பகைச் சதியை முறியடிக்கும் முயற்சி
(நூலறிமுகம்… தொடர்: 041)
மு.சிவகுருநாதன்
(கோ.ரகுபதியின் விரிவான முன்னுரையுடன்
‘’இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’ என்ற தொகுப்பு
நூல் குறித்த பதிவு.)
ஆய்வாளர் கோ.ரகுபதி காவேரிப் பெருவெள்ளம் 1924 –
படிநிலைச் சாதிகளில் பேரழிவின் படிநிலை, தலித்துகளும் தண்ணீரும், தலித் பொதுவுரிமைப்
போராட்டம், ஆனந்தம் பண்டிதர்: சித்த மருத்துவரின் சமூக மருத்துவம் (தொ) வெளியீடு: காலச்சுவடு,
பறையன் பாட்டு: தலித்தல்லாதோரின் கலகக் குரல் (தொ) வெளியீடு: தடாகம், சி. லஷ்மணனுடன்
இணைந்து தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் வெளியீடு: புலம்
போன்ற நூல்களை எழுதியவர். இந்நூல் இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு குறித்த ஆய்வாக
அமைந்துள்ளது.
1899 இல்
பர்மா சென்று கள ஆய்வு செய்து அங்குள்ள சுயதேக்கன் கோபுரத்தைப் பற்றி இரட்டைமலை சீனிவாசன்
எழுதிய ‘இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம்’ என்னும் நூல் மீள்பதிப்பு கண்டுள்ளது.
இத்தொகுப்பில் ‘இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’ என்ற விரிவான முன்னுரையை கோ.ரகுபதி
எழுதியிருக்கிறார். A.P. பெரியசாமிப் புலவரின் புத்த பகவான் ஸ்தௌத்யப் பத்து கீர்த்தனைகள்,
ஆதிதிராவிடர் ஒற்றுமைக்கு ஆபத்து (திராவிடன் 06, நவம்பர் 1931), பௌத்த நூற்பட்டியல்
ஆகியன பின்னிணைப்பாக உள்ளன.
“இந்துக்கள்
அனுசரிக்கும் நாலு வர்ணங்களிலொன்றிலேனும் சேர்ந்திராததால் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள்
அடக்கத்திலில்லை என்பது வெளிப்படை”, என்ற கொள்கையில், அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர்
மதம் மாறவேண்டும் என்ற்போது, “தாங்களிலிருக்கும் மதத்திலிருந்து கொண்டே ஆண்மையான வீரத்துவத்துடன்
முன்னேற வேண்டுமென்று”, தந்தி அனுப்பியவர். அவருடைய மத நிலைப்பாடு என்னவாக இருந்தது
என்பதை முன்னுரை ஆராய்கிறது. மதத்தில் இருந்துகொண்டு தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகளை அற வழியில் அல்லது அறை வழியில் எதிர்ப்பதா என்பதையும்
ஆய்வு செய்து, இந்த வழியைத் தீர்மானிப்பது ஆதிக்கச் சாதியினரே என்ற முடிவையும் தருகிறது.
அம்பேத்கர்
நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் எழுந்த தலித் விவாதங்கள் சுட்டப்படுகிறது. இந்த
அறிவுத்தள விவாதத்தில் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி உள்ளிட்ட நிறப்பிரிகை
குழுவினர், அவர்கள் விவாதித்து வெளியிட்ட தலித் அறிக்கை, விளிம்பு அறக்கட்டளை நூல்
வெளியீடுகள், நிறப்பிரிகையின் பங்களிப்பு, மனுசங்க, கோடாங்கி போன்ற தலித் சிற்றிதழ்களின்
பங்கு, தலித் பண்பாட்டுப் பேரவை போன்ற அமைப்புகள் போன்றவற்றை இந்த ஆய்வு கவனத்தில்
கொள்ளவில்லை. (பக்.10&11)
திராவிட, பொதுவுடைமை இயக்கங்களை எதிரிகளாகக் கட்டமைத்த
தலித் அறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்கள் தாக்கியதையும் கேலி செய்ததையும்
மட்டும் எடுத்துரைக்கிறது. இது எத்தகைய ஆய்வு நிலைப்பாடு என்று தெரியவில்லை. இதனால்
ஆய்வு முழுமை பெறாமல் நிற்பதாகவே படுகிறது. (பக்.12) இவர்களை மொத்தமாகப் பவுத்தர்கள்
என்று அணுகுவதிலும் சிக்கல் இருக்கிறது. (பக்.32)
அயோத்திதாசர்
சிந்தனைத் தொகுப்பு வெளியான இரு மாதங்களில் இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர
சுருக்கம்’ வெளியான போதும், அவருடைய சிந்தனைகள் விவாதப் பொருளாக மாறவில்லை என்பதற்கு,
பௌத்தத்தை ஏற்க மறுத்ததே காரணமென்கிறார். (பக்.14)
இன்று
ஸ்டாலின் ராஜாங்கம் போன்றோர் சுயமரியாதை இயக்கத்திற்கு அவருக்கான உறவுகளை அறுப்பதிலும்
அவர் ஒரு சைவராக அடையாளங் காணுவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். அவருடைய மதம் பற்றிய
நிலைப்பாடு என்ன? ஏன் பவுத்தத்தை மறுத்தார்? தலித் விடுதலைக்கு அவர் கையாண்ட உத்திகள்
என்ன? சுயமரியாதை இயக்கம் பற்றிய அவருடைய கருத்துகள் என்ன? என்பது போன்ற கேள்விகளை
முன்னுரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. (பக்.14)
பார்ப்பனர்களும்
பார்ப்பனரல்லாத ஆதிக்க சக்திகளும் பௌத்தம், திராவிட மதம் என்றெல்லாம் பேசியபோதும்,
அவர்களுக்கு தேவையில்லாததால் அவற்றை மத நிறுவனமாக வளர்க்கவில்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்குள்ளான
தலித்கள் முரண்பட்ட நிலையெடுக்க வேண்டியிருந்ததை சுட்டுகிறார். (பக்.17)
பவுத்தத்தை அறிய அயோத்திதாசர் இலங்கைக்கு (கொழும்பு)
என்றபோது இரட்டைமலை சீனிவாசன் பர்மா (மியான்மர்) செல்கிறார். அப்போது (1899) வெளியானதே
‘இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம்’ என்னும் நூலாகும். இங்குள்ள தீண்டாமை, சாதியடிமைத்தனத்தை
அவர் பர்மாவிலும் கண்டார். பவுத்த கோயிலடிமை முறை இங்கு கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு
ஒப்பானது என்ற கருத்தை முன்வைக்கிறார். (பக். 22&23)
“ஆசிய நாடுகளில் பௌத்தர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்
இந்தக் கோபுரம் குறித்த தவறான எண்ணங்களை நேர்செய்தலே நூலின் நோக்கம்”, என்று கூறப்பட்டாலும்,
பிரமர்கள் (பர்மீயர்கள்) கோயிலடிமைகளைக் ‘கீழ்சாதியாக’ காண்பதையும் தீண்டாமை, காணாமை,
உரையாடாமை, பெண் கொள்ளாமை, கொடுக்காமை என அவர்கள் மீது சுமத்தப்பட்ட சமூகக் கொடுமைகளை
எடுத்துரைப்பதும் தமிழகத்தில் உள்ள சாதி இழிவுடன் ஒப்பீட்டு வெளிப்படுத்துவதும் அந்நூலின்
முதன்மையாக பணியாக இருந்ததை எடுத்துக் காட்டுகிறார். (பக்.21-23)
இன்று
இலங்கை பவுத்த சிங்கள இனவாதம் தமிழர்களை வேட்டையாடியது, மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிகளை
அங்குள்ள பர்மியப் பவுத்தம் இனவெறி வன்முறைகளுக்குள்ளாக்கியது போன்றவற்றைக் கொண்டு,
முன்னுரையின் தொடக்கத்தில் அம்பேத்கரின் ‘புத்தமும் அவர் தம்மமும்’ நூலை மொழிபெயர்த்து
அதன் முன்னுரையில் பெரியார்தாசன் (வீ.சித்தார்த்தா) எழுதியதை மாற்றியெழுதி, “பௌத்தத்தில்
வெறுப்பு உண்டு – வன்முறை உண்டு – மடமை உண்டு – மூர்க்கதனம் உண்டு – எல்லாவற்றுக்கும்
மேலாக சுரண்டல் உண்டு – அன்பு இல்லை – அறிவு இல்லை – சமத்துவம் இல்லை”, “பௌத்தம் ஓர்
மாயை”, என்ற முடிவுக்கு ஆசிரியர் எப்படி வருகிறார் என்று தெரியவில்லை? (பக்.26)
பெரியார்தாசன்
“இவைகளில் எதுவொன்றும் இல்லாதது பவுத்தமில்லை”, என்றும் முடிக்கிறாரே. எனவே பின்னாளைய
இச்செயல்பாடுகளை பவுத்தத்தில் அடக்கலாமா? இதே பெரியார்தாசன் பின்னாளில் இஸ்லாம் தழுவி
மறைந்தது வரலாறு அல்லவா! “இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து”, என்று பெரியார் சொன்னதை
பலர் ஏற்பதில்லையே. ஏன் மாற்றை யோசிக்கவில்லை?
தீண்டாமையை ஒழிக்க காவல்துறை உதவியும் பாதுகாப்பும்
கேட்ட இரட்டைமலை சீனிவாசனின் நிலைப்பாடு பவுத்தத்தின் அறவழிக்கு முரணானது; எனவே அறை
வழியே என்ற முடிவுக்கு வருகிறார்.
திருச்சி, தஞ்சை, திருவாரூர் சாம்பான்கள், திருவாரூர்
யானையேறும் பெரும்பறையன் போன்ற சைவக் கோயில் உரிமைகளை வலியுறுத்தியதால், “சீனிவாசன்
இறுதிவரை சைவ மரபோடு தன்னைப் பொருத்திக் கொண்டார்”, என்ற ஸ்டாலின் ராஜாங்கத்தின் முடிவை
ஏற்க இயலாது என்று சரியாகப் பதிவு செய்கிறார். (பக்.18)
‘இறைவனருள்’ என்று ‘ஜீவிய சரித்திர சுருக்கத்தில்’ குறிப்பிட்டாலும்
‘கல்லுச்சாமி’ என்று பேசினாலும் இரட்டைமலை சீனிவாசன் ஆத்திகருமல்ல; நாத்திகருமல்ல.
சைவ, வைணவத்தோடும் இணக்கம் காட்டியவரல்ல. பவுத்தத்தையும் விமர்சித்தவர். மதங்கள் மீது
பற்றற்ற இவரை சமயச்சார்பற்றவர் என்பதே சரி, என்ற முடிவுக்கு வருகிறார். (பக்.29)
“தலித்
தலைவர் பலருக்கும் ஒத்த இலக்கு இருந்தது. அது தலித் விடுதலை; அதை அடைவதில் அவர்களுக்குள்
வேறுபட்ட கருத்துகள் ஏற்பட்டன”, (பக்.31) என்று
தலித் தலைவர்களின் முரண்பாடுகளை ஒத்துக்கொள்கிறார்.
“சாதியும் மதமும் ஒன்றையொன்று தாங்கிப் பிடிப்பதுபோல்
சாதிவெறியும் இந்துத்துவமும் இணைந்துதான் செயல்படுகின்றன. அயோத்திதாசர், அம்பேத்கர்,
பெரியார் போன்றோர் அம்பலப்படுத்திய இந்துத்துவத்தை மறைப்பதன் மூலம் உண்மையில் இவர்கள்
யாருக்குச் சேவகம் செய்கின்றனர்? இந்தப் பௌத்தவாதிகளால் தொடர்ந்து குற்றம் சுமத்தப்படும்
பெரியாரிய, பொதுவுடைமை இயக்கங்கள்தான் தலித்துகளின் வறுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு
எதிராகப் போராடுகின்றனர்”, (பக்.32) என்று
சொல்கிறார்.
பெரியாரிய, பொதுவுடைமை இயக்கங்கள் மீது குற்றம்
சுமத்துபவர்கள் பௌத்தவாதிகள் என்று மட்டும் சொல்லிவிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
தலித்களுக்கு
எதிராக பெரியாரைக் கட்டமைக்கும் போக்கு ரவிக்குமார் போன்றவர்களால் இங்கு திட்டமிட்டு
உருவாக்கப்பட்டது. அதனுடைய நீட்சியாக அயோத்திதாசருக்கு
எதிராக மா.சிங்காரவேலரை நிறுத்தும் போக்கு வளர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன்
தொடர்ச்சியாக பவுத்தம், தலித் ஆகியவற்றுக்கு எதிராகவும் சிங்காரவேலர், பெரியார், சுயமரியாதை
மற்றும் பொதுவுடைமை இயக்கங்கள் ஆகியவற்றை எதிரியாக பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதையும்
கவனிக்கலாம். ‘அயோத்திதாசரைச் சந்தித்த கோசாம்பி’ என்ற ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரை
வழியாக மா.சிங்காரவேலரின் பிராமண எதிர்ப்பு மற்றும் திராவிடக் கருத்தியல்கள், அவரது
குணநலன்கள் ஊடாக பவுத்த எதிர்ப்பு வடிவம் எடுப்பதையும், இதனோடு அயோத்தி தாசருக்கு எதிராக
மா.சிங்காரவேலரை நிறுத்தும் போக்கும் அடையாளம் காணப்பட வேண்டியன. (பார்க்க: அயோத்திதாசரும்
சிங்காரவேலரும்” நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் – வெளிவராத விவாதங்கள், பதிப்பும்
தொகுப்பு: ஸ்டாலின் ராஜாங்கம், புலம் வெளியீடு மற்றும் பெயரழிந்த வரலாறு: அயோத்திதாசரும் அவர்கால ஆளுமைகளும் - ஸ்டாலின் ராஜாங்கம், காலச்சுவடு வெளியீடு)
“சுயமரியாதைக் கட்சியினர் நமக்காக உண்மையாக உழைத்து
வருவதை
மனமாரப் போற்றுகிறேன்”, என்று வட ஆர்க்காடு மாநாட்டில் அவர் ஆற்றிய உரை எடுத்துக் காட்டப்படுகிறது.
சட்டமன்ற உரையொன்று அவரது பிராமண எதிர்ப்பை உணர்த்துகிறது. நிலச்சீர்திருத்தம் தொடர்பான
முன்மொழிவுகள் இடதுசாரிகளுடன் இணக்கமானவை. எனவே இவரது சிந்தனைகள் பகுத்தறிவு மற்றும்
பொதுவுடைமைக்கு இணக்கமாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறார். (பக்.30)
அயோத்திதாசர், இரட்டைமலை
சீனிவாசன், மா.சிங்காரவேலர், காந்தி, பெரியார் போன்ற தலைவர்களை அவர்களது மீக நீண்ட
செயல்பாடுகள், சிந்தனையோட்டங்கள் வழியே எதிர்கொள்வதையும் விமர்சிப்பதையும் விட்டு,
ஏதேனும் ஒரு நிகழ்வு அல்லது ஒற்றை வரியைக் கொண்டு சேற்றை வாரி இறைப்பதும் அவதூறு செய்வதும்
கட்சி கட்டுவதும் ஆகாது என்பதை வெளிப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளது பாராட்டிற்குரியது.
சுயமரியாதை, திராவிட, இடதுசாரி இயக்கங்களின் பகைச்சதியை முறியடிக்கும் சிறு முயற்சியாக இதனைப் பார்க்கலாம்.
நூல் விவரங்கள்:
இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு
முன்னுரையும் தொகுப்பும்: கோ.ரகுபதி
வெளியீடு:
தடாகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2019
பக்கங்கள்:
88
விலை: ₹ 100
தொடர்பு முகவரி:
தடாகம்,
112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மீயூர்,
சென்னை – 600041.
தொலைபேசி:
044 43100442
அலைபேசி:
8939967179
இணையம்:
www.thadagam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக