வியாழன், மே 14, 2020

சமணமா, பவுத்தமா, ஆசீவகமா?


சமணமா, பவுத்தமா, ஆசீவகமா?

(நூலறிமுகம்… தொடர்: 031)

 மு.சிவகுருநாதன்

(முனைவர் சொ.சாந்தலிங்கம் எழுதிய,  கருத்து = பட்டறை வெளியீடான, ‘மதுரையில் சமணம்’ என்ற  நூல் குறித்த  பதிவு.)


         தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் எழுதிய இந்நூலில், சமண சமயத் தோற்றமும் தென்னகப்பரவலும், மதுரையில் சமணப்பள்ளிகள் என்ற இரு கட்டுரைகளும் மூன்றாவதாக பண்டைய குகைப் பள்ளிகள் சமணம் சார்ந்தவையே – ஒரு விவாதம் என்கிற பேரா. க.நெடுஞ்செழியன் நூலுக்கான எதிர்வினையும் உள்ளது. பிற்சேர்க்கையாக பாண்டிய நாட்டுச் சமணச் சின்னங்களின் பட்டியல், சில சமணப்பள்ளிகள், வண்ணப்படங்கள் என நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அயிரைமலை (எ) அய்யம்பாளையம், உத்தமபாளையம் (திருக்குணகிரி), கோவிலாங்குளம், தொப்பலாக்கரை – குளத்தூர் – விற்பொறி வீரப் பெரும்பள்ளி ஆகிய சமணப்பள்ளிகள் பற்றிய குறிப்புகள் மற்றும் 16 பக்க வண்ணப்படங்கள் பிற்சேர்க்கையில் இருக்கின்றன. 
 
   தொல்லியல் அலுவலராக மதுரைப்பகுதியில் மலைகளில் பலமுறை பயணம் செய்யும்பொது ஒரு வழிகாட்டி நூல் இல்லாத குறையை உணர்ந்து, அக்குறையை நிறைவு செய்ய முயன்றதாக முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் தமிழ்நாடு சமணப் பேரவைத் தலைவர் அபு. அறவாழி அணிந்துரையில் குறிப்பதைப்போல இது ஆய்வு நூலாகவும் உள்ளது. 

    சமணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு சங்ககாலம் தொடங்கி கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 1500 ஆண்டுகள் நீடித்த ஒன்று. உண்ணா நோன்பு, ஊன் உண்ணாமை, தீபாவலி (மகாவீரர் பரிநிர்வாணமடைந்த நாள்), சிவராத்திரி (முதல் தீர்த்தங்கரர் ரிஷபர் பரிநிர்வாணமடைந்த நாள்),  சரஸ்வதி பூசை, வடக்கிருத்தல், அய்யனார் வழிபாடு சமண, வைதீக சமயங்களின் பொதுக்கூறாகிவிட்டன. உயிர்ப்பலியிடுதலை நிறுத்தியதில் சமணத்தின் பங்கு முதன்மையானது. 

    பள்ளிக்கூடம், சித்தர் வணக்கம் ஆகிய சமணத்தின் கொடையே. அம்மணம் (நிர்வாணம்), சம்மணம் (தரையில் அமர்தல்) ஆகியன சமணத்தின் செல்வாக்கால் ஏற்பட்டவை. யோக மரபிற்கு இவர்களது பங்களிப்புகள் மிகுதி. ஐம்பெருங்காப்பியங்களில் சீவக சிந்தாமணி, வளையாபதி, ஐஞ்சிறுங்காப்பியங்களில் நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயண குமார காவியம்,  இன்னொரு காப்பியமான பெருங்கதை/ உதயணன் கதை / கதை, இலக்கண நூல்களான நன்னூல், யாப்பெருங்கலம், சூடாமணி நிகண்டு ஆகியனவும் சமணம் தமிழுக்குக் கொண்டு சேர்த்தவை. நாலடியார், நரிவிருத்தம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது போன்ற பதினெண்கணக்கு அறவியல் நூல்கள் சமண அறிஞர்களால் இயற்றப்பட்டவை. உலகப்பொதுமறையாம் திருக்குறளில் சமணக் கருத்துகளே மிகுந்துள்ளன. சமண அறிஞர் ஆச்சார்ய குந்த குந்தர் எழுதியது என்கிற கருத்துகளும் உண்டு.   


   மௌரியப் பேரரசன் சந்திரகுப்த மௌரியன் (அசோகரின் தாத்தா) காலத்தில் (கி.மு.322-298) சமண முனிவர் பத்திரபாகு வழிகாட்டுதலில் பாடலிபுத்திரத்திலிருந்து (பாட்னா, பீகார்) கர்நாடகாவிலுள்ள  சிரவணபெலகோல (வெள்ளைக்குளம்) என்னுமிடத்தில் தங்கி,  அரசருடன் சல்லேகனை (வடக்கிருத்தல்) நோன்பிருந்து உயிர்விட்டது வரலாறு. பத்ரபாகுவின் சீடர் விசாக முனிவர் (விசாகாச்சாரியார்)  தமிழகத்தில் குறிப்பாக பாண்டிய, சோழ நாடுகளில் சமணத்தைப் பரப்பியதாகச் சொல்வர். சிரவணபெலகோல – ஐ சிரவணபெளிகுளம் என்றே இந்நூலில் குறிக்கிறார்; காரணம் விளங்கவில்லை. (பக்.16)

   “சங்க காலத்துக்குப் பிறகு தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என்ற அந்நிய ஆட்சிக்காலம் சுமார் 250 ஆண்டுகாலம் நீடித்தது”, (பக்.18) என்கிறார். இந்த அந்நியர்கள், பூர்வகுடிகள் கருத்தாக்கத்தை இன்னும் எவ்வளவு காலம் இந்த வரலாற்று ஆசிரியர்கள் தூக்கிச் சுமப்பார்கள் என்று தெரியவில்லை. 

   ஆசீவக அழிவுக்கு மட்டும் மயிலையாரை மேற்கோள் காட்டும் (பக்.84) நூலாசிரியர் “களப்பிரர்கள் எத்தகைய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதியாகக் கூற முடியாது”, (பக்.19) என்று கைவிரிக்கிறார். மயிலை சீனி.வேங்கடசாமி களப்பிரர்கள் வைணவ சமயத்தார் என்கிறார். (பார்க்க: களப்பிரர் காலத் தமிழகம்) வேள்விக்குடி சாசனத்தை வைத்து எப்படி களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரானவர்கள், கலியரசர்கள், கொடுங்கோலர்கள், குலமழிந்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள், முரட்டுக் கூட்டத்தினர், இருண்ட காலத்தினர் என்று வரலாறு எழுதியது எவ்வளவு தவறானதோ, அதைப்போல பூலாங்குறிச்சி கல்வெட்டுகளைக் கொண்டு  இவர்களை வைதீக ஆதரவாளர்கள் என்று முடிவு கட்டுவதும் மிகத் தவறானதேயாகும். களப்பிரர்கள் காலத்திற்கு முன்னும் பின்னும் வைதீகத்திற்கும் ஆட்சியதிகாரத்திற்குமான பேரளவு இணக்கம் குறைந்து, மோதல்களோ, உரசல்களோ இருந்திருப்பதைத்தான் கிடைக்கும் ஆதாரங்கள் நமக்குச் சுட்டுகின்றன.   

    மதுரையிலுள்ள சமணப்பள்ளிகளிலுள்ள கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் பற்றி இரண்டாவது கட்டுரை விரிவாக ஆராய்கிறது. மயிலை சீனி. வேங்கடசாமி கிருஷ்ண சாஸ்திரி, சி. நாராயணராவ், டி.வி. மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன் போன்றோரது தமிழ்ப் பிராமி வாசிப்புகளின் முரண்களைச் சுட்டி ஐராவதம் மகாதேவனின் வாசிப்புகள் ஓரளவுக்குச் சரியாக இருப்பதை எடுத்துக்காட்டுவார். (பார்க்க: சங்ககால வரலாற்று ஆய்வுகள்: தொகுதி:02 - மயிலை சீனி. வேங்கடசாமி) தற்போது கிடைத்திருக்கும் கூடுதல் தரவுகளின் படி இந்த ஆய்வு நிகழ்கிறது.  2004 இல் கண்டறியப்பட்ட ‘புலிமான் கோம்பை’ கல்வெட்டுகள், சாதாரண மனிதர்களின் நடுகற்களுடன் தொடர்புடைய இவை தமிழ் எழுத்துகளின் தோற்றத்தை சில நூறு ஆண்டுகள் முன்னடுத்துச் சென்றுள்ளதும் குறிப்பிடப்படுகிறது. (பக்.27)

   மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, அழகர்மலை, திருவாதவூர், கீழவளவு, கருங்காலக்குடி, வரிச்சியூர், திருமலை, ஆனைமலை, கொங்கற்புளியங்குளம், திருப்பரங்குன்றம், மேட்டுப்பட்டி, விக்கிரமங்கலம், முதலைக்குளம், முத்துப்பட்டி, சமண மலை (கீழக்குயில்குடி), பேச்சிப்பள்ளம், செட்டிப்புடவு, வடுகப்பட்டி (எ) மானசித்தநல்லூர், மலைப்பட்டி, குப்பல் நத்தம், சிங்கிகுளம் போன்ற இடங்களில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவை இங்கு விளக்கப்படுகின்றன.    

    “வரலாற்று ஆவணங்களில் இப்பெயர் (அரிட்டாபட்டி) இல்லை. சமண சமயத்தின் இருபத்து இரண்டாம் தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு அரிட்டநேமி என்ற இன்னொரு பெயரும் உண்டு என்று கூறுவர்”, (பக்.27)  இங்குள்ள குகைப்பள்ளியில் கி.பி. 9-10 நூற்றாண்டைச் சேர்ந்த முக்குடை அண்ணலின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நான்கு வரி வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. (பக்.29) அதில் அச்சணந்தியின் முயற்சியால் இந்த கற்றுருமேனி செய்யப்பட்டது என்றுள்ளது. பாதிரிக்குடி என்பது இதன் பழைய பெயராக இருக்கலாம். (பக்.30)

     கி.மு. மூன்றம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் எனும் அரசனுடைய அமைச்சரான அரிட்டர் என்னும் பவுத்த பிக்கு பாண்டிய நாட்டில் பவுத்த சமயத்தை பரப்பினார் என்றும் அவர் இங்குள்ள மலைக்குகையில் தங்கியதால் இவ்வூர் அரிட்டாபட்டி என அழைக்கப்பட்டதாகவும் சொல்வதுண்டு. மகா அரிட்டர் அசோகரின் மகனான மகிந்தருடன் சேர்ந்து பவுத்த மதத்தைப் பரப்பியதாக மகாவம்சம் கூறுகிறது. (பார்க்க: பௌத்தமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி) 

     கழுகுமலை அல்லது கழுக்குன்றம் ஏனும் பெயருள்ள மலைகள் பவுத்தர்கள் தங்கிய இடங்கள் எனவும் சொல்லப்படுகிறது. காரணம் பத்தர் தங்கியிருந்த மகத நாட்டின் தலைநகரான ராஜகிருகத்தை சுற்றியுள்ள ஐந்து மலைகளுள் ஒன்றான கிஜ்ஜகூடம் எனும் மலையில் கழுகுகள் இருந்ததால் பிக்குகள் தங்கியிருக்குமிடத்திற்கு கழுகுமலை அல்லது கழுக்குன்றம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த மலையில் புத்தரின் மருத்துவர் ஜீவகன் அவரது உடல்நலத்தைக் காத்தான். (பார்க்க: மேலது நூல்) இதன்படி மதுரை கழுகுமலையும், செங்கற்பட்டு திருக்கழுக்குன்றமும் பவுத்தத் துறவிகளினின் இருப்பிடமாகவும் சொல்கிறார்கள். கழுவேற்றத்தையும் இதையும் தொடர்புப் படுத்த இயலாது. 

    கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப் புலியூர் (பாடலிபுரம்) இங்கு சமணப் பள்ளியும் கோயிலும் இருந்தன. சர்வநந்தி எனும் சமணத்துறவி ‘லோகவிபாகம்’ என்னும் நூலை அர்த்த மாகதியிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்தார். இங்கு கல்வி கற்று ஒரு கட்டத்தில் இதன் தலைவராக  இருந்த தருமசேனர் சைவம் தழுவி அப்பர் (திருநாவுக்கரசர்) எனப்பெயர் பெற்றார். இங்குள்ள சமணப்பள்ளி இடிக்கப்பட்டு அதன் கற்களைக் கொண்டு திருவதிகை குணதரவீச்சுரம்’ என்னும் கோயிலை ‘குணபரன்’ என்ற அரசன் கட்டியதாகச் சொல்வர். (பார்க்க: சமணமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி)

   அதைப்போலவே இவ்வூரில் (திருப்பாதிரிப்புலியூர்) பவுத்த விகாரையும் பல்கலைக்கழகமும் இருந்ததாகக் கூறுவர். ஆனால் அவற்றைப் பற்றிய வரலாறுகள் இல்லை, என்று மயிலையார் குறிப்பிடுவார்.  (பார்க்க: பௌத்தமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி) 

   இவற்றை இங்கு குறிப்பிடுவது ஓரிடத்தில் பவுத்த அல்லது சமண அல்லது ஆசீவகத் துறவிகள் மட்டும் இருந்தனர் என்று அறுதியிட்டு கூறமுடியாது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். மேலும் இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். மகாவம்சம், தீபவம்சம் போன்றவை ஆய்வுக்குள்ளாக வேண்டும். நடுநிலையான, பக்கச் சார்பற்ற ஆய்வுக் கண்ணோட்டமும் தெளிந்த சிந்தனையுடன் இவ்வாய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது நமது முதன்மையான நோக்கமாக இருத்தல் வேண்டும்.   

        பேரா. க.நெடுஞ்செழியன் திராவிட இயக்கச் சார்பாளர். அவரது ஆசீவகம் சார்ந்த நூற்களில் ஆய்வு என்கிற பெயரில் தீவிர சமண எதிர்ப்பை மேற்கொள்கிறார். சமணம் (அமணம், ஆருகதம், சிரமணம்) என்ற சொல்லையே இவர் பயன்படுத்த விரும்பவில்லை, அவ்வளவு வெறுப்பு! மௌரிய என்பதைக்கூட மோரிய எனக் கையாளும் இவர் ஜைனம், ஜைன மதம், ஜைன மரபு என்றே தொடர்ந்து பயன்படுத்துகிறார். சமணம் மற்றும் திருக்குறள் மீதும் இந்த வெறுப்பு படர்கிறது. இது ஆய்வை சிதைக்கும் கூறாகும். 

    இவரது ஆய்வுகளுக்குத் துணையாக ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!, வள்ளுவத்தின் வீழ்ச்சி’ போன்ற ‘அரிய’ பல நூற்களை எழுதிப் புகழ்பெற்ற ‘அறிஞர்’ குணாவின் கருத்துகளை மேற்கோளாக முன்வைக்கிறார். இதனால் இவரது ஆய்வு முறையியல் கேள்விக்குள்ளாகிறது. (பார்க்க: ஆசீவகமும் ஐயனார் வரலாறும் – க.நெடுஞ்செழியன், பதிப்பு: முனைவர் இரா.சக்குபாய், வெளியீடு: மனிதம், திருச்சி) 

     மேற்கண்ட ஆய்விற்கு மறுப்பாக  அமைந்ததே மூன்றாவது இயலாகும். ஆசீவகம் ஊழ்கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்ததால் அது பொதுமக்களை கவரவில்லை. மேலும் இதன் நிறக் கொள்கையின்படி (அபிசாதி) மக்கள் ஆறுவகையாகப் பிரிக்கப்பட்டனர். அவை:

  •  கரும்பிறப்பு – கொலையாளிகள், திருடர், வேடர், மீனவர், சிறைக்காவலர்.
  • நீலப்பிறப்பு – திருட்டு வாழ்வு மேற்கொண்ட புத்த பிக்குகள்.
  •  செம்பிறப்பு – சைனத்துறவிகள் (அ) ஓராடை உடுத்தும் சிரமணர்.
  •  பசும்பிறப்பு – ஆசீவக இல்லறத்தார்.
  • வெண்பிறப்பு – ஆசீவகத் துறவிகள் ஆண், பெண் இருபாலரும்.
  • கழிவெண்பிறப்பு – நந்தவச்சா, கிச்சங்கிசா”. (பக்.70&71)

   ‘பூவில் உடையார் மலை’ என்பதும் ஒரு பொதுவான பெயர்தானே தவிர ஆசீவகத்தோடு மட்டும் தொடர்புடையதன்று. அதுபோல அய்யனார் வழிபாடும் சைவம், பௌத்தம் ஆகியவற்றோடு தொடர்புடையது. (…) இதுபோல யானை உருவம் இடம்பெறுவதைக் கொண்டு அதனை ஆசீவகத்தின் சின்னம் எனக்கருதி எங்கெல்லாம் யானை இருக்கிறதோ அவையெல்லாம் ஆசீவகச் சின்னம் என முடிவு கட்டுவது ஏற்புடையதன்று”, (பக்.75)

   “தமிழகக் கற்படுக்கைகள் அனைத்தும் சமண சமயத்திற்கு உரியன என தாரை வார்க்கப்பட்டு விட்டதாகத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் க.நெடுஞ்செழியன் அவை அனைத்தையும் ஆசீவகத்திற்குத் தாரை வார்க்க முயற்சிப்பது நடுநிலையான சிந்தனை ஆகாது”, (பக்.82)

   பௌத்தம் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் (நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்) கடல் வணிகர்களின் செல்வாக்கைப் பெற்றதும் சமணம் உள்நாட்டு வணிகர்களின் செல்வாக்கை நிரம்பப் பெற்று தமிழகத்தின் உள்பகுதிகளில் தழைத்தது எனவும் குறிப்பிடுகிறார். 

    தமிழகத்தின் பெரும்பாலான குகைப்பள்ளிகள் கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் செழிக்கவும் சமண மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சமணத்துறவி அச்சணந்தி என்பதையும், பாண்டிய நாட்டில் 10 கி.மீ. தொலைவிற்குள் ஒரு சமணச்சின்னம் இருப்பதற்கு இவரே காரணம் (பக்.22) என்றும்  குறிப்பிட்டு, குகைப்பள்ளிக் கல்வெட்டுகள் சமணம் சார்ந்தவை எனும் ஐராவதம் மகாதேவன் கருத்தை வழிமொழிந்து நூலை நிறைவு செய்கிறார். (பக்.85) 

    பண்டைத் தமிழகத்தின் சங்ககாலம் (கி.மு.300 - கி.பி.300) தொட்டு சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்ற வைதீகத்துடன் போராடிய அவைதீக மதங்கள் இந்தியாவில் பிற பகுதிகளைக் காட்டிலும் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளன. இவற்றிற்கு தமிழின் அறிவுச்சூழல், வைதீகச் சிந்தனைகளுக்கு எதிரான தன்மை, களப்பிரர் போன்ற மன்னர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு என பல காரணங்களைப் பட்டியலிட முடியும்.

    இவற்றின் ஆதரவு மற்றும் செல்வாக்குப் போக்கில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை மூன்றும் வைதீகத்துடன் மட்டுமல்லாமால் தங்களுக்குள்ளாகவும் சண்டையிட்டுக் கொண்டன. அப்படியில்லாமல் இந்த சமயங்களின் அறிஞர்களும் ஓரிடத்தில் இணைந்து வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளதை மறுக்க இயலாது. 

    இவற்றை வெறும் சங்க இலக்கியப் பனுவல்களை மட்டும் கொண்டு முடிவு கட்டிட இயலாது. அத்துடன் கல்வெட்டு, அகழ்வாய்வுகள் மேலும் அதிகரிக்க வேண்டும். இதுவரை காணப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகம் முழுமைக்குமான இந்த அவைதீக மதங்களின் பரவல், செழுமை, கருத்தியல்கள் ஆகியனவும் குறுகிய நோக்கின்றி மிகவிரிவாகவும், ஆழமாகவும் பரந்த தளத்தில் ஆராயப்படவேண்டும் என்கிற தேவையை இம்மாதிரியான விவாதங்கள் நம்மை வலியுறுத்தி நிற்கின்றன. 


நூல் விவரங்கள்:

மதுரையில் சமணம்
முனைவர் சொ.சாந்தலிங்கம்

முதல் பதிப்பு: 2014
இரண்டாம் பதிப்பு: 2019
பக்கங்கள்: 96+16
விலை: 140

வெளியீடு:
கருத்து = பட்டறை,
2, முதல் தளம், நாகா வளாகம்,
4 வது நிறுத்தம், திருநகர்,
மதுரை – 625006.
அலைபேசி: 9842265884

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 14/05/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக