காக்கைக்கு கருப்பு என்று பெயர்!
(நூலறிமுகம்… தொடர்: 034)
மு.சிவகுருநாதன்
(வானம் வெளியீடாக வந்த, விழியன் எழுதிய
‘கிச்சா பச்சா – காகங்கள் ஏன் கருப்பாச்சு?’
என்ற சிறார் கதை குறித்த
பதிவு.)
“எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி
அமைத்துக் கொள்கிறீர்கள். ‘ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்று படித்ததும்
அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்றீர்கள். ‘காகம் வடையைத் தூக்கிக் கொண்டு பறந்தது’
என்றதும் புகைப்படம் வீடியோ காட்சியாக மாறுகிறது. இந்தப் புகைப்படமும் வீடியோவும் உங்கள்
கற்பனைத் திறனை வளர்க்கின்றது. அது உங்கள் தினசரி வாழ்க்கையை வேறு தளத்திற்கு கொண்டு
செல்லும், பிரச்சனைகளை வேறு வடிவத்தில் வேறு கோணத்தில் அணுக உதவும் அதனால் நிறைய நிறைய
வாசியுங்கள்”, (பக்.05&06) என்கிறார் கதைசொல்லி விழியன்.
விழியனின்
சிறார் கதை கிச்சா பச்சா, இவையிரண்டும் காக்கைகள்.
ஒன்று அண்டங் காக்கை, மற்றொன்று சாதாரண காக்கை. இதை எங்கள் ஊரில் மணி(யங்) காக்கை என்று
கூறுவர். வட்டாரத்திற்கு ஒரு பெயர் இருக்கக் கூடும். ஒன்று பெரிதாகவும் ஒன்று சிறியதாகவும்
தோற்றமளிப்பதால் சேவல் - பெட்டை, ஆண்மயில்
– பெண்மயில் போன்று பெரியது ஆண் காக்கை, சிறியது பெண் காக்கை என்ற தவறான புரிதல் கூட
இருந்ததுண்டு. இரண்டும் வெவ்வேறு வகைகள்.
பாட்டி வடை சுட்ட கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது.
அந்த வடையைச் ‘சுட்டது’ (திருடியது) இந்தக் காக்கைதான். கருப்பாக இருக்கிறவன் பொய்
சொல்வான்; திருடுவான். அதனால்தான் காக்கை திருடியது போலும்! வைதீக இந்து மதத்தில் ஒவ்வொரு
கடவுளுக்கும் வாகனங்கள் உண்டு. சமணம் போன்ற மதங்கள் விலங்குகளை குலக்குறிச் சின்னமாக
(totemic emblem) கொண்டுள்ளன. சனியனுக்குத்தான் (சனி பகவான்) காக்கை வாகனமாக உள்ளது.
இதிலிருந்து காக்கையை பற்றிய மரபான அணுகுமுறையும்
பார்வைக்கோணமும் நமக்குப் புலனாகிறது. கருப்பு என்பது புறக்கணிக்கப்பட்ட, ஒரு விளிம்புநிலை
வண்ணம். கருப்பு நிறத்தை நாம் வண்ணங்களில் ஒன்றாகக் கருதுகிறோமா என்ன? கருப்பாக இருப்பவர்களை
‘காக்காய்’ என்று திட்டுவதும் கிண்டல் செய்வதும் உண்டு. அப்போது அவர்கள் நாம் ஏன் கருப்பாகப்
பிறந்தோம் என்று வருத்தப்படக் கூடும். அதைப்போல நம்ம கிச்சா, பச்சாவுக்கும் தாங்கள்
ஏன் கருப்பாய் போனோம்? என்று அய்யம் மேலெழும்ப, அதற்கான விடை தேடலே இக்கதை.
இறுதியில் காக்கைகள் பற்றிய ஒன்பது சுவாரசியமான தகவல்கள்
சொல்லப்படுகின்றன. மிகவும் சிறப்பாக உள்ளது. இதை ‘துப்புரவாளர்’ என்றும் சொல்வதுண்டு. நமது சூழலைத்
தூய்மையாக்கும் ‘அனைத்துண்ணி’ வகை இயற்கை உயிரிகளுள் இதுவும் ஒன்று. மனிதர்களுக்கும்
சூழலுக்கும் நண்பன் என இதைக் கொண்டாடலாம். சூழல் சீர்கேட்டை நமக்கு அடையாளம் காட்டக்கூடிய
பறவையிது. அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இது உள்ளது.
“காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள”.
(குறள்:527, சுற்றந்தழால்)
அன்னநீ ரார்க்கே உள”.
(குறள்:527, சுற்றந்தழால்)
என்றுதான் வள்ளுவர் எழுதியிருக்கிறார். காக்கை
எப்படி காகமாயிற்று என்று யாராவது ஆய்வு செய்யலாம். மேலும் இதை ஆங்கிலத்தில்
‘crow’ என்று சொல்வது அதன் கூட்டம் கூட்டும் (crowd) பண்பினாலா? அப்ப ‘crown’ எப்படி
வந்திருக்கும்? காக்கையைப் பாடியதால் சங்ககாலப் பெண் கவிஞர் காக்கைப் பாடிணியார் எனப்பட்டார்
(விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே, குறுந்தொகை: 210). மேலும் ஐங்குறுநூற்று
(391) பாடலிலும் காக்கை உண்டு.
காக்கை பழஞ்சொல்; காகம் எப்போது வந்தது என்று
தெரியவில்லை? காகம் என்பதைவிட காக்கை என்பது நமகு நெருக்கமாக இருப்பதாகத் தோன்றுகிறது.
காக்கை – காகம், சோறு – சாதம் என்பது போல இருப்பதால் இங்கு நான் காக்கை என்றே பயன்படுத்துகிறேன்.
இது போகட்டும். நம்ம தமிழில் காக்காய் கடி, காக்காய்க்
குளியல், காக்காய்ப் பொன், காக்காய்ப் பிடி, காக்காய் வலிப்பு என்ற சொற்கள் எப்படி
வந்தது? காக்காய்களுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? இவற்றிலும் காக்கையைச் சிறுமைப்படுத்தும்
எண்ணங்கள் இருக்குமோ!
காக்கை
இணைசேருவதை யாரும் பார்த்திருக்க இயலாது. யாரும் இல்லாத ஒதுக்குப்புறத்தை நாடும். இதன்
புத்திக்கூர்மைக்கு இதுவோர் எடுத்துக்காட்டு. குளித்தல், உணவைப் பகிர்ந்துண்ணல், பிற
காக்கைகள் இறக்கும்போது கரைந்து அஞ்சலி செலுத்துதல் என்பதாக இருக்கிறது இதன் அன்றாடப்
பணிகளும் பழக்கங்களும்.
கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாக்கும் பறவை இது. இதற்காகவே
குயில் இதனை ‘out sourcing’ செய்கிறது. நாட்டில் குயிலுக்கு இருக்கும் மதிப்பில் துளிகூட
காக்கைகளுக்கு இல்லை. காக்கையை முன்னோராக எண்ணி அமாவாசைக்கு மட்டும் உணவளிக்கும் வழக்கம்
இந்துமதத்தில் உண்டு. இது கரைந்தால் விருந்தினர்
வரலாம் என்கிற நம்பிக்கைகளும் உண்டு.
கதையைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோமோ! ‘முன் தழுவல்’
நம்மை எங்கோ கொண்டு சென்றுவிட்டது? தற்செயலாக முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் கிச்சாவும்
பச்சாவும் தங்களது முகத்தைப் பார்த்து தங்கள் அழகில் திளைக்கின்றன. நாள்தோறும் பார்த்துக்
கொள்ள அக்கண்ணாடியை எடுத்துவர முடியாமல் அதை குப்பைகள் மற்றும் புற்களால் மூடி வைக்கின்றன.
பின்னர், கண்ணாடியை குரங்கு நண்பனின் உதவியிடன்
மரத்தில் கொண்டு வந்து வைக்கின்றன. குரங்குக்குக் கண்ணாடியைப் பார்க்க ஆசையிருக்காதா
என்ன? தேவைப்படும்போது நானும் வந்து பார்த்துக்கொள்வேன், என்றது.
நாம் ஏன் கருப்பாக இருக்கிறோம்?, புறாவைப்போல ஏன்
வெள்ளையாக இல்லை? என்ற கேள்வி அவற்றை துரத்தத் தொடங்கியது.
“நாம் பொறக்கும்போது நமக்கு சாமி
இப்படி சாபம் கொடுத்துட்டாரு,
வெயில்ல நிறைய சுத்துறதால கருப்பா
மாறிட்டோம்”, (பக்.18)
என்பது போன்ற பிற காக்கைகளின் பதில்கள் அதற்குத்
திருப்தியளிக்கவில்லை.
குரங்குகள் காக்கைகளை பத்து மைல் தள்ளியிருக்கும்
ஆலமரத்தில் குடியிருக்கும் ஞானிக் காகத்திடம் ஆற்றுப் படுத்துகின்றன. ஆல “மரத்தின்
உச்சியில் அமைதியாக அமர்ந்து இருந்தது ஞானிக் காகம். கழுத்திலே கொட்டை. நெற்றியில்
பட்டை. ஒரு ருத்ராட்ச மாலை கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த”, (பக்21) காக்கையைப் பார்த்து
தமது அய்யத்தை எழுப்பின.
உலகம் உருவான பிறகு நிறங்களைத் தேர்வு செய்யும்
நிகழ்வில் அதற்கான பொறுப்பாளர் ஆந்தை செய்த தவறு என்று ஞானிக் காகம் சொன்ன பதிலும்
திருப்தி தராமல், அதன் மந்திரத்தைக் கொண்டு கடந்த காலத்திற்குள் நுழைகின்றன கிச்சாவும்
பச்சாவும்.
தாகமெடுக்க
தண்ணீரைத் தேடியலைந்து குடுவையில் கல் எடுத்துப்போட்டு, தாகம் தீர்ந்தவுடன் குடுவை
சொன்ன பர்மீய நாடோடிக்கதையும் (சூரியன் சினத்தால் கருப்பாக மாற்றிய கதை), பிறகு நரி
சொன்ன எருமைகளைக் காக்காய் காப்பாற்றிய கதையும் நன்றாக இருந்தனவே தவிர இவற்றின் அய்யத்தைத்
தீர்ப்பதாக இல்லை.
இறுதியாக, டைனோசர்ஸ் ஆராய்ச்சியாளனைக் கண்டு, “கருப்பு
நிறம் உங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கின்றது. நீங்கள் வாழும் பகுதியில் கருப்பு
நிறமே உங்களை காக்கின்றது. கருப்பு என்ற நிறமும் அழகுதான். ஏன், எல்லா நிறமும் அழகுதான்”,
(பக். 53&550 என்று அறிந்த பிறகு தெளிவடைகின்றன கிச்சாவும் பச்சாவும்.
இக்கதை எழுப்பும் கேள்வி நம்மையும் உசுப்பிவிட்டது.
குழந்தைகளை இன்னும் கூடுதலான கேள்விகளையும் கேட்க வைக்கும். மனிதனைத் தவிர பிற பறவைகள்,
விலங்குகளுக்கு கருப்பு, வெள்ளை நிறங்கள்தானே தெரியும்? அவைகளின் கண்கள் நிறக்குருடு
அல்லவா! ஞானிக் காகம் உத்தராட்ச மாலை, நெற்றிப்பட்டையுடந்தான் இருக்குமா? ரொம்ப சாதுவான காக்கை வெள்ளுடையில் ஒரு சமணத்துறவியாக
இருக்கக் கூடாதா? அனைவருடன் பகிர்ந்துண்ணும் காக்கை கையில் அமுதசுரபியுடன் புத்தப்
பிக்குவாக காட்சியளிக்குமா? புத்தர் தியானம் செய்தது ஆலமரமா? அரச மரமா? இல்லை போதி
மரமா? ‘போதி மரம்’ன்னா என்ன? என்றெல்லாம் சிந்தனை உசுப்பல்களை தூண்டிவிடுமானால் அது
விழியனுக்கு வெற்றியே.
நூல்
விவரங்கள்:
கிச்சா பச்சா – காகங்கள் ஏன் கருப்பாச்சு?
விழியன்
வெளியீடு:
வானம்
முதல் பதிப்பு: ஜூன் 2017
இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2019
பக்கங்கள்: 56
விலை: ₹ 40
வெளியீடு:
வானம்,
M 22, 6 வது அவென்யூ,
ராமாபுரம்,
சென்னை – 600089.
அலைபேசி: 9176549991
மின்னஞ்சல்: noolvanam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக