வெள்ளி, மே 01, 2020

அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!

அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்! 

“Working Men of all countries, unite”.

(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

(நூலறிமுகம்… தொடர்: 018)

மு.சிவகுருநாதன்

(எஸ்.வி.ராஜதுரை (ஜனவரி: 2014, அறிமுகவுரையும் விளக்கக் குறிப்புகளுடனும்)  மு.சிவலிங்கம்  (அக்டோபர்: 2019) ஆகிய இருவரின் மொழிபெயர்ப்பில் தனித்தனியே வெளிவந்திருக்கும்  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’  நூல்கள் குறித்த  பதிவு.)


 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (தமிழாக்கமும் அறிமுகவுரையும் விளக்கக் குறிப்புகளும்)  எஸ்.வி.ராஜதுரை 

மற்றும்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ் எங்கெல்ஸ் (தமிழில்) மு.சிவலிங்கம்
 
      1848 இல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஆவணமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ 172 ஆண்டுகள் கடந்தும் உலக வரலாற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒன்றாகும். ஐரோப்பாவைப் பிடித்தாட்டும் கம்யூனிசப் பேய், என்று போப் ஒன்பதாம் பயஸை அன்று சொல்ல வைத்தது; இன்றும் சிவப்பு மீதான பயமே பலரைத் தடுமாற வைக்கிறது.  

  கம்யூனிச கட்சி அறிக்கை என்பது ஆகிய நான்கு அத்தியாயங்கள் அடங்கிய ஒரு சிறு வெளியீடு. ஆனால் இதன் வீச்சு அளவிடற்கரியது. நூற்றுக்கணக்கான மொழிகள், லட்சக்கணக்காக பிரதிகள் என பலகோடி மக்களைச் சென்றடைந்திருக்கிறது. மேலும் இன்றும் விவாதிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. தமிழில் ரா.கிருஷ்ணையா, தேவ. பேரின்பன் போன்றரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. 

    இவ்வறிக்கையின் முதல் தமிழ் மொழியாக்கம் 1931 அக்டோபரில் வெளியானது. இதை வெளியிட்டவர் பெரியார். ‘குடி அரசு’ இதழில் ‘சமதர்ம அறிக்கை’ எனும் முதல் அத்தியாயம் பெரியாரின் முன்னுரையுடன் ஐந்து இதழ்களில் தொடர்ந்து வெளியானது. 

  04.10.1931 ‘குடி அரசு’ இதழில் அறிக்கையை வெளியிட்டு, பெரியார் எழுதிய விரிவான முன்னுரையில், “உலகில் உள்ள எல்லா தேசத்து வேலையாளர்களுடைய மனோபாவத்தையும் ஒன்றுபடுத்தி அவர்கள் யாவரையும் ஒரே பொதுக் கூட்டத்தில் சேர்ந்து கலந்து உழைக்கத்தக்க மனோதைரியத்தையும் கொடுத்தது இந்த அறிக்கையேயாகும்.

    இவ்வறிக்கை எழுத ஆரம்பித்தக் காலத்தில் இருந்து இதுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்கப் பல மாறுதல்கள் எவ்வளவுதான் ஏற்பட்டு இருந்தாலும் இவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய நிலைமைக்கு மிக்க பொருத்தமானதாகவே இருந்து வருவது இவ்வறிக்கையின் விசேஷத்திற்கு ஒரு காரணமாகும்.

   சமதர்மவாதிகள் தங்களுடைய வேலைத்திட்டங்களை காலதேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது சரியானாலும், சமதர்மக் கொள்கை என்பதில் எந்தக் காலத்திற்கும் எந்தத் தேசத்திற்கும் இந்த அறிக்கையில் இருந்து சிறிதுகூட மாறுபடவேண்டிய அவசியம் ஏற்படாதபடி இது அமைந்திருக்கிறது”, (பக்.1603, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி:03, பகுதி:02, வே.ஆனைமுத்து தொகுப்பு)  என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.  

  •  அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்று சேருங்கள்!,
  •    இதுவரையிலான வரலாறுகளனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுகளே,
  • அடிமைச் சங்கிலிகளைத் தவிர பாட்டாளி வர்க்கம் இழப்பதற்கு ஒன்றுமில்லை,
    என்றெல்லாம் முழக்கங்களைக் கொடுத்தது இவ்வறிக்கை. இந்த அறிக்கையை அறிமுக உரை, விளக்கக்குறிப்புகள் என ஆய்வுப்பதிப்பாக மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். அறிக்கை பற்றிய சர்ச்சைகள், பிற மொழிப் பதிப்புகள், அறிக்கை வழங்கும் பாடங்கள் என காத்திரமான நூலாக இது உருவாகியுள்ளது. வயது முதிர்ந்த, உடல் கோளாறுகளுக்கு மத்தியில் தோழர் எஸ்.வி.ஆரின் கடின உழைப்பு ஈடிணையில்லாதது. முதல் பதிப்பில் முகம் வெளியீடாக வந்த இந்நூல் தற்போது NCBH வெளியீடாகக் கிடைக்கிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையின்  மொழிபெயர்ப்பாக மட்டுமல்லாமல் அறிக்கை பற்றிய விரிவான தெளிவானப் பார்வைகளை இந்நூல் தருகிறது. ஜெர்மன், ஆங்கிலப் பதிப்புகளில் இடம்பெற்ற நீக்கப்பட்ட சொற்களை எடுத்துக்காட்டி விளக்குகிறது. 

   காசநோய் சிகிச்சைக்காக பெருந்துறை சானடோரியத்தில் இருந்தபோது கோவை ஜவுளி ஆலைத் தோழர்கள் கொடுத்த ‘வீரம் விளைந்தது’ நாவலே தன்னை கம்யூனிஸ்டாக்கியது என்கிறார் எஸ்.வி.ஆர். தி.மு.க. பேச்சாளர் ஒரு சொற்பொழிவில் மயங்கி, கோவை சென்று ஆங்கிலப் பதிப்பின் பிரதி ஒன்றை வாங்கியதிலிருந்து தனது நீண்ட தேடல்களையும் வாசிப்புகளையும் முன்னுரையில் எடுத்துரைக்கிறார். இந்த அறிக்கையைப் புரிந்துகொள்ளவும் பிறருக்கு விளங்க வைக்கவுமான அவரது தேடலை, கனவை நனவாக்கி நமக்கு அளித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.  

   “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூன்றாம் பிரிவிலுள்ள ‘ஜெர்மன் உண்மை சோசலிசம்’ என்னும் உட்பிரிவிலுள்ள சில பத்திகளை விளங்கிக் கொள்ள ஜெர்மானியத் தத்துவவாதிகளான ஹெகல், காண்ட், பிஹ்டெ, ஃபயர்பாஹ் ஆகியோரின் கருத்துகளை ஓரளவு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்ததை”யும், (பக்.15) குறிப்பிடுகிறார்.  

    “ஜெர்மன் செவ்வியல் தத்துவம், பிரெஞ்ச் சோசலிசம், பிரிட்டிஷ் பொருளாதார விஞ்ஞானம் ஆகியன மார்க்ஸியத்தின் மூன்று தோற்றுவாய்கள் எனக் கூறப்படுவது வழக்கம். இது உண்மைதான்; ஆனால் முழு உண்மையல்ல. இந்தக் கூற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் மேற்சொன்னவற்றின் தத்துவார்த்தக் கூட்டிணைவே (synthesis) மார்க்ஸியம் என்னும் முடிவுக்கு வர வேண்டியிருக்கும். அதாவது நடைமுறையிலிருந்து விலகிய ஒரு தத்துவமே மார்க்ஸியம் எனப் பொருள்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். 1843-1847 ஆம் ஆண்டுகளிலேயே மார்க்ஸியத்தின் அடிப்படைக் கருத்துகளை இளம் ஜெர்மானியச் சிந்தனையாளர்களான கார்ல் மார்க்ஸும் பிரெடெரிக் எங்கெல்ஸும் உருவாக்கினர். சிந்தனை உலகில் அவர்கள் ஏற்படுத்திய புரட்சியை நியூட்டன், டார்வின், ஃபிராய்ட், ஐன்ஸ்டின் ஆகியோரின் அறிவியல் சாதனைகளுடன் ஒப்பிடலாம். ஆனால் மார்க்ஸும் எங்கெல்ஸும் இயற்கை விஞ்ஞானிகளல்லர்; சமூக விஞ்ஞானிகள். மானுட சமுதாயம்தான் அவர்களது தத்துவக் கோட்பாடுகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான சோதனைக்கூடம்.  மார்க்ஸும் எங்கெல்ஸும் தமது காலத்தில் நடந்த வெகுமக்கள் போராட்டங்களில் செயலூக்கமுள்ள புரட்சியாளர்களாகப் பங்கேற்றதால்தான் மார்க்ஸியம் என்னும் புரட்சிகரத் தத்துவம் சாத்தியமாயிற்று”, (பக்.18) என்றும் விரிவாக முன்னுரைக்கிறார். 

    இரு நூல்களிலும் 7 வெவ்வேறு பதிப்புகளில் முன்னுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்.வி.ஆர். நூலில், “1848-49 ஆம் ஆண்டு ஐரோப்பிய புரட்சியும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் அரசியலும்”, இணைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் இரு ஆங்கில வடிவங்கள் நூலில் இடம்பெறுவது தனிச்சிறப்பு.
  
    எஸ்.வி.ஆர். மொழியாக்கத்தில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (The Manifesto of the Communist Party) இடம்பெறும் அத்தியாயங்களும் உட்தலைப்புகளும் பின்வருமாறு அமைகின்றன. 

  •  பூர்ஷ்வாக்களும் பட்டாளிகளும்
  •  பட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
  • சோசலிச மற்றும் கம்யூனிச இலக்கியம் 1.   பிற்போக்கு சோசலிசம் (ஆ) நிலப்பிரபுத்துவ சோசலிசம் (ஆ) குட்டி-பூர்ஷ்வா சோசலிசம்    (இ) ஜெர்மன் சோஷலிசம் அல்லது உண்மை சோசலிசம்            2.   பழமைபேண் அல்லது பூர்ஷ்வா சோசலிசம் 3.   விமர்சனப் பகுப்பாய்வு-கற்பனாவாத சோசலிசமும் கம்யூனிசமும்
  • பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாக கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு  
(எஸ்.வி.ஆர். மொழிபெயர்ப்பில்…) 

   இவை சிவலிங்கம் மொழிபெயர்ப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளன.

  •   முதலாளிகளும் பட்டாளிகளும்
  •   பட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
  • சோஷலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும்  1.   பிற்போக்கு சோஷலிசம் (ஆ) நிலப்பிரபுத்துவ சோஷலிசம்    (ஆ) குட்டி முதலாளித்துவ சோஷலிசம் (இ) ஜெர்மானிய சோஷலிசம் அல்லது ‘மெய்யான’ சோஷலிசம்  2.   பழமைவாத சோஷலிசம் அல்லது முதலாளித்துவ சோஷலிசம்  3.   விமர்சன-கற்பனாவாத சோஷலிசமும், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசமும்
  •   தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு  
(மு.சிவலிங்கம் மொழிபெயர்ப்பில்…)


    1890 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பிற்கான் எங்கெல்ஸ் முன்னுரையின் கண்ணைக் கலங்கடிக்கும் இறுதி வரிகளின் மொழிபெயர்ப்புகள்!  

  “இதைத் தனது கண்களால் பார்ப்பதற்கு என் பக்கத்தில் மார்க்ஸ் இல்லையே!” (பக்.451, எஸ்.வி.ஆர்.)

   “இதனை மார்க்ஸ் அவர்கள் தம் கண் கொண்டு நேரில் கண்டு களிக்க இப்போது என் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!”, (பக்.30, மு.சிவலிங்கம்)

     “Working Men of all countries, unite”. என்ற அறிக்கையின் இறுதி வரியை, “அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!”, என்று எஸ்.வி.ஆர். தமிழாக்கம் செய்கிறார். இதுவே சரியென்றபோதும் “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!”, என்ற முழக்கம் நிலைத்துவிட்டதால் இம்மொழியாக்கத்திலும் அவ்வாறே பயன்படுத்தியிருப்பதாக பின்குறிப்பில் மு.சிவலிங்கம் தெரிவிக்கிறார். (பக். 95)

    “நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் வீழ்ச்சியிலிருந்து முளைத்தெழுந்த நவீன பூர்ஷ்வா சமுதாயம், வர்க்கப் பகைமையை ஒழித்துக் கட்டவில்லை. அது செய்ததெல்லாம் பழைய வர்க்கங்கள், ஒடுக்குமுறை வடிவங்கள், போராட்ட நிலைமைகள் ஆகியவற்றை வைத்தது மட்டுமே”, (பக்.129 & 130, எஸ்.வி.ஆர்.)

      “நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம், வர்க்கப் பகைமையை ஒழித்து விடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும் புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது”, (பக். 40, மு.சிவலிங்கம்)  

   ‘The modern bourgeois society’ என்பதை எஸ்.வி.ஆர். ‘நவீன பூர்ஷ்வா சமுதாயம்’ என்றும் மு.சிவலிங்கம்  ‘நவீன முதலாளித்துவ சமுதாயம்’ என்றும் மொழிபெயர்க்கின்றனர். அறிக்கையை மட்டும் படிக்க விரும்புவோர் மு.சிவலிங்கம்  அவர்களின்  நூலை வாசிக்கலாம். விரிவும் ஆழவும் வேண்டுவோர் எஸ்.வி.ஆர். நூலை நாடலாம். 

நூல் விவரங்கள்:
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கல்ஸ்
தமிழாக்கமும் அறிமுகவுரையும் விளக்கக் குறிப்புகளும்: 
எஸ்.வி.ராஜதுரை

முதல் பதிப்பு: ஜனவரி: 2014
 பக்கங்கள்: 481
விலை: 500

வெளியீடு:
முகம்,
20/37, 13 வது தெரு,
ஐயர் மனைப்பிரிவு,
சிங்காநல்லூர்,
கோவை – 641005.
பேச: 0422 253938
மின்னஞ்சல்:  mugambooks@gmail.com

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக தற்போது கிடைக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கல்ஸ்
தமிழாக்கம், அறிமுகவுரை, விளக்கக் குறிப்புகள் 
எஸ்.வி.ராஜதுரை
விலை: 550
 வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.

044-26258410, 26251968, 26359906, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
  
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ் எங்கெல்ஸ்
(தமிழில்)  மு.சிவலிங்கம்
முதல் பதிப்பு: அக்டோபர்: 2019
 பக்கங்கள்: 96
விலை: 60
வெளியீடு:
 பாரதி புத்தகாலயம்
 தொடர்பு முகவரி: 
 பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக