‘கார்ப்பரேட்’ யுகத்தில் சுயசார்பின் நிலை?
(நூலறிமுகம்… தொடர்: 021)
மு.சிவகுருநாதன்
(பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’ வெளியீடாக வந்துள்ள ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ என்ற நூல் குறித்த பதிவு.)
ஆயிஷா இரா. நடராசன் எழுதியுள்ள ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ எனும் இந்நூலில் பல அக்காலக் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்தப்
படுகின்றனர். அவர்கள் பின்வருமாறு:
- ராஜாராம் மோகன்ராய்
- பெக்ராம்ஜி மலபாரி
- ராஸிக் கிருஷ்ணா மாலிக்
- கவுரி பார்வதிபாய்
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- சாவித்திரி பா புலே
- சாயாஜிராவ் கெய்க்வாட்
- பண்டித ரமாபாய் சரஸ்வதி
- கேசவ் சந்திர சென்
- பைக்காஜி காமா அம்மையார்
- மகரிஷி கேசவ் கார்வே
- கோபால கிருஷ்ண கோகலே
- கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு
- சையது அகமது கான்
- ரமாபாய் ரானடே
- கோபால் கணேஷ் அகர்கர்
- அசுடோஷ் முகர்ஜி
- ஜாம்ஷெட்ஜி ஜிஜி பாய்
- அபலா போஸ்
- அய்யன்காளி
- ஷேக் அப்துல்லா - பேகம் வாஹித் ஜஹான்
- டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
- மகாத்மா காந்தி
இவர்களில்
பலர் ‘கல்வியாளர்களே அறிந்திடாத ஆளுமைகள்’ என்கிறார் முன்னுரையில்
கல்வியாளர் ச.சீ. ராஜகோபாலன். கல்வியாளர்கள்
சமூக சீர்திருத்தவாதிகளாக இருப்பது இயற்கையானது என்றும் அவர்களது தன்னலமற்ற ஈடுபாடே
இந்தியாவின் கல்விக் கண்ணைத் திறந்தது, என்றும் சொல்கிறார். விரிந்த தேடல், கடின உழைப்பின்
மூலம் இவ்வளவு மறைக்கப்பட்ட கல்வியாளர்களான இந்தியக் கல்வித் தூண்களை மீட்டெடுத்து
உலகறியச் செய்ததைப் பாராட்ட வேண்டும்.
இன்று பெண்கல்விக்காக துப்பாக்கிகளை
எதிர்கொண்ட மலாலாவை அனைக்கும் தெரியும். ஏனெனில் அது இஸ்லாமிய அடிப்படைவாதம்
பற்றியது. ஆனால் 1848 யிலேயே இந்து அடைப்படைவாதத்தை தனது கணவர் ஜோதிராவ் புலே உடன்
எதிர்கொண்டு வென்றவர் இவர். பெண்கல்விக்கு எதிராக அழுகிய முட்டை, சாணி, மல வீச்சுக்கு
இலக்கான வீரப் பெண்மணி. இந்தியக் கல்வி தொடர்பான நமது பாடநூல்களில் காணப்படாத ஒரு
பெயராகவே சாவித்ரிபா புலே இன்றும் இருக்கிறார்.
இரண்டாம்
உலகப்போரின்போது ஆஸ்திரியாவில் ஹிட்லரின் வதைமுகாமில் 200 குழந்தைகளுடன் மாண்டுபோன
ஜோஹன் கோர்சாக் ஐப் போல குழந்தைகள் மற்றும் கல்விக்காக உயிர் துறந்தவர் சாவித்ரி
பா புலே. இவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, அன்று கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக்
கவனித்துக் கொண்டதால் அந்நோய் தாக்கி மாண்டு போனார்.
கல்விப் போராளிகள் பலரது கதை இம்மாதிரியான
இன்னல்கள் பலவற்றைக் கொண்டது. இவர்களை பெயர் சொல்லி அறிமுகம் செய்யாமல் அவர்களது
சிறப்புகளைத் தலைப்புகளாக்கியுள்ளார். (எ.கா. அய்யன்காளி – தலித் மக்களின் கல்வி
நாயகர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி –ஆதரவற்றவர்களுக்கு ஆதாரக் கல்வி தந்த
தமிழ் வேங்கை)
இறுதிக்கட்டுரையில், காந்தியக்
கல்வி X மெக்காலே கல்வி பற்றிய ஒப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன.
- ஏழாண்டுகளுக்கு அரசே வழங்கும் ஆதாரக்கல்வி
- தாய்மொழி வழிக்கல்வி
- உடலுழைப்பிற்கு முதன்மை
- மாணவர்களே பள்ளியை கட்டமைத்து இயக்குதல்
- சூழலோடு பொருந்துகிற கல்வி
போன்ற காந்திய / சர்வோதய / ஆதாரக் கல்வியின்
கூறுகள் விளக்கப்படுகின்றன. மெக்காலேக் கல்வியின் மீதான விமர்சனங்கள் அனைத்தும்
காந்தியவாதிகளுடையது அல்ல. இன்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்துத் தரப்பும்
மெக்காலே கல்வியை விமர்சிக்கிறவர்கள் ஆகிவிட்டனர். இவர்கள் வலியுறுத்தும்
சுயசார்பும் காந்தியின் சுயசார்பு ஒன்றாக இருக்கவியலாது. இன்று சுயசார்பு என்பது
பொருளற்றதாகிவிட்டது.
இந்தியச்
சூழலிலுள்ள சாதிய அம்சங்களை கணக்கில் கொள்ளாது மெக்காலேக் கல்விமுறையை மட்டும்
விமர்சிப்பது சரியல்ல என்று எண்ணுகிறேன். ஆதாரக் கல்வித்திட்டம் நடைமுறைக்கு
வரும்போது அது ஒரு குலக்கல்வித்திட்டமாகவே அமையும். இது ‘தர்மகர்த்தா முறை’க்கே இட்டுச்
செல்லும். 14 வயதில் குழந்தைகளைப் பள்ளியைவிட்டு நிறுத்திட பொற்றோருக்கு உரிமை
உண்டு என்பதைத்தான், இன்று பெற்றோருடன் தொழிலில் ஈடுபடலாம் என்று விலக்கு அளிக்கின்றனர்.
அரசு அனைவருக்கும் கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள இது வசதியானது.
எனவே அவர்கள் வேறுமொழிகளில் இதைப் பேசுகின்றனர்.
சமத்துவம் என்பதுகூட மேற்கத்திய சித்தாந்தமே.
மகாவீரர், புத்தர் கால சமத்துவம் அழித்தொழிக்கப்பட்டது; இவை பின்னர் துளிர்க்கவே
இல்லை. காந்தியால் எத்தனை ஜே.சி.‘குமரப்பா’க்களை உருவாக்க முடிந்தது? இது அவரோடு
முடிந்துபோன ஒன்று. இதன் கூறுகளில் இருக்கும் தற்காலப் பயன்பாடுகளை பரிசீலிக்கலாம்.
ஆனால் மாற்றாக முன்வைக்க இயலாது.
காந்தியின் ராட்டையும் கலப்பையும் இங்கு சாதி
சார்ந்துதான் இருந்தது என்பது முக்கியம். காந்தி சொன்ன அனைத்திற்காகவும் இங்கு
மக்கள் திரளவில்லை. தீண்டாமை. ஆலய நுழைவு, சம்பந்தி உணவுண்ணல் போன்ற வெறும்
அடையாளப் போராட்டங்களாகவே அன்றும் இருந்தன; இன்றும் இருக்கின்றன. (எ.கா. சமத்துவப்
பொங்கல்) இல்லையென்றால் நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் தலித்கள் மீது வன்கொடுமை
நிகழ்ந்தது ஏன்? அன்றும் இன்றும் சாதிய இழிவுகளும் கொடுமைகள் மற்றும் படுகொலைகளும்
நடக்கின்றன. எல்லாவற்றையும் மெக்காலேக் கல்வியைச் சொல்லி பலரால் தப்பித்துக் கொள்ள
முடிகிறது. சுயசார்பிற்கான அடித்தளங்களை உருவாக்காமல் கல்வியில் மட்டும் பேசுவது
சரியாக இருக்காது.
“இன்றுவரை எல்லாக் கல்விக் குழுக்களுமே
மெக்காலேவாதிகளால் மெக்காலேவாதிகளுக்காக அமைக்கப்பட்டவை” என்று சொல்லப்படுகிறது.
(பக்.123) இது எந்தளவிற்கு உண்மை. காந்தியவாதிகளும் மெக்காலேவாதிகளும்
ஒருபடித்தானவர்கள் அல்ல. மெக்காலே கல்வியை விமர்சிப்பது ஒரு பாணி (style),
அவ்வளவே! இதற்கு மாற்றாக இவர்கள் அன்றைய குருகுல, திண்ணைக் கல்வியைத்தான் வலியுறுத்துகின்றனர். இந்த எதிர்ப்பாளர்கள்
பாவ்லோ பிரைய்ரே போன்று மாற்றுக் கல்வித்திட்டத்தை முன்மொழிபவர்களும் அல்ல. இந்துத்துவாதிகளுக்கு
இதில் இடமில்லை; அல்லது மெக்காலேவாதிகள் அனைவரும்
இந்துத்துவாதிகள் எனலாமா? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் கோத்தாரி போன்றவர்களை
மெக்காலே வாதி என்றே கொள்வோம்; கே.கஸ்தூரிரெங்கன்? ஆர்.எஸ்.எஸ். ஆதரவு
இந்துத்துவவாதியல்லவா? ஆதாரக்கல்வியோடு இணையும் அடிப்படைவாதிகளே இங்கு அதிகம்.
தொழில்களிடையே சமத்துவம் இல்லாத சாதியச்
சமூகத்தில் சர்வோதயக் கல்வியின் விளைவு என்னவாக இருக்கும். தூய்மைப்பணிகளில்
அனைவரையும் ஈடுபடுத்துவதைப்போல கோயில்பணிகளிலும் ஈடுபடுத்த முடியுமா? இதற்குத்
தயாராக இல்லாதபோது தொழில் ஆதாரக் கல்வி எதனை நோக்கிச் செல்லும்?
இந்நூலில்
பட்டியலிடப்படும் சிலர் சாதி, மதக் கண்ணோட்டங்களில் ஊறியவர்கள். காந்தியைப் போல வருண
தர்மத்தை ஏற்றவர்கள். கல்வியளிப்பதில் மட்டுமே இவர்கள் வைதீகத்துடன் விலகல் போக்கை
மேற்கொண்டனர். சமூகச் சமத்துவம் இல்லையென்றால் கல்வியால் ஆகப்போவது வெறும் பொருளியல்
சமத்துவமே. இவை சமூக, மனித இருப்பை அங்கீகரிக்கப் போதுமானதல்ல.
அனைவரிடமும் நிலம் இல்லாதபோது எப்படித்
தற்சார்பு இருக்கும்? உள்ளூர் பண்ணைகளிடம் சாதிய ஒடுக்குமுறையில் கொத்தடிமைக்
கூலியாக இருப்பதைவிடவும் ‘பில் கேட்ஸி’ன் வேலைக்காரராவதில் ஒன்றும் குறைச்சல்
இல்லை. உண்மையில் இந்த வேலைக்காரர்கள் ஆவதில் மேட்டுக்குடிகளுக்குள்தான் அதிக
போட்டி!
புரட்சி ஏற்பட்டால் எல்லாம் சரியாகிவிடும்
என்ற கம்யூனிஸ்ட் நம்பிக்கையைப்போல, ஆதாரக்கல்வி அமலானால் கேடுகள் அனைத்தும்
ஒழிந்துவிடும் என்கிற கற்பிதம் கதைக்கு உதவாது.
படித்துக் கொண்டே தொழில் செய்வது, சம்பாதித்து
எல்லாம் மேலை நாடுகளிலும் இருக்கிறதே! குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும்
எவ்வித வாய்ப்புகளும் அளிக்காமல், அனைத்தையும் பறித்துக் கொண்டு ஆதாரக்கல்வி
பெருமைகளைப் பேசுவதில் பொருளில்லை என்றே தோன்றுகிறது.
காந்திய அடிப்படையோ, இந்தியச் சமூகச்
சீரழிவுகளோ சீனாவிற்கு இல்லை. அங்குள்ள
தத்துவப் போக்குகள், கம்யூனிசம், கடின உழைப்பு போன்றவை இதனைச் சாத்தியமாக்கின.
உழைப்பவனை தீண்டாதவன் என்றும் பிச்சையெடுப்பவனைச் ‘சாமியார்’ என்று கொண்டாடும்
இந்தியத் தேசமல்ல அது. சமூக மதிப்புகள் எவ்வாறு மேலிருந்து கட்டமைக்கப்படுவதையும்
இவை போன்ற கூறுகளையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.
இன்றுள்ள உலகமய வணிகச் சூழலில் கல்வியும் ஒரு
தொழிலே. சுயசார்பில் வாழ்க்கைத் திறனுடன் முன்னேறுதலின் சாத்தியப் பாடுகளை கொஞ்சம்
யோசிக்க வேண்டும். குறு, சிறு தொழில்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு எல்லாம்
‘கார்ப்பரேட்’ மயமாகும் இன்றைய தேசத்தில்
சர்வோதயா, சுயசார்பு பற்றிப்
பேசுவதைவிட கொடிய வன்முறை ஏதும் இருக்கமுடியாது.
நூல்
விவரங்கள்:
இந்தியக் கல்விப் போராளிகள்
ஆயிஷா இரா. நடராசன்
வெளியீடு:
Books for Children (பாரதி புத்தகாலயம்)
முதல் பதிப்பு: மே 2018
இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2018
பக்கங்கள்:
128
விலை: ₹ 100
தொடர்பு முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி:
044 24332424, 24332924, 24356935
இணையம்:
www.thamizhbooks.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக