செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை


மு.சிவகுருநாதன்




       நேற்று முன்தினம் ஆகஸ்ட் 12, 2018 (12.08.2018) மாலை வேளையில் எனது மூத்த மகள் கவிநிலா மற்றும் இணையர் ரம்யாவுடன் தரங்கம்பாடி சென்றோம். சுமார் ஒரு மணிநேரம் கோட்டை மற்றும் கடற்கரையில் இளைப்பாறினோம். சில ஆண்டுகளுக்கு முன்பு அ.மார்க்ஸ் மற்றும் ஜெயா அம்மாவுடன் அனல் மின்நிலையங்களுக்கான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மதிய உச்சி வெயிலில் டேனிஷ் கோட்டைக்குச் (Fort Dansborg) சென்றோம். தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருமகன் பாரதியுடன் சென்று படமெடுத்துக் கொண்டு திரும்பினோம். அப்போது கோட்டை பூட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு இங்கு வர வாய்ப்பு கிடைக்கவில்லை. 



    தரங்கம்பாடி நூற்றாண்டு லயன்ஸ் சங்கத்தின் அறிவிப்பில் காணப்படும்  “OZONE RICH BEACH - அதிகமாக வீசும் ஓசோன் காற்று”, என்னும்  வாசகங்கள்  நமக்கு அதிர்ச்சியளித்தது. ஓசோன் நாம் சுவாசிக்கப் பயன்படும் காற்றல்ல. ஆக்சிஜன் என்ற மூலக்கூறு வடிவமே நாம் சுவாக்கும் காற்றாகும். ஓசோன் வடிவத்தில் உள்ள காற்றை நாம் சுவாசிப்பதில்லை. ஓசோன் படலத்தின் பயன்பாடு வேறு; ஆக்சிஜனின் பயன்பாடு வேறு. இவற்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். காஸ்மிக் மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சுகளை வடிகட்டுவதே ஓசோனின் பயன்பாடு ஆகும். 

     கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிப்போம். ஒரு காலத்தில் பவுத்த விகாரைகளும் சமணப்பள்ளிகளும் நிறைந்த இந்தப் பகுதிகள் சைவ – வைணவத் திருப்பதிகள் நிறைந்த பகுதிகளாக ஒரு காலகட்டத்தில் மாற்றமடைகிறது. அதன் பின்னர் போர்ச்சுகீசியர்கள், டேனியர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என அய்ரோப்பிய நாட்டினரிடம் வாழிடமாகவும் மாறிப்போனது. 



   மதமாற்றம் என்ற அவதூறு தொடர்ந்து வைக்கப்படும் நிலையில் அதிலென்ன தவறு என்று திருப்பிக் கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். அடித்தட்டு மக்களுக்கு இந்துமதப்பிரிவுகளான சைவமும் வைணவமும் செய்தது என்ன?  உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட அவர்களால் பெறமுடிந்ததா? சாதிய, வருண பேதம்  அவர்களை சமூக விளிம்பிற்குத் தள்ளியது. கல்வி மறுக்கப்பட்டது. வழிபாட்டு உரிமைகள் முற்றாக இல்லை. அவர்கள் மனிதர்களாகவே நடத்தப்படவில்லை. அன்றாட வாழ்வை எதிர்கொள்ளவே தடுமாறிய அவர்கள் மதம் மாறியதில் தவறென்ன இருக்க முடியும்? 

      டென்மார்க் நாட்டில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி கி.பி. 1616 ஆம் ஆண்டு தலைநகர் கோபன்ஹெகனில் தொடங்கப்பட்டது. வங்காளத்திம் சிராம்பூர், தமிழ்நாட்டுத் தரங்கம்பாடி ஆகிய இரு நகரங்கள் அவர்களது வணிக மையமாக இருந்தது. இருப்பினும் தரங்கம்பாடியைத் தலைமையிடமாகக் கொண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டது. 



    அட்மிரல் ஓவ்கிட் கி.பி. 1620 இல் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்  ரகுநாத நாயக்கருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தரங்கம்பாடியைப் பெற்றார். ஆண்டுக்கு ரூ. 3111 க்கான வாடகை ஒப்பந்தம் தங்கத்தால் ஆன இலை வடிவில்  போடப்பட்டது. தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரிவசூலித்தல், கோட்டை கட்டுதல், வணிகம் செய்தல் கோட்டை கட்டுவதற்கான சுண்ணாம்பு, கற்கள் ஆகியவற்றை இலவசமாகப் பெறுதல் போன்றவற்றுக்கு இவ்வொப்பந்தம் வழிவகுத்தது. போர்ச்சிகீசியர்களின் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது  குறிப்பிடத்தக்கது. 1845 இல் இந்தக் கோட்டையும் தரங்கம்பாடியும் ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டது. 

     கடற்கரையோரத்தில் இந்த அழகிய கோட்டையை நிர்மாணித்திருக்கிறார்கள். இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட இந்த கோட்டையில் தேவாலயம், உயர் அதிகாரிகள் தங்குமிடம் என மேல் அடுக்கிலும் தரைத்தளத்தில்  பொருள்கள் வைப்பறை, வீரர்கள் ஓய்வறை, சமையலறை, வெடிமருந்துகள் அறை, குடிநீர் அறை, கோழிகள் வளர்ப்பறை என்று பல அறைகள் தனித்தனியே உள்ளன. மதுபானங்கள் வைப்பதற்கும் தனி அறை உண்டு. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோட்டை புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதனுள் அருங்காட்சியகம் செயல்படுகிறது. 



    இந்தக் கோட்டையில் மேல்தளத்திலிருந்து ஆர்ப்பரிக்கும் கடலின் வனப்பை ரசிப்பது இனிமையான பொழுதுபோக்கு. பாதுகாப்பு மற்றும் பொருள்கள் வைப்பறைகளாக இவை பயன்பட்டாலும் கடலோர அழகே இதன் சிறப்பாகும். டேனியர்களின் இரண்டாவது பெரிய கோட்டையான இது இன்று ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது. 

    கோட்டையைத் (1620) தவிர அழகிய சிறிய கடற்கரை, கடற்கரை அருகிலுள்ள மாசிலாமணிநாதர் கோயில் (13 ஆம் நூற்றாண்டு),  ஆளுநர் மாளிகை (1784), டேனிஷ் – இந்திய கலாச்சார மையம், சியோன் தேவாலயம் (1701), புதிய ஜெருசலம் தேவாலயம் (1718), நகர நுழைவாயில் (1792), சீகன்பால்கு சிலை மற்றும் கல்லறை, கேட் ஹவுஸ், ரிக்லிங் மாளிகை, போர்ட் மாஸ்டர் மாளிகை, முகில் ட்ரூப் மாளிகை என மரக்கதவுகளுடன் கூடிய வீடுகள், மாளிகைகள் ஆகியன நிறைந்த ராணி வீதி ஒரு அய்ரோப்பிய நகரை நம் கண்முன் கொண்டுவருகிறது. 

     தரங்கம்பாடி என்றதும் நமது முதல் நினைவுக்கு வருபவர் சீகன்பால்கு ஆவார்.  அவருடைய சிலையில் உள்ள கல்வெட்டில் பர்தலோமியு சீகன் பால்க் என்ற முழுப்பெயர்ப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த சீர்திருத்த கிறித்தவத் (புரோட்டஸ்டண்ட்) தொண்டர், அரசு அனுமதி பெற்றத் திருத்தொண்டர், இந்தியாவில் அச்சகம் தொடங்குதல், இந்தியாவில் காகித ஆலைத் நிர்மாணித்தல், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்தல், புதிய ஏற்பாட்டைத் தமிழில் அச்சிடுதல், தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிடுதல், தமிழ் நூல்களை ஜெர்மன் மொழியில் வெளியிடுதல், ஜெர்மன் ஞானப்பாடல்களைத் தமிழில் வெளியிடுதல், ஏழைக் குழந்தைகளுக்குக் காப்பகம், பெண்களுக்கு தையற்கூடம், இலவச மதிய உணவு, கல்விக்குப் பாடநூல்கள் அச்சிடுதல், தமிழ் புரோட்டஸ்டண்ட் ஆலயம் கட்டுதல், தமிழில் அருளுரை வழங்குதல், இறையியற் கல்லூரி தொடங்குதல், பல் சமய உரையாடலை நடத்துதல், தமிழ் மொழி அகராதி உருவாக்குதல், அருள்தொண்டின் மூலம் பன்னாட்டு உறவை ஏற்படுத்துதல், தென்னிந்திய கடவுள் வரலாறுகள் எழுதுதல், ஜெர்மனியில் தமிழ் கற்றுக்கொடுக்கப் பரிந்துரை செய்தல் என பலவற்றில் முதன்மை பெற்றவர் என அவரது சிலைக்கு அருகிலுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. 



    16 ஆம் நூற்றாண்டில் தமிழகக் கடற்கரையோரங்களில் கத்தோலிக்க கிறித்தவம்  பரவியது. சீர்திருத்தக் கிறித்தவம் 18 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடியில்தான் கால்கோள் கண்டது. ஜெர்மனியைச் சேர்ந்த டேனிஷ் மிஷன் பாதிரியாரான சீகன்பால்கு 1706 இல் தரங்கம்பாடிக்கு வந்தார்.  இங்குள்ள முறைப்படி கடற்கரை மணலில் விரல்களால் தமிழ் எழுதிப் பழகிக் கற்றுத் தேர்ந்தார்.

      கிறித்தவக் குழந்தைகளுக்கும் கிறித்தவர் அல்லாதக் குழந்தைகளுக்கென தனித்தனியாக இரு பள்ளிகளை அமைத்தார். இப்பள்ளிகளில் எழுதப்படிக்கவும் கணக்குகள் போடவும் கற்றுத் தரப்பட்டது. தமிழ்ச்செய்யுள், விவிலியம், கிறித்தவ இறையியல், போர்ச்சுகீசிஸ் ஆகியனவும் கற்றுக் கொடுக்கும் ஏற்பாடு இருந்தது. 

   போர்ச்சுகீசியஸ் மொழிக் கற்க உதவும் சிறு நூல் இவரால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரங்களினால் 08.11.1712 இல் அச்சிடப்பட்டது. காகித உற்பத்திக்காக காகித ஆலை ஒன்று தரங்கம்பாடியில் நிர்மாணிக்கப்பட்டது. நல்ல நீரும் மூலப்பொருள்களும் கிடைக்காததால் ஆலை பின்னர் மூட வேண்டியதாயிற்று.  
  
    பதினாறாவது நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் நிறுவிய அச்சகங்கள் மதம் சார்ந்த நூல்களையே  அச்சிட்டனர். பொதுப்பாடநூல்களையும் 1712 இல்  சீகன்பால்கு அச்சிட்டு விநியோகித்தார். 

    முற்றிலும் இலவசக்கல்வியும் மாணவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டன.  இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பாராம்பரிய மருத்துவ முறைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. மூலிகைகளை அடையாளம் காணுதல், மருந்து தயாரிக்கும் முறைகளை அறிதல், சேகரித்தல், பதப்படுத்துதல், தமிழ் மருத்துவ சுவடிகளைப் படியெடுத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

     1725 களில் தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 21 பள்ளிகளாக வளர்ந்திருந்தன. இவற்றில் 500 க்கு மேற்பட்டோர் கல்வி கற்றனர். பொறையாறு, கடலூர், சென்னை எனப் பல இடங்களில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. சீர்திருத்தக் கிறித்தவத்தில் பாதிரிமார்களுக்கு உதவிட ‘உபதேசியார்’ என்னும் பதவி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவர்கள் சமயப்பணியுடன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய – ஆசிரியைகளின் பணியை மேற்பார்வையிடுதல், கல்வி அறிவற்றவர்களைக் கண்டறிதல் போன்ற பணிகளை ஆற்றியது சவரிராயப்பிள்ளை நாள்குறிப்பின் வழி அறிய முடிவதை அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டுகிறார். 

    சீகன் பால்கின் வருகை, மதப் பரப்புரை, கல்விப்பணி ஆகியவற்றை  டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஹாசியஸ் வெறுத்தார். ஒருமுறை சீகன் பால்குவை 4 மாதங்கள் சிறையிலடைத்தார். சிறையில் ஜெர்மன் வீரர்கள் மை, பேனா போன்றவற்றை அளித்து இவர் எழுத உதவி செய்தனர். பின்னாளில் சீகனின் முயற்சியால் தரங்கம்பாடி மிஷனை ஜெர்மனி, டென்மார்க், பிரிட்டன் என பல நாடுகள் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. 

      ஜெர்மன் நண்பர்கள் உதவியுடன் அச்சு எந்திரம் மற்றும் அச்செழுத்துகளைக் கப்பல் மூலம் தருவித்தார். அந்தக் கப்பலை பிரஞ்சுப் படைகள் கைப்பற்ற, சென்னைக் கவர்னர் மூலம் கப்பல் மீட்கப்பட்டது. அச்சகத் தொழிலாளி வரும்வழியில் இறந்துவிட, அச்சுத்தொழில் தெரிந்த டேனிஷ் படைவீரர் ஒருவரைக் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அச்சேற்றும்போது மேலும் பல நெருக்கடிகள் உண்டாயின. ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துகள் பெரிதாக இருந்தன. எனவே தரங்கம்பாடியில் சிறிய எழுத்துகளை வார்த்தெடுத்தனர். அச்சிடும் காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு காகிதத் தொழிற்சாலையைத் தொடங்கினார். மூலப்பொருள்கள் இன்மையால் அதையும் தொடர்ந்து இயக்க முடியவில்லை. 

     1715 இல் தமிழில் புதிய ஏற்பாடு அச்சில் வெளியானது. எளிய மக்களுக்காக எளிய தமிழ் நடையில் சீகன் எழுதினார். வீரமாமுனிவர் போன்றவர்கள் இவரது நடையை விரும்பவில்லை. பத்தாண்டு கிறித்தவத் தொண்டிற்குப் பிறகு மலையப்பன் என்பவருடன் தாயகம் திரும்பினார். அவரது உதவியுடன் பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதியை தமிழாக்கினார். 1715 இல் தமிழ் இலக்கண நூற்களை அச்சிட்டார். அவ்வாண்டே மரியாவைத் திருமணம் செய்தார். அடுத்த ஆண்டு (1716) தரங்கம்பாடி வந்த தம்பதிகள் இறையியற் கல்லூரி (1716) ஒன்றைத் தொடங்கினர். 

   மதப்பரப்புரை, கல்விப்பணி ஆகியவற்றுக்கிடையே தமது எழுத்தார்வத்தைச் சீகன் விடவில்லை. மொழிபெயர்ப்புகள் செய்தார். தமிழ், ஜெர்மன், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் நூற்கள் எழுதினார். தென்னிந்திய மதக்கொள்கைகள், பழக்க வழக்கங்கள், இலக்கியங்கள், பாடல்கள் பற்றி ஜெர்மனில் நூலொன்றை எழுதினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் எழுதினார். தமிழ் – ஜெர்மன் அகராதி, தமிழ் நூற்களின் பட்டியல் ஆகியவற்றைத் தொகுத்தார். திருப்பலிப் பாடல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். அய்ரோப்பிய ராகங்களுக்கு இசைவான தமிழ்ப் பாடல்களையும், தமிழ் இசைக்கு ஒத்த பாடல்களையும் இயற்றினார். உலகநீதி, கொன்றைவேந்தன், நீதிவெண்பா போன்ற நீதி நூற்களிடம் தமது மனதைப் பறிகொடுத்த சீகன், ‘நானாவித நூல்கள்’ என்னும் தலைப்பில் நூல் எழுதினார். 

     இன்னும் நிறைய சாதனைகள் செய்ய இயற்கை சீகனுக்கு இடமளிக்கவில்லை.  சீகன் மிகக்குறைந்த வயதில், அதாவது தனது 37  வயதில் தரங்கம்பாடியில் 1719  பிப்ரவரி 23 –ல் காலமானார். அவர் கட்டிய புதிய ஜெருசலம் ஆலயத்தின் பலிபீடம் முன்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    இதர அய்ரோப்பியர்களைப் போலவே தமிழர்கள் நாகரிகமற்றவர்கள், மொழி தரமற்றது, வாழ்வு சீரற்றது என்ற எண்ணம் கொண்டவராக இருந்த சீகன், தமிழ் மொழியறிவு பெறுதல், தமிழர்களிடம் உறவாடுதல் ஆகியவற்றுக்குப் பிறகு தமது நிலை மாறி,  எழுத்தாணியால் பனையோலையில் அழகாக எழுதும் திறமை, இலக்கியம், தத்துவம், ஓவியம் ஆகியவற்றில் தேர்ச்சி, இலக்கண, இலக்கியச்  செழுமைமிக்க தமிழ் மொழி போன்ற சிறப்புகளை  உணர்ந்ததாக அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். 

    வேற்றுமொழியினரையும்  அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகளையும்  வெறுத்தொதுக்கும் வெறுப்பரசியல் தீவிரமாக இளைஞர்களை ஆக்ரமித்துள்ள நிலையில் சீசன் பால்கு, கால்டுவெல், வீரமாமுனிவர் போன்ற அயல்நாட்டு தமிழறிஞர்களின் பணிகளை உரிய வகைகளில் வருங்கால தலைமுறைக்கு  அறிமுகம் செய்ய வேண்டியது இன்றைய காலக் கட்டாயமாகும். வெறுப்பரசியல் பாசிசத்திலிருந்து எதிர்காலத்தையாவது விடுவிக்க இது உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக