குறிப்புகளாக இந்தியாவின்
வரலாறு (1498-1948)
(நூலறிமுகம்… தொடர்:
020)
மு.சிவகுருநாதன்
(பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, குடவாசல்
சார்லஸ் (புதினன்) தொகுத்த, ‘இந்திய விடுதலை: காந்தியுண்டு இரத்தமுண்டு’
என்ற வரலாற்றுக் குறிப்புகள் நூல் பற்றிய பதிவு.)
நண்பர் குடவாசல் சார்லஸ் ஆசிரியர், தலைமையாசிரியர்,
தொழிற்சங்கவாதி; இதையும் தாண்டி அதிகமாகவும் கனமாகவும் வாசிக்கக் கூடியவர். பொதுக்கல்வி
குறித்த கரிசனம் கொண்டவர். பேராசிரியர்கள் பா.கல்யாணி, அ.மார்க்ஸ், சே.கோச்சடை போன்றோருடன்
‘மக்கள் கல்வி இயக்கத்தில்’ இணைந்து செயல்பட்டவர்.
பொதுவாக தமிழில் எழுதுபவர்கள் அதிகம் படிப்பதில்லை;
அதிகம் படிப்பவர்கள் எழுதுவதேயில்லை. இதில் தோழர் சார்லஸ் இரண்டாவது ரகம். சில ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு போராட்டச் சிறைவைப்பில் இந்நூலை என்னிடம் அளித்தார். இந்த நூல் வெளிவந்த
விவரத்தை அதுவரையில் நான் அறிந்திருக்கவில்லை.
சமூக நோக்குடையவர்கள்
ஆசிரிய சமூகத்தை விமர்சிக்காமல் இருக்கவியலாது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஒன்றில்
‘இந்திய விடுதலைப்போர்’ குறித்து ஒற்றைத் தன்மையுடன் பேசிக் கலைந்த நிகழ்வின் தாக்கத்தில்
இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளைக் கால வரிசையில் தொகுக்கும் துணிவு ஏற்பட்டதாக
முன்னுரையில் குறிப்பிடுகிறார். முன்னுரை கூட குறிப்பாக, ஒருசில வரிகள் மட்டுமே.
“ஒவ்வொரு செயல்பாட்டிலும் அதன் அரசியல் சார்பு
இருக்கும்தான். எனினும் நடுநிலையுடன் இப்பணியை முடித்திருப்பதாகவும்”, மேலும் முன்னுரைக்கிறார்.
இந்நூல் கல்விப்புலத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூலாகும். ஏன் புதினன் என்ற
புனைப்பெயரில் வெளியிட முடிவு செய்தார் என்று
தெரியவில்லை.
சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்”
என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைவரிகளை
உப்பு சத்தியாகிரகத்தில் நடைபயணப் பாடலாகப் பயன்படுத்தினர்.
நமது பாடநூலெழுதிகள் பாடநூல்களில் மகாத்மா காந்தியை
பெருமைப்படுத்துவதற்காக எண்ணிக்கொண்டு இந்தக் கவிதைக் கற்பனையை உரைநடை வரலாறாக்கி,
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்து காந்தி விடுதலைப் பெற்றுத் தந்தார்”, என்று
எழுதிவிட்டதன் ஆதங்கமே இந்நூலின் தலைப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும்.
வாஸ்கோடகாமா
அரபிக்கடல் வழியே இன்றைய கேரளாவின் கோழிகோட்டை வந்தடைந்த கி.பி. 1498 மே 20 இல் தொடங்கி
படுகொலை செய்யப்பட்ட காந்தியின் உடல் ராஜ்காட்டில் எரியூட்டப்பட்ட 1948 ஜனவரி 31 ஈறாக
உள்ள இந்தியக் காலனிய வரலாறும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் காலக் குறிப்புகளாக நூலில்
அடுக்கப்பட்டுள்ளன.
கி.பி.1498-1948
கால இடைவெளியில் உள்ள 450 ஆண்டு வரலாற்றை சுமார் 150 பக்கங்களில் சுருக்கித் தொகுப்பது
சற்று சவாலான முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதை முடிந்தவரையில் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
இந்த நிகழ்வுகளை ஆண்டுகளில் தொகுக்கும்போது ஏற்படும் அயர்ச்சியைப் போக்க சில முதன்மை
நிகழ்வுகளை தலைப்புகளாக்கியுள்ளார்.
- ஆளவந்தான்கள்
- தென்னிந்திய போராடிகள்
- புரட்சி வெடித்தது
- காப்புக் கபாடம்
- வ.உ.சி.களின் எழுச்சி
- கதர்
- இரண்டாவது சுதந்திரப் போர்
- காவியத் தலைவரின் தீர்மானங்கள்
- சுயாட்சி
- சட்ட மறுப்புகள்
- இன்குலாப் ஜிந்தாபாத்
- வகுப்புவாதம்
- மரியாதைக்குரிய தலைவர்
- இந்தியாவைப் பாதித்த உலகப்போர்
- மக்கள் போராட்டம்
- போரின் முடிவில்…
- நடுக்கடலில் தீ
- பூரணத்துவம்
வாஸ்கோடகாமா வருகை கி.பி. 1498 க்குப் பதிலாக
1496 என்று பிழையாக உள்ளது. குஞ்ஞாலி மரைக்காயர் தலைமையில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு
தெரிவித்ததாகச் சொல்கிறது. (பக்.01)
குஞ்ஞாலி மரைக்காயர்கள் வரலாற்று நூல்களில் இடம்பெறுவதேயில்லை.
கோழிக்கோடு அரசர் சாமரின் வரவேற்கிறார். இவர்களது கடற்படைத் தலைவர்களே குஞ்ஞாலி மரைக்காயர்
என்று அழைக்கப்படுகின்றன.
சாமுத்ரி
அரசர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் போர் மூளும் கட்டத்தில் இந்த கடற்படைத்தலைவர்கள்
தீரத்துடன் போரிட்டனர். நான்கு குஞ்ஞாலிகள் உண்டு. மரக்கலம் என்பதுதான் மரைக்காயர்
என்று திரிந்ததாகக் கூறுவர். ஆனால் இது 1498 இல் அல்லாமல் 1502-1600 காலகட்டங்களில்
நிகழ்ந்தது. இவற்றை வரலாற்றாசிரியர்கள் மறைப்பது மிகவும் கொடுமையானது.
- முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் – குட்டி அகமது அலி (1520-1531)
- இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் - குஞ்ஞாலி மரைக்காயர் (1531-1571)
- மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் – பட்டு குஞ்ஞாலி (1571-1595)
- நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் – முகமது அலி (1595-1600)
ஆகிய நான்கு கடற்படைத் தலைவர்களான குஞ்ஞாலி மரைக்காயர்கள்
உள்ளனர். இவர்களை கல்விப்புலத்திற்குள் கொண்டு வருவதே புரட்சியாகும் இன்று!
சத்தியாகிரகம் பற்றி பல கட்டுரைகளை ‘யங் இந்தியா’
வில் எழுதிய காந்தி வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிடவில்லை,
(பக்.69) என்ற பதிவு உள்ளது.
வைக்கம்
போராட்டம் பற்றிய அண்மையில் வெளிவந்த ஆய்வு நூலில் பழ.அதியமான், “திருவாங்கூர் கவர்ன்மெண்டார்
குரூர் நீலகண்டன் நம்பூதிரியைச் சிறையினின்று விடுவித்து விட்டார்கள் என்பதையும் ஈ.வி.
ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவை வாபீஸ் வாங்கிக் கொண்டு விட்டார்கள்
என்பதையும் கேட்க வாசகர்கள் சந்தோஷமடைவார்கள்”, (யங் இந்தியா, 23, ஏப்ரல் 1925; சுதேசமித்திரன்,
27 ஏப்ரல், 1925)” என்பதைக் குறிப்பிட்டு, “பெரியாரைப் பற்றி காந்தி எதுவுமே எழுதவில்லை
என்பவர்கள் கண்ணில் இப்பத்தி படுவதாக”, என்றும் எழுதுகிறார். (பக்.409, பழ. அதியமான்,
வைக்கம் போராட்டம், காலச்சுவடு வெளியீடு: ஜனவரி 2020)
இதே நூலில்,
“சத்தியாகிரகத்தைப் பற்றி வைக்கம் (காந்தி) வந்து சென்ற பிறகு ஐந்து மாதங்களாக ஏன்
எழுதவில்லை என்பதும் பிறகு எழுதியதும் தீர்வுக்குத் தொடர்பற்று இருப்பதும் பதில் தேட
வேண்டிய கேள்விகளாகும்”, (பக்.365, மேலது) காந்திக்கு இருந்த சிக்கல், இதை ஒரு அடையாளப்
போராட்டமாக விரும்பினாரோ என்ற அய்யம், அரசாங்கம், வைதீகர்கள் மனம் கோணாமல் சத்தியாகிரகத்தை
நடத்திய விரும்பியது போன்றவற்றையும் பழ. அதியமான் எடுத்துரைக்கிறார். (பக்.372, மேலது)
வைக்கம் போராட்டம் மார்ச் 12 என்று நூலில் உள்ளது.
ஆனால் கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கே.பி.கேசவ மேனனால் 1924 மார்ச் முதல் தேதி
அறிவிக்கப்பட்டு, உள்ளூர்க்காரர்கள் வேண்டுகோளால் ஊர்வலம் மார்ச் 30க்கு ஒத்திவைக்கப்பட்டதாக
மேற்கண்ட நூல் தெரிவிக்கிறது. போராட்டம் நடந்தது 1924 மார்ச் 30 தான். (பக்.25)
பெரியார் மனைவி நாகம்மாள் சகோதரி கண்ணம்மாள் ஆகியோர்
நடத்திய கள்ளுக்கடை மறியல், 500 தென்னைமரங்களை வெட்டி வீழ்த்தியது போன்றவை 1930 ஏப்ரல்
23 இன் கீழ் வருகிறது. (பக்.85) இவை பெரியார்
காங்கிரஸ்கட்சியில் இருந்த 1919-1925 காலகட்டத்தில் நிகழ்ந்தவை.
நீதிக்கட்சியின்
தொடக்கம் நவம்பர் 20, 1916 என்று அறியப்படுகிறது. நூலில் 1917 அக்டோபர் பதிவில் உள்ளது.
(பக்.52) இதுபோன்ற குழப்பங்களை அடுத்த பதிப்புகளில் சரிசெய்யலாம். நூல் எழுதி 7 ஆண்டுகள்
கடந்துவிட்டன. இப்போதுள்ள புதிய ஆய்வுகளின் வெளிச்சத்தில் மீளாய்வு செய்தும் அடுத்த
பதிப்பைக் கொண்டுவரலாம்.
நூல் விவரங்கள்:
இந்திய
விடுதலை: காந்தியுண்டு இரத்தமுண்டு
தொகுப்பு: புதினன் (குடவாசல் சார்லஸ்)
முதல் பதிப்பு: 2013
பக்கம்: 154
விலை: ₹ 100
வெளியீடு:
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
16 ஜானி கான் கான் சாலை. ராயப்பேட்டை,
சென்னை 600014.
பேச: 044-28482441, 42155309
மின்னஞ்சல்: pavai123@yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக