தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு
(நூலறிமுகம்… தொடர்: 042)
மு.சிவகுருநாதன்
(முனைவர் பிக்கு போதி பால எழுதிய ‘மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும்’ என்ற நூல்
குறித்த பதிவு.)
தமிழில் அசோகர் வரலாறு இரண்டு ஆங்கில நூல்களின்
மொழியாக்கமாகக் கிடைக்கிறது. ஒன்று: பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு
– சார்ல்ஸ் ஆலன் (தமிழில்) தருமி, எதிர் வெளியீடு. இரண்டு: அசோகர்: இந்தியாவின் பௌத்த
பேரரசர் – வின்சென்ட் ஏ. ஸ்மித் (தமிழில்) சிவ. முருகேசன். இவையிரண்டிலும் பாறை மற்றும்
கற்றூண் சாசனங்கள் விளக்கமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. பாலி இலக்கியங்கள் மற்றும்
இலங்கை வரலாற்றின் அடிப்படையில் பிக்கு போதி பால எழுதிய இந்நூல் அசோகரின் சுருக்கமான
வரலாற்றையும் சாசனங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பையும் நமக்குத் தருகிறது. கூடவே பவுத்த
வரலாற்றையும் சொல்லிப் போகிறது.
பெரிய
பாறை (14), சிறிய பாறை (3), கலிங்கப் பாறை (2), பெரிய தூண் (7), சிறிய தூண் (2) சாசனங்கள்
என 28 வகைகளும், பவுத்த நூற்களும் அசோகரது வரலாற்றை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அசோகரைப் பற்றிய புராணக்கதைகள் மிக அதிகம். வாரிசுப்
போட்டியில் 99 மாற்றாந் தாயின் சகோதரர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தார் என்பது அதிலொன்று.
சிங்கள பாலி மொழி இலக்கியங்களும் இவ்வாறே சொல்கின்றன. கலிங்கப் போரின் துயர்களை விரிவாக
எடுத்துக்காட்டும் அசோகர் இவற்றைச் சொல்லாமலிருப்பாரா, (பக்.97) என்று எதிர்க்கேள்வியை
இந்நூல் எழுப்புகிறது.
அசோகர் தனது இறுதி நாள்களில் துன்பத்திலும் வறுமையிலும்
உழன்றதாகவும் பேரன் அவரை முறையாக நடத்தவில்லை என்றும் கூறுகின்றனர். உணவுண்ணும் தங்கத்
தட்டுகளைத் தானமளித்து விட்டதால், மண் சட்டிகளில் உணவளிக்கப்பட்டதும், மரண தறுவாயில்
நெல்லிக்காயை அளித்ததும் அதை பிக்குகள் பகிர்ந்துண்டு பாடலிபுத்திரத்தில் நெல்லிக்காய்
சேதியம் (ஸ்தூபி) எழுப்பி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. (பக்.106-109)
“நான்
உணவருந்திக் கொண்டிருந்தாலும், அந்தப்புறத்தில் இருந்தாலும், பள்ளி அறையில் இருந்தாலும்,
நந்தவனத்தில் இருந்தாலும், இரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் தங்களது குறைகளை,
வேண்டுதல்களை பொதுமக்கள் என்னிடம் கூறலாம். எனது ஆணையின் மீது விவாதம் வந்தாலோ எதிர்ப்பு
வந்தாலோ அன்னுடைய அமைச்சர்களிடத்து கொடுக்கப்பட்ட பொறுப்புகளின் மீது எக்குறை வந்தாலும்
அதை தெரிவிக்கலாம்”, (பக்.97) என்று அசோகரின் கல்வெட்டு என்று கூறுகிறது. எல்லாரும்
இந்நாட்டு மன்னர் என்று சொல்லும் நாட்டில் சாதாரண கிராம நிர்வாக அதிகாரியிடம் இத்தகைய
பணிவும் பொறுப்பும் இருக்கிறதா? என்று வினா எழுப்புகிறார்.
“எல்லோரும் எனது குழந்தைகள் (என் சொந்த குழந்தைகளுக்கு
என்ன விரும்புகின்றேனோ) அவர்களுக்காக நான் என்ன விரும்புகிறேன். அவர்களின் சமூக நலனும்,
மகிழ்ச்சியும் இவ்வுலகிலும் மறுமை உலகிலும் அவர்கள் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்”,
(பக்.132) என்று உரத்துச் சொன்ன மன்னர்களை உலகம் கண்டதில்லை. அசோகர் இப்படிச் சொல்வதற்கு
பவுத்தமே அடிப்படையாக விளங்கிற்று.
மரணதண்டனை எதிர்ப்பு, கருணை மனு போன்றவற்றிற்கு
கூட இன்றைய பாசிச இந்தியச் சூழலில் இடம் இல்லை என்றே சொல்லவேண்டும். கைதிகளுக்கு அசோகர்
காலத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அதற்கென தனி அதிகாரிகளை நியமித்திருந்தார்.
“நான் முடிசூட்டிக் மொண்ட 26 ஆண்டுகளில் கைதிகளுக்கு 25 முறை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது”,
(பக்.142) என்பதையும் ஐந்தாவது சாசனம் பதிவு செய்கிறது.
“அசோகர் யாகங்களுக்காக விலங்குகளைக் கொல்லக்கூடாது,
என்று தனது கல்வெட்டில் ஆணை பிறப்பித்திருந்தார். அற்ப உயிரான கறையான்களுக்குக்கூட
சரணாலயம் அமைத்திருந்தார். பல மூலிகைச் செடிகளை இறக்குமதி செய்து இந்திய மண்ணில் நட்டு
வைத்தார்; கால்நடைகளுக்கு மருத்துவமனை கட்டினார்; தீயணைப்புப் படை ஏற்படுத்தினார்,
(பக்.06) இவற்றையெல்லாம் நமது பாடநூல்கள் கூறாமல், கிணறு வெட்டினார், மரங்களை நட்டார்
என்று கூறுவதன் நோக்கம் அசோகர் வேத கால கோட்பாடுகளை ஆதரிக்கவில்லை என்பதே காரணம் என
முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
வஜ்ஜியர்களின் நல்லாட்சியின் (மக்களாட்சி) ஏழு
கூறுகளை புத்தரே புகழ்ந்துரைத்துள்ளார். (பக்.102&103) இதைப் போன்ற ஜனநாயக ஆட்சிமுறையில்
இருந்த கலிங்கத்தின் வெற்றிலும் பலரைக் கொன்று குவித்த மனவருத்தமும் அசோகரின் மனமாற்றத்திற்கு
காரணமாகி, இனி போர் வேண்டாம் என்கிற முடிவுக்கு வருகிறார்.
“இவ்வளவு பெரிய பெயரளவில் இல்லாத ஓர் உண்மையான
அகண்ட பாரதத்தை அசோகர் ஒருவர்தான் ஆண்டார். அதற்குப் பிறகு கி.பி. 17 ஆம் நூற்றாண்டில்
ஏறத்தாழ அசோகர் அளவிற்கு தனது எல்லையை விரிவடையச் செய்தவர் ஔரங்கசீப்தான்”, (பக்.104)
என்றும் சொல்லப்படுகிறது.
நிலவரி
விளைச்சலில் மூன்றில் ஒருபங்கு (1/3) விதிக்கப்பட்ட ஆட்சிகளும் இந்தியாவில் உண்டு.
ஆனால் அசோகர் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கும் (1/6) எல்லையோரங்களில் எட்டில் ஒரு பங்கும்
(1/8) வரி விதித்துள்ளார். (பக்.105)
அசோகரின்
இரண்டாவது கல்வெட்டு சாசனம் சோழர்கள், பாண்டியர்கள்,
சத்தியபுத்திரர்கள், கேரளா புத்திரர்கள், தாமிரபரணி பகுதியும் கிரேக்க மன்னன் அன்டியோக்கஸ்,
அன்டியோக்கஸிற்கு அருகிலுள்ள மன்னர்கள் போன்றோரை அண்டை நாடுகளாகக் குறிப்பிடுகிறார்.
மேலும் இந்நாட்டு மக்களும் விலங்குகளும் இந்த மருத்துவம் மற்றும் மூலிகை வசதிகளைப்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுரைக்கிறது. தனது நாட்டிற்கு மட்டுமல்லாது அண்டை நாட்டு
மக்களுக்கும் விலங்குகளுக்கும் கூட இலவச மருத்துவ வசதிகளை ஏற்படுத்த அவரை உந்தித்தள்ளியது
பவுத்தமே.
‘அசோகரின் கற்றூண் சாசனங்களில் ஐந்தின்’படி அவரது
பட்டமளிப்பிற்குப் பிறகு இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்த பிறகு பல விலங்குகள் பாதுகாக்கப்பட
வேண்டுமென்று ஆணையிட்டது. இதில் நீண்ட பட்டியலே கொடுக்கப்படுகிறது.
இவற்றில் பசு இடம்பெறவில்லை
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பிற்காலத்தில் பசுவிற்கு புனிதம் கற்பிக்கப்பட்டது
தெளிவாகிறது. பசு ‘மிக நல்ல உணவு’ என்கிறது தைத்தீரிய பிராமணம். முள்ளம்பன்றி, முள்ளெலி,
உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல், ஒட்டகம் ஆகியவற்றைத் தவிர ஒரு தாடையில் பல் இருக்கும்
வீட்டு விலங்குகள் அனைத்தையும் (தாவர உண்ணிகள்) உண்ணலாம் என்கிறது ‘மநு’ சாத்திரம்.
மாட்டிறைச்சி ‘மதுபர்கம்’ எனப்பட்டது. இது இல்லாமல் அன்றைய விருந்துகள் இல்லை. யாக்ஞவல்கியர்
நெய்யில் பொறிக்கப்பட்ட இளம் கன்றின் மாமிசத்தைப் பற்றிப் பேசுகிறார். பசுவின் மூத்திரம்
புனிதமாகக் கருதப்பட்டபோதிலும் பசுவின் வாய் தீட்டானது; மாறாக ஆடு, குதிரை ஆகியவற்றின்
வாய் சுத்தமானதாகும், என்று வேத சாத்திரங்கள் வரையறுப்பதையும் காணலாம். (பார்க்க: பசுவின்
புனிதம் – டி.என். ஜா – தமிழில்: வெ.கோவிந்தசாமி, பாரதி புத்தகாலய வெளியீடு)
வைஷாலியில்
கூட்டப்பட்ட இரண்டாம் பவுத்த சங்கத்தில் நீக்கப்பட்ட பவுத்த நெறியற்ற பிக்குகள் ‘மகாஸங்கிகள்’ எனத் தங்களை அழைத்துக் கொண்டனர். புத்தரின் போதனைகளைப்
பின்பற்றும் பிக்குகள் ‘ஸ்தவிரர்கள்’ (தேரர்கள்) என்றழைக்கப்பட்டனர். ‘தேரர்’ என்றால்
மூத்தவர் என்று பொருள். இவ்விரு தரப்பாரும் அசோகர் காலத்திலேயே 18 பிரிவாகப் பிரிந்தனர்.
(பக்.153, அட்டவணை) அசோகருக்குப் பிறகும் பவுத்தத்டில் நிறைய பிரிவுகள் தோன்றின.
“தேரவாத பௌத்தத்தைப் போற்றிப் பாதுகாத்த பெருமை
இலங்கை நாட்டையே சாரும். அதே போன்று தமிழ் மண்ணில் தோன்றிய மகாயானப் பௌத்தத்தை காத்த
பெருமை சீன நாட்டையே சாரும்”, (பக்.77) என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அசோகருக்கும்
இலங்கைக்கும் உள்ள உறவை எடுத்துக்காட்ட மகேந்திரன், சங்கமித்திரையை தாரை வார்த்த செயலே
போதுமானது.
“இன்று சிங்கள மொழி வேறு வடிவில் இருந்தாலும் இலக்கணம்
40% சொற்கள் மாகதி மொழியையே சார்ந்திருக்கின்றன”, (பக்.73) இலங்கை மன்னர் மாமனாரும்
மகேந்திரரும் தியானம் செய்த இடம் மதுரை அரிட்டாப்பட்டி என்பதும் அசோகரது குழுவால் பாலி
மொழித் திரிபீடகம் கிடைத்தும் சொல்லப்படுகிறது. (பக்.77)
“சிங்கள மக்களின் மரபணு உருவாக்கத்தில் பல கூறுகள்
கலந்துள்ளன. சிங்கள மக்கள் மரபணு ரீதியில் இந்தியாவின் கிழக்குப் பிரதேச (மேற்குவங்கம்,
ஒடிசா) ஓரளவே நெருங்கிக் காணப்படுகின்றனர். ஆனால் தென்னிந்திய மக்களுடன் நெருங்கிக்
காணப்படுகின்றனர். அவ்வாறே சிங்கள மக்களிடம் இலங்கைத் தமிழர்களின் மரபணுக்களும், இலங்கைத்
தமிழர்களின் மரபணுச் சேர்மத்தில் சிங்கள மக்களின் மரபணுக்களும் கலந்துள்ளன”, (பக்.169,
டாக்டர் சாஹா, மேற்கோள்: இலங்கையில் சிங்களவர் – பக்தவத்சல பாரதி) என்பதையும்,
“இலங்கையில்
சிங்களவர்கள் இந்தியாவோடும், தென்னிந்தியாவோடும், இலங்கைத் தமிழர்களோடும் இன உறவுகளைக்
(racial affinities) கொண்டுள்ளனர். இந்தியாவில் தோன்றிய ஒரு பழம் பெரும் சமயமாக விளங்கக்கூடிய
பௌத்தத்தைப் பதியம் செய்து உயிர்ப்புடன் பேணி வருகின்றனர். கூடவே தென்னிந்தியப் பண்பாட்டைப்
பெரிதும் பிரதிபலிப்பவர்களாக உள்ளனர். இவை யாவற்றையும் கருத்தூன்றி நோக்கும்போது இந்தியத்
துணைக் கணடத்தின் ஒரு நீட்சியாகவே இலங்கையில் சிங்களவர் திகழ்கின்றனர்”, (பக்.176,
மேலது) என்று பக்தவத்சல பாரதி எழுதுவதையும்
கணக்கில் கொள்ளலாம்.
“தற்போது
ஒற்றுமையாக இணைந்திருக்கும் பௌத்த சங்கத்தினுள் ஒற்றுமையை சீர்குலைத்து கலகம் செய்யும்
நபர்களை சங்கத்தினுள் அனுமதிக்கக் கூடாது. பெண் பிக்குணிகளோ அல்லது ஆண் பிக்குவோ யாராகயிருப்பினும்
அங்கத்தின் ஒற்றுமையை சீர்கெடுத்தவர்களை வெள்ளை ஆடையை அணியச் செய்து அவர்கள் பிக்கு
/ பிக்குணி மடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறெங்காவது இருக்குபடி செய்ய வேண்டும்”,
(பக்.147) என்று அசோகரது சிறிய கற்றூன் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
மூன்றாவது பௌத்த சங்கத்தை அசோகர் மொக்கலி புத்த
திஸ்ஸ தேரரின் தலைமையில் கூட்டப்பட்டது. அவர்களிடம் புத்தநெறி குறித்த வினாக்கள் எழுப்பட்டு
தகுதியற்றவர்களின் சீவர ஆடை (துறவாடை) பறிக்கப்பட்டு வெள்ளுடை அணிவிக்கப்பட்டனர். வெள்ளுடை
இல்லறத்தாரைக் குறிப்பதாகும். ஆனால் மற்றொரு அவைதீக சமயமான சமணம் வெள்ளுடையை துறவுக்கான
(ஸ்வேதம்பரர்கள்) அடையாளமாகக் கருதுவது இங்கு
நோக்கத்தக்கது.
“பிந்துசாரர் ‘ஆஜ்வீகம்’ என்ற சமயத்தில் ஆழந்த
பற்றை வைத்திருந்தார். இச்சமயத்தைத் தோற்றுவித்தவர் பெயர் மக்கலி கோஸலர். இவரும் புத்தர்
பெருமானும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆஜ்வீக சமயம் மௌரியர் ஆட்சியில் செழித்தோங்கியது.
பௌத்தமும் சமணமும் போன்று ஆஜ்வீகமும் கொல்லாமையை வலியுறுத்தியது. தற்போது இச்சமயம்
முற்றிலும் மறைந்துவிட்டாலும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக் கண்டத்தில்
பின்பற்றப்பட்டு வந்தது”, (பக்.29) என்று சொல்லப்படுகிறது. மற்கலி கோசலர் மகாவீரருடன்
சில காலம் இருந்து, பிறகு கருத்து முரண்பட்டு தனி சமயத்தைக் கட்டியவர் என்பது வரலாறு.
இதற்கு
மாறாக, அசோகர் புத்தகயாவில் “மகா போதி விகாரையை கட்டிய பொழுது இவ்வுலகில் கிறித்தவ
சமயம் இல்லை, இஸ்லாமிய சமயம் இல்லை, சீக்கிய சமயம் இல்லை. இவ்விகாரையைக் கட்டிய பொழுது
இவ்வுலகில் இருந்த சமயங்கள் யூத சமயம், மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதியான வேத சமயம்,
மகாவீரர் என்றழைக்கப்பட்ட ‘நிகண்டநாத புத்திரர்’ ஏற்படுத்திய சமண சமயம், புத்தரால்
தோற்றுவிக்கப்பட்ட ‘புத்த சமயம்’, ஜராதுஷ்ட்டரால் தோற்றுவிக்கப்பட்ட பார்ஸி சமயம்.
இவை மட்டுமே இம்மன்பதையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது”, (பக்.52&53) என்று
குறிக்கும்போது ஆசிவகம் மத இருப்புச் சுட்டப்படவில்லை.
“பௌத்தம் வளர்ந்த காலத்தில் ஆசீவகம் (அஜீவகம்)
என்ற சமயமும் இருந்துள்ளது. இந்நூலில் உள்ள தகவல்படி அசோகரின் வாரிசுப் போட்டியில்
கலந்துகொள்ளும்போது அதற்கு நடுவராக இருந்தவர் பிங்களவத்ஸஜீவ என்ற ஆசீவகத்துறவி ஆவார்.
ஆசீவகம் என்பது, பகுதகாச்சாயன் (தமிழில் பக்குடுக்கை
நன்கணியார்) வகுத்த ஊழியல் கோட்பாடு (அணுவியல்) கணாதர் (தமிழில் கணிஆதன்) வகுத்த சிறப்பியம்
எனப்படும் வைசேஷகம், காஸ்யபர் (பூரண காசியபன்) வகுத்த வினை மறுப்பியல் என்று தத்துவார்த்த
நெறிகளின் தொகுப்பாகவும்,வேத மறுப்பைக் கொண்டதுமாகும். (…)
ஆசீவக நெறியில் சான்றாண்மையுடனும்
குடும்பத்தை ஏற்றும், கொல்லாமை தவிர்த்தும், அனைவருக்கும் வழிகாட்டியாக, அறம் சார்ந்து
வாழ்ந்தோரே அந்தணர் எனப்பட்டனர். காலப்போக்கில் வேத நெறி கொண்டோரும், அந்தணரும் இணைந்துவிட்டனர்”,
(பக்.12, அணிந்துரை, காஞ்சி விஜயபாரதி) என்று விரிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இங்கு
சமணம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
ஆசீவகம்
இறுதிக்கட்டத்தில் (கி.பி. 14 ஆம் நூற்றாண்டில்) வைணவத்துடன் அய்க்கியமானதாகச் சொல்வர்.
எனவே வேத நெறிகொண்ட ஒரு பிரிவினருடன் அந்தணர் இணைந்தனர் எனலாமா? சமணம், பவுத்தம், ஆசீவகம்
ஆகிய அவைதீக சமயங்கள் தங்களுக்காக முரண்பட்டு சண்டையிட்டாலும் வரலாறு என்று வருகிறபோது
இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டும் அவற்றின் போக்குகளையும் அரசியலையும் அப்படியே உணர்த்த
வேண்டியது அவசியமாகும்.
மௌரியப் பேரரசர்களின் வைதீகத்திற்கு எதிராக இந்த அவைதீக சமயங்களை ஆதரித்த
காரணத்தினால் தாழ்ந்த குலத்தவன், சூத்திரனின் மகன் என்றெல்லாம் பிராமண (சம்ஸ்கிருத)
இலக்கியங்கள் வசைபாடின. ‘மோரா’ என்றால் மயில். இந்த மயிலை தங்களது இலச்சினையாகக் கொண்டவர்கள்
மௌரியர். இது வேதகாலத்தைச் சாராத ஓர் ஆரிய இனத்தை சேராத சின்னம் என்றும் சொல்லப்படுகிறது.
(பக்.27)
“விழிப்புடனிருத்தல்
சாகாமையின் வழி
சாதல்
விழித்திருப்பவர் சாகார்
விழிக்காதிருப்பவர் செத்தார்.
(…)
விழிப்பில் திளைக்கும் பிக்கு
விழிப்பின்மைக்கு அஞ்சுவார்
தளைகளை எரித்துக் கிளம்பும்
தீயாய்
முன்செல்வார்", (பக்.149-151, தம்மபதம்)
என்ற இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தம்மபத வரிகளுடன் நூல் நிறைவடைகிறது. பவுத்த வரலாறும்
அசோகரின் வரலாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்திய, தமிழ்ச் சூழலில் விரிவான
ஆய்வை வேண்டி நிற்கும் புலங்கள் இவை.
நூல் விவரங்கள்:
மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது
சாசனங்களும்
(பாலி இலக்கியங்கள் மற்றும்
இலங்கை வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.)
முனைவர் பிக்கு போதி பால
முதல் பதிப்பு: டிசம்பர் 2013
பக்கங்கள்:
158
விலை: ₹ 130
வெளியீடு:
தமிழ்நாடு பௌத்த சங்கம்
பதிப்பு:
மெத்தா பதிப்பகம்,
1848/8, ஆறாவது அவென்யூ,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை – 600040.
தொலைபேசி:
044 26182447
அலைபேசி:
9094869175
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக