வியாழன், ஜூலை 21, 2011

அருந்ததிய மக்களின் குரலாக வெளிவரும் ஓர் இதழ்

அருந்ததிய மக்களின்  குரலாக வெளிவரும் ஓர் இதழ் 

(சிற்றிதழ் அறிமுகம்:- வெள்ளைக்குதிரை - இருமாத இதழ்)

                                                                                      - மு. சிவகுருநாதன்

           


            ஒடுக்கப்பட்ட மக்களில் கல்வி வேலை வாய்ப்புகளில் முறையான பங்கின்றி இதுவரையில் இருந்து வந்த அருந்ததிய மக்கள் தற்போதுதான் உள் ஒதுக்கீடு பெற்று சிறிது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட, நலிவுற்ற இம்மக்களின் குரலாக தமிழ்நாடு சாக்கிய அருந்ததி சங்கத்தின் சார்பில் மதுரை வீரனின் வாகனப் பெயரைத் தாங்கி, இருமாத இதழாக பிப்.-மார்ச் 2011 முதல் ‘வெள்ளைக்குதிரை’  வெளிவந்துள்ளது.  இதுவரை இரு இதழ்கள் வெளியாகியுள்ளன.



            கண்ணன், காளிங்கராயன், ம. மதிவண்ணன் ஆகியோரை ஆசிரியர் குழுவிலும் நீலகண்டன் -ஐ நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் ‘வெள்ளைக்குதிரை’ இரு இதழ்களிலும் அருந்ததியச்சுடர் ராவ்சாகிப் எல்.சி. குருசாமி அவர்களின் சட்டமன்ற உரை வெளியாகியுள்ளது.  தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக நிதியை மேலும் அதிகரிக்க வேண்டுதல், தாழ்த்தப்பட்டவர்களின் ஆலோசனைக்குழுவில் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களைவிட சாதி இந்துக்கள் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதை எதிர்த்தல், சென்னை நகர சேரிகளின் மேம்பாட்டிற்கு பணிபுரியும் ஊழியர்கள் தலித்களாக இருக்க வலியுறுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அடித்தட்டு தலித் மக்களுக்காக அந்நாளில் எழுப்பியதை நம் முன் பதிவு செய்கிறது.



            அருந்ததிய இனத்தில் பிறந்த மதுரை வீரனை ஒரு மேல் சாதித்தன்மையோடு கட்டமைத்த தமிழ் சினிமா வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டுவதன் அவசியம் பற்றிப் பேசுகிறது ‘வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை’ என்ற குமரன் தாஸ் கட்டுரை.  தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த ஒரு மாவீரனை கடவுள் தன்மையிலிருந்து மீட்டு ஒரு வரலாற்றுத் தலைவனாக மாற்றுவதே இன்றையத் தேவையென இக்கட்டுரை வலியுறுத்துகிறது.   மதுரை வீரனை அருந்ததிய வீரனாக முன்னிறுத்தி திரைப்படம் எடுப்பதன் மூலம்தான் இவ்வரலாற்றுப் பிழையைக் களைய முடியும் என்பது உண்மையானது.  ஆனால் அதற்கான களம் தமிழ் சினிமாவில் இல்லையென்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.



            இரண்டாவது இதழில் முன்னாள்  இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரின் திரைப்படங்களை முன் வைத்து வட்டாரத் தமிழ்ச்சினிமாவில் வெளிப்படும் சாதிய வன்மங்களையும், வக்கிரங்களையும் குமரன் தாஸ் வெளிப்படுத்துகிறார்.  இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தற்போதைய தமிழ்ப்பட உலகில் இல்லையென்றாலும் அவருக்கு நிறைய வாரிசுகள் இருப்பதை இக்கட்டுரை குறிப்பிடத் தவறவில்லை.



            தமிழ் சினிமா தலித் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.  கிராமியப் படம் என்றால் அங்குள்ள உயர்த்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு சேவகம் செய்வதே தமிழ் சினிமாவின் வேலையாக உள்ளது.  நகரம் சார்ந்த மசாலாப் படங்கள் எதுவாகயிருப்பினும் அதில் தீவிரவாதியாகக் காட்டப்படுவது இசுலாமியர்கள் மட்டுமே.  ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருப்பினும் மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தச் சீரழிவின் பிடியில்தான் இருக்கிறது.  இதன் தொடர்ச்சியாக சுப்ரமணியபுரம், பருத்திவீரன் போன்ற வெகுவாக பேசப்படும் தமிழ்ப் படங்களில் தோய்ந்துள்ள சாதியத்தை கட்டவிழ்ப்பது இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமுடையதாக இருக்கும்.



            தலித் சாதிகளுக்கிடையே மிகவும் நலிவுற்ற சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம், தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டுக்கு மேலெழும்பும் எதிரப்புக் குரல், வேறு மாநிலங்களில் எழுப்பப்படும் உள் ஒதுக்கீட்டுக் குரல் போன்றவற்றை ‘தீர்ப்புகளின் சுருக்குகளோடு உள் ஒதுக்கீட்டை துரத்தி வரும் சாதியத்தின் வரலாறு’ என்ற ம.மதிவண்ணன் கட்டுரை விளக்குகிறது.



            “தமிழ்நாட்டிலுள்ள அருந்ததியர்களைப் பொறுத்தமட்டிலும் அவர்களது பிரச்சினை ஏனைய தலித்துகளின் பிரச்சினைகளைவிட தீவிரமானது.  உடனடியான தலையீட்டைக் கோருவதாக இருப்பது.  அவற்றில் தலையானது அவர்களது பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும் என்பதேயாகும்” என்ற வரிகள் உண்மையானதும், ஏற்றுக் கொள்ள வேண்டியதுமாகும்.



            ‘வெள்ளை அறிவுஜீவி அடியாட்களும் அருந்ததிய வரலாறும்’  என்ற மதிவண்ணனின் கட்டுரை, காலனிய வெள்ளை அறிவுஜீவிகள் சக்கிலியர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை ஜேம்ஸ் ஹென்றி நெல்சன், எட்கர் தர்ஸ்டன் உள்ளிட்ட சில உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்.



            அறிஞர் கால்டுவெல், 1931இல் சென்சஸ் கமி­னராக இருந்த ஜெ. ஜெ. ஹட்டன் போன்றோர் பறையர்களுக்கு காட்டிய ஆதரவுக்குரலை சக்கிலியர்கள் மீது காட்டவில்லை என்பதையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது.  தலித் என்பதிலும் மொழி போன்ற உட்கூறுகள் சில செயல்பட்டிருப்பதை இங்கு அவதானிக்கலாம்.  தமிழகத்தில் தற்போது இருக்கும் பிறமொழியாரை வெளியேற்றவேண்டும் என்ற பாசிச குரலுக்குக் கூட இதுவும் முன்னோடியாக இருந்திருக்கக்கூடும்.



            வட கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டச் சிற்றூரான சாவனூரில் அருந்ததியர் தங்களது உடலில் மலத்தை பூசிக் கொண்டு நடத்திய போராட்டம் குறித்த ஆனந்த் டெல்டும்டேயின்  கருத்தை கண்ணனின் கட்டுரை மறுதளிக்கிறது.  இதில் சில நியாயப்பாடுகள் இருந்த போதிலும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒரிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தலித்களை காவிமயமாக்கி இசுலாமிய, கிருத்தவ சிறுபான்மையினர் மீது மோத  ஒரு  கருவியாகப் பயன்படுத்தும் போக்கினை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டுள்ளது.   இதை முறியடிக்க ஒரு வானவில் கூட்டணிக்க தயாராக வேண்டிய அவசியம் அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் உள்ளது.  ஆனந்த் டெல்டும்டே சொல்வது போல் வர்க்கமாகத் திரளுவதோ, காஞ்ச அயலைய்யா போன்றோர் முன் வைக்கும் பகுஜன் கருத்தாக்கம் போன்றவைகளையும் பரிசீலிக்க வேண்டிய தேவை இப்பொழுது இருக்கிறது.  ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்ட தேவையான உத்திகளை புறந்தள்ளுவது நலமாக இருக்காது.  இதிலுள்ள குறைபாடுகளையும் சிக்கல்களையும் களைந்து அடுத்த கட்ட நகர்வைச் சாத்தியமாக்குவதே தலித் இயக்கங்களின் உடனடித் தேவையாகும். 



            அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய வெளிச்சத்தில் அருந்ததிய மக்களுடைய அரசியலையும் படைப்புக்களையும் தாங்கி இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்பதை எமது விருப்பம்.   தமிழக தலித் இலக்கியத்திற்கு அருந்ததியர்களின் பங்களிப்பை மேலும் கூர்மைப்படுத்த இவ்விதழ் உதவுவதோடு அம்மக்களின் வாழ்வுரிமைக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரலாகவும் ‘வெள்ளைக்குதிரை’  விரைந்து செல்ல வேண்டும். 



            விலை: ரூ. 15/-                      ஆண்டு சந்தா ரூ. 150/-



சந்தா தொடர்புக்கு:-

            லலிதா,
            34, சக்தி நிலையம்,
            தில்லை நகர், செல்வபுரம்,
            கோவை - 641 026.
            பேசி: 94434 16904

 படைப்புகளுக்கு:

          வெள்ளைக்குதிரை,
            66 - சானிடோரியம் குடியிருப்பு,
            பெருந்துறை சானிடோரியம்,
            ஈரோடு மாவட்டம் - 638 053. 

1 கருத்து:

தமிழரசன் சொன்னது…

வணக்கம்
அருந்ததிய மக்களின் விடுதலை வரலலாறுகளை தொடந்து பதிவுசெய்யவும்.உங்கள் முயற்சிக்கு நன்றி....

கருத்துரையிடுக