கருத்தியலும் எதிர்க்கருத்தியலும்
(நூலறிமுகம்… தொடர்: 029)
மு.சிவகுருநாதன்
(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
வெளியீடாக பேரா. சே. கோச்சடை
மொழிபெயர்ப்பில் வந்த தேவிபிரசாத்
சட்டோபாத்தியாயாவின் ‘கருத்தியல்
பற்றிய சிந்தனைகள்’ நூல் பற்றிய பதிவு.)
தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு
தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு ஆய்வு நூல்களை
எழுதியவர். தமிழில் வந்த கீழ்க்கண்ட இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும்
கவனிப்பைப் பெற்றவை. இவற்றைத் தவிர சில குறுநூற்களும் தமிழில் வெளியாகியுள்ளன.
- இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் – தேவி பிரசாத் சட்டோபாத்யாய (தமிழில்) கரிச்சான் குஞ்சு (விடியல் பதிப்பகம்)
- இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) வெ.கிருஷ்ணமூர்த்தி பதிப்பாசிரியர்: எஸ்.பாலச்சந்திரன் (படைப்பாளிகள் பதிப்பகம் விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்)
- இந்திய நாத்திகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) சாமி (பாரதி புத்தகாலயம்)
- உலகாயதம்: பண்டைக்கால இந்தியப் பொருள் முதல்வாதம் பற்றிய ஆய்வு – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) எஸ்.தோதாத்ரி (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.)
1994 மே
08 இல் காலமான தத்துவ அறிஞரின் நூலாக்கம் பெறாத 8 கட்டுரைகளின் தமிழ் வடிவமே ‘கருத்தியல் பற்றிய சிந்தனைகள்’
என்னும் பேரா. சே. கோச்சடை மொழிபெயர்த்த நூலாகும். அவை,
- இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க (நேர்மறை) அறிவியல்
- பண்டைய இந்தியாவில் கணக்கின் உருவாக்கம்
- பண்டைக் கால இந்தியாவில் வானவியலும் கணக்கும்
- இந்தியாவின் பகுத்தறிவு மரபுரிமை: பகுத்தறிவின் கூறுகளும் செயல் அறிவுக்கூறுகளும்
- அற்புதங்களை நிகழ்த்துபவர்களைப் பற்றி…
- இன்றைய இந்தியாவில் கருத்தியல் போராட்டம் பற்றி…
- இந்தியக் கருத்தியல் போராட்டம் பற்றி…
- பண்டைய இந்தியாவில் அறிவியல், மெய்யியல், சமூகம்
இவை பெரும்பாலும்
உரைகள். மொழிபெயர்ப்பும் சிறப்பாக உள்ளது, எனவே படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. ஆங்கில
மற்றும் பிறமொழிச் சொற்கள் அடைப்புக்குறிக்குள் தருவது நன்றாக உள்ளது. ஹோமியோபதி மருந்துவர்
புலவர் த.ச. இராசாமணி மறைவையொட்டி (29/02/2009) நினைவாக இந்நூல் வெளியானது. பண்டைய
இந்திய மருத்துவ (ஆயுர்வேதம்) மெய்யியல் குறித்த ஆய்வை இரண்டு கட்டுரைகள் செய்கின்றன.
இதர கட்டுரைகளும் அறிஞரின் பிற ஆய்வுகளையும் அனைவரும் வாசிக்க வேண்டும்.
“பண்டைய இந்தியாவிலிருந்த பல துறைகளிலும்
முற்றிலும் மதச்சார்பின்றியும் – அப்போது தவிர்க்க இயலாதபடி தொடக்கநிலையில்
(rudimentary form) இருந்தாலும் கூட – நவீனக் கண்ணோட்டத்தில் இயற்கை அறிவியலின் தொடக்கங்களுக்கு
நம்பிக்கை வைக்கக் கூடியதுமாக இருந்த ஒரேயொரு துறை மருத்துவம் அல்லது ஆயுர்வேதம்”,
(பக்.150, பண்டைய இந்தியாவில் அறிவியல், மெய்யியல், சமூகம்) என்ற தெளிவிலிருந்து இக்கட்டுரை
தொடங்குகிறது. “சமய நோய்தீர் கலையிலிருந்து பகுத்தறிவுக்குட்பட்ட நோய்தீர் நோய்தீர்
கலையாக நினைவில் நிற்கும் அளவுக்கு முன்னோக்கி அடையெடுத்து வைத்தது”, (பக்.151) இதன்
சாதனையாகும்.
“ஆயுர்வேதம் நேரடிக்காட்சி ஆராய்வைத்தான்
பெரிதும் சார்ந்திருக்கிறது; ஆயுர்வேதம் இயற்கை முழுவதைப் பற்றிய அறிவைப்பெற விரும்புகிறது;
ஏனெனில், மருத்துவத்திற்குப் பயன்படாதது எதுவும் இயற்கையில் இல்லை என்று அது உணர்ந்தது”.
(பக்.184) இதை வேதப் படிநிலைச் சமூகம் ஏற்கவில்லை என்பதே உண்மை; எனவே எதிர்த்து நின்றது;
பல்வேறு வழிகளில் ஒடுக்கியது.
சரக சம்ஹிதை,
சுஸ்ருத சம்ஹிதை ஆகியவற்றுக்கு முன்னதாக குலப்பெயரில் கௌதமர் என்றழைக்கப்பட்ட உத்தாலக
அருணியை பற்றி அறிந்துகொள்வது அவசியம். முதன்மை உபநிடதங்களில் குறிப்பாக சாந்தோக்கிய
உபநிடதம் இவரது கருத்துகளுக்கு தலையாய ஆதாரமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறார். ஆனால்
வைதீகம் இவைகளுக்கு எதிராக ‘எதிர் சித்தாந்தம்’ அல்லது ‘எதிர் கருத்தியலை’ உற்பத்தி
செய்தது.
இவரது பகுத்தறிவு சார்ந்த அறிவியல்
முறைகளை இந்திய சட்டமியற்றிகள் (law – makers) துளியும் விரும்பவில்லை. இருப்பினும்
இந்த ஊக்கத்தின் காரணமாக சமயம் சார் மாந்திரீக, தெய்வப் பண்டுவ முறைகளிலிருந்து பகுத்தறிவு
அல்லது யுக்தி சார் முறைகளை நோக்கி முன்னோக்கி நகரத் தொடங்கியது. கி.மு. 8 அல்லது
7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரது தாக்கத்தின் விளைவாக பகுத்தறிவு மற்றும் பட்டறிவு
சார் தகவல்களை மருத்துவத் தொகுப்புகளான சரக
சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை ஆகியவற்றில் காண்பதை எடுத்துரைக்கிறார். (பக்.109)
புத்தர் இறந்த சிறிது காலத்திலேயே பாலி மொழியில்
தொகுக்கப்பட்ட விநய பீடகத்தில் புத்தத் துறவிகளுக்கான பண்டுவ முறைகள் பற்றி விரிவாகப்
பேசப்படுகிறது. நோய்க்கான காரணங்கள் மட்டுமின்றி அவற்றுக்குக்கான மருந்துகளையும் (நோய்நீக்கி)
அடிப்படையாகக் கொண்ட ‘நலமாக்கும் தொழில்நுட்பம்’ புத்தருக்கு முன்னதாக கி.மு. ஆறு அல்லது
ஏழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். (பக்.153)
சரகா என்பது சுற்றித் திரிகின்ற
(caraka. Roving) மருத்துவர்களுக்கான பொதுவான அடைமொழியாகும். இவர்கள் நலமாக்கும் பொருள்களைத்
(healing agents) தேடியலைந்தவர்கள். கனிஷ்கரின் மருத்துவர் சரகர் என்றழைக்கப்பட்டிருந்தாலும்,
அவரை சரக சம்ஹிதையுடன் தொடர்புபடுத்துவதில்
எவ்வித அடிப்படையும் இல்லை, என்கிறார். (பக்.153)
சரக சம்ஹிதை 900 தாவரங்களால் உண்டாக்கப்படும் விளைவுகள்
பற்றியும் சுஸ்ருத சம்ஹிதை ஆயிரத்துக்கு மேற்பட்ட
தாவரங்களையும் பற்றியும் உரைக்கிறது. தாவரங்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதன் பாகங்களான
வேர், பட்டை, நெட்டி, கழிவு (பிசின்), காம்பு, சாறு, முளை, பழம், பூ, மொட்டு, சாம்பல்,
எண்ணெய், முட்கள், இலைகள், துளிர்கள், கூழ்கள், கிளைகள் ஆகியவற்றால் நமது உடல் அடையும்
மாற்றங்கள் விரிவாக விளக்கப்படுகின்றன. (பக்.155)
தாவரங்கள் மட்டுமல்லாமல் 156 வகையான விலங்குகளின்
சதை, கொழுப்பு, குருதி, எலும்பு, நகங்கள், கொம்புகள், குளம்புகள், பால், மூத்திரம்,
பித்தம் போன்றவை நமது உடலில் ஏற்படுத்தும் விளைவுகளை நமக்கு விளங்க வைக்கின்றன. எலும்புருக்கி
(காசநோய்) துயருக்கு பசுவின் இறைச்சியை சரக சம்ஹிதை (பக்.155&156) பரிந்துரைக்கிறது.
(பசு குண்டர்கள் கவனிக்க...?!)
சுற்றுச் சூழலில் உள்ள பருப்பொருளுக்கும் உடலின்
பருப்பொருளுக்கும் இடையே உள்ள இடைவினை, அதாவது இயற்கையின் பல்வேறு பொருள்களில் உள்ள
பருப்பொருளுக்கும், உயிருள்ளவைகளுக்கும் சிறப்பாக, மனித உடல்களுக்கும் இடையே உள்ள இடைவினை
பற்றிய பகுத்தறிவு சார் மருத்துவத்தில் எழுப்பப்பட்ட கோட்பாட்டுச் சிக்கல்கள் இன்றும்
முக்கியத்துவம் உடையன. (பக்.154)
“உடம்பு
ஐந்து வடிவங்களிலுள்ள பருப்பொருளால் ஆனது. உணவும் ஐந்து வடிவங்களிலுள்ள பருப்பொருளால்
செய்யப்பட்டதாகும். முழுமையாக உருமாற்றமடைந்த உணவிலுள்ள ஐந்து வடிவப் பருப்பொருட்களும்
உடம்பிலுள்ள தங்கள் இனத்துடன் சேர்கின்றன”, (பக்.161) என்ற சரக சம்ஹிதை சொல்வது இதனை
விளக்குவதாக உள்ளது.
“மறை பொருளாராய்ச்சியாளர்கள் தங்களுக்கெனச்
சொந்தப் பார்வைகளைக் கொண்டிருக்கட்டும்; மருத்துவர்கள் இவற்றுடன் விளையாடவேண்டாம்.
எனினும் அவர்களுக்குத் தவிர்க்க இயலாதது என்னவென்றால், அவர்கள் பருப்பொருளைக் கடந்து
எதையும் நினைக்கக்கூடாது”, (பக்.163) என்கிற பொருள் முதல்வாதத்தைத் திருத்தமற்றது,
எளியது, முதிரா நிலையினது என்று நாம் அழைத்தாலும் அது வேறுவகையல்ல. நவீன செந்தர அளவுகளிலிருந்து
இந்தப் பொருள் முதல்வாதத்தை மதிப்பிடுவதைவிட, அதன் வரலாற்று முக்கியமே நமது அக்கறை,
என்பதையும் இங்கு பதிவு செய்கிறார். (பக்.164)
“பண்டைய இந்திய மருத்துவர்கள்
அந்தக் கால இந்தியச் சட்டத்தை இயற்றியவர்களின் பல தடையாணைகளையும் விலக்குகளையும் ஐயத்திற்கிடமில்லாமல்
புறக்கணிக்க வேண்டியிருந்தது. சட்டத்தை இயற்றியவர்களால் தீண்டாமை என ஒதுக்கி வைக்கப்பட்ட
பல பொருட்களை அந்த மருத்துவர்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவாகப் (diet) பரிந்துரைக்க வேண்டியதாயிற்று;
பிணத்தைத் தொடக்கூடாது என்று சட்டத்தால் மிக வன்மையாக விலக்கப்பட்டிருந்தால் கூட, உடற்கூறில்
அறிவைப் பெறுவதற்காக அவர்கள் பிணங்களை அறுத்துக் கூறுபோட வேண்டியது இன்றியமையாதது என்று
உணர்ந்தனர்” (பக்.174) என்றும் இதைத்தவிரவும், வினையையும் ஊழையும் கேள்விக்குட்படுத்தும்
ஜனநாயகக் கடப்பாடும் இவர்களுக்கு இருந்ததைத் தெளிவுபடுத்துகிறார். (பக்.175)
ஆபஸ்தம்பாவின் சட்டத்தொகுப்பு மருத்துவரால் கொடுக்கப்படும்
உணவு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அருவெறுப்பானது என்று அறிவிக்கிறது. வணிகரின் உணவை
ஏற்கலாம், கைவினைஞர் மற்றும் தூய்மையற்ற அறுவைப் பண்டுவம் செய்யும் குழுக்களைச் சேர்ந்த
ஒருவரின் உணவையும் ஏற்கக் கூடாது என கௌதமரின் சட்டத்தொகுப்பு வரையறுக்கிறது. மருத்துவர்
அளிக்கும் உணவு விலைமகள் அளிக்கும் உணவைப்போலத் தூய்மையற்றது என்கிறார் வசிஷ்டர்.
(பக்.176)
இருபிறப்பாளர்கள் (dvija) எனும் சிறப்புரிமை பெற்ற
பிராமணர்கள் இழிதொழிலான மருத்துவம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அப்படி செய்தால்
அவர்களது இருபிறப்பாளர் உரிமை பறிபோகும். எனவே மருத்துவத் தொழிலுக்குரித்தானவர்கள்
‘அம்பட்டர்’ எனப்படும் பண்டைய இனக்குழுவின் (tribe) உறுப்பினர்கள் மட்டுமே. மருத்துவத்துடன்
சேர்ந்து இவர்களும் இழிவுபடுத்தப்பட்டது தான் இந்திய வரலாற்றின் அவலம். (பக்.177)
இவர்கள் முறைகேடாகப் பிறந்தவர்கள்
(bastards), உரிமையில்லாதவர்கள் (Varnasamkaras - வர்ணமழிந்தவர்கள்) என்று கதைகள் புனைகின்றனர்.
பார்ப்பன ஆண்களும் வைசியப் பெண்களும் சேர்ந்து
பிறந்தவர்கள் என மநு கண்டுபிடிப்பு செய்கிறார். இத்தகைய புராணக்கதைகள், வெறுப்புணர்வு
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13-14 நூற்றாண்டு வரை தொடர்வது வேதனையான ஒன்று. (பக்.178)
காலத்தால் பிந்திய யஜூர் வேதம், “பார்ப்பனர்
மருத்துவத் தொழிலைச் செய்யக்கூடாது, ஏனெனில் மருத்துவர் தூய்மையற்றவர்; பலி கொடுக்கத்
தகுதியற்றவர்”, என்று அறிவிக்கிறது. “இத்தொழில் மனிதர்களுடன் ஒழுங்கற்று உயர்குடித்
தன்மையற்று பழக வைப்பதை”, (பக்.182) வர்ணாசிரம சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாமல் அசுத்தம் கற்பிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறது.
இன்றைய சூழலில்
இதை வாசிப்பவர்கள், தூய்மை பற்றிய கருத்தாக்கத்தை சரக மற்றும் சுஸ்ருத சம்ஹிதையிலிருந்து
அறிந்துகொள்வது நலம் பயக்கும். தூய்மை மற்றும் ஒழுங்குவிதிகளைக் கடைபிடிக்காதவர்களை இவைகள் ஏற்கவில்லை.
மருத்துவருக்கு மருத்துவ அறிவு (ஞானம்),
பட்டறிவு, நடைமுறைத் திறமை, தூய்மை ஆகிய நான்கையும் சரக சம்ஹிதை வலியுறுத்துகிறது.
(பக்.178)
மேலும் மருத்துவர், “ஒன்றின் உண்மையான இயல்பைப் பற்றிச்
சினமோ, வெறிப்பற்றுதலோ (addiction) இல்லாமல் ஆழ்ந்து சிந்திப்பவராகவும், நன்னடத்தை,
தூய்மை, நல்ல பழக்கங்கள், அன்பு, திறமை, வணக்க இணக்கம் (மரியாதை) அமையப் பெற்றவராகவும்,
உயிர்வாழும் அனைத்தின் நல்வாழ்வை விரும்புவராகவும், பேராசையும் சோம்பலும் அற்றவராகவும்”
(பக்.179) இருக்க வேண்டுமென இலக்கணம் வகுக்கிறது.
இதைப்போல, சுஸ்ருத சம்ஹிதை, மருத்துவர்,
“தனது உடை, மனப்பாங்கு, வழக்கங்களில் தூய்மையாக (clean) இருக்க வேண்டும். நன்றாக மழித்துக்
கொண்டிருக்க வேண்டும். நகம் வளர்க்கக் கூடாது. அவர் வெள்ளுடை தரிக்க வேண்டும். கால்களில்
மூடுகாலணி (ஷூ) பயன்படுத்த வேண்டும். கையில் ஒரு கோலுடனும் ஒரு குடையுடனும் மென்மையான
அருட்பார்வையுடனும் நடக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் நண்பராக, உதவத் தயாராக
இருக்க வேண்டும். அவருடைய பேச்சும் நடத்தையும் கள்ளங் கபடமில்லாமல் நட்புணர்வோடு இருக்க
வேண்டும். அவருடைய பகுத்தறிவும் ஆய்வுப் பண்பும் எந்த வகையிலும் சீர் குலையவோ, வேறு
எதுவும் அதில் குறுக்கிடவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது”, (பக்.178&179) என மிகக்
கறாரான வரையறைகளை செய்வதையும் கவனிக்க வேண்டும். இருப்பினும் இந்த பழமையான பண்டுவத்தை
இழிவாகவும் அதில் ஈடுபட்ட உயிர் காக்கும் மருத்துவர்களை வருணாசிரமம் கொடுமைகளுக்குட்படுத்தியது.
உபநிடத இலக்கியங்களின் மருத்துவத்தைப்
பற்றிய மவுனம் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றல்ல.
வர்ணாசிரம சமூகம் இயற்கையின் நேரடி அறிவுக்கு அஞ்சியே, அதைப் பழித்து, இயற்கை
அறிவியலுக்கு அழிவை உண்டாக்கும் திசையில் எதிர் கருத்தியலை வளர்க்க முனைந்ததை (பக்.189)
விரிவாக விளக்குகிறார் தேவிபிரசாத்.
தேவதாசி முறையின் சகலவித இழிவுக்கும் காரணமாக இருந்துவிட்டு,
இறுதியில் அவர்களின் பரதக் கலையைக் கைப்பற்றியதைப் போல, பண்டைய மருத்துவர்களையும் மருத்துவமுறைகளை
பலவாறு இழிவு செய்த வைதீகம் அவற்றையும் கைப்பற்றியது. வைதீக கொடூரத் தக்குதல்களுக்குப்
பிறகும் அவைதீக கருத்தியல்கள் இங்கு நிலைத்திருப்பதைப் போல மருத்துவமுறையும் பல்வேறு
தடைகளைத் தாண்டி செழித்திருக்கிறது. ஆனால் இதன் கூறுகளில் இன்று வைதீகத்தின் மாசு படிந்து
கிடப்பதும் அதை வெளிக்கொண்டு வருவதும் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
நூல் விவரங்கள்:
கருத்தியல்
பற்றிய சிந்தனைகள்
தேவிபிரசாத் சட்டோபாத்தியாய
(தமிழில்)
பேரா. சே. கோச்சடை
முதல் பதிப்பு: ஜனவரி 2018
பக்கம்: 204
விலை: ₹ 170
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),
41, பி சிட்கோ
இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
044-26258410, 26251968,
26359906, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக