செவ்வாய், மே 19, 2020

காவிமயமாகும் ராணுவம்


காவிமயமாகும் ராணுவம் 

(நூலறிமுகம்… தொடர்: 035)

மு.சிவகுருநாதன் 


(ரெட் புக்ஸ்  வெளியீடாக வந்த,  சு. அழகேஸ்வரன்  எழுதிய  சமகால நோக்கில் அரசும் ராணுவமும்’ என்ற விமர்சனக் கட்டுரை நூல்  குறித்த பதிவு.)






        கொரோனா சூழலைப் பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே, கொல்லைப்புறமாக, பல்வேறு தனியார்மய அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. போலிச் ‘சுதேசி’யம் பேசியவர்கள் இன்று பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49% லிருந்து 74% மாக உயர்த்தியுள்ளனர். இதுவரை அரசிடமிருந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களையும் தனியாரிடம் விற்றுவிட அல்லது முற்றிலும் முடமாக்க இம்முடிவுகள் போதுமானது. நிலக்கரி, இரும்பு, அலுமினியம், பெட்ரோலியம், இயற்கை வாயு போன்ற கனிமக் கொள்ளைகளும் இன்னும் விரைவு படுத்தப்படும்.




    இடதுசாரி தொழிற்சங்கவாதியான திருச்சி படைக்கலத் தொழிலகத்தில் பணிபுரிந்து வரும் தோழர் சு. அழகேஸ்வரன், ராணுவம், பாதுகாப்பு தொடர்பான விமர்சனங்களை சில குறுநூற்கள் வாயிலாக முன்வைத்து வருகிறார். தமிழில் இத்தகைய நூல்கள் மிகவும் குறைவு. ‘ராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள் (2017), ‘இரையாகும் இறையாண்மை: இந்திய – அமெரிக்க ராணுவ உறவுகள் 2014-2017’ (2017), ‘எல்லை தாண்டிய தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை சிக்கல்கள்’ (2018)  ஆகியவை இவரது குறுநூல்களாகும். ‘சமகால நோக்கில் அரசும் ராணுவமும்’ (2019) குறுநூலில் அரசியல் மற்றும் காவிமயமாகும் ராணுவத்தின் போக்குகள், மனித உரிமை மீறல்கள், ராணுவத்தின் காலனிய நடைமுறை, பெல்லட் துயரம், சோபியான் கொலை வழக்கு என பல்வேறு பிரச்சினைகள் பற்றிய 16 சிறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. தரவுகள், பின்னிணைப்புகள், கலைச்சொற்கள் பட்டியல்கள் இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.



    ‘போர் வரலாற்றைத் திருத்தி எழுதுதல்’ மட்டுமே சற்று பெரிய கட்டுரையாகும். ராணுவத்தைக் காவிமயமாக்குவதும் வரலாற்றைத் திரிப்பது, திருத்துவது போன்றவை இந்துத்துவ ஆட்சியின் நிகழ்ச்சி நிரலில் உள்ளவை. வாய்ப்பு கிடைக்கும்போது இவற்றைத் துரிதப்படுத்துகின்றனர். பாடநூல்களில் இந்துத்துவ வரலாற்றை நுழைப்பது இவர்கள் ஆட்சியலமர்ந்ததும் செய்யும் முதல் வேலையாக இருக்கிறது. 



   1965 இந்திய – பாகிஸ்தான் போரின் 50 ஆண்டு நிறைவையொட்டி நிதின் கோகலே  ஐ கொண்டு எழுதி வெளியிட்ட நூலில், பாகிஸ்தானை விட இந்தியா அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றியதுடன் குறைவான வீரர்களையும் டாங்குகளையும் இழந்தது. இப்போரில் இந்தியாவிற்குத்தான் வெற்றி கிடைத்தது என்று உறுதிபடச் சொல்லப்பட்டுள்ளதை (பக்.14&15) எடுத்துக்காட்டி,  ஆகஸ்ட் 2015 க்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் இந்தியா வெற்றியடைந்ததாக மதிப்பிடவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். (பக்.15) என்.டி.டி.வி யில் பணியாற்றிய நிதி கோகலேவை தனது திட்டத்தின் பிரச்சாரகராக மாற்றிவிட்டது. நீதிபதிகளை மிரட்டியும் விலைக்கும் வாங்கும் இவர்களுக்கு இதெல்லாம் சாதாரண செயல்தானே! 

    இந்துத்துவத்திற்கு ரோல்மாடல் ஜெர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளே. அவர்கள் செய்வதைக் கொண்டாடுவதும் காப்பியடிப்பதும் இந்துத்துவம் பெருமை கொள்கிறது. “அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய – பாகிஸ்தான் போரில் நடுநிலை வகித்ததுபோல் ஒரு சித்திரத்தை உருவாக்க முயல்கிறது. பனிப்போர் காலகட்டத்தில், கம்யூனிசத்திற்கு எதிராகப் போர் புரிவதற்காக ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, தற்போது தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது”, (பக்.18) என்று அமெரிக்காவின் இரட்டை வேடத்தை எடுத்துக்காட்டுகிறார். 



    50 ஆண்டுகள் பொன்விழா மதிப்பீடுகள், போலி வெற்றி முழக்கங்களை இன்று தேவையில்லை. இணக்கமான பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வாக இருக்க முடியும். நவாஸ் ஷெரீப் – வாஜ்பாய் இடையே உருவான லாகூர் ஒப்பந்தம், மன்மோகன்சிங் – பர்வேஸ் முஷாரப் இடையேயான பேச்சுவார்த்தை முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்று மூத்த பத்தரிக்கையாளர் சீமா முஸ்தபா சுட்டிக்காட்டியதை அரசும் ஊடகங்களும் கருத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். (பக்.20) 

    இந்தியாவை காவிமயமாக்குவதன் முதல்படியாக  மக்களை ராணுவமயமாக்குவதும் கட்டாய ராணுவப் பயிற்சி என்பதாகவே இந்துத்துவ செயல்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தேசபக்தி என்ற கற்பிதத்தை மக்களிடம் வெறியாகப் பரப்புகின்றனர். வல்லாதிக்க வெறியும் கனவும் இவற்றின் ஊற்றுக்கண்கள். அப்துல்கலாம் போன்றவர்களின் ‘வல்லரசு’ என்னும் கற்பிதத்தை பெரும்பான்மையோரின் மூளையில் ஏற்றி இவர்களுக்குச் சேவகம் புரிந்துள்ளனர். மோடியின் வங்கதேசப் பயணத்தின் உரையில் பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெறியும் குறுகிய தேசியவாதமும் வெளிப்பட்டது மற்றொரு கட்டுரையில் சுட்டப்படுகிறது. 

    குடியரசு தின அணிவக்குப்பில்கூட கண்காட்சி நடத்தப்படும் பகுதியிலிருந்து 300 மீட்டருக்குள் அப்பால் ஆயுதத் தளவாடங்கள் வைக்கப்படும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மூன்று நாள்கள் ஆயுதக் கண்காட்சி நடத்தப்பட்டது. இம்மாதிரியாக, அமெரிக்கா, கேப்பிடல் ஹில்லில் குரூஸ் ஏவுகணையைக் காட்சிப்படுத்தியதை, சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச்செல்லும் என மக்கள் கண்டித்தனர். இந்தியாவில் இத்தகைய சூழலுக்கு மக்கள் வாழப் பழக்கப்பட்டுவிட்டனர். ராணுவத்தை விமர்சிப்பது தேசத்திற்கு எதிரானது என்ற மாயையிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். 

    ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை ஒழுக்கம், தேசியவாதக் கண்ணோட்டத்துடன் உருவாக்குதல் என்ற பெயரிலான திட்டமும், இது ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அடிப்படைத்தகுதியாகும் என்பதும் இளைஞர்களை மூளைச் சலவை செய்து கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். இதற்கும் குழந்தைகளை ராணுவத்தில் சேர்க்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? 

   “நமது ராணுவம் டோக்ரா, பஞ்சாப், கோர்வால், குமான் ரெஜிமெண்ட்ஸ் என்று பிராந்திய ரீதியாகவும் ஜாட், அகிர்ஸ், மகர்ஸ் என்று சாதி ரீதியாகவும் சீக்கியர்கள், முஸ்லீம்கள் என அணிகளாகப் பிரிக்கப்பட்டு எயல்பட்டுவருகிறது. அதேவேளையில், பெரும்பாலும் நமது ராணுவப் படைகள் மேற்கண்ட பிரிவுகளை உள்ளடக்கிய கலவையாக கட்டமைக்கப்பட்டுள்ளதைக்”, (பக்.09&10) குறிப்பிட்டு, பாபா ராம்தேவ், ஶ்ரீ ரவிசங்கர் போன்றோரது விழாக்களில் ராணுவம் பயன்படுத்தப்படுவதும் வேறு சில நடவடிக்கைகளும் ராணுவத்தை (காவி) அரசியலுக்குள் செலுத்தும் என்பதையும் சமயச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதையும் ஒரு கட்டுரை விளக்குகிறது. (பக்.09)

   கார்ப்பரேட் சாமியாரும் மோடியின் நண்பருமான பாபா ராம்தேவிடம் பயிற்சி பெற்று, யோகாவை நாடு முழுவதும் பரப்புவதற்காக 250 ராணுவ வீரர்கள் ஹரித்துவார் அனுப்பப்பட்டது, சுற்றுச்சூழல் விதிகளை மீறி நடத்தப்பட்ட, மற்றொரு கார்ப்பரேட் சாமியார் ஶ்ரீ ரவிசங்கரது வாழும் கலை அமைப்பின் சார்பிலான விழாவிற்கு, யமுனை ஆற்றில் மிதவைப் பாலங்கள் அமைக்க ராணுவத்தினரைப் பயன்படுத்தியது போன்ற செய்லகளின் வாயிலாக ராணுவக் கட்டமைப்பை இந்துத்துவ செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்தும் போக்கை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. (பக்.10&11)

    பணி மூப்புத் தகுதியைப் புறக்கணித்து விதிகளுக்கு முரணான ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவர்  பிபின் ராவத். அவரது வெளிப்படையான இந்துத்துவ  அரசியல் பேச்சுகள், காவிக்கொள்கையுடன் நெருக்கம் காரணமாகவே முப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக ஜனவரி 01, 2020 முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் மாநில வரைபடம் இருப்பதை விமர்சித்த இவரது உளறல்களை இந்நூல் சுட்டுகிறது. (பக்.48)

  ராணுவத்தில் வழங்கப்படும் மோசமான உணவு, களைய வேண்டிய ஊதிய முரண்பாடுகள், சகாயப் பிரிவு (orderly) வீரர்களின் மோசமான நிலைமை, சகாயப்பிரிவை அகற்றும் பரிந்துரைகளை ஏற்காமை, ராணுவத்தினரின் மன அழுத்தங்கள், தொடரும் தற்கொலைகள், மனித உரிமை மீறல்கள் அனைத்தும் பல்வேறு கட்டுரைகளில் விவாதப் பொருளாகின்றன. 

   ராணுவத்தினர் காஷ்மீர் ஶ்ரீநகரில் இளைஞர் ஒருவரை ஜீப்பில் கட்டிவைத்து ஊர்வலமாகச் சென்றதும், மனித உரிமை ஆணையம் இழப்பீடு வழங்க உத்திரவிட்டும் அதை வழங்க மறுக்கும் நிலையும் மிக மோசமானது. அந்த இளைஞரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதை ராணுவ தளபதி நியாயப்படுத்திருப்பதும் மிகக் கொடூரமான நிகழ்வாகும். 

   உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘பெல்லட்’ குண்டுகளுக்குப் பதிலாக, ரப்பர், பாலிமர், பேப்பர் குண்டுகளைப் பயன்படுத்துமாறு நிபுணர் குழு பருந்துரை செய்தாலும் ‘பெல்லட்’ கொலைகளும், போலி மோதல் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணம் இருப்பது எடுத்துக்காட்டப்படுகிறது. இம்மாதிரியான ராணுவக் குற்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் ஒன்றுமே நடப்பதில்லை என்பதை சோபியான் கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நமக்கு உணர்த்துகின்றன. 

     கன்டோன்மென்ட் நிலங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுதான் அங்குள்ள சாலைகளைப் பொதுப்பயன்பாட்டிற்குத் திறந்துவிடுவது என்கிற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்கிறார். இதையும் பா.ஜ.க. தனது வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இது ராணுவத்தை அரசியல் மயப்படுத்தும் பணிகளுக்கும் உதவிகரமாகவும் இருக்கும். 

    துல்லியத் தாக்குதல் முடிவை எடுப்பதற்கான துணிச்சலை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழங்கியது, என்று மனோகர் பாரிக்கர் வெளிப்படையாக பேசும் அளவிற்கு இந்திய ராணுவக் காவிமய நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதை நாம் உணர வேண்டும். அதற்கு இத்தகைய நூல்களின் அரிய பங்களிப்பை பாராட்டவும், வரவேற்கவும் வேண்டும். 
                
நூல் விவரங்கள்:

 சமகால நோக்கில் அரசும் ராணுவமும்      
 சு. அழகேஸ்வரன்

வெளியீடு: 
 ரெட் புக்ஸ்
முதல் பதிப்பு: ஏப்ரல் 2019
பக்கங்கள்: 72
விலை: 80

வெளியீடு:
ரெட் புக்ஸ்,
6, 70 அடி சாலை,
சுப்புப் பிள்ளைத் தோட்டம்,
தியாகராய நகர்,
சென்னை – 600017.
அலைபேசி: 9042274271, 9884318227
மின்னஞ்சல்:  azhageswaransu@gmail.com
(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 18/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக