வெள்ளி, மே 22, 2020

EMI நீட்டிப்புச் சலுகை எனும் மோசடி!


EMI  நீட்டிப்புச் சலுகை  எனும் மோசடி!


மு.சிவகுருநாதன்


      கொரோனா ‘சலுகை’யாக அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத தவணை நீட்டிப்பு தற்போது இன்னொரு 3 மாதங்கள் என (ஆகஸ்ட் 2020 முடிய) ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்திருக்கிறார்.  இது ஒரு வகையான மோசடியே.

      வெறும் கையால் முழம்போட்டு, வெற்றுக் கூச்சல்கள் எழுப்பும் நரேந்திர மோடி, துளியூண்டு கண்ணியமும் இன்றி, "பெட்டி தூக்கிட்டுப் போ", என்று ஆணவக் கூச்சலிடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் என அனைவருக்கும் உள்ள ஒற்றுமை மோசடி அறிவிப்புகளை வெளியிடுவது என்று சொல்லலாம்.

     இவர்களது போலி அறிவிப்புகளால் மக்களுக்கு அவரது பொருளாதார உயர்விற்கும் ஏன் நாட்டின் பொருளாதார உயர்விற்கும் எந்தப் பலனும் இல்லை என்பதை பொருளியல் அறிஞர்கள் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதைத்தான்  இன்று விரைவு படுத்தியுள்ளனர்.

      வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்ற பல்வேறு கடன்களை மாதந்தோறும் செலுத்தும் முறையை  EMI (Equated Monthly Installment) என்கிறோம். இதைத் தமிழில் ‘சமப் படுத்தபட்ட மாதாத்  தவணை’ எனலாம்.

    மாதந்தோறும் நாம்  நிலையான தொகை ஒன்றை கடனுக்காக கட்டுவோம். இதில் அசலும் வட்டியும்  எதிர்விகிதத்தில் இருக்கும். இந்தத் தொகையில்  வட்டித்தொகை குறைந்தும் அசல்தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே EMI கணக்கீட்டு நடைமுறையாகும்.

      மூன்று அல்லது ஆறுமாதம் தவணை கட்டவில்லை என்றால், அதே எண்ணிக்கை தவணைகள் மட்டுமே பின்னால் கூடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறு.

       நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்களுக்கு வட்டியோ, அசலோ தள்ளுபடி ஆகவில்லை. மூன்று அல்லது ஆறு மாதங்கள் தள்ளிவைத்திருக்கிறார்கள், அவ்வளவே! பெருமுதலாளி / பெரு நிறுவனங்களாக இருப்பின் 'write off' செய்திருப்பர். இதை ‘பதிவழிப்பு’ என்கின்றனர். வங்கியியலில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' கதைதான்!  வாராக்கடன்களை (bad debts)  ‘பதிவழிப்பு’ (கிட்டத்தட்ட தள்ளுபடி) செய்து நாட்டின் பெருநிறுவன / பெரு முதலாளிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மக்கள் விரோத அரசுகள் சாதாரண மக்களின் இந்தக் கடனை வேண்டாம், வட்டியை மட்டும்கூட தள்ளுபடி செய்ய விரும்புவதில்லை.

     தள்ளி வைக்கப்பட்ட மாதங்களுக்கு வட்டி கூடுதலாகும்;  தண்ட (அபராத) வட்டி உண்டா என்பதும் தெரியவில்லை. அதுவும் சேர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். வட்டியைத் தள்ளுபடி செய்தல் அல்லது வட்டியை உறைய வைத்தல் போன்ற நடவடிக்கை இன்றி இம்மாதிரிச் செய்வது மோசடியானது.

      தண்ட வட்டி இல்லையென்றே வைத்துக் கொள்வோம்.  தவணை செலுத்தாத மாதங்களுக்கு உள்ள வட்டி நிலுவை கடன் வட்டி விகிதத்திற்கேற்ப தவணையை ஆறு என்பது பத்தைவிட அதிகமாகும் வாய்ப்பும் உண்டு. குறுகியகால கடன் என்றால் சில தவணைகளும்,  நீண்ட காலக்கடன் எனில் அதிக தவணைகளும் உயரும் என்பதே உண்மை. 

   இதனால் கடனாளிகள் மீண்டும் கடன்சுமையில் தத்தளிக்க நேரிடும்.  வேறு மொழியில் சொல்வதானால் இந்த மூன்று ஆறுமாதத் தவணை கடனாளிக்கு தவணைகளில் கடனாக அளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை நிலவரம்.

      ஒருவர் மாதம் 10,000 கடன் தவணை என்று கொண்டால் ஆறு மாதங்களுக்கு 60,000 பழைய கடனுடன் சேர்த்துப் புதுக்கடன் வழங்கப்படுகிறது என்று பொருள். இதற்கான கூடுதல் தவணைகளில் அசலையும் வட்டியையும் கடனாளி திரும்பச் செலுத்த வேண்டும். எனவே இந்தக் கடனுக்கான வட்டி உள்ளிட்டவைகளும் தண்டமும் நம் தலையில் சுமத்தப்படும். 

    இதனால் அரசுக்கும் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் என்றே சொல்ல வேண்டும்.  புதிதாக ஒருவருக்குக் கடன் வழங்க நிறைய நடைமுறைகளும் செலவீனங்களும் ஏற்படுமல்லவா! அதெல்லாம் இதில் கிடையாது. தனியார் வங்கிகளில் கடன் அதிகளவில் வழங்க முகவர்கள் உண்டு. அவர்களுக்கு கடன் அளவு விழுக்காட்டின் படி கமிஷன் வேறு தரவேண்டும். அந்தச் செலவீனங்கள் இல்லாமல் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

      இருக்கின்ற கடனாளி தலையில் மீண்டும் கடன் சுமையை ஏற்றி வங்கிகள் லாபம் பார்க்க வழிவகைகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதைச் 'சலுகை' என்று சொல்வது தலைசிறந்த நகைச்சுவை; கொடிய வன்முறையும் கூட.

     வங்கிகள் இதற்கான விண்ணப்பத்தை online இல் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது.  அதற்கான வேண்டுகோளை அனுப்பிய பிறகு எங்கு வேலை செய்கிறீர்கள்? ஊதியம் வரவில்லையா? என்ற விவரங்கள் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டன. 

     அரசுத்துறைகளில் ஊதியப்பிடித்தம், ஓராண்டுக்கு அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ரத்து என பல அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊதியம் முழுமையாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது.

         அரசு ஊழியர்கள் வருங்கால எதிர்பார்ப்புகளை நம்பியே கடன் வழியில் சிக்கிக் கொள்கின்றனர். வேறு வழியும் இல்லை. கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரிசியன் போன்ற அமைப்பு சாராத் தொழிலாளர்கள் தனது எதிர்கால ஊதியத்தை நம்பியும் வேலைக்குச் செல்ல வேண்டியும் இருசக்கர வாகனக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.  இவர்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் இந்த நடவடிக்கைகளை பெருமிதமாக அறிவிப்பது கேலிக்கூத்தன்றி வேறில்லை.


      தவணை கட்டாமலிருக்கும் 'சலுகைக் கடன்' வழங்கிய பிறகும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு பணம் இருந்தால் அந்தத் தவணைகளை செலுத்திவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். வங்கியாளர்கள் வேறு என்ன செய்வார்கள்?  அரசின் இந்த கோமாளித்தன நடவடிக்கைளால்  அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர் நேரில் சந்திக்க வேண்டியவர்கள். நாளைக்கு மோடி ரசிகரே கூட ஏன் எனக்கு கூடுதல் தவணைகள் எனக்கேட்டு வம்பிழுக்கக்கூடும்! 

     ‘கொரோனா’ இவர்களைக் கூத்தடிக்கவும் பெரு முதலாளிகளுடன் சேர்ந்து கும்மாளமடிக்கவும் வழி வகுத்துள்ளது. இதிலிருந்து நாடும் மக்களும் மீள்வது எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக