ஆசிரியர்கள்
வாசிப்பு – 003
(நல்ல
நூல்களைத் தேடி…)
மு.சிவகுருநாதன்
மயிலை
சீனி. வேங்கடசாமியின் நூல்கள்
பள்ளி
இறுதி வகுப்பைத் (பத்தாம் வகுப்பு) தாண்டாதவர்; அதனால் பல்கலைக்கழகங்களில்
பேராசிரியர் பணிசெய்யும் வாய்ப்பின்றி இடைநிலை ஆசிரியராக பணிக்காலம் முழுதும்
இருந்தவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இருப்பினும் பல்கலைக்கழகங்கள் எதுவும்
செய்யத்துணியாத ஓர் காரியத்தை செய்து அவர் செய்து முடித்தார். தமிழக வரலாற்றில்
இருண்டகாலமாக இருந்த களப்பிரர் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து, அவரே சொல்கிறபடி
விடியற்காலமாக ஆக்கியவர்.
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை,
சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா. இராசமாணிக்கனார்
போன்ற எந்த வரலாற்று அறிஞராகட்டும், தமிழறிஞராகட்டும் களப்பிரர் போல் இவ்வளவு
வெறுப்பு உமிழப்பட்ட அரச வம்சம் இருக்க வாய்ப்பில்லை. இவர்களது மிதமிஞ்சிய சைவப்பற்று
மற்றும் சோழப்பெருமை ஆய்வுக் கண்ணோட்டத்தையே சாகடித்தது வரலாற்றெழுதியலின்
மாபெரும் அவலம். இவர்களும் இவர்களைப் பின்பற்றி வரலாறு எழுதிய பலரும்
களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள்
படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள்,
நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை –
மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ்
மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் வசைமாரி
பொழிந்தனர்.
சைவப் பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்த
மயிலையார் பிறரைப் போல சைவ – சோழப் பெருமை மட்டும் பேசவில்லை. மாறாக ஜனநாயகத்
தன்மையோடு களப்பிரர்கள் அரச பாரம்பரியமற்றவர்கள்; இவர்களால் மொழிக்கும்
பண்பாட்டிற்கும் எவ்வித பங்களிப்பையும் செய்ய இயலாது என்ற பொய்மையை தோலுரித்தார்.
இவரது ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டியது தமிழ் ஆய்வுலகத்தின்
கடமை. விடியல் பதிப்பகம் வெளியிட்ட களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலில் அ.மார்க்ஸ்
விரிவான ஆய்வுரை எழுதியுள்ளார். இதில் மயிலையார் வந்தடைந்த முடிவுகளைத் தாண்டி
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆய்வுகளையும் இணைத்து
களப்பிரர் ஆய்வில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறார். மயிலை சீனி. வேங்கடசாமியின்
நூல்கள் செம்பதிப்பாக வந்தால் மட்டும் போதாது; ஆய்வுப்பதிப்பாக வெளிவருதல்
வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இனியும் தமிழ் ஆய்வுலகம் மயிலையாரை
புறக்கணிக்கக்கூடாது.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம், புத்தரின்
வரலாறு, சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் போன்ற
ஒருசில நூல்கள் மட்டுமே விடியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாவை, சந்தியா, எதிர், பூம்புகார், நாம் தமிழர் ஆகிய
பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. இவரது 30 நூல்களை புலவர் கோ.தேவராசன்
பதிப்பாசிரியராகக் கொண்டு மீனா கோபால், தேன், எம்.வெற்றியரசி, வசந்தா, சாரதா
மாணிக்கம், எம்.ஏழுமலை ஆகிய
பதிப்பகங்கள் வெளியீட்டன.
2001
இல் தமிழக அரசு மயிலையாரின் நூல்களை அரசுடைமையாக்கியது. இருப்பினும் ஆதிக்க, இந்துத்துவ
வரலாற்றாய்வாளர்களால் இருண்டகாலம் என இருட்டடிப்பு செய்யப்பட்ட களப்பிரர் காலம், சமண – பவுத்தம்
தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் முதலியவற்றை தனியாளாய் வெளி உலகிற்குக் கொண்டுவந்த
மயிலையாரின் பல்வேறு நூற்கள் இன்று உரிய பதிப்புகள் பெறாமல் முடங்கிப்போய் இருந்த நிலையில்
‘தமிழ்மண் பதிப்பகம்’ 20 தொகுதிகளாக இவரது
நூற்களைப் பதிப்பித்துள்ளது. (பதிப்பாசிரியர்: பேரா. வீ.அரசு)
பல்கலைக் கழகங்களோ, பெருநிறுவனங்களோ, தமிழ்ப் பேராசிரியர்களோ செய்யாத ஆய்வுப்பணிகளை சாதாரண
இடைநிலை ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே செய்து அளப்பரிய சாதனையை நிகழ்த்தியவர் மயிலை
சீனி.வேங்கடசாமி அவர்கள். எனவேதான் ஆராய்ச்சிப் பேரறிஞர் எனப் போற்றப்பட்டவர். இவர்
இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு முன்னதாக ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர். எனவே தமது
நூல்களுக்குரிய விளக்கப்படங்களை தாமே அழகுற வரைந்து வெளியிட்டுப் பெருமை சேர்த்தார்.
அச்சகத்தில் கிரந்த எழுத்துக்கள் இல்லாததால் ஜைனர் என்பது சமணர் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதை ஜைனர்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார். இதிலிருந்து இவரது பெருந்தன்மை விளங்குகிறது.
இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும்
புராணக்கதைகளின் வாயிலாகவும் வரலாறு எழுதுவது முழுமையானதாக இருக்கமுடியாது. அது
வெறும் புனைவாகவே இருக்கும். ஒரு நாட்டின் பன்மைத்தன்மைகளைக் கணக்கில்கொண்டு
நடுநிலையோடு ஆய்வுநோக்கில் எழுதப்படுவதே வரலாறாக இருக்கமுடியும். அத்தகைய நோக்கில்
மயிலையார் ஆய்வுகளை ஆய்வு செய்து அவரது பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது
தமிழ் அறிவுலகத்தின் கடமையாகும். (ஜனவரி
16, 2015 எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.)
11.களப்பிரர்
ஆட்சியில் தமிழகம்
மயிலை
சீனி. வேங்கடசாமி
இரண்டாம் பதிப்பு, டிச.
2008, பக்கம்: 164, விலை: ரூ. 75
மயிலை.சீனி.வேங்கடசாமியின் நூற்கள்,
அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதால் நிறைய பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. ‘களப்பிரர் ஆட்சியில்
தமிழகம்’ எனும் நூலை விடியல் பதிப்பகம், கோவை அ.மார்க்ஸ் அவர்களின் நீண்ட ஆய்வுரையுடன்
வெளியிட்டுள்ளது.
“களப்பிரரின் ‘இருண்டகாலம்’ இந்நூலினால்
‘விடியற்காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானல்
களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும்.” என்று மயிலையார் முகவுரையில் குறிப்பிடுகிறார்.
அ.மார்க்ஸ், மயிலையார் வந்தடைந்த முடிவுகளைத்
தாண்டி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆய்வுகளையும் இணைத்து
களப்பிரர் ஆய்வில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறார். (பார்க்க: களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,
வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை 614015)
தனது ஆய்வுரையில் இறுதியாக அ.மார்க்ஸ் குறிப்பிடும் பின்வரும் கருத்துக்கள்
களப்பிரர் தொடர்பான ஆய்வை மேலும் கூர்மையாக்கும்.
“களப்பிரர் காலம் குறித்து மேலும் விளக்கங்கள் பெறவேண்டுமானால், அக்காலத்தில்
எழுதப்பெற்ற பாலி மற்றும் பிராகிருத மொழியிலான நூற்களை விரிவாக ஆராயவேண்டும்.
சங்க இலக்கியங்களை முற்றிலும்
புதிய மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டும். அன்றைய சாகுபடி முறைகள், சீறூர் மன்னர்கள்,
இதர இனக்குழு மக்களின் வாழ்க்கைகள் முதலியன மறுபார்வைக்குள்ளாக்கப் படவேண்டும்.
சைவத்தையும்
வைணவத்தையும் இயற்கையானதாகவும், உள்நாட்டினதாகவும் இவையல்லாத ஏனைய மரபுகளை, குறிப்பாக
அவைதீக மரபுகளை அயல்நாட்டினதாகவும், எதிரியாகவும் கட்டமைக்கிற வரலாற்றுப் பார்வையிலிருந்து
நாம் விடுபடவேண்டும்.
தமிழகம்
போன்ற வேறுபட்ட புவியியற் பகுதிகளை உள்ளட்டக்கிய ஒரு நாட்டினது பண்பாட்டின் பன்மைத்
தன்மைகளைப் புறக்கணிக்கும் வன்முறைக்கு வரலாறெழுதியலில் இடமளிக்கலாகாது.
அறிஞர்
மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிற தலையாய பாடம் இதுவே.”
(அ.மார்க்ஸ், மேற்குறித்த நூலில்.)
வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5,
ஏ.கே.ஜி. நகர், 3 –வது தெரு,
உப்பிலிபாளையம்
- அஞ்சல்,
கோயம்புத்தூர்
– 641015.
தொலைபேசி:
0422 - 2576772
செல்: 943468758
இணையம்:
vidialpathippagam.org
மின்னஞ்சல்: vidiyal@vidialpathippagam.org
12.புத்தரின் வரலாறு
மயிலை
சீனி. வேங்கடசாமி
முதல் பதிப்பு, ஆக.
2012, பக்கம்: 144, விலை: ரூ. 80
மரபு வழிப்பட்ட புத்தர் வரலாறுதான் என்ற போதிலும் பவுத்தத் தத்துவங்களில் தோய்ந்த
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் அழகிய நடையில் புத்த பெருமானின் கதை எழுதப்பட்டுள்ளது.
நான்கு காட்சிகள் போன்ற புராணக்கதைகளை ஒத்த செய்திகள் அம்பேத்கரால் மறுதலிக்கப் பட்டிருக்கின்றன.
இருப்பினும் பவுத்த நூல்களில் இவை தொடர்ந்து எழுதப்பட்டே வருகின்றன. இவை தவிர்த்த இதர
அம்சங்களைப் படித்து இன்புறலாம்.
வெளியீடு:
எதிர்
வெளியீடு,
96, நீயூ
ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
– 642002.
பேச: 04259
226012 9865005084
மின்னஞ்சல்:
ethirveliyedu@gmail.com
இணையம்: ethirveliyedu.in
13.பௌத்தமும் தமிழும்
மயிலை
சீனி. வேங்கடசாமி
முதல் பதிப்பு, நவ. 2007, பக்கம்: 216, விலை: ரூ. 85
மயிலையாருக்கு
சமண, பவுத்த மதங்களின் மீது தீராக்காதல் இருந்து வந்துள்ளது. அதனால்தான் என்னவோ
திருமணம் செய்துகொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ்ந்தார் என்றுகூட நினைக்கத்
தோன்றுகிறது. தமிழின்பால் அவருக்கிருந்த பற்று தமிழ் மொழிக்குப் பெருமை செய்தோரைத்
தேடிச் சென்று பாராட்டத் தோன்றியிருக்கிறது. எனவேதான் சோழர்கள், சைவம் ஆகியவற்றைத்
தாண்டி பிறர் செய்த பணிகளைத் தேடித்தேடி ஆய்வு செய்திருக்கிறார். இங்கு
சோழப்பெருமை பேசப்படும் பிற்காலச் சோழர்கள் காலத்தில் குறிப்பாக முதலாம் ராஜராஜன்
காலம் தொடங்கி 100 ஆண்டுகளில் தமிழுக்கு எந்தவித பங்களிப்புகளும் இல்லை என்பதுதானே
உண்மை. இக்காலகட்டத்தில் நிறைய சமஸ்கிருத கல்விநிலையங்கள் தொடங்கப்பட்டதை யாரால்
மறுக்கமுடியும்?
பௌத்த
மதத் தத்துவங்கள், தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார், பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்,
தமிழில் பாலி மொழிச்சொற்கள், பௌத்தத் திருப்பதிகள், தமிழக பௌத்த வரலாறு என்னும் பல
தலைப்புகளில் இந்நூல் பவுத்தம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை விளக்குகிறது.
14.சமணமும்
தமிழும்
மயிலை
சீனி. வேங்கடசாமி
எனது
மதம், பிறர் மதம் என்று கொள்ளாமல் காய்தல், உவத்தல் இல்லாமல் நடுநிலை நின்று
செம்பொருள் காணவேண்டும் என இதற்கென கொள்கை வகுத்து அதன்படி செயலாற்றியவர். இத்தகைய
மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டுமென வலியுறுத்தியவர் மயிலையார்.
அந்த வகையில் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், கிறித்துவமும்
தமிழும், சமயங்கள் வளர்த்த தமிழ், மறைந்து போன தமிழ் நூல்கள் போன்றவை மிகவும்
முக்கியமானவை. இவருடைய எழுத்துப்பணி
நீதிக்கட்சியின் திராவிடன் இதழிலிருந்து தொடங்குகிறது. பின்னர் பெரியாரின் குடியரசு
இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறார். இலட்சுமி, ஆராய்ச்சி, செந்தமிழ்,
செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், ஆனந்த போதினி, தமிழ்நாடு, ஈழகேசரி இன்னபிற
இதழ்களில் இவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார்.
சமணம் பற்றிய ஆய்வுகளுக்கு தமிழில் மூலநூலாக
போற்றத்தக்கது இது. சமணம் பற்றி யாரும் சொல்லாத அரிய செய்திகள் பலவற்றை இந்நூலில்
காணலாம். இந்நூல் 11 கட்டுரைகளும் பல பின்னிணைப்புச் செய்திகள் நிறைந்த
கரூவூலமாகும்.
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600014.
044-26258410, 26251968, 26359906
மின்னஞ்சல்: ncbhbooks@yahoo.co.in
15.புத்தர் ஜாதகக் கதைகள், பௌத்தக் கதைகள்
மயிலை
சீனி. வேங்கடசாமி
பொதுவாக நீதிக்கதைகள் நீதி, ஒழுக்கம் போன்வற்றை வலியுறுத்துவன.
இவற்றிற்கு மாற்றாக அறத்தை முன்வைப்பவை புத்தர் ஜாதகக் கதைகள். 500 க்கும் மேற்பட்ட
கதைகள் இதுவரையில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. நல்லொழுக்கக் கல்வி குறித்து பேசும்
பலரும் இக்கதைகளைக் கல்விக்கூடங்களில் பயன்படுத்துவது குறித்து வாய் திறப்பதில்லை.
இந்த நூற்களில் மயிலையார் முறையே 13, 16 கதைகளை எழுதியுள்ளார்.
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்கள் அனைத்தையும்
20 தொகுதிகளாக ‘தமிழ்மண் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. சிறப்புக் கழிவு அளிக்கப்படுகிறது.
தொடர்பு
முகவரி:
தமிழ்மண்
பதிப்பகம்,
2,
சிங்காரவேலர் தெரு,
தியாகராய
நகர்,
சென்னை –
600017.
தொலைபேசி:
044-24339030
(பட்டியல் நீளும்…)
1 கருத்து:
பட்டியலைக் கண்டேன். இதில் உள்ள அனைத்து நூல்களும் எங்கள் இல்ல நூலகத்தில் உள்ளன. சோழ நாட்டில் பௌத்தம் என்ற என் ஆய்விற்காகப் படிக்க ஆரம்பித்தபோது இந்நூல்களைப் படித்தேன்.
கருத்துரையிடுக