புதன், மே 06, 2020

பாசிசத்தின் ஆட்சி ஜனநாயகத்தை வேரறுக்கும்


பாசிசத்தின் ஆட்சி ஜனநாயகத்தை வேரறுக்கும்



(நூலறிமுகம்… தொடர்: 023)
 


மு.சிவகுருநாதன்



(பேரா. அ.மார்க்ஸ் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘சட்டப்பூர்வ ஃபாசிசம்’ என்னும் குறுநூல் குறித்த பதிவு.)




     கொள்ளை நோயான பாசிசம் எத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடும் என்பதை வரலாற்று நெடுகிலும் உணர்ந்து வந்திருக்கிறோம். அறிவுஜீவிகளை வேட்டையாடும், நச்சுக் கருத்துகளைப் பரப்பும், அறிவுக் கருவூலங்களை அழிக்கும், மையப்படுத்தப்பட்ட ஒரே தலைமையை விரும்பும், இனவெறுப்பை முன்னிறுத்தி படுகொலைகள் செய்யும். முசோலினி, ஹிட்லர் காலந்தொட்டு இதுவே பாசிசத்தின் செயல்பாடுகளாக இருக்கின்றன.

    இந்துத்துவம் வாழ்க்கைமுறை என்று பிதற்றி அதை அனைவரின் மீதும் திணிப்பதுகூட ஒருவகையான பாசிசமே. தேசிய வரையறைகள் இறுக்கமாகவும் அந்நியர்கள் (others) விலக்கப்படும்போது தேசியம் பாசிசமாக உருப்பெறுகிறது என்பார் அ.மார்க்ஸ். (இந்துத்துவத்தின் பன்முகங்கள்) இந்தியாவிற்கு ஆபத்து  கம்யூனிஸ்ட்களால் வரபோவதில்லை, வலதுசாரி இந்து வகுப்புவாதத்தால்தான் அந்த ஆபத்து வரப்போகிறது, என்று முன்னறிவித்தவர் நேரு. 

    இந்துத்துவக் கொள்கைகளுடைய வலதுசாரி பாசிச அரசாக நிறுவப்பட்ட மோடி அரசு தனது பாசிச நடவடிக்கைகளை எவ்வாறு சட்டப்பூர்வமாக்குகிறது என்பதை இக்குறுநூலிலுள்ள 5 கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன. இந்துத்துவப் பாசிசம் குறித்து பல்வேறு இதழ்கள், நூல்கள் மற்றும் அன்றாடம் முகநூலில் எழுதிவருபவர் பேரா. அ.மார்க்ஸ்.

    நாம் விடுதலைக்குப் பிறகு UAPA, MISA, PSA, NSA, ESMA, TADA, POTA, UAPA போன்ற கொடிய அடக்குமுறைச் சட்டங்களை எதிர்கொண்டு வருகிறோம். TADA, POTA ஆகிய சட்டங்கள் நீக்கப்பட்ட பிறகும் அதைவிட கொடிய சட்டப்பிரிவுகள் கொண்ட UAPA போன்ற சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இன்றைய நிலை மிகவும் கொடிது. இவற்றைப் பற்றியும் அ.மார்க்ஸ் முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
   
        பீமா கோரேகான் பொய்வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், தானேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெர்னன் கோன்சல்வ்ஸ் போன்ற பலர் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான UAPA பிரிவுகளினால் பிணைக்கு வழியில்லை. 

    இதே வழக்கில் உச்சநீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்ட  பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் கௌதம் நவ்லகா, எழுத்தாளர், செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே ஆகியோ அம்பேத்கர் பிறந்த நாளாக ஏப்ரல் 14 அன்று ‘கோரோனா’ சூழலுக்கு மத்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

   தில்லி கலவரத்தில் 53 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட நிலையில் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதான பொய்வழக்கும் பழிவாங்கலும் தொடர்கிறது. பலர் மீது தொடர்ந்து வழக்குகள் புனையப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

  காஷ்மீர் பத்தரிக்கையாளர் மஸ்ரத் சஹாரா, JNU ஆய்வு மாணவர் ஷர்ஜில் இமாம்  ஆகியோர் மீது UAPA மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடர்ந்து கைது செய்கின்றனர். இவ்வழக்குகளில் பிணை கிடையாது; எனவே பல ஆண்டுகாலம் சிறையில் வாட வேண்டியிருக்கும். மனித உரிமைப் போராளிகள், சமூக செயல்பாட்டாளர்கள், இடதுசாரிகள், அரசை விமர்சனம் செய்வோர் என பலரைப் பழிவாங்க இம்மாதிரியான பாசிச சட்டங்களும் திருத்தங்களும் கொண்டுவரப்படுகின்றன. நீதிமன்றங்கள் சீரழிந்து கிடப்பதால் இவற்றைக் கண்டுகொள்ளும் நிலையில் அவை இல்லை. 

     ஒரே கல்வி, ஒரே பாடத்திடம், ஒரே வரி, ஒரே நுழைவுத் தேர்வு ஆகிய வரிசையில் ஒரே புலனாய்வு முகமையாக NIA என்ற கருத்தாக்கம் புகுத்தப்பட்டு, அதிகாரக் குவிப்பும் அதற்கான சட்டத்திருத்தங்களும் செய்யப்படுவதையும் இதன் மூலம் நமது கூட்டாட்சி அமைப்பு சிதைக்கப்படுவதையும் அ.மா. விளக்குகிறார். 

    வழக்குகளை விரைந்து முடிக்காமல் சிறப்பு நீதிமன்றங்களுக்குப் பதிலாக செஷன்ஸ் நீதிமன்றமே விசாரிக்கும் என்பது போன்ற திருத்தங்கள்  இந்த பொய்வழக்குகளை இழுத்தடித்து நீண்டகால சிறைவாசம் என்ற பழிவாங்கலை நிறைவேற்றுவதாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். 

         மனித, குடிமை உரிமைகளை நசுக்க POHA என்னும் மனித உரிமைப் பாதுகாப்புச்சட்டத்தில் திருத்தங்கள் செய்துள்ளன. தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக ஏதேனும் தங்களுக்குச் சாதகமான ஒரு நீதிபதியை நியமிக்க திருத்தம் செய்துள்ளனர். நேர்மையான நீதிபதிகளும் இந்த பாசிச அரசால் வழிக்குக் கொண்டு வரப்படுவர். 

   இங்கே தேசியப் பாதுகாப்பு என்னும் பெயரால் ஒரே தேசம், ஒரே ஆட்சி, ஒரே அதிகாரம் என்கிற பாசிசமும், இவர்களது தேசியப் புலனாய்வு முகமை (NIA) மற்றும் நிரந்தரத் தடுப்புக்காவல் சட்டங்கள் ஜனநாயகத்தின் ஆணிவேரை சிதைப்பவை என்கிறார். (பக்.15)

   தடா சட்டத்தின் கீழ் 1985 முதல் 1995 வரையுள்ள பத்தாண்டுகளில் கைது செய்யப்பட்ட 76,000 பேரில் 1.5% மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடிந்தது. 98.5% பேர் பல்லாண்டுகளாக பிணையின்றி சிறைபட்டத் துயரையும் மனித விரோத, சட்ட விரோதச் சட்டங்களின் நிலை விளக்கப்படுகிறது. காலாவதியான சட்டத்தின்படியும் யாரையும் இணைத்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எவ்வளவு கொடூரமானது?

   அன்றைய சூழலைக் காரணம் காட்டி கொண்டுவரப்படும் இத்தகைய தற்காலிகச் சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். நீதித்துறைப் பரிசீலனை மட்டும் போதுமானது என்று இவற்றை நிரந்தச் சட்டங்களாகவே பாவிக்கின்றனர். 

   ‘இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்’ என்ற இறுதிக்கட்டுரையை  வாசிக்கும்போது உருக்குலைந்து போகிறோம். இதைப்போல ஆயிரக்கணக்கான கதைகள் இங்குண்டு என்கிறபோது மனம் பதைபதைக்கிறது. 

   2007 இல் மசூதி குண்டுவெடிப்பு இந்துத்துவவாதிகள் செயலென சுவாமி அசீமானந்தாவின் ஊடக வாக்குமூலம் வழியே அம்பலப்பட்டது. அவ்வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டவர் இந்த இம்ரான். கொடிய சிறைக்கூட தாக்குதல்கள், மின்சார அதிர்ச்சிகள், இருமுறை ‘நார்கோ அனாலிசிஸ்’ (உண்மை கண்டறியும் சோதனை?!) என எவருக்கும் வரக்கூடாத இன்னல்கள். இவரது அப்பா அரசு வேலையை விட்டு விலகினார், இவருக்கு கார்ப்பரேட் வேலை பறிபோனது, தங்கையின் திருமணம் நடக்கவில்லை என குடும்பம் அடைந்த இன்னல்கள் அதிகம். 

    இவ்வாறு பொய் வழக்குகளில் சிக்கி வாழ்வைத் தொலைத்த 22 முஸ்லீம் இளைஞர்களின் பெயர்ப் பட்டியலுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பு, மறுவாழ்வுத் திட்டங்கள், இழப்பீடு, பொய் வழக்கு குறித்த விசாரணை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2012 இல் பிரகாஷ் காரத் தலைமையிலான குழுவினர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்திய செய்தியும் இங்கு பதிவாகிறது. 

   ஆனால் இத்தகைய சூழல்களில் பாசிச அரசுகள் அது காங்கிரஸ், பாஜக. எதுவாகயிருப்பினும் கண்டுகொள்ளாத நிலைதான் இங்குள்ளது. பாதிக்கப்பட்டவர்களே பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வரும் ஒரு சிலரும் அமைப்புகளும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். பெரும்பான்மை மக்கள் சமூகம் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறது. அவர்களுக்குப் பாதிப்பு வரும் வரையில் அது ஒரு செய்தி மட்டுமே. 

    எங்கோ ஒன்றிரண்டு வழக்குகளில் மட்டும் நீதிமன்றம் இழப்பீட்டு வழங்க உத்தரவிடுகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழ்க்கொன்று சுட்டப்படுகிறது. “வெறும் விரக்தியும், இங்கு நீதி கிடைக்காது என்கிற எண்னம் பரவுவதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உகந்ததல்ல”, (பக்.40) என்று முடிக்கிறார். சமூக அக்கறையுள்ள அனைவரின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்க முடியும்.

    அவசரம் கருதி முன்னுரைகூட இல்லாது இக்குறுநூல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இன்னும் பல்வேறு நம்மை அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை பற்றியும் அ.மார்க்ஸ் தொடர்ந்து எழுதியுள்ளார்.  அந்த பதிவுகளும் அடுத்த பதிப்பில் விரிவாக இணைக்கப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுதல் அவசியம்.     

நூல் விவரங்கள்:
சட்டப்பூர்வ ஃபாசிசம்
 அ.மார்க்ஸ்

வெளியீடு: 
பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2019
பக்கங்கள்: 40
விலை: 40

 தொடர்பு முகவரி: 
 பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 05/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக