வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

ஆசிரியர்கள் வாசிப்பு – 004


ஆசிரியர்கள் வாசிப்பு – 004

(நல்ல நூல்களைத் தேடி…)

மு.சிவகுருநாதன்


தமிழக வரலாற்று ஆதாரங்கள்



    தமிழக வரலாற்றிற்கு அடிப்படை ஆதாரங்களாக உள்ளவை  பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,  பேரா. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், டாக்டர் கே.கே. பிள்ளை,  டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆகியோரின் நூல்கள். 

     பெருமளவு வரலாற்றுத் தரவுகள் கொண்டுள்ள இத்தகைய நூல்களை கட்டாயம் வாசிக்கத்தான் வேண்டும். ஆனால் இவற்றை மிக எச்சரிக்கையாக ஆய்வுநோக்குடன் அணுகுவது அவசியம். பல இடங்களில், பல நேரங்களில் ஒரு வரலாற்று நூல் எவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றன. 

     வரலாறு எழுதுதல், அணுகும் முறைகள், புதிய ஆய்வு வெளிச்சங்கள், தொல்லியல் ஆய்வு முடிவுகள், அறிவியல் பூர்வமான பார்வை என பல்வேறு காரணிகள் வரலாற்றின் பொருண்மைகளை சற்று அகலப்படித்தியுள்ளன. எனவே பழைய வரலாறு எழுதுதலில் உள்ள போதாமைகள், தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகள், புறவயமாக அணுகாமல் அகவயமாக அணுகும் போக்கு ஆகியன பல தவறான கண்ணோட்டங்களுக்கும் முடிவுகளுக்கும் இட்டுச் சென்றன. 

    இவற்றை மீட்டுச் சரிசெய்யும் புதிய அணுகுமுறை சார்ந்த வரலாற்று நூல்களையும் நாம் தொடர்ந்து இப்பகுதியில் கவனப்படுத்துவோம்.

16. சோழர்கள் தொகுதி 1 & 2


பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் 

இரு தொகுதிகளும் சேர்ந்து விலை: ரூ. 600  பக்கங்கள்: 1174,  

 மூன்றாம் பதிப்பு: நவ. 2009

   பிற்காலச்சோழர்கள் வரலாற்றை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி மிக விரிவாக எழுதியுள்ளார். இந்த இரு தொகுதிகளையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.

  ஆதித்த கரிகாலனை (கி.பி. 966 – கி.பி. 969) கொலைக்கு காரணம் பற்றிய இந்த வரலாற்று ஆசிரியர்களது  சமாதானங்கள் தனியே பேசத்தக்கது. இங்கு இடமில்லை. பிறகு பார்ப்போம்.  

வெளியீடு: 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600014.
பேச: 044-26258410, 26251968, 26359906
மின்னஞ்சல்: ncbhbooks@yahoo.co.in


17. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்  


   டாக்டர் கே.கே.பிள்ளை

வெளியீடு:

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

பக்.: 572, விலை: ரூ. 175, ஆண்டு: 2011 
 
     டாக்டர் கே.கே.பிள்ளையின் இந்நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மோசமான அச்சு. புத்தகம் ஏடு ஏடாக பிரிந்து வருகிறது. அவ்வளவு தரமான நூல்கட்டு!  தமிழின் பெயரால் இயங்கும் பல்வேறு  அரசு நிறுவனங்களின் கதி இதுதான். 

     20 தலைப்புகளில் தமிழக வரலாறும் பண்பாடும் பேசப்படுகின்றன. சுமார் 600 பக்கங்களுள்ள இந்நூலில் களப்பிரர்கள் பற்றி 5 பக்கங்களில் சொல்லப்படுகிறது.

   சங்க கால வரலாறு பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளின்படியே எழுதப்படுகிறது. அத்தகைய சான்றுகளைக் கூட புறக்கணிக்கும், திரிக்கும் வழக்கம் இத்தகைய நூற்களில் இருப்பது வரலாற்றெழுதியல் அவலங்களில் அடங்குவதாகும்.

    "களப்பிரர் காலத்தில் தமிழ் மொழிக்குத் தாழ்வும், பிராகிருதத்துக்கும் பாலி மொழிக்கும் அரசாங்கச் செல்வாக்கும் கிடைத்தன", (பக். 286, தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்)

  " சிவன் வழிபாடு தொன்றுதொட்டே தமிழகத்தில் வழங்கி வருகின்றது. சிவனையே முழுமுதற் கடவுளாகப் பண்டைய தமிழர் வழிபட்டு வந்தனர்", (பக். 188, மேலே குறிப்பிட்ட நூல்.)

    இப்படிப் போகிறபோக்கில் உரைப்பவர்கள்  இதற்கு ஆதாரங்கள் எதையும் காட்டுவதில்லை. மலிவு விலை என்பதால் இந்நூலை  வாங்கலாம். இல்லையென்றால் பிற பதிப்புகளை வாங்குவது நல்லது.

    முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1012 – கி.பி. 1044) மகள் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன். இவனும் இவனுக்குப் பின்னால் வரும் மொத்தம் 8 அரசர்கள் கீழை சாளுக்கிய மரபினர் ஆவர். இதைப் பெரிய குறையாகக் கருதிய வரலாற்று ஆசிரியர்கள் தங்களுக்குள்ளாக பல்வேறு சமாதானங்களைச் சொல்லிக்கொண்டனர்.

   குலோத்துங்கள் உடலில் பெருமளவு ஓடியது சோழர்குலக் குருதிதான்”, என்று மரபணு ஆய்வு செய்யும் (!?) டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களின் வரிகள் இவர்களது சாய்வை  நமக்கு உணர்த்தும். (காண்க: பக். 290, மேலே குறிப்பிட்ட நூல்

வெளியீடு:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி,
சென்னை – 600113.

18. சோழர் வரலாறு


டாக்டர் மா. இராசமாணிக்கனார்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பக்.: 315  விலை: ரூ. 150 முதல்பதிப்பு: பிப். 2012

   இந்த மூன்று வரலாற்று ஆசிரியர்களில்  மா.இராசமாணிக்கனார் சிறிது வேறுபடுத்திப் பார்க்கலாம். இருப்பினும் இவர்களது சைவச் சார்பை இம்மியும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்கு உதாரணமாக நூலிருந்து சில பகுதிகள்.

    "இராசராசன் சைவ உலகில் அழியாப் புகழினைப் பெற்றான். தேவார திருமுறைகள் இவ்வுலகில் உள்ளளவும் இவன் பெயர் அழியாது நிற்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் அரசர் ஆற்றலை தஷிண அரசருக்கும் பிறர்க்கும் உணர்த்திச் சமயப்பற்றோடு சிறந்த அரசியல் அறிவும் பெற்று வாழ்ந்த இப்பெருமான் பெயர் என்றும் வரலாற்றுலகிலும் சைவவுலகிலும் சிறப்பிடம் பெற்றுள்ள தென்பதை அறியாதார் யாவர்!", (பக். 185, சோழர் வரலாறு)

    "நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்த உத்தமன் இவன். இவனது ஆட்சியில் இருந்த சிற்றரசர் சிலர் சமணர் கோவில்கட்குத் தருமம் செய்துள்ளனர் என்பதையும் நோக்க, இப்பேரரசன் தன் சிற்றரசரையும் குடிகளையும் தத்தம் விருப்பத்துக்கு இயைந்த சமயத்தைப் பின்பற்ற உரிமை அளித்திருந்தனன் என்பது நன்கு புலனாகிறது", (பக். 172, மேலே குறித்த நூல்.)

  19. பிற்காலச் சோழர் வரலாறு 

பக்.: 672  விலை: ரூ. 390 முதல்பதிப்பு: ஆக. 2011

      மற்றும் 

     பாண்டியர் வரலாறு

பக்.: 173  விலை: ரூ. 90 முதல்பதிப்பு: ஜூலை 2010

     தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

   பிற்காலச் சோழர்களை விதந்தோதுவதுதான் இவர்களது முதன்மைப் பணியாக உள்ளதை பலமுறைக் குறிப்பிட்டுள்ளோம். உத்திரமேரூர் கல்வெட்டுக்கான கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பணியில் மிகுந்த ஒற்றுமையைக் காணமுடியும். மேலும் ஒரு படி மேலே சென்று இந்த வசனங்களைப் ‘பாண்டியர் வரலாற்றில்’ நுழைப்பதை கீழ்க்கண்ட பத்திகளின் வழி அறியலாம். பொன் வாரியம் நாணய ஆராய்ச்சி செய்வதற்காம்! இன்றைய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை மாதிரி போலும்! அவர்கள் என்ன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர் என்று சொல்வது நாணயமல்லவா! ‘கிராம சபை’ என்னும் தலைப்பில், 

    “பாண்டியரது ஆட்சிக் காலங்களில் ஊர்தோறும் கிராமசபையிருந்தது. இச்சபையினரே அங்கு நடைபெற வேண்டிய எல்லாவற்றையும் நிறைவேற்றியும் வந்தனர். சுருங்கச் சொல்லுமிடத்து, அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால்தான் நடத்தப்பட்டுவந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் பொதுமக்களால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர். சிற்றூர்கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்ந்து அங்கும் கிராமசபை அமைத்து வந்தனர்.

    நிலமும் சொந்தமனையும் கல்வியறிவும் உடையவர்களாய் அறநெறி வழாது  நடப்பவர்களே சபையின் உறுப்பினராதற்கு உரிமையுடையவர் ஆவர். 

   கிராமசபையில் உட்கழகங்களும் இருந்தன. அவை, சம்வற்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்பன. நியாயம் வழங்குவதும், அறநிலையங்களைக் கண்காணிப்பதும் சம்வற்சரவாரியரது கடமையாகும். நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பயன்படச்செய்தல் ஏரிவாரியரது கடமையாகும்.  நிலங்களைப் பற்றிய எல்லாவற்றையும் கண்காணிப்பது தோட்டவாரியரது கடமையாகும்.  நாணய ஆராய்ச்சி பொன்வாரியருக்குரியது. பஞ்சவர வாரியார் என்போர் அரசனுக்கு குடிகள்  செலுத்த வேண்டிய நிலவரியையும் பிற வரிகளையும் வாங்கி அரசாங்கப் பொருள் நிலையத்திற்கு அனுப்புபவர் ஆவர். கிராமசபையின் உறுப்புனரைப் பெருமக்கள் எனவும், ஆளுங்கணத்தார் எனவும் கூறுவர். இவர்கள் ஏதேனுங்குற்றம் பற்றி இடையில் விலக்கப்பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை  ஊதியமும்   பெறாமல் தம் வேலைகளைச் செய்வதற்கு உதிமையுடையவராவர். இவர்கள் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றுதத்கு ஊர்தோறும் பொதுமன்றங்கள் இருந்தன. சில ஊர்களில் திருக்கோயில் மண்டபங்களை இன்னோர் தம் கரிமங்களைப் புரிவதற்குப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு.

    சபையின் உறுப்பினரைக் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கும் முறைகள் தொண்ட மண்டலத்தில் உத்திரமேரிலுள்ள ஒரு கல்வெட்டில் விளக்கமாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. அவை முதற்பராந்தக சோழனது  ஆணையின்படி கி.பி. 921 - ல் பொறிக்கப்பெற்றன. அம்முறைகளே நம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தவை என்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆயினும் சில இடங்களில் ஊர் நிலைமைக் கேற்றவாறு சிற்சில விதிகளைமாற்றியும் இன்றியமையாதவற்றைச் சேர்த்தும் உள்ளனர் என்பது சில  ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் தெரிகிறது. எனவே, அரசாங்க அதிகாரிகளின் முன்னிலையில் ஊர்ச்சபையார் கிராம ஆட்சிக்கு உரிய புதிய விதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தமை புலனாதல் அறிக", (பக். 140, 141 பாண்டியர் வரலாறு, தி.வை. சதாசிவ பண்டாரத்தார்.)

 வெளியீடு: 

பூம்புகார் பதிப்பகம்,
127, பிரகாசம் சாலை (பிராட்வே),
சென்னை -600108.
தொலைபேசி: 044-25267543

20. பல்லவர் வரலாறு


டாக்டர் மா. இராசமாணிக்கனார்

பக். 342, விலை: ரூ. 200 முதல்பதிப்பு: ஆக. 2013

    டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு இரண்டையும் வாசிக்கும்போது மிக நுண்மையான வேறுபாட்டை உணரமுடியும். சோழர்கள் தமிழர்கள் மேலும் சைவர்கள், பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்கிற பொதுப்பார்வையின் அடிப்படையில் எழுந்த வேற்றுமை அது. இவை வரலாற்றெழுதியலின் போக்கைக் கட்டமைப்பதையும் மாற்றியமைப்பதையும் அறிய முடிகிறது. வரலாற்றைச் சற்று அறிவியல்பூர்வமாகவும், புறவயமாகவும் அணுகவேண்டிய அவசியத்தை இவை வலியுறுத்துகின்றன. 

    இருப்பினும் அடைபட்ட பூனைக்குட்டி வெளியே வந்துவிடுமல்லவா! சைவ மரபுகளைத் தமிழ் மரபாக்குதல், சமண-பவுத்த மதங்களை எதிராக அணுகுதல், சைவ மலர்ச்சியைக் கொண்டாடுதல் போன்றவற்றையும் இந்நூலில் வாசித்தறியலாம்.

வெளியீடு: 

பாவை பப்ளிகேஷன்ஸ், 
16 ஜானி கான் கான் சாலை. ராயப்பேட்டை, 
சென்னை 600014.
பேச: 044-28482441, 42155309
மின்னஞ்சல்: pavai123@yahoo.com


(பட்டியல் நீளும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக