நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு 'கமிஷன்' ரூ. 5 கோடியாக உயர்வு
- மு. சிவகுருநாதன்
தில்லியில் வியாழக்கிழமை (07.07.2011) கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியை இந்த நிதியாண்டிலிருந்து ரூ. 2 கோடியாக இருந்ததை ரூ 5 கோடியாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல்-ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுவின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதிக்கான மொத்த ஒதுக்கீடு ரூ 1,580 கோடியிலிருந்து ரூ 3,950 கோடியாக உயருகிறது. 1993-94-ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இதைப்பற்றிய முறையான ஆய்வும் தணிக்கைகளும் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. இவர்கள் எப்படி லோக்பால் மசோதா மீது உண்மையான ஆர்வம் காட்டுவார்கள்? இந்த ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கமிஷன் எதிர்பார்ப்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்
இந்த தொகுதி மேம்பாட்டு நிதிதான் நாட்டில் ஊழலின் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. இந்நிதியை வெகு சிலர்தான் சரியாகப் பயன்படுத்துகின்றனர். பலர் இதில் முறைகேடாக ஊழல் செய்கின்றனர் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. தணிக்கைத்துறையும் இதை உறுதி செய்துள்ளது.ஆனால் அரசு இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஆண்டுதோறும் இந்நிதியை உயர்த்தி வழங்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் 'கமிஷன்' தொகை என்றுதான் கருதவேண்டியுள்ளது.
இடதுசாரிகள் உள்ளிட்ட சிலர்தான் இதை எதிர்க்கின்றனர். பீகார் முதல்வர் போல் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பட்டு நிதியை நிறுத்தும் ஆர்வம் எவருக்கும் இருப்பதில்லை. ஆட்சியாளர்கள் தங்களுடைய ஊழல், முறைகேடுகளை மறைக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூலியாகவே தொகுதி மேம்பட்டு நிதி தொடர்ந்து அதிகரிக்கப்படுவது கவலையளிக்ககூடிய விஷயமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்கவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு அவசியமற்றது. எனவே அது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார். சட்டங்களை இயற்றுதல், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கப் பாடுபடுதல், அரசு நிர்வாகத்தைக் கண்காணித்தல் ஆகியன மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான பணி என்றும் நடைமுறையில் திட்டங்களை நிறைவேற்றுவது அவர்களுடைய பொறுப்பல்ல என்றும் யெச்சூரி கூறுகிறார்.
சீதாராம் யெச்சூரியின் கருத்து கவனத்தில் கொள்ளப்படவேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் தேவைக்கதிகமாக அதிகரிக்கப்படும்போதும் இந்த இடதுசாரிகள் மட்டுமே அவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பது, அவர்கள் நமக்கு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதிலும் அவர்கள் மீது நம்பிக்கைகொள்ள இடமளிக்கிறது.
2 கருத்துகள்:
சிவகுருநாதன்!
ஆடிட் நடக்கவில்லையென்பது அறியாமை. ஆடிட் வலைதளத்திலேயே ஆடிட் ரிப்போர்ட்டைக்காணலாம். தயவு செய்து படித்து விட்டு வருகிறீர்களா ?
ஊழல் எனபதற்கு இடமில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பைசாவைக்கூட MP தொட முடியாது. அப்பணம் கலெக்டரிடமே இருக்கும். எம் பியிடம் மக்கள் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள் ஒரு பேருந்து நிலையம் கட்டவேண்டுமென்று. எம் பி எங்கே கட்ட வேண்டும் என்று மக்களிடமும் எப்படிக்கட்டினால் நன்று என்று பொறியாளர்களிடம் பேசிப் பின்னர் எவ்வளவு செலவாகும் என்றும் திட்டம் தீட்டி, அதைக் கலெகடரிடம் அனுபுப்வார். கலெக்டர்தான் கட்டுவார். கட்டி முடிந்தவுடன், அதன் செலவுப்பட்டியலை எம் பியிடம் காட்ட, எம் பிக்கு இன்னும் எவ்வளவு தொகை பாக்கியென்று பார்த்து அடுத்து என்ன செய்யலாம் மீதித்தொகையில் என்று முடிவு செய்வார். எனவே ஒரு பைசாவைக்கூட எம் பி நேரில் பார்க்கமுடியாது.
எப்படி எப்போதல்லாம் செலவு பண்ணவேண்டும் என்பதை பல அறிக்கைகள் மூலம் மானில கலெகட்ர்களுக்கும் எம்பிக்களுக்க்ம் Ministry of Statistics and Program Implementation சொல்லியிருக்கிறது. The Ministry s periodically reviewing and revising the guidelines in order to make the MPLAD Scheme 100 per cent success. All their guidelines and instructions issued to District Collectors r online.
எம்பிக்கள் 1 கோடியில் நான் நினைத்ததையெல்லாம் என் தொகுது மக்களுக்குச்செய்ய முடியவில்லை என்று சொன்னதாலேயே தொகை கூட்டப்பட்டது.
அனைத்தையும் தெரிந்த பின்னரே குற்றம் சாட்டலாம்.
எனினும் ஊழலுக்கும் இடமுண்டு. அதாவது தொகுதியில் தனக்கு வேண்டிய காண்ட்ரக்டர்களுக்கு தோதாக திட்டங்களை சிபாரிசு செய்யலாம். அல்லது தனக்கு வேண்டிய மக்களுக்கு மட்டும் தோதாகச் செய்யலாம். ஆனால் பணத்தில் கைவைக்க முடியாது.
Dear simmakkal!
தணிக்கையே நடைபெறவில்லை என்று நான் சொல்லவரவில்லை.
தணிக்கை முடிவுகள் ஏற்கப்பட்டு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? முறைகேடுகளுக்கு இதுவரை என்ன தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது? என்பதெல்லாம் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட விஷயமல்ல!
2G அலைக்கற்றை வழக்கில் CAG அறிக்கையை இன்னும் மத்திய அரசு ஏற்க மறுப்பதை நாம் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
எனினும் ஊழலுக்கும் இடமுண்டு என்றாவது இறுதியில் ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
கருத்துரையிடுக