திங்கள், ஆகஸ்ட் 20, 2018

இந்துத்துவப் பரப்புரைகள்


இந்துத்துவப் பரப்புரைகள்

மு.சிவகுருநாதன்

(நமது நண்பர்கள் இந்துத்துவச் சூழ்ச்சிக்கு பலியாகமலிருக்க இந்த வேண்டுகோள்.)

      கருத்தியல், விழிப்புணர்வு  பரப்புரைகள் திராவிட மற்றும் பொதுவுடமை இயக்கங்களின் கொடை. ஒருவகையில் இது இந்திய அவைதீகப் பராம்பரியத்தின் தொடர்ச்சி. பவுத்தம், சமணம், ஆசிவகம், உலகாயதம் போன்ற அவைதீக மரபுகள் சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கங்களையும் அவற்றிற்கு மாற்றான தங்களது கருத்தியல்களையும் அறவியல் தத்துவங்களையும் உரை வடிவில் பரப்புரை செய்தன. ஏனைய வைதீகக் கருத்தாக்கங்களுடன் தர்க்கச் சமர் புரிந்தன. 

    பிற்காலத்தில் அச்சு வடிவம் கண்டன இந்தப் பரப்புரைகள். இந்த கருத்தியல் பரப்புரைகளை திராவிட, கம்யூனிச இயக்கங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. இவற்றிற்குப் பின்னால் அறிவியல் பூர்வமான, மக்களுக்கு உகந்த சமத்துவம், சுயமரியாதை போன்ற இன்றியமையாத உயர்ந்த நோக்கங்கள் இருந்தன. 

   தேர்தல் பாதையைத் தேர்வு செய்ய திராவிட, கம்யூனிச இயக்கங்கள் மேலும் இவற்றில் ஏற்பட்ட உடைவுகள் ஆகியவற்றால் காலமாற்றத்தில் தங்களது பரப்புரைகளைக் குறைத்துக் கொண்டன அல்லது நிறுத்திவிட்டன. இன்றைய சமூக ஊடகங்களில் இந்தப் பரப்புரைகளுக்கு எவ்வளவோ புதிய திறப்புகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் அவற்றை உரிய முறையில் கட்சிகள், இயக்கங்கள் பயன்படுத்துவதில்லை. 

    ஆனால் சமூக ஊடகங்களை இந்துத்துவ வாதிகள் (இந்து மத வெறியர்கள்) வரலாறு, ஆன்மீகம், கல்வி, யோகா, பண்பாடு என்கிற போர்வையில் வரலாற்றுக்கு மாறான, உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை, மயக்கும் மொழியில் பரப்பி வருகின்றனர். மூளைக்கு எந்தவேலையும் அளிக்க விரும்பாத அப்பாவிச் (!?) சமூகங்கள் இதைச் சமூக ஊடகங்களில் பகிர்வதை தங்களது வாழ்நாள் கடமையாக நிறைவேற்றி வருகின்றனர். சமூகத்தில் அறிவாளிகளாக நம்பப்படும் ஆசிரியர்கள் இக்காரியங்களில் பெரிதும் ஈடுபடுகின்றனர். இந்துத்துவாவின் இலக்காகவும் இவர்கள் இருக்கின்றனர். 

    இந்த நச்சுப் பரப்புரைகளை இவர்கள் முழுதாக படித்தார்களா, அவற்றின் செய்திகளை உணர்ந்து ஒப்பிட்டுப் பார்த்தார்களா என்பதற்கான எவ்வித தடயமும்  கிடைப்பதில்லை. இந்தப் பதிவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பு அமோகமாக உள்ளது. 

   ‘இந்து தமிழ்’ போன்ற பாரம்பரியமிக்க நாளிதழ்களே இத்தகைய சாதி, மத வெறுப்புகளை உண்டாக்கும் அவதூறு  மற்றும் பொய்ச் செய்திகளை வெளியிடும் போது ஆசிரியர்கள் மற்றும் சாமான்ய மனிதர்களின் நிலை? இந்த வெறுப்பரசியலின் முடிவு எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டுமோ!

    ஆர்.எஸ்.எஸ். –ன் வரலாறு பற்றிய ஆதாரமற்ற புனைவுகள் வரலாறாக பரப்பப்பட்டது. அதை எழுதியவர்களுக்கும் பரப்பியவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடங்கிய ஆண்டு கூடத் தெரியவில்லை. ஆதாரமில்லாத கட்டுக் கதைகளை வரலாறாக திரிக்கும் இந்துத்துவ சூழ்ச்சிக்கு ஆசிரிய நண்பர்கள் பலியாவது கண்டு மிக வேதனையாக உள்ளது. இது குறித்து பலமுறை எழுதியுள்ளபோதும், மீண்டும் எச்சரிக்கவே இந்தப்பதிவு. சமகாலத்தில் தொடங்கப்பட்ட மூன்று இயக்கங்களின் கொள்கைகள், திசைவழி ஆகியன யாருக்காக இருந்தது, அவை எத்தகைய சமூக, அரசியல் பணிகளை முன்னெடுத்தது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.  

எனது முந்தைய கட்டுரை ஒன்றிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகிறது. 

      1924 ஜூலை 20 இல் மும்பையில் தொடங்கப்பட்ட அம்பேத்கரின் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கமே ‘பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா’ (Bahishkrit Hitaharini Sabha) என்றழைக்கப்படுவது. இதன் புகழ் பெற்ற முழக்கமே ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதாகும். 

    1925 இல் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை ஏற்கப்படாமை, வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை போன்ற காரணங்களுக்காக பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குகிறார். 

   1925 செப்டம்பர் 27 இல் எச்.பி.ஹெட்கேவர் மற்றும் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, டாக்டர் எல்.வி.பரஞ்சிபே, டாக்டர் தால்கர், டாக்டர், பாபாராவ் சாவர்க்கர் (வி.டி.சாவர்க்கரின் அண்ணன்) ஆகியோர் ‘ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்’ என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் அருமை விளங்கும். 

    இவ்வாண்டுதான் (1925, டிசம்பர் 26) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி தொடங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக