுகள் அனைத்திலும் உள்ள வருவாய் சொற்தொகைகள் உருவாக்கப்பட்டு இன்னும் விரிவான ஆய்வுகள் உருவாக வேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறது. (பக்.116)

   ஒரு தஞ்சாவூர் கல்வெட்டு, இரு கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள் சோழர்கால நிலவரித் தீர்வைகள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. நிலங்களின் தன்மையும் விளைச்சல் திறனும் இடத்துக்கு இடம் வேறுபட்டன. நிலவரித் தீவைப் பொருத்தமட்டில் நிலத்தின் தன்மை, விளைச்சல் ஆகிய இரண்டும் கணக்கில் கொள்ளப்பட்டன. (பக்.127)
  
   பாண்டியர் கால கல்வெட்டுகளின் வருவாய்ச் சொற்களும் ஆய்வுக்குள்ளாகின்றன. இவற்றில் 10 தடவைக்கு மேல் வழங்கப்பட்ட சொற்களில் (மொத்தம் 31) பாண்டியர் காலத்தில் தோன்றிய 6 சொற்களும் ஏனைய 25 சொற்களும் விளக்கப்படுகின்றன. (பக்.141-145) 

     தொகுக்கப்பட்டவைகளில் 85  புதிய சொற்கள் (43%) உள்ளன. கார்த்திகைப் பச்சை, செக்கு இறை, தறி இறை, பொன் வரி, காணிக்கை மற்றும் இனவரி ஆகியன பாண்டியர் காலத்தில் புகுத்தப்பட்டன என்றில்லாமல், சோழர் ஆட்சிப்பகுதியிலிருந்து தெற்கே சென்றது எனக் கருதுவதே சரி என்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாறுதல்களால் இவ்வரிகளை விதிக்கும் தேவையேற்பட்டதையும்  ஊகிக்கிறது. (பக்.145)

  ‘அரசுப் பணிக்குச் செலுத்தப்பட்டவை’ என்ற பொருள்படும் சொற்கள் புதுக்கோட்டையை விட திருச்சிராப்பள்ளியில் அதிக இருப்பது பொருளாதார வளமான பகுதிகளில் வரி வசூல் முனைப்பாக இருந்திருக்கலாம் என்ற முடிவு பெறப்படுகிறது. (பக்.147)  நன்செய் பகுதிக்கும் புன்செய் பகுதிக்கும் வரிவிதிப்பில் பெரிய வேறுபாடில்லாத நிலையும் சுட்டிக்காட்டப்படுகிறது. எச்சோறு (அலுவலர்களுக்கு உணவு தருதல்), நாட்டு விநியோகம் (நாட்டுச் செலவீனங்களை ஈடுகட்டும் வரி) ஆகிய சொற்பரவலின் வழி சமூக, பொருளாதார மாற்றங்கள் கோடிடப்படுகின்றன. (பக்.149) 

     தஞ்சாவூர் மாவட்டக் கல்வெட்டுகள் தரும் சமூகம், நிலக்கிழமை, வேளாண்மை, பொருளாதாரம் ஆகிய சொற்களின் ஆய்வுகளின் வழி கண்டடையும் சில உண்மைகள்:

     வாய்க்கால் என்ற சொல்லின் மூலம் சோழர் காலத்தில் வளர்ச்சியடைந்த நீர்ப்பாசன முறையும், மயக்கல், மயக்கி, திருத்தி என்பன தீவிர உழவுத்தொழில் நிலவியதும், நன்செய் என்ற சொல்லை நீர்நிலம் என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தியது, தேவதான என்ற சொல்லுக்குப் பதிலாக ‘திருநாமத்துக் காணி’ (வைணவர்களுக்கான தானம்) என்று சொல்வது போன்ற தரவுகள் பெறப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் சபையார், பிரமதேயம் ஆகிய ஒரு சொற்களின் வழக்கு அதிகமிருப்பதும், தஞ்சை மாவட்டத்தில் அதிகளவு பிராமணக் குடியிருப்புகள் உண்டாக்கப்பட்டதும், பிராமண நிலக்கிழமைகளின் தோற்றம் சோழர் காலத்திலிருந்து தொடங்கியது என்ற கருத்தையும் முன்வைக்கலாம் என்றும் தெரிவிக்கிறது. (பக்.151) 
   
     தமிழக வரலாற்றை எவ்வித முறையான ஆய்வுகளுக்கும் உட்படுத்தாமல்  பிற்காலச் சோழப்பெருமை பேசுவது மட்டுமே இங்கு நடக்கிறது. ஆண்ட பெருமை பேசித் திரியவும் போலிப் பெருமிதங்களில் மிதக்கும் பெருங்கூட்டங்கள் உருவாகியுள்ளன. இவர்களில் பெரும்பகுதி இளைஞர்கள்; அவர்களை எளிதில் மூளைச் சலவை செய்து அறிவை மழுங்கடிக்கும் வேலைகள் வெகுவிரைவாக நடைபெறுகின்றன. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளுடன் திறந்த மனதுடன், வெளிப்படையாக, தமிழர் என்கிற தன்னிலை மறந்த ஆய்வுக் (புறவயமான) கண்ணோட்டத்துடன் இத்தகைய ஆய்வுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
  
நூல் விவரங்கள்:

 வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
சோழர் காலம் (850-1300)
நொபொரு கராஷிமா

தமிழாக்கம்:
எ.சுப்பராயலு, ப.சண்முகம், சு.இராஜகோபால், ஆர்.பூங்குன்றன், இல.தியாகராஜன், சு.இராஜவேலு, மு.சிவானந்தம்

வெளியீடு: 

பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: செப்டம்பர் 2017
பக்கங்கள்: 288
விலை: 250

 தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 20/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக