ஞாயிறு, மே 10, 2020

தமிழில் மாற்று வரலாற்றின் தேவை


தமிழில் மாற்று வரலாற்றின் தேவை

(நூலறிமுகம்… தொடர்: 027)

மு.சிவகுருநாதன் 

(‘வெல்லும் சொல்’ வெளியீடாக, முனைவர் மு.ரமேஷ் எழுதிய  எந்தை: பழஞ்சமூக – மொழிப் பண்பாட்டுக் கட்டுரைகள்’  என்ற ஆய்வு நூல் குறித்த பதிவு.)




     நண்பர் மு.ரமேஷ் ஏற்கனவே மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, நான்கு கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் நமக்கு ‘எந்தை’ கட்டுரைத் தொகுப்பு வாயிலாகவே அறிமுகம். கல்விப்புல ஆய்வுகளின் தரம் குறைந்திருக்கின்ற சூழலில், நம்பிக்கையளிக்கக் கூடியவராக இவரை பக்தவத்சல பாரதி அறிமுகம் செய்கிறார். (முன்னியம்பல்) இந்நூலில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இருப்பினும் அவற்றை தமிழ்ச் சமூகம், தமிழ் மரபு என்ற மைய இழையால் பின்னி, நீண்ட, நெடிய, தொடர்ச்சியான மரபின் தொன்மை முதல் இன்று வரையிலான புத்தாக்கங்களை வாசிப்பாக முன் வைத்திருப்பதையும் சுட்டுகிறார். 

   “சங்க இலக்கியம் எனும் பெருங்காட்டில், உட்புகுந்தும், வெளிவந்தும், அகலாமல், அணுகாமால் ஆழம் காணும் ஆய்வு”, ஆசிரியருடையது என்று சொல்கிறார் கல்யாணராமன். (கனவு முயக்கமும் நனவுத் தீண்டலும்) 


    “நினைவிலிருந்து கடத்தப்படுகிற எந்தக் கதையும் நிலம், மொழி, பண்பாட்டுச் சூழலுக்கேற்ப புனைவுத்தன்மையைப் பெறக்கூடியதாகும், எனக்கூறி, இத்தொன்மங்கள் எப்படி வடநாட்டிலும் தென்னாட்டிலும், நில, மொழி, சூழலுக்கேற்ப புனைவுத்தன்மை அடைந்தது என்பதை விவரிப்பதையும், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் குறித்து தமிழின் தொல் பழங்காலத்தில் ஆராயும் இத்தொகுப்பு, விளிம்புநிலை மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் சொல்லாடல் புலத்தை அறிவதற்கான ஒன்றாக அமைந்துள்ளதையும்   ஜமாலன் எடுத்துக்காட்டுகிறார். (மொழிச்சூழலில் விளைந்த மனித உடல்) 

    ‘மொழியும் இனச்சூழலும்: தெய்வக் கருத்தாடலை நோக்கி’ எனும் முதல் கட்டுரை (33-110) 68 பக்கங்கள் நீள்கிறது. “தெய்வங்கள் என்பவை குடிகளால் உருவாக்கப்பட்டவை, குடிகள் என்பன நிலப் பண்புகளால் உருவானவை. விலங்கோடு விலங்காக அலைந்து திரிந்த மனிதனை நிலப்பண்புகள்தான் குடிகளாகத் திரளுவதற்கு வாய்ப்பினை அளித்தன. காடுகள், மலைகள், மணல்வெளிகள், சமவெளிகள், நதிகள், கடல்கள் போன்ற நிலவியல் பண்புகளுக்கேற்ப மனிதர்கள் தொழில்பட நேர்ந்தது. இந்தத் தொழிகளின் அடிப்படையில் மனிதர்கள் குடிகளாகத் திரண்டனர். தெயவம் குறித்த நம்பிக்கை அல்லது கற்பனை என்பதும் தொழிலின் ஒரு பகுதியாக அமையக்கூடியது. நிலப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் தொழில்களும், குடிகளும், தெய்வங்களும், குடிகள்சார் நடத்தைகளும் உருவாயின”, என்று வரையறுத்து, “தமிழ் நிலங்கள் – தமிழ்க்குடிகள் – தமிழ்த் தெய்வங்கள் என்பதைத் திட்டவட்டமாக விளக்க இயலாது என்றாலும் நம் அறிதலுக்கான மாதிரி சமன்பாட்டை உருவாக்கிக் கொள்ளுவதன் மூலமே தமிழ்ச் சமூகவியல் குறித்த விளக்கத்திற்கான மாதிரி வடிவத்தைப் பெறும் முயற்சி”, (பக். 33) எனச் சொல்லி தமிழ் நிலத்தின் வரைபடம் ஒன்றை முயற்சி செய்கிறார்.

    எழுத்து, சொல், பொருள் என்ற தொல்காப்பிய அதிகாரங்களின் வாழ்வியல் வரையறைகளையும் இலக்கணங்களையும் தொகுத்தல், தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லைகள், செந்தமிழ் நிலம், வரி வடிவம் – எழுத்து – தமிழி – தமிழ் பிராமி, திசை சொல், மொழிபெயர் (அயல்) தேசங்கள், வடவேங்கடமும் வடசொல்லும்  எல்லாம் தமிழ் நிலத்தின் கண்ணிகளாக இருப்பதை இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகளின் வழியே ஆராய்கிறது.



    அயலார் தொடர்பாக சாதவாகனர்கள் மூவேந்தர்கள் தொடர்பை பிராகிருத இலக்கியமான ‘காதா சப்தசதி’யின் இலக்கியச் சான்றுகளின் வழியே எடுத்துக்காட்டுகிறார்.  திணையென்பது நிலம், இடம், பகுதி, மனை, வீடு, சாதி, குலம், குடும்பம், நடத்தை, பெயர்களில் ஒருவகை (இலக்கணம்) என்ற பொருள்களுடன் நல்லகுடி, உயர்குடி என்ற பொருள்களும் இருப்பது சொல்லப்படுகிறது. (பக்.69)

    அரசர், அந்தணர், வேளாளர் (வேளீர்), வணிகர் என உயர்குடித் திணைகளும், அடியோர், வினைவலர், ஏனோர்  போன்ற ஒடுக்கப்பட்டோரின் திணை வகைப்பாடும், பொருந்தாக் காமமாகிய பெருந்திணையும் ஒருதலைக் காதலாகிய கைக்கிளையும்  எடுத்துக் காட்டப்படுகிறது. தமிழில் அக மற்றும் புற மரபு, அகமரபில் பெண்ணுடல்கள் நிலங்களாகவும் ஐந்து அகத்திணை நிலங்களுக்குரிய ஆண்கள் உடமையாளராக உள்ளதும் சுட்டப்படுகிறது.

     கொழுநனை தெய்வமாகத் தொழுதல், இறந்தால் கைம்பெண் நோன்பிருத்தல் அல்லது தீப்பாய்தல், கற்பு போன்றவை பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டது. இதைப்போன்று விதிமுறைகள் ஆணுக்கில்லை. தனது குடிசார்ந்த தலைவியோடு சேர்ந்து இல்லறம் நடத்திப் புதல்வரைப் பெறுதலும் பரத்தையருடன் விருப்பம்போல் உறவு கொள்வதும் நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அயல்குடியைச் (சாதி) சேர்ந்தவர்களை நொதுமல், நொதுமலர் என்று சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. இதன் மூலம் பழங்கால மணமுறைகள் விளக்கப்படுகிறது. 

    சங்க இலக்கியத்தில் யாய், ஞாய், தாய், அன்னை, ஈன்றோள், பயந்தோள், அவ்வை ஆகிய சொற்கள் தாயையும், எந்தை, நுந்தை, தந்தை, தாதை, அத்தன், ஐ, கோ ஆகிய சொற்கள் தந்தையைக் குறிப்பன (பக்.113). தந்தை தொடர்பான சொற்களே சங்க இலக்கியத்தில் அதிகம் பயின்று வருகிறது. இதுவும் சங்க இலக்கியத்தின் திசைவழியை நமக்குக் காட்டுவதாகும். 



    துடியர், பறையர், வண்ணார், வள்ளுவர், வெட்டியான் ஆகியோரைப் புலையர் என்கிறது சங்கப் புலவர் மரபு. இவர்கள் தொகுடிகள்; புலையர் என்பது 39 குழுக்களைக் குறிக்கும் பொதுச்சொல் என்கிறார். (பக்.125) 

   “இவர்கள் (பறையர்) தமிழ்நாட்டுப் புராதனக் குடிகள். இவர்கள் தமிழ்நாட்டில் பறையர் என்றும், வடநாட்டில் மாலமாதிகர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தொழில் பயிரிடுதல், அடிமை வேலை செய்தல், விழாக்களுக்குப் பறைக் கொட்டல், பயிருக்கு நீர் பாய்ச்சும் கம்புக் கட்டி பண்ணையாள், தலையாரி, வெட்டியான், ஊர்க்காவல் முதலிய வேலை செய்தல்”, (பக்.125)

   “இவர்களை வழக்கத்தில் பறையர் என அழைப்பர். இவர்களைப் புலையரென நிகண்டு, பிங்கலந்தை, திவாகரம் முதலியவை கூறும். இவர்கள் புலைத் தொழில் செய்தலால் நந்தனார், பெற்றான் சாம்பான், திருப்பாணாழ்வார் முதலியோர் புலையர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிராமணர்களை எங்களையொத்தவர் என்பர். அவர்களுக்கும் ஊருக்குப் புறமாக இடம் உண்டு, அவர்களிருக்குமிடத்தில் நாங்கள் போகக்கூடாது. நாங்களிருக்குமிடத்தில் அவர்கள் வரக்கூடாது. அவர்களுக்கும் பூணூல் உண்டு, எங்களுக்கும் பூணூலுண்டு என்பர்”, (பக்.126)

     யானை ஏறும் பெரும்பறையன் (திருவாரூர்), மைசூரில் மேற்கோட்டையில் புலையர்களுக்கு சாமி தரிசன உரிமை, கிராமாதிபதி (செங்கல்பட்டு தையூர்), கிராம முன்சீப் (கடலூர் ஆண்டிப்பேட்டை) போன்றவற்றையும், கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் உயர் பதவியில் இருந்ததையும் சுட்டி, “புலையர்கள் அல்லது பறையர்கள் சமூகம், அரசியல், பண்பாடு, தொழில், ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியமை நமக்குத் தெரியவருகிறது”, (பக்.127) என்று வரையறுக்கிறார்.

   “முதலில் சங்க இலக்கியத்தை முழுமையாக ஆராய்வது மிக அவசியம். இதில் சில சிக்கல்கள் விளைந்தாலும், வளர்ச்சியடைந்த நோக்கு நிலையிலிருந்து சங்கப் பனுவல்கள் பற்றி கவனமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இரண்டாவது, முன்பு ஆய்வு செய்யப்பட்ட நந்தனார் போன்று கோயிலுக்கு நுழைய அனுமதிக்கப்படாத வைணவ பக்தர் திருப்பாணாழ்வார் பற்றிய ஆய்வும் அவசியம்”, (பக்.11) ‘தமிழ்நாட்டில் தீண்டாதார்’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை இங்கு கவனிக்கலாம். (தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500) – நொபரு கராஷிமா,    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடு) 

    சேர மரபுக்குரிய மூலத் தொன்மங்கள் சோழர், பாண்டியருக்கு இருப்பதைப் போன்று வெளிநாடு அல்லது வடக்கத்திய மரபைச் சார்ந்தில்லாமல் பழங்குடித் தன்மையிலான இனக்குழு மரபிலிருந்து தோன்றியவர்கள் என்ற முடிவுக்கு வர செருமான் என்னும் கேரளப் பழங்குடிகளை உதாரணம் காட்டுகிறார். தமிழில் ‘புலம்’ என்பது நிலத்தையும் அறிவையும் சுட்டப் பயன்படுகிறது. புலையர் 39 குழுக்களாக இருப்பது, இவர்கள் செய்யும் தொழில்கள் தீட்டுக்குரியதாக உள்ளது, நிலமின்றி அடிமைகளாக இருப்பது, திருவாங்கூரில் பறையனார் கோட்டை உள்ளது போன்ற காரணங்கள் எட்கர் தர்ஸ்ட்டன் ஆய்வுகளிலிருந்து அடுக்கப்படுகின்றன. (பக்.143&163)

    இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறும் தமிழ்ச்சமூக வரலாறு சங்க வரலாற்றிலிருந்தே தொடங்குகின்றன. புத்த சங்க மெய்மைகளும்  கொள்கைகளும் தமிழ்ச்சங்க இலக்கியங்களில் காணப்படுவது ‘புத்தசங்கமும் பழந்தமிழ் மரபும்’ கட்டுரையில் விளக்கப்படுகிறது. (பக்.169) 

    இந்தியத் தத்துவ மரபின் குறிப்பாக அவைதீக மரபின் பன்மைத்தன்மைக்கும் பூதவாதிகளின் (இயற்கைப் பொருள் முதல்வாதி)   பங்கு, ‘செவ்வியல் பனுவல்களில் பூதவாதம்’ என்னும் இரு கட்டுரைகளில் பேசப்படுகிறது.  (பக்.184)

    ‘சங்க இலக்கியத்தில் ஆயரும் கோவலரும்’ எனும் கட்டுரை, ஆயர்கள் ஆரியர்களைப் போல அரை நாடோடிகளாக இருந்தனர் என்றும், கால்நடைகளை மிகுதியாக உடையவர்கள் கோவலர் என்றும், இவர்களிருவரும் மேய்ச்சல் குடியினர் என்கிற முடிவுக்கு வருகிறார். (பக்.230)

      பதினெண்கீழ்க்கணக்கு அறவியல் நூலான நான்மணிக் கடிகையை ‘காதா சப்த சதி’யுடன் ஒப்பிட்டு ‘அறநெறிக் கருத்துக்கள்’ எனும் கட்டுரையில், “காதா அகக்கவிதை என்பதால் அது அறத்தைத் தனக்கே உரிய கவிதை மொழியில் விவரிக்கிறது. கடிகை அறநூல் என்பதால் சொல்லவந்த அறத்தை ஓரிரு சொற்களில் போதிக்கிறது”, (பக்.225) என்று சொல்கிறார்.

    பழமொழி நானூறு குறித்த கட்டுரைகளில், “அற இலக்கியத் தொகுதியை (பதினெண் கீழ்க்கணக்கு) மனித சமுதாய  நலனுக்காக வகுக்கப்பட்ட விதிகளின் தொகுப்பாகப் புரிந்துகொள்ளுதல்”, (பக்.257) என்பதற்கு மேலாக அறம் என்பது இங்கு செயல்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். சமூகத்தில் அறங்கள் அனைவருக்கும் ஒன்றாகவோ, பொதுவானதாகவோ இல்லை.

   பாலியில் ‘விசுத்தி மக்கா’வை இயற்றிய புத்தகோசர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், மனித வாழ்வின் விடுதலைக்கு புத்தரால் கண்டு சொல்லப்பட்ட விபாசனா, துக்கம், அனாதா, அநிச்சா ஆகியவைகள் குறித்த விரிவை புத்தகோசர் தனது நூலில் வழங்கியுள்ளது அவரது வரலாறும் ‘புத்தகோசர்’ (பக்.272) கட்டுரையில் காணக் கிடைக்கிறது. 

  “சித்தார்த்தனின் வாழ்க்கையில் புறா அல்லது பறவை ஒன்றைக் காப்பாற்றிய நிகழ்வு பெருங்கதையாகப் பெருக்கப்பட்டு, சிபியரசனின் கொடை மரபுக் கதையாக வளர்க்கப்பட்டு ஆரியமயமாக்கப்பட்ட”, தொல்கதை (பக்.306) ‘சோழர் வரலாற்றில் சிபி-செம்பியன்’ கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது. (தொல்கதை வரலாற்றில் சித்தார்த்) 

   “குறிஞ்சி நில மக்களின் முன்னோன் ஆன (தெய்வமான) குமரன் புத்த நெறியைச் சார்ந்த அரசன்”, (பக்.307) என்ற கருத்தை முதன் முதலில் முன்வைத்த பண்டித அயோத்திதாசரின் சிந்தனைகளை முன்வைத்து, ‘புத்தப் பண்பாட்டில் முருகன்’ கட்டுரை  எழுதப்பட்டுள்ளது.

   இறுதியாக சில கருத்துகள்:

    தமிழ் நிலம் X அயல் நிலம், தமிழ்ச்சொல் X வடசொல், தமிழர் X யவனர் (அயலார்), தமிழ் வேந்தர் X அயல் வேந்தர், மூவேந்தர் X சாதவாகனர், ஆண் X பெண், யோனி X அயோனி, களவு X கற்பு, தலைவி X பரத்தை, புறமணமுறை அகமணமுறை, அகம் X புறம், உயர்குடி X ஏவலர், எந்தை X தாய், தலைவன் X தலைவி, இறைவன் X இறைவி, ஐயர் X பறையர், ஐயர் X புலையர் போன்ற பல்வேறு முரணெதிர்வுகளின் ஊடாக தமிழ் நிலம், குடிகள் பற்றிய வரைபடம் ஒன்றை வரையப்படுகிறது. இதன் மூலம் மரபான பார்வையில், ஏற்கனவே இருந்த மேட்டுக்குடி அணுகல் முறைக்கு மாறான அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கிய புதிய அணுகல் முறையைப் பின்பற்றப்படுகிறது. இவற்றை மேலும் வளர்த்தெடுக்க முடியும். 
 
      தமிழ் நிலங்கள், தமிழ் குடிகள் எல்லாம் பேரச்சமாகவும் பெருமிதமாகவும் நிலவும் சூழலில் மையங்களிலிருந்து பறையர், புலையர், செருமான் என்று விளிம்பை நோக்குவதற்குப் பதிலாக விளிம்புகளிலிருந்து நோக்குவதே சரியாக இருக்க முடியும். நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியப் பெருந்தொகுதிகள், இதர வரலாற்றாதாரங்கள் வழியே அடித்தட்டு மக்கள், பெண்கள் போன்றோரின் சித்தரிப்புகளும் அவர்களது வாழ்வியலும் விளிம்பிலிருந்து மையம் நோக்கிச் செல்வது உண்மையான அடித்தள ஆய்வாக அமையும்.

     பலரால் கவனிக்கப்படாத இருண்ட பகுதிகளுக்குள் நுழைந்து ஆய்வு செய்தல் என்ற நோக்கம் பாராட்டிற்குரியது. அற இலக்கியக் கருத்துகள் எல்லாம் சங்க காலத்தை ஒட்டி எழுந்தவை என முடிவு செய்வதைவிட அதற்கடுத்த இருண்ட காலமாக்கப்பட்ட களப்பிரர் கால இலக்கியங்களின் வழி ஆய்வுகளை புதிய பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். அறம் எவ்வாறு அதிகாரமாக மாறுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. வரலாற்றின் இருண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டியது முதன்மையானதாகும். 

   சங்கம் என்பது தமிழுக்குப் பொருந்துமோ இல்லையோ சமண, பவுத்த, ஆசீவகம் என அனைத்து அவைதீக சமயங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இவற்றில் கூறுகளனைத்தும் சங்க இலக்கியத்திலிருந்து இன்றுவரை தமிழில் நிறைந்துள்ளன. இந்தத் தத்துவங்களினால் தமிழ் செழுமையடைந்துள்ளது. இந்த சமய அறிஞர்கள் தமிழின் பார்வை விரிவடையக் காரணமாக இருந்துள்ளனர். 

    மேல்நிலையாக்கமும் பெருமித உணர்வுகளும் மேலோங்கும் காலத்தில் முருகன், நந்தன்  போன்றவர்களை பவுத்த அரசர்களாக முன்னுறுத்தும் போக்கின் நீட்சி என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அவதானிக்க வேண்டும். இவை இன்றைய அடித்தட்டு மக்களை மேலும் கூறுபோட வழிவகுக்கும்; இணைவைத் தடுக்கும். இலக்கிய ஆதாரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இவ்வாறு நிறுவுதன் வாயிலாக இங்குள்ள வைதீகக் கருத்துகள் மேலும் செழிப்பதற்கும் இது உதவலாம்.   
    
    தமிழ் நிலம் மற்றும் குடிகளின் மாற்று வரலாற்றை எழுத வேண்டிய தேவையை உணர்த்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. நூலாக்கம் செம்மையுற வேண்டும். பெரிய அடைப்புக்குறிகள் [ ] தேவையில்லை; அவை உறுத்தலாகத் தோன்றுகின்றன. 


நூல் விவரங்கள்:

 எந்தை: பழஞ்சமூக – மொழிப் பண்பாட்டுக் கட்டுரைகள் 
 மு.ரமேஷ்  

 முதல் பதிப்பு: பிப்ரவரி 2019
பக்கங்கள்: 320
விலை: 280

 வெளியீடு:
வெல்லும் சொல்
30 ஏ, வ.உ.சி. தெரு,
நங்கநல்லூர்,
சென்னை – 600061.
மின்னஞ்சல்:  vellumsolbooks@gmail.com 
அலைபேசி: 9789992848 

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 09/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக