‘ஆதிவாசிகளின் புரட்சி’ வீராங்கனை
(நூலறிமுகம்… தொடர்: 043)
மு.சிவகுருநாதன்
(சவுத் விஷன் புக்ஸ்
வெளியிட்ட ‘’கோதாவரி பாருலேகர்: பழங்குடி மக்களின் தாய்’ என்ற குறுநூல் குறித்த பதிவு.)
பெண்களின் பங்களிப்பு எல்லாத் துறைகளிலும் மறைக்கப்பட்ட
/ மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அறிவியல், சமூகம், அரசியல் என எந்தத் துறைகளும்
இதற்கு விதிவிலக்கல்ல. மணலூர் மணியம்மாள் போல் எண்ணற்ற மறைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு.
கட்சி அமைப்பிற்குள்ளும் வெளியிலும் செயல்படும் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் போற்றப்படுவதும்
கொண்டாடப்படுவதும் இல்லாத நிலை இன்றும் நீடிக்கவே செய்கிறது.
- மகாராஷ்டிராவில் சட்டம் படித்த முதல் பெண்.
- சுதந்திரப் போராட்ட வீராங்கனை
- வார்லி ஆதிவாசிப் புரட்சிக்குத் தலைமை.
- ஆதிவாசிகளின் புரட்சி’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்.
- மகாராஷ்டிர மாநில விவசாயிகள் சங்க நிறுவனர்.
- அகில இந்திய விவசாயிகள் சங்க வரலாற்றில் ஒரே பெண் தலைவர். (பக்.04)
போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோதாவரி
பாருலேகரின் (1907 – 1996) நூற்றாண்டு (2007) நினைவையொட்டி எழுதப்பட்ட இக்குறுநூல்
சவுத் விஷன் புக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.
1945 இல் மகாராஷ்டிராவின் தானா மாவட்டப்பகுதிகளில்
கிளர்ந்தெழுந்த வார்லி ஆதிவாசிகளின் புரட்சிக்கு முன்னணிப் பங்கு வகித்தவர்கள் கோதாவரியும்
அவரது கணவர் ஷாம்ராவ் பாருலேகரும் தான். இவர்கள் தலைமையில் அன்றைய ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட்
கட்சியும் அதன் கிசான் சபாவும் இணைந்து இதை நடத்தியது.
“நமது சுதந்திரப் போராட்டக் காலத்தில், இந்த தம்பதியினருக்கு
ஈடாக, தத்துவார்த்த செழுமையைப் பரிணாம ரீதியில் பெற்றவர்கள் என்று அன்றைய மகாராஷ்டிரத்தில்
கணக்கிட்டால், விரல் விட்டு எண்ணிவிடலாம். சுதந்திரப் போராட்டக் காலத்தில், இந்தத்
தம்பதியினர் தலைமை தாங்கிய பல பரிமாணங்கள் கொண்ட போராட்டங்கள் வெறுமனே குறிப்பிடத்தக்கது
மட்டுமல்ல, அதற்கு இணையாக வேறு எதையும் குறிப்பிட முடியாது. இந்தத் தம்பதியினர் தனது
வாழ்க்கையில் அப்படியே இணைந்து ஒரு கருத்து, ஒரு உயிர்போல் பணியாற்றினார்கள். அதனால்தான்,
அவர்களது சாதனைகளை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை ஒன்று போல்தான் பார்க்க
வேண்டி உள்ளது”, (பக்.05) என்று குறிப்பிடுவது எவ்வளவு சரியானது என்பதை அவரது உயில்
மூலம் அறிந்து கொள்ளலாம்.
“நானும், எனது மறைந்த கணவர் ஷாம்ராவ் பாருலேகரும்
நமது கட்சி அமைப்புகளின் மூலம், தொழிலாளிகள், விவசாயிகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும்
சமூகத்திலுள்ள மற்ற சுரண்டப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேண எங்கள் பணியைச் செய்தோம்.
இப்படித்தான் நாங்கள் இருவருமே ஒரே சமயத்தில் கட்சியுடன் நின்று கொண்டிருந்தோம். இதன்
விளைவாக, இயல்பாகவே, எங்கள் நலனும், எங்கள் கட்சியின் நலனும் எப்போதும் ஒன்றாகவே ஒன்றுபோல்
அமைந்துவிட்டது. நமது கட்சியைத் தவிர்த்து, நாங்கள் வேறு எந்தவித அறிவார்த்த, அரசியல்
அல்லது உணர்வுப்பூர்வமான வாழ்க்கையைத் தனிப்பட்ட முறையில் பெற்றதில்லை”, (பக்.48) என்று
சொல்லி, அசையும், அசையா சொத்துகளனைத்தையும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கே அளிக்கிறார்.
பூனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண கோகலேயின் ஒன்றுவிட்ட
சகோதரின் மகளான கோதாவரியும் கர்நாடகம் பிஜப்பூரைச் சேர்ந்த நிலப்பிரபுவின் குடும்பத்தை
சேர்ந்த பாருலேகரும் பெற்றோரை மீறி ‘இந்தியச்
சமூக சேவகர்கள். அமைப்பின் மூலம் பொதுச்சேவைக்கு வந்தனர். பல்வேறு இயக்கங்களை கட்டியும்
ஒருங்கிணைத்தும் மக்கள் பணியாற்றினர். ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து
செயல்படுகின்றனர்.
ஏகாதிபத்திய யுத்த எதிர்ப்புப் பரப்புரைக்காக இரண்டாண்டுகள்
சிறைபட்டனர். சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் விவசாயிகளை அணிதிரட்டுவதில் கவனம்
செலுத்தி மகாராஷ்டிர கிசான் சபாவைத் தொடங்குகின்றனர். 1944 கிசான் சபா மாநாட்டில் ஆதிவாசிகளுடன்
இணக்கம் ஏற்படுகிறது. இதுவே ஆதிவாசிப் புரட்சிக்கு வித்திடுகிறது.
1947 இல்
ஆதிவாசிப் புரட்சியின் முதற்கட்ட வெற்றியை
‘வார்லிகளின் புரட்சி’ என்ற தலைப்பில் பாருலேகர் புறவய வரலாற்றை ஆங்கிலத்தில் அளித்தார்.
1960 இல் சிறையிருந்த கோதாவரி ‘ஆதிவாசிகளின் புரட்சி’ என்ற புகழ்பெற்ற நூலை மராத்தி
மொழியில் எழுதினார். அது 1970 இல், வெளியாகி பிற இந்திய மொழிகளுக்குச் சென்றது.
வார்லி ஆதிவாசிகள் சொல்லில் வடிக்க இயலாத அளவிற்கு
நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாயினர். எடுத்துக்காட்டாக
சில:
“அவளது மாங்காயையும் அவள் செய்த காரியத்திற்கு
சாட்சியாய் கூடவே எடுத்துச் சென்றான்… ரூப்ஜி மரத்துடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டாள்,
அவள முதுகுத் தோல் பிய்ந்துபோகும் வரை சாட்டையால் அடிக்கப்பட்டாள். அவள் அடிதாங்காமல்,
ஒரு விலங்குபோல் ஊளையிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் யாரும் உதவிக்குப் போகவில்லை”,
“மற்றொரு ஆதிவாசியை கால்பாதத்தில் தலைகீழாய் மரத்தில்
தொங்கவிட்டார்கள். அவனது தலைக்குக் கீழே நேரடியாக காய்ந்த மிளகாயை எரிய விட்டார்கள்.
தீயில் இருந்து எழுந்த அந்த கார்ப்பான புகை அவனது மூச்சை அடைத்தது. அவர்கள் அந்நிலையில்
அவனது முதுகைச் சாட்டையைக் கொண்டு பிளக்க ஆரம்பித்தனர்”,
“அப்பெண்களுக்குப் புரியும் வகையில், அவர்களுக்கு
எதிரில் ஆபாசமான வார்த்தைகளைப் பேசுவதும், அவர்களைத் தொடுவதும், அவர்களைக் கிள்ளுவதும்,
அவர்களை ஏதாவது ஒரு மூளைக்குத் தள்ளி பாலியல் தொந்தரவு தருவதும் வழக்கமாக இங்கே நடந்து
கொண்டிருந்தன”, (பக்.23)
“ஒரு பெண்
தன் கரங்களில் பிறந்து நான்கு அல்லது ஐந்து நாட்களே ஆன குழந்தையை வைத்திருந்தாள். அவள்
அந்தக் குழந்தையை பிரசவித்து மூன்று நாட்களே ஆன தருணத்தில் கூட, அவள் வேலைக்கு வர வேண்டும்
என நிலப்பிரபு கட்டளையிட்டான். அவள் அப்படி வராதபோது, அவன் அவளை நைச்சியமாகப் பேசி
தனது வீட்டுக்கு வரவழைத்து, வீட்டுக்கு வந்தவளை திரும்ப, திரும்ப போட்டு உதைத்தான்.
பின்னர் அடுத்த நாள் அவளை வேலைக்கு வர வேண்டும் என கட்டளைப் பிறப்பித்தான். அவள் அதை
நிறைவேற்றாதபோது, அந்த நிலப்பிரபு அவளது கணவனைப் போட்டு உதைத்தான்”, (பக்.23&24)
“ஏரில் பூட்டப்பட்டிருந்த ஒரு எருது அதிலிருந்து
விடுவிக்கப்பட்டது. ஜிப்பர் என்ற ஆதிவாசி அதன் இடத்தில் பூட்டப்பட்டு, மற்றொரு எருதுடன்
சேர்ந்து நிலத்தை உழும்படி கட்டளை இடப்பட்டது. சோர்வடைந்த ஜிப்பரால் ஏரை இழுக்கக் கூட
முடியவில்லை. ஆனால் மேஸ்திரி தாற்றுக்கோலால் ரத்தம் பீரிடும் வரை பிளந்து விட்டான்”,
(பக்.24)
இந்த ஜிப்பர்தான் ஆதிவாசிகளின் புரட்சியில் தீவிரவாதப்
பாத்திரமேற்றார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமைக்குரிய உறுப்பினராக
இருந்து காலமானார். 1995 தலச்சாரி ஊர்வலத்தில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தால் நினைவு கூறப்பட்டவர்
இந்த ஜிப்பர்.
இந்தக் கொடுமைகளைப் படிக்கும்போது கீழத்தஞ்சை
பண்ணையடிமைக் கொடுமைகளை அப்படியே நினைவூட்டுகிறது. எங்கும் நிலப்பிரபுத்துவம், பண்ணையடிமை
முறை எல்லாம் ஒரே மாதிரியான அடக்குமுறை வடிவங்களில் செயல்படுகிறது. பெண்கள் மீதான பாலியல்
கொடுமைகளும் அதே தரத்தில்தான் இருக்கின்றன.
நாட்டு விடுதலைக்கு முன்பு நடந்த கிசான் சபாவும்
ஆதிவாசிகளின் புரட்சியும் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களின்
உச்சக்கட்ட விளைவு என்று ஆசிரியர் கணிக்கிறார். (பக்.37) இது மகாராஷ்டிரா மாநிலத்தில்
இடதுசாரிகளின் எழுச்சியாகவும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
1964 இல்
கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் இருவரும் இணைந்து செயலாற்றினர்.
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாருலேகர் 1965 ஆகஸ்ட்
05 இல் சிறையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த அதிர்ச்சியில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டார்
கோதாவரி. இருப்பினும் அந்தச் சோகத்திலிருந்து விடுபட்டு 1992 வரை கிசான் சபா மற்றும்
கட்சிப்பணிகள் செய்து, வயது, உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சிப் பணிகளிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்ட கோதாவரி, 1996 அக்டோபர் 08 இல் காலமானார்.
இந்திய மக்கள் வரலாற்றில் கோதாவரி போன்றோரது பெயர்கள்
என்று நிலைத்து நிற்கும். நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடித்தட்டு மக்களை
ஒன்றுதிரட்டி வீரச்சமர் புரிந்த இத்தகைய வீராங்கனைகள் இன்றைய சமூகத்திற்கு முன்னோடிகளாக
கொண்டு செலுத்தப்பட வேண்டும்.
நூல் விவரங்கள்:
கோதாவரி பாருலேகர்: பழங்குடி மக்களின்
தாய்
(கோதாவரி பாருலேகரின் நூற்றாண்டு
1907 – 2007 நினைவு அஞ்சலிக்காக எழுதப்பட்டது.)
ஆங்கிலத்தில்: அசோக் தாவ்லே
தமிழில்: சொ.பிரபாகரன்
வெளியீடு:
சவுத் விஷன் புக்ஸ்
முதல் பதிப்பு: 2009
இரண்டாம் பதிப்பு: ஜனவரி 2020
பக்கங்கள்:
48
விலை: ₹ 25
தொடர்பு முகவரி:
சவுத் விஷன் புக்ஸ்,
491 B, G1, ஒமேகா பிளாட்ஸ், நான்காம்
இணைப்புச் சாலை,
சதாசிவ நகர், மடிப்பாக்கம்,
சென்னை – 600091.
அலைபேசி:
94445318520, 9445575740
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக