திங்கள், ஆகஸ்ட் 27, 2018

கல்விக் கொள்கையில்லாத் தமிழ்நாடு


கல்விக் கொள்கையில்லாத் தமிழ்நாடு 


மு.சிவகுருநாதன் 


       தமிழகப் பள்ளிக் கல்விச் செயலர் (பாடத்திட்டம்) திரு த. உதயச்சந்திரன் பாடத்திட்டப் பணிகள் நிறைவடையும் முன்பே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி மாற்றப்பட்டார். தமிழகக் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் இதைப் பற்றிய கருத்துகள் அல்லது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று விரும்பினோம். ஆனால் வழக்கம்போல கல்வியில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், இயக்கங்கள், அமைப்புகள் மட்டுமே எதிர்வினை புரிந்தனர். 

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கும் கட்சிக்கும் நன்றிகளைத் தெரிவிப்போம். எதிர்கட்சி மற்றும் பெரிய கட்சிகள் பெரிதும் கவலைப்படாத செய்தியாகவே இது உள்ளது. 

    தமது கட்சி உறுப்பினர் மனுஷ்யபுத்திரனுக்காகக் கூட பெரிதும் குரல் கொடுக்காத தி.மு.க. இதில் கருத்து சொல்லும் என்று நம்புவதற்கு இடமில்லை. இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் கல்வி குறித்த எத்தகைய கொள்கையை வைத்திருக்கின்றன என்ற கேள்வி எழுவது இயல்பானது. 

    தாய்மொழி வழிக்கல்வி, பயிற்றுமொழிச் சிக்கல், கல்வி வணிகம், தனியார் மயமான கல்வி போன்றவற்றில் தெளிவான கொள்கை இல்லை. இந்தி எதிர்ப்புக் கொள்கைகூட இன்றில்லை. தனியார் சுயநிதிப்பள்ளிகளில் இந்திக்குத் தடையில்லை. 

    கல்வி மாநிலப் பட்டியலில் இல்லை என்று சொல்லலாம். மத்தியப் பட்டியலுக்குச் செல்லவில்லையே! பொதுப்பட்டியலில்தானே இருக்கிறது!  எனவே மாநில அரசுக்கும் பொறுப்பும் கொள்கையும் இருக்க வேண்டுமல்லவா! 

    தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என்கிற அறிவிப்புகள் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. எனவேதான் அரசுக்கு கல்விக்கொள்கையே இல்லை என்பதை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. 

    தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) போன்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), பள்ளிக் கல்வித் துறை (DSE) ஆகியன தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனங்களாக ஏன் வளர்த்தெடுக்கப்படவில்லை? இந்த நிறுவனங்கள் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும் அவற்றைப்போல அல்லது அதையும்விட தனித்துவமான, தன்னாட்சி அமைப்பாக வளர்த்தெடுப்பது, அரசின் தலையீட்டை முற்றிலும் அகற்றுவது, சுதந்திர சிந்தனையை அனுமதிப்பது ஆகியன மக்களாட்சியின் மாண்பை வெளிப்படுத்தும் செயல்.

      “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு”, என்று பாடிய நிலையில் தடம்புரண்டு “கல்விக் கொள்கையில்லாத் தமிழ்நாடாக”, மாறிவிட்டது. தமிழக்கத்தில் லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா போன்ற  அமைப்புகள் இல்லை. நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், மாநில – மாவட்ட சிறார் ஆணையங்கள் பெயரளவிற்குச் செயல்படுகின்றன. மாநிலத் தகவல் ஆணையம் சட்டக் கடமைக்கு இயங்குகிறது. கல்வியமைப்புகள் மாநில அரசுகள், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது கல்வியை வருங்கால சமூகத்தைச் சீரழிக்கும். 

    அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோர் கைகளிலிருந்து உண்மையான கல்வியாளர்களிடம் கல்வி நிறுவனங்கள் எப்போது வரும்? அந்த நிலை இருந்திருந்தால் கல்வி, வரலாறு, மொழி போன்ற அம்சங்களில் புரிதலுள்ள உதயச்சந்திரன் போன்றோரின் உதவி கல்வித்துறைக்குத் தேவைப்பட்டிருக்காது. 

    இந்த நேரத்திலாவது அது குறித்து சிந்திப்பதும் விவாதிப்பதும் எதிர்காலத்திலேனும் தமிழகக் கல்வியை மீட்டெடுக்க உதவக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக