மு.கருணாநிதியின் ஆதரவு அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தேவையில்லை!
-மு.சிவகுருநாதன் சென்னையில் தனது வாரிசு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை (29.02.2012) கொண்டாடிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு கூடங்குளம் போராட்டத்திற்கெதிராக கடுமையான அவதூறு பேசியிருக்கிறார். இது மன்மோகன் சிங். ப.சிதம்பரம், நாராயசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் அவதூறுகளை விட மிகவும் மலிவானது.
மேலே சொன்னவர்களெல்லாம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் தமிழினத்தலைவராக (?!) தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட இவர் இப்போராட்டத்தின் பின்னணியில் ஜெ.ஜெயலலிதா இருப்பதாக விஷம் கக்கியுள்ளார்.
முதலில் இவர் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அணு உலை எதிர்ப்பாளர்கள் இவரிடம் கையேந்தி நிற்கவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இவருடைய அணு உலை அதரவு உலகம் அறிந்ததுதான். நாடாளுமன்றத்தில்மு.கனிமொழியின் கன்னிப் பேச்சு எளிதில் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல.
நிறைய கேள்விக்கணைகளை அள்ளி வீசியுள்ளார். அதில் ஒன்று நாயகன் சிறுவன் பாணியில் அ.இ.அ.தி.மு.க அரசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? நாமும் ஓர் கேள்வி கேட்கலாம். இவ்வளவு மாதங்கள் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போரட்டத்துக்கு ஜெயலலிதா அரசு மறைமுக ஆதரவு வழங்குகிறது என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏன் மௌனம் காக்கிறது என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இந்தப் போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என்று தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
கூடங்குளம் போராட்டத்தை தொடக்க நிலையைலேயே தடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்றும் இதனால் இன்று தமிழகம் இருண்டுவிட்டது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். சென்னைக்கு அருகில் கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பாக இருக்கும்போது கூடங்குளம் அணு உலை மட்டும் எப்படி பாதுகாப்பு இல்லாமற்போகும் என்று மிகவும் அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்.
நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளும் முன்பு கூடங்குளம் பகுதியின் தொடக்கப் பள்ளி மாணவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு நீங்கள் முதலில் பதிலளியுங்கள். ஆறு மாத காலமாக நம் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். அதற்கு நீங்கள் ஆதரவு ஒன்றும் தரவேண்டாம். பேசாமல் வாயை மட்டும் மூடிக்கொண்டிருங்கள். அது போதும்.உங்களிடம் போராடும் அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.
முதல்வர் ஜெ.ஜெயலலிதா மட்டும் அணு உலைக்கு எதிரானவர் என்று நாம் நினைக்கவில்லை.அப்படிச் சொல்லவும் வழியில்லை. ஆனால் இந்த பிரச்சினையில் அவர் இதுவரை எடுத்த முடிவுகள் பல்வேறு குறைபாடுகளுடையதாக இருப்பினும் உங்கள் அளவிற்கு மோசம் என்று சொல்ல இடமில்லை.
நீங்கள் , மாநில அடிவருடி காவல்துறை அல்லது ராணுவத்தை வைத்து பலப்பிரயோகம் செய்து இப்போராட்டத்தை ஒடுக்க நினைப்பது புரிகிறது. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் மட்டுமல்லாது தமிழக மக்களிடம் அந்நியப்பட்டுள்ள உங்களுக்கு குடும்ப -வாரிசு சண்டைகள், அதிகாரப்போட்டி,கனிமொழி வழக்கு என பல வேலைகள் இருக்கும்போது ஏனிந்த வீண்வேலை?
ஜெ.ஜெயலலிதா எதோ நல்ல பெயர் எடுத்துவிடப் போகிறார் என்று வயதான காலத்தில் வீணாக கவலைப் படவேண்டாம். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. ஏனென்றால் ஜெ.ஜெயலலிதாவிற்கும் உங்களுக்கும் ஆறு வித்தியாசம் கூட இல்லையென்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
4 கருத்துகள்:
எனக்கு நினைவு தெரிந்து கருணாநிதி இன்றுதான் உண்மையாகப் பேசியிருக்கிறார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு புரிய வைத்துத்தான் இந்த நாட்டில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற
வேண்டுமா ?
ஒரு வேளை சிவகுருநாதன் ஒன்பதுக்கு மேல் தாண்டவில்லையோ ?
கருணாநிதி கருத்து சொல்ல தேவையில்லைஎன்றால் உதயகுமாரனுக்கு போராடும் உரிமையை மட்டும் யார் கொடுத்தது ?
தேசத்துரோகிகள் திட்டமிட்டு நடத்தும் போராட்டத்துக்கு சில மக்களும் உங்களைப்போன்ற கொள்கை ரீதியான அணுசக்தி எதிர்ப்பாள இளைஞர்களும் பின்னணியில் இருக்கும் சதி புரியாமல் பின்னால் போகிறீர்கள் ...இப்போது நடக்கும் போராட்டம் அணுசக்தி, அணு உலை இவற்றுக்கெதிரான போராட்டம் அல்ல....இது கூடங்குளம் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம்.....
இரண்டுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டுமானால் நீங்கள் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் சிவகுருநாதன்.
சொல்லிடாரு நாட்டமை !! சொம்பை எடுத்து கொண்டு எப்படா கருத்து சொல்லாம்ன்னு அலைகிறாங்கப்பா
அன்புள்ள பெயரில்லாத தோழர்!
வணக்கம்.
எனது பதிவைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
அன்புடன்...
மு.சிவகுருநாதன்
அன்புள்ள பெயரில்லாத தோழர்!
வணக்கம். பெயரைச் சொன்னால் என்ன ஆகிவிடப் போகிறது. ஏனிந்த முகமுடி? சரி, அது போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.
55 ஆண்டுகாலமாக இந்திய அணு உலைகள் மூலம் மின்சாரந்தான் தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் நம்பினால் என்னால் எதுவும் செய்யமுடியாது.
ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு புரிய வைத்துத்தான் இந்த நாட்டில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டியதில்லைதான். ஆனால் அவர்களை ஏமாற்றி / பொய் சொல்லி எந்தத் திட்டமும் செயல்படுத்தவேண்டியதில்லை.
நான் இன்னும் தொடக்கப் பள்ளி மாணவன்தான். பிறகெப்படி ஒன்பதாம் வகுப்பைத் தாண்டமுடியும்?
மு.கருணாநிதியின் கருத்துரிமையை நான் மறுக்கவில்லை. ஆனால் கருத்து என்ற பெயரில் அவதுறு கக்குவதை விமர்சனம் செய்யவேண்டிய தேவையிருக்கிறது.
மன்மோகன் சிங், ப.சிதம்பரம், நாராயசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வகையறாக்கள் எதோ வெளிநாட்டு சதி என்கிறார்கள். மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதாவின் சதி என்கிறார். நீங்களும் சதி என்கிறீர்கள். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் தேவலை.
மன்மோகன் சிங், ப.சிதம்பரம், நாராயசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் தேசபக்தர்களாக இருக்கும் ஒரு நாட்டில் சுப.உதயகுமார் போன்றவர்கள் துரோகிகளாகத் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.
தமிழ் சினிமாவைப்போல இங்கு சுப.உதயகுமார் அவர்களின் one man show நடக்கவில்லை. இது பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் நடைபெறும் காந்தீயப் போராட்டம்.
100 -க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் நாளை சுப.உதயகுமார் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட எந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் இப்போராட்டம் ஓயப்போவதில்லை.
நான் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கவிரும்பவில்லை. ஏனென்றால் மக்கள் படிக்காமல் இருப்பதைத்தான் உங்களைப் போன்றவர்கள் விரும்புகிறீர்கள்.
எது எப்படியிருந்தாலும் எனது பதிவைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
அன்புடன்...
மு.சிவகுருநாதன்
கருத்துரையிடுக