சனி, ஆகஸ்ட் 18, 2018

அடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்


அடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால்  உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்

மு.சிவகுருநாதன்

     “நான் ஒரு சுயம் சேவக் என்பதில் பெருமையடைகிறேன். நாளை நான் பிரதமராக இருக்கலாம் அல்லது இல்லமாற் போகலாம். ஆனால் சுயம்சேவக்காக இருக்கும் உரிமையை என்னிடமிருந்து  யாரும் பறிக்க முடியாது”, 

    “இன்று நமக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும்போது நமக்கான கனவு இந்தியாவை நாம் உருவாக்குவோம்”, 

 (ஏ.பி.வாஜ்பேயி  அமெரிக்காவில் விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர்களிடம் பேசும் போது குறிப்பிட்டது, செப். 2000.)

           முன்னாள் பிரதமர், வலதுசாரி சித்தாந்தி, இந்தியாவின் முதல் வலதுசாரி அரசை தலைமையேற்று நடத்தியவர், மூத்த தலைவர் என்ற நிலையில் ஒருவர் மரணமடையும்போது அஞ்சலி செலுத்துவது பன்மைத்துவ இந்தியாவின் மரபுத் தொடர்ச்சியே. நாமும் அஞ்சலி செலுத்துவோம்.  

      பெரும்பாலான தலைவர்கள், ஊடகங்கள் என ஒருமித்த குரலில் வாஜ்பேயி யின் ஒளிவட்டப் பிம்பத்தை இன்னும் ஊதிப் பெரிதாக்குகின்றன.  13 நாள்கள். 13 மாதங்கள், 5 ஆண்டுகள் என மூன்றுமுறை இந்தியப் பிரதமராக இருந்த  அடல் பிஹாரி வாஜ்பேயியின் மரணம் தொடர்பான அஞ்சலிகள் நமக்கு இன்னொன்றையும் உணர்த்துகின்றன. நாம் வாழும் காலத்திலேயே வரலாறுகள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணமாகவும் இவை இருக்கின்றன. 

   இந்துத்துவத்திற்கு ஒருமுகம் கிடையாது; பல்வேறு முகங்கள் உண்டு. சுதேசி பேசிக்கொண்டே ஆர்.எஸ்.எஸ். தனியார் மயத்திற்கு ஆதரவளிக்கும் முகமூடியையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். பெரும்பான்மை மக்கள் ஆதரவு இல்லாத நிலையில் அடல் பிஹாரி வாஜ்பேயி, லால் கிஷன் அத்வானி என்கிற  இருவேறு முகங்கள் தேவைப்பட்டது. கூட்டணி ஆட்சியின் தேவைகள் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை மட்டும் உடைய, வலதுசாரி இந்துத்துவத்துடன் இணக்கம் இல்லாத பல பிராந்தியக் கட்சிகளைத் திருப்திப்படுத்த இத்தகைய முகமூடிகள் அன்று தேவைப்பட்டன.  

    வாஜ்பேயிக்குப் பிறகு இந்த ‘மென்மை முகமூடியை’ அணிந்துகொள்ள விரும்பிய எல்.கே.அத்வானியின் செயல்பாடாக முகமது அலி ஜின்னாவை புகழ்ந்ததைச் சொல்லலாம். இதை ஆர்.எஸ்.எஸ். ரசிக்கவில்லை. ‘மென்மை இந்துத்துவ முகமூடி’க்கு இனி வேலையில்லை என்பதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். அத்வானியைத் தூக்கியெறிந்துவிட்டு மோடி, அமித்ஷா வகையறாக்களைக் களமிறக்கி வெற்றியும் பெற்றது. நாளை மோடிக்கும் இதே நிலை உண்டாகலாம். அந்த இடத்தை உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோர் முன்னிறுத்தப்படலாம். பார்ப்பனீயமும் அதன் நவீன வடிவமான இந்துத்துவமும் அக்காலத்திலிருந்து இதைத்தான் செய்து வருகிறது. 

    ஆனால் இன்று நரேந்திரமோடி, அமித்ஷா போன்ற தீவிர இந்துத்துவ முகமுடிகளை மட்டுமே போதும் என்கிற நிலை  வந்தாகிவிட்டது. இவற்றை வலதுசாரி, இந்துத்துவ பாசிச அரசியலின் எழுச்சியாகவும் இடதுசாரி, மதச்சார்பற்ற சோசலிச அரசியலின் வீழ்ச்சியாகவும் அவதானிக்கலாம். 

   இன்று மோடியை எதிர்ப்பவர்கள் கூட வாஜ்பேயியை புனிதராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் நரேந்திர மோடியின் முன்னோடி ஏ.பி.வாஜ்பேயி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ரொம்பவும் பூடகமாக, மேல்பூச்சுகளுடன் செய்யப்பட்ட அன்றைய திட்டங்கள் இன்று மிகவும் வெளிப்படையாக, விரைவாக அரங்கேறுகின்றன. அரசியல் சாசன அமைப்புகளை காலி செய்தல், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றை வலுவிலக்கச் செய்தல் அல்லது இந்துத்துவ ஆட்களைக் கொண்டு நிரப்புதல் போன்றவை வாஜ்பேயி காலத்திலிருந்து நடந்து வருபவை. தற்போது இவை விரைவு பெற்றிருப்பதை உணரமுடியும். 

    நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையங்கள், மத்திய புலனாய்வு நிறுவனம் ஆகியவற்றை மதிக்காது, எடுபிடிகளாக மாற்றுதல், NCERT, UGC, தணிக்கை வாரியம், திரைப்படக் கல்லூரி போன்ற அமைப்புகளை முடிந்த வரையில் சீரழித்தல், ஆர்.எஸ்.எஸ். ஆட்களை உள்ளே நுழைத்தல், JNU, IIT  போன்ற பாரம்பரிய கல்வியமைப்புகளை மேல்தட்டினருக்காக மாற்றுதல், அங்கிருக்கும் அடித்தட்டு மாணவர்களை நெருக்கடி கொடுத்து வெளியேற்றுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் வாஜ்பேயி காலத்திருந்து தொடங்கிவிட்டதை யாரும் புரிந்து கொள்ளலாம். திட்டக்குழு கலைக்கப்பட்டது, அமைச்சர்களின் முடிவுகளை பிரதமரே எடுத்தது, ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா, நிதியமைச்சகம் ஆகியன எடுக்கவேண்டிய பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை பிரதமரே எடுத்து அறிவித்தது போன்ற மோடியின் செயல்பாடுகள் வாஜ்பேயியின் தொடர்ச்சியே. 

    பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களை, வரலாறுகளைத் திருத்தியது, இந்துத்துவ வரலாறாக மாற்றி எழுதியது, கல்வியமைப்புகளில்  இந்துத்துவ ஆட்களை நுழைத்தது. வேதகால சோதிடம் (Vedic Astrology) பாடமாக்குதல் போன்ற அதிரடிகளை கல்வித்துறை கண்டது வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில்தான்! அதை மோடி இன்னும் விரைவாக்குவதோடு கல்வியை முற்றிலும் வணிகமாக்கவும், அடித்தட்டு மக்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்து வருகிறார். 

     கூட்டணி அரசாக இருந்தபோதிலும் கூட்டணிக் கட்சிகள் தனக்கு வேண்டிய துறைகளில் செலுத்திய கவனம் ஆட்சியின் செயல்பாடுகளில் இல்லை என்பது  பலரும் கண்ட உண்மை. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பில் பிரதமர் செயல்படுவதை நமது அரசியல் சாசனம் அங்கீகரிக்கிறது. அதை விடுத்து அனைத்தையும் பிரதமரே முடிவெடுக்கும் நிலையை வாஜ்பேயி, மோடி இருவரிடமும் காணமுடியும். முக்கிய துறைகளுக்கு செயல்படாத அல்லது நோயுற்ற நபர்களை நியமித்து, அவர்களது துறைகளை பிரதமர் அலுவலகமே கவனிப்பதிலும் மோடிக்கு முன்னோடி மறைந்த வாஜ்பேயிதான்!

     இவரைப் பற்றிக் கட்டமைக்கும் சில புனிதக் கட்டுமானங்கள் சிலவற்றை மட்டும் இங்கு நினைவுபடுத்துவோம்.

01. கார்கில் நாயகன்

   கார்கில் போரின் தொடக்கம் எல்லைப்பகுதியில் நடந்த ஊடுருவல். அதைக் கவனிக்காமல் விட்ட ராணுவ அமைப்புகள் மற்றும்  உளவுத்துறையின் அலட்சியம். உளவுத்துறையின் தவறு ஏதுமில்லை என்று வாஜ்பேயி உள்ளிட்ட தலைவர்கள் முன்கூட்டியே தீர்ப்பெழுதிவிட்டனர். “தவறுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்துவிடுவோம்; யார் காரணம் என்ற ஆய்வில் நாங்கள் இறங்கப் போவதில்லை”, என்று சொன்ன சுப்ரமணியம் (விசாரணைக் குழுவின் தலைவர்)  என்று வரம்பு கட்டினார். இந்திய உளவு அமைப்புகளின் தோல்வியை மட்டும் ஒத்துக்கொண்டு ராணுவ உயரதிகாரிகளையும் அரசையும்  காப்பாற்றும் வேலையை இக்குழுச் செய்தது.

02. ‘பொக்ரான்’ அணுவெடிச் சோதனை நாயகன்.

     அணுவெடிச் சோதனை இந்திராகாந்தி முன்பே செய்ததுதானே! வாஜ்பேயி அவரே அணுகுண்டு தயாரித்தான பிம்பம் உண்டாக்கப்படுகிறது. பிரச்சினைகளைத் திசைதிருப்ப காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற ஆளும் அரசியல் தலைவர்களின் நடைமுறை உத்தியே இது. இதில் அரசியல் ரீதியான சாதனை ஏதுமில்லை; மாறாக பின்னடைவே. இதற்குப் பிறகு பாகிஸ்தானும் அணுவெடிச் சோதனை நடத்தி, தனது அணு ஆயுதத் திறமையை உலகிற்கு காட்டியது. பாகிஸ்தான் தனது நிலையை உயர்த்திக்கொண்டதாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டு மக்களின் சமூக, பொருளாதார நிலையைக் கணக்கில் கொள்ளாமல் அப்துல்கலாம் போன்றவர்கள் விதைத்த ராணுவ வலிமையைப் பெருக்கும் ‘வல்லரசு’ச் சொல்லாடல்கள் மூலம் போர்த்தளவாடங்கள், ஆயுதக் குவிப்பிற்கு வழிவகை செய்ததும், இதன் பின்னணியில் கோடிக்கணக்கில்  ஆயுத பேரங்கள், ஊழல் நடைபெற்றதும் உண்மையான சாதனைகளாகும்!


03. Right Man in Wrong Party!

    தவறான கட்சியில் சரியான மனிதருக்கு என்ன வேலை என்பது மிக நியாயமான கேள்வி. நாம் முன்பே சொன்னபடி சரி, தவறுகளுக்கெல்லாம் இங்கு இடமில்லை; எல்லாம் முகமூடிகளே. எந்த இயக்கத்தில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். சின் சித்தாந்தத்தை தொடக்க காலத்திலிருந்து பின்பற்றும் ஒருவர் எப்படி சரியான நபராக இருக்கமுடியும்? இது சரியென்றால் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்தும் ஒரு கட்சி எப்படி தவறான கட்சியாக இருக்கமுடியும்? இதைவிடவும் அபத்தமாகச் செயல்படுவது சங்கிகளின் பொழுதுபோக்கு. தனிநபர் ஒழுக்கம் மட்டும் போதுமானதல்ல. மேலும் ஊழலற்ற ஆட்சி என்பதும் அபத்தமான வாதம். இதைத் திராவிட இயக்கக் கொழுந்துகளும் பயன்படுத்துவது வேதனை. அவர்களுக்குள்ள கோட்பாட்டுப் புரிதல் அவ்வளவுதான்!


04. மாற்றுக் கட்சிகளையும் கூட்டணிக் கட்சிகளையும் மதித்தவர்.

     இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலம் சங் பரிவார் கும்பல்கள் அனைத்துத் தரப்பாலும் ஒதுக்கி வைக்கப்படிருந்தன. காங்கிரசின் கைகளிலிருந்த மத்திய ஆட்சிப்பீடத்தை இவைகள் நெருங்க இயலவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட ஜனதா போன்ற கட்சிகள், அமைப்புகள் போன்றவற்றில் அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் ஊடுருவியது போல் இவற்றிலும் சங்பரிவார் ஊடுருவியிருந்தது. மாற்று முயற்சிகளின் தோல்விக்கு இவர்களும் காரணமாக இருந்தனர். காங்கிரசின் ஏதேச்சதிகார போக்கால் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி அதிகமானது. சரியான நேரம் பார்த்துக் காத்திருந்த இந்துத்துவம் இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. இதற்கேற்ற முகமூடியாக முன்னிறுத்தப்பட்டவர் வாஜ்பேயி. 

     எனவே கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல, பிற கட்சிகளின் ஒத்துழைப்பும் வருங்காலக் கூட்டணிக்கு அவசியமானதாக இருந்தது. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் இவர்கள் கூட்டணி வைக்க முடிந்தது இந்த உத்தியின் விளைவுதான். ஜெ.ஜெயலலிதாவை மதிக்காததால்தானே 13 மாதங்களில் ஆதரவு திரும்பப் பெறப்பட்டது? இவையனைத்தும்   திருவுரு கட்டமைக்கப்படும் பொருள்களே அன்றி வேறில்லை. 
 
05. அப்துல்கலாமைக் குடியரசுத் தலைவராக்கியவர்.

    குஜராத்தில் நடைபெற்ற இஸ்லாமியப் படுகொலைகளுக்குப் பிறகு அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக்கப்பட்டதன் பின்னணி, சூழ்ச்சி ஆகியவற்றை விளங்கிக் கொள்ள சாமான்ய அறிவே போதுமானது. “இது ராஜநீதியல்ல” என்று சொல்லமுடிந்த வாஜ்பேயியால் நரேந்திர மோடி மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க முடிந்தது. 

     சங் பரிவாரில் எப்போதும் பலகுரல்கள் ஒலிக்கும். அவையனைத்தும் அவர்களது கொள்கையல்ல; சூழ்ச்சி மற்றும் தந்திர வெளிப்பாடு. மூத்த தலைவர் என்று சொல்லப்படும் சுப்ரமணியம் சுவாமியின் அன்றாட பேச்சுகள் அனுமதிக்கப்பட்டு, அவை கட்சியின் கருத்தல்ல என்று விளக்கமளிக்கப்படுவது நமக்குத் தெரியுந்தானே! தருண் விஜய், நரேந்திர மோடி, ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித், அனைவரும் அண்மைக்காலத்தில் தமிழ் சிறப்பான மொழி என்று கூவுவதையும் கொஞ்சம் யோசிக்கலாம். இவ்வளவு ஆண்டுகள் கழித்து இவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விளக்கினால் நலம் பயக்கும். 

     மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை, கொலையில் ஆர்.எஸ்.எஸ். க்கு பங்கில்லை என்றுதானே இன்றுவரை சொல்லிவருகின்றனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சாவர்க்கர் படம் வைக்கப்பட்டுள்ளதே. இவர்களது கொள்கைகளை விளக்க இது போதாதா? கே.ஆர்.நாரயணன் திறக்க மறுத்த படத்தைத் திறக்கவும் குஜராத் கறையைத் துடைக்கவும் அன்று இவர்களுக்கு அப்துல்கலாம் தேவைப்பட்டார். 


06. தாராளமயமாக்கலை விரைவுபடுத்தியவர்.

     இது உண்மைதான். இங்கு ஆர்.எஸ்.எஸ். சின் சுதேசிக் கூச்சல் எங்கே போனது என்பது தனிக்கதை! பங்குவிலக்கலுக்கு தனித்துறை இருந்தது. ஊழல் எதிர்ப்புப் போராளிப் பிம்பத்தை ஏந்திய அருண்ஷோரி அத்துறைக்கு அமைச்சர். ‘என்ரான்’ ஊழல் நாடறியும். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வாஜ்பேயியைக் கொண்டாடும் மறதிநோய்க்கு என்ன பெயர் வைப்பது? நல்ல நிலையிலிருந்த பொதுத்துறை நிறுவனமான ‘பால்கோ’ வை ஸ்டெர்லைட்டுக்குத் தாரை வார்த்தவர் இவர். இதனாலும் அரசின் சலுகைகளாலும் பின்னர் ஸ்டெர்லைட் அதீக வளர்ச்சியடைந்தது.

     தங்க நாற்கரச் சாலைகளைக் கொண்டு வந்தவர் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? தங்க நாற்கரச் சாலையினால் உண்டான பாதிப்புகள் ஒருபுறமிருக்க, சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டமும் இதன் நீட்சியே. கார்ப்பரேட்கள் வாழ, கமிஷன் வாங்கி அரசியல்வாதிகள் கொழுக்க, 10,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்தானே தேவைப்படுகிறது. சாலையை தனியாருக்கு விற்ற (BOT) திட்டமல்லவா இது! சுங்கச்சாவடிகள் மூலம் கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்த காரியம். 
   
      கட்டு, இயக்கு, மாற்று (Build Operate and Transfer) என்பனவற்றில் முதலிரண்டும் நடக்க, எப்போது இந்த சாலைகள் அரசிடம் மக்களுக்காக ஒப்படைக்கப்படும் என்று யாருக்காவது தெரியுமா? இந்த கார்ப்பரேட் கொள்ளையைத் தொடங்கி வைத்த வாஜ்பேயி தனியார்மயத்திற்கு அடிகோலிய மன்மோகன்சிங் போன்றவர்களைக் கொண்டாடவேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. இருப்பினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் உண்மை நிலையை எடுத்துரைத்த மன்மோகன்சிங்கின் நேர்மைக்கு அருகில் நிற்கக்கூட இவர்களால் முடியாது. 

07.  ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர்

   ஏ.பி.வாஜ்பேயின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா (வளர்ப்பு மகளின் கணவர்) அவரது ஆட்சிக்காலத்தில் நிழல் அதிகார மையமாக செயல்பட்டது நாடறிந்த ஒன்று. பிரதமரின் முதன்மைச் செயலாளர், தேசப்பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய புதிய இரு பதவிகள் ஏற்படுத்தப்பட்டு பிரஜேஷ் மிஸ்ரா பதவியில் அமர்த்தப்பட்டார். பொருளாதார விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக என்.கே.சிங் பணியேற்றார். பிரதமர் அலுவலகம் அதிகாரக் குவிப்பில் திளைத்தது. அமைச்சரவைக் கூட்டு முடிவு என்ற அரசியல் சாசன நடைமுறை காற்றில் பறக்கவிடப்பட்டது. அரசியல் சட்ட சீராய்வு என்றார்கள். அது நடக்கவில்லை என்பதால்  அரசியல் சாசனத்தையே சீரழிக்க முடிவெடுத்தனர். இதன் காரணமாக ஊழல் பெருகியது. 

      சமூக நீதி என்றால் இவர்களுக்கு வேப்பங்காய். சமூக நீதிக்கான சட்டங்களை  நீர்த்துப் போகச்செய்ய என்னென்ன தடைகளை ஏற்படுத்தமுடியுமோ அவற்றையும் செய்தனர். புதிய தொலைத்தொடர்பு கொள்கையால் துறை முற்றிலும் தனியார் மயமானது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். பின்னுக்குத் தள்ளும் முயற்சி தொடங்கியது. இன்று அந்நோக்கம் நிறைவேறியுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி ஆகியவற்றில் நிறைய ஊழல்களும் முறைகேடுகளும் தொடங்கின. பின்பு காங்கிரஸ் கூட்டணி அரசில் இந்த ஊழல் உச்சம் தொட்டது.  
 

08. ஏ.பி.வாஜ்பேயி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்

    இப்படி ஒரு தகவல் தொடர்ந்து உலா வந்தது வாட்ஸ் அப் வதந்திகளைப்போல. பிறகு ஆதாரங்கள் வெளியானது. முன்னாள் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டம் பெற்றதாக பொய்த்தகவல் அளித்தாரே, நினைவிருக்கிறதா? சங்கிகளுக்கு இதெல்லாம் ‘அல்வா’ சாப்பிடுற மாதிரி. 1942 ஆகஸ்ட் புரட்சி எனப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சில நாள்கள் சிறையில் இருந்தது உண்மைதான். “இனி பிரித்தானிய அரசுக்கெதிராக போராட மாட்டேன்”, என்று மன்னிப்புக் கடிதம் எழுதிகொடுத்து விடுதலையானவர் இந்த விடுதலை வீரர்! 

      இவர்களது தலைவர் சாவர்க்கர் போன்றவர்கள் மன்னிப்பு கடிதம் அளிப்பதில் கில்லாடிகள் மட்டுமல்ல; முன்னோடிகளும் கூட. தேச பக்தி நடிப்பிலும் தேச வெறிக்கூச்சலிடவும் தேசத் துரோகிகளை மோப்பம் பிடித்து அடையாளம் காணவும் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. நெருக்கடி நிலையின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவ்ரஸ், ஏ.பி.வாஜ்பேயி போன்றோர் மன்னிப்புக் கடிதம் கொடுத்த செய்தியை தற்போதைய பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிடுவதும் நம்மை யோசிக்க வைக்கிறது.


உதவியவை:

இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,

முதல்பதிப்பு: டிச. 2014, விலை: ரூ. 400

(ஏ.பி.வாஜ்பேயி யின் உரை மேற்கோள் இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக